WFTW Body: 

கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது… அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைக் காண்பீர்கள். (மல்கியா 3:16-18).

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் நீதிமான்கள், துன்மார்க்கர் என்கிற இரண்டு விதமான ஜனக் கூட்டத்தைப் பற்றி நமக்குக் கூறுகின்றன. தேவனுக்கு உண்மையிலேயே பயந்து, அவருடைய நாமத்தைத் தியானிக்கிற (கனப்படுத்துகிற அல்லது மேன்மையாக எண்ணுகிற) கிறிஸ்தவர்களின் பெயர்களை மட்டுமே கொண்ட "ஞாபகப்புஸ்தகம்" ஒன்று தேவனிடம் இருப்பதாக அந்த வசனங்கள் கூறுகின்றன. அப்படித்தான் உண்மையான நீதிமானும் துன்மார்க்கனிடமிருந்து வித்தியாசப்படுத்தப்படுவான் என்று தேவன் கூறுகிறார்.

இந்த வார்த்தைகளை மத்தேயு 23:25,26 வசனங்களில் இயேசு கூறியதோடு தொடர்பு படுத்தலாம். துன்மார்க்கமான பரிசேயர்கள் போஜனபானபாத்திரத்தின் வெளிப்புறத்தை மாத்திரம் சுத்தமாக வைத்திருந்தார்கள் என்று அங்கே அவர் கூறினார்; ஆனால், உண்மையான நீதிமான்கள் போஜனபானபாத்திரத்தின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பார்கள். இப்படித்தான் உண்மையான நீதிமானையும் துன்மார்க்கனிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறோம்.

உண்மையாகவே தேவனுக்குப் பயப்படுகிற விசுவாசிகள் தேவனுக்கு முன்பாகவும் தங்களுடைய இருதயங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பார்கள், ஜனங்களுக்கு முன்பாகவும் தங்களுடைய ஒளியைப் (வாழ்க்கையின் வெளிப்புறமான சாட்சியை) பிரகாசிக்கச் செய்வார்கள். தனது உட்புற வாழ்க்கையை மிக முக்கியமானதாகக் கருதும் ஒருவருக்கு மாத்திரமே பாவத்தின் மீதான மெய்யான ஜெயங்கொள்ளுகிற ஒரு வாழ்க்கை சாத்தியமாகும்.

சுத்தமனச்சாட்சிக்கும் சுத்தமான இருதயத்திற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. சுத்தமனச்சாட்சி என்பது மனம்-அறிந்த எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்ற ஒன்றாகும்; ஆனால், சுத்தமான இருதயம் என்பது மனம்-அறிந்த எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்றது மாத்திரமல்லாது, தேவனைத் தவிர மற்ற எல்லாவற்றின் மீதுமுள்ள பற்றுதலிலிருந்தும் விடுதலை பெற்ற ஒன்றாகும். சுத்தமான இருதயம் கொண்டவர்கள் தேவனை மாத்திரமே பார்க்கிறார்கள்; வேறு எதையும், வேறு யாரையும் அவர்கள் பார்க்கிறதில்லை. "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8) என்று இயேசு கூறினார். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை மாத்திரமே பார்க்கிறார்கள். ஜனங்களைக் குறித்தோ (நல்ல ஜனங்களோ அல்லது பொல்லாத ஜனங்களோ) அல்லது சூழ்நிலைகளைக் குறித்தோ (எளிதான சூழ்நிலையோ அல்லது கடினமான சூழ்நிலையோ) அவர்களுடைய மனம் சிந்தித்துக்கொண்டிராமல் தேவனை மாத்திரமே அவர்களுடைய மனம் முழுமையாகச் சிந்தித்துக்கொண்டிருக்கும்.

மற்றொருவருக்கு விரோதமாக ஒருவருக்குக் குறை உண்டென்றால், அவருடைய இருதயம் சுத்தமான இருதயம் அல்ல என்பதையே அது நிரூபிக்கிறது. ஏனென்றால், தேவனை மாத்திரமே அவர் சிந்தனையில் கொண்டிராமல், மற்றொருவரில் காணப்படும் தீமையைக் குறித்து அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய இருதயம் சுத்தமாக இருந்தால், கடினமான ஜனங்களால் உண்டாக்கப்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும், தேவனை மாத்திரமே அவர் காண்பார்! அத்தகைய நபர் தனது நன்மைக்காக (ரோமர் 8:28) மாத்திரமல்லாது, தேவனுடைய மகிமைக்காகவும் அந்தக் கடினமான சூழ்நிலையில் தேவன் கிரியை செய்கிறார் என்பதைக் காண்பார். பிறகு அவர் எல்லாவற்றிற்கும் தேவனைத் துதித்துக் கொண்டிருப்பார்.

உங்களுடைய இருதயம் உண்மையாகவே சுத்தமாக இருந்தால், உலகில் உள்ள அனைத்து ஜனங்களும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பிசாசுகளும் ஒன்று சேர்ந்தாலும் உங்களுடைய வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டம் நிறைவேறுவதைத் தடுக்க முடியாது – ஏனென்றால், தேவன் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களுக்காகக் கிரியை செய்வார். அதனால் நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக இருப்பீர்கள் - அவ்வாறாக உங்களுடைய வாழ்க்கைக்கான தேவனுடைய பரிபூரண திட்டத்தை நீங்கள் நிறைவேற்ற முடியும்.

"தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்" (நீதிமொழிகள் 27:19) என்று வேதாகமம் கூறுகிறது. இந்த வசனத்தின் ஒரு பொருள் என்னவென்றால், மற்றவர்கள் செய்யும் சில காரியங்களைப் பார்த்து, அவர்கள் கெட்ட நோக்கங்களோடு அவற்றைச் செய்கிறார்கள் என்று நீங்கள் கூறும்பொழுது, அது உங்களுடைய இருதயத்தின் மெய்யான நிலைமையையே வெளிப்படுத்துகிறது - ஏனென்றால், நீங்கள் அதே காரியங்களைச் செய்திருந்தால் கெட்ட நோக்கத்துடன் செய்வீர்கள் என்பதால் அவர்களும் அவ்வாறே கெட்ட நோக்கத்துடன் தான் அந்தக் காரியங்களைச் செய்கிறார்கள் என்று கருதுகிறீர்கள். ஆனால், அவர்களுடைய கனிகளினாலே (வெளிப்புறச் செயல்களினாலே) மாத்திரம் ஜனங்களை மதிப்பிட வேண்டும் என்று இயேசு நம்மிடம் கூறினார். (“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” - மத்தேயு 7:16) - அவர்களுடைய வேர்களினால் (பார்க்க முடியாத அவர்களுடைய நோக்கங்களினால்) அல்ல! தொடர்ச்சியாக நம்மை நாமே சுத்திகரித்துக் கொள்ளுகிறவர்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருந்தால், மற்ற ஜனங்களின் நோக்கங்களை அல்ல, நம்மை மட்டுமே நாம் நியாயந்தீர்ப்போம். அப்பொழுது நம்முடைய இருதயத்தை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க முடியும். அப்பொழுது நாம் வஞ்சிக்கப்பட்டுப் போகாதபடிக்கு தேவன் தாமே மற்றவர்களைப் பற்றிய பகுத்தறிவை நமக்குத் தருவார். இயேசுவின் இருதயம் எப்போதுமே சுத்தமாக இருந்தது, ஏனென்றால் அவர் யாரையும் ஒருபோதும் நியாயந்தீர்க்கவில்லை (யோவான் 8:15), ஆனால், எல்லோரையும் குறித்த பகுத்தறிவைக் கொண்டிருந்தார் (யோவான் 2:24,25).

இருதயத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என்றால் என்ன என்பதற்கு ஓர் உதாரணம் இதோ: சகோதரர் ஜூனிப்பர் 13 ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் வாழ்ந்த ஒரு தேவ பக்தியுள்ள மனிதர். அவர் எப்பொழுதுமே மிக எளிமையான ஆடைகளையே உடுத்துவார். ஒரு நாள் தனது சக-சகோதரர்களில் ஒருவர் மிகவும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டார். ஆனால், அதற்காக அவரை ஜூனிப்பர் நியாயந்தீர்க்கவில்லை. மாறாக, "எளிமையான ஆடைகளுக்குள்ளே இருக்கும் என்னுடைய இருதயத்தை விட அந்த விலையுயர்ந்த ஆடைகளுக்குள்ளே இருக்கும் என் சகோதரனுடைய இருதயம் அதிகத் தாழ்மையான இருதயமாக ஒருவேளை இருக்கலாம்" என்று தனக்குள்ளேயே அவர் சொல்லிக்கொண்டார். அத்தகைய சுத்தமானதும் தாழ்மையானதுமான மனப்பான்மையுடன், அவர் தனது சகோதரனை நியாயந்தீர்க்கும் பாவத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டார். அது அவருடைய தேவபக்திக்குரிய ஓர் இரகசியமாகும் - இது நாம் அனைவரும் பின்பற்றுவதற்கு ஏற்ற ஒரு நல்ல உதாரணம். நாம் எப்பொழுதுமே அப்படி இருப்போமாக. ஆமென்.