WFTW Body: 

இரட்சிப்பை முக்கால அனுபவமாக சத்தியவேதம் சித்தரிக்கிறது. கடந்தகாலம் (எபேசியர் 2:8), நிகழ்காலம் (பிலிப்பியர் 2:12), வருங்காலம் (ரோமர் 13:11). அதாவது நீதிமானாக்கப்படுதல் (Justification), பரிசுத்தமாகுதல் (Sanctification), மகிமையடைதல் (Glorification).

1. நீதிமானாக்கப்படுதல்:
இரட்சிப்பு என்பது, அடித்தளத்தையும், மேற்தளத்தையும் உடையதாக உள்ளது. அடித்தளம் என்பது, பாவமன்னிப்பும், நீதிமானாக்கப்படுதலும் ஆகும். நீதிமானாக்கப்படுதல் பாவமன்னிப்பைக் காட்டிலும் மேலானது. கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் தேவனுடைய பார்வையில் நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டுள்ளோம் என்பதும் இதன் பொருள். இது நம்முடைய கிரியைகளினால் உண்டானது அல்ல (எபேசியர் 2:8,9). ஏனென்றால், நம்முடைய நீதியான கிரியைகள் கூட தேவனுடைய பார்வையில் அழுக்கான கந்தை போலவே இருக்கிறது (ஏசாயா 64:6). நாம் கிறிஸ்துவின் நீதியினால் தரிபிக்கபட்டவர்களாய் இருக்கிறோம் (கலாத்தியர் 3:27). மனந்திரும்புதலும், விசுவாசமுமே நம் பாவ மன்னிப்பிற்கும் நாம் நீதிமானாக்கப்படுதலுக்குமுரிய நிபந்தனைகள் (அப்போஸ்தலர் 20:21). உண்மையான மனந்திரும்புதல், "திரும்பச் செலுத்தும்" (Restitution) கனியை நிச்சயம் உண்டு பண்ணும், அதாவது திருட்டுத்தனமாகப் பிறருடைய உடைமைகள் நம்மிடம் இருக்குமென்றால், அது பணமோ அல்லது பொருளோ அல்லது செலுத்தவேண்டிய வரிகளோ போன்ற எதுவானாலும் அதைத்திரும்பச் செலுத்த வேண்டும். மேலும் நமக்கு முடிந்தவரை, நாம் யாருக்கெல்லாம் தீங்கிழைத்தோமோ அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு ஒப்புரவாக வேண்டும் (லூக்கா 19:8,9). அடுத்து, தேவன் நம்மை எவ்விதம் மன்னித்தாரோ நாமும் பிறரை அவ்விதமே மன்னிக்கவேண்டும் எனத் தேவன் நம்மில் எதிர்பார்க்கிறார். இதைச் செய்வதற்குத் தவறும்போது தேவன் தம்முடைய மன்னிப்பை வாபஸ் பெற்றுவிடுகிறார்! (மத்தேயு 18:23-35). மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். நம்முடைய பழைய மனிதன் அடக்கம் செய்யப்பட்டான் என்பதை அதன் மூலமாக நாம் தேவனுக்கும் மனிதர்களுக்கும் பிசாசுகளுக்கும் பகிரங்கமாகச் சாட்சி பகருகிறோம் (ரோமர் 6:4,6). இதன்பின்பு, நாம் பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். நம் ஜீவியத்தின் மூலமாகவும், வாயின் அறிக்கை மூலமாகவும் கிறிஸ்துவுக்கு ஓர் சாட்சியாகத் திகழும்படியே நாம் இவ்வாறு உன்னத பெலத்தினால் தரிப்பிக்கப்படுகின்றோம் (அப்போஸ்தலர் 1:8). பரிசுத்தாவியின் அபிஷேகம் நாம் விசுவாசத்தினால் பெற்றுக்கொள்ளும் ஓர் வாக்குத்தத்தமாகத் தேவனுடைய எல்லா பிள்ளைகளுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது! (மத்தேயு 3;11; லூக்கா 11:13). நாம், தேவனுடைய பிள்ளை என்று ஆவியானவர் சாட்சி கொடுப்பதும் (ரோமர் 8:16), நாம் நிஜமாகவே பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்றிருக்கிறோம் என்று உறுதியாய் அறிந்திருப்பதும் (அப்போஸ்தலர் 19:2) ஒவ்வொரு சீஷனுக்குரிய சிலாக்கியமாகும்.

2.பரிசுத்தமாகுதல்:
பரிசுத்தமாகுதலின் பொருள், நாம் பாவத்திலிருந்தும், உலகத்திலிருந்தும் "பிரித்தெடுக்கப்படுதல்" ஆகும். இது ஒரு கட்டிடத்தின் மேற்தளம் போன்றதாகும். இந்தப் பரிசுத்தமாகுதல், நாம் மறுபடியும் பிறந்ததிலிருந்து ஆரம்பித்து (1 கொரிந்தியர் 1:2) இவ்வுலக ஜீவிய காலம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் ஓர் கிரியையாகும் (1 தெசலோனிக்கேயர் 5:23,24). இந்தக் கிரியையைத் தேவனே நம்மில் பரிசுத்தாவியின் மூலமாக ஆரம்பித்துத் தன் பிரமாணங்களை நம்முடைய இருதயத்திலும், மனதிலும் எழுதுவார் (எபிரேயர் 8:10). என்றாலும், நாமோ நம் இரட்சிப்பு நிறைவேறப் பயத்தோடும் நடுக்கத்தோடும் பிரயாசப்படுகிறவர்களாய் இருக்கவேண்டும் (பிலிப்பியர் 2:12,13). ஆவியானவர் அளிக்கும் வல்லமையினால், நாம்தான் சரீரத்தின் செய்கைகளை மரணத்திற்குட்படுத்தி அழிக்கவேண்டும் (ரோமர் 8:13). பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தும்படி நம் மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க நாம்தான் நம்மைச் சுத்திகரித்துக் கொள்ளவேண்டும். (2 கொரிந்தியர் 7:1). பரிசுத்தாவியின் இக்கிரியைகளுக்கு ஓர் சீஷன் ஆணித்தர உறுதியுடனும், முழு இருதயத்தோடும் ஒத்துழைக்கும்போது அவன் வாழ்வில் பரிசுத்தமாகுதலின் கிரியை துரிதமான வளர்ச்சியை அடைந்துவிடும். ஆனால், ஆவியானவரின் வழிநடத்துதலுக்குத் தன்னைப் பூரணமாய் ஒப்புக்கொடுத்து ஒத்துழைக்காத ஒருவரின் வாழ்வில், இக்கிரியையானது மந்தமாகவோ அல்லது தேங்கியோ கூட நின்றுவிடும். சோதனையின் நேரத்தில்தான் நாம் பரிசுத்தமாகுதலை முழு இருதயத்தோடு வாஞ்சிக்கிறோமா என்பது பரீட்சிக்கப்படுகின்றது. பழைய உடன்படிக்கையில் நியாயப்பிரமாணத்தின் நீதி வெளிப்பிரகாரமாக இருந்ததுபோல அல்லாமல், நீதி நம் இருதயத்திற்குள் நிறைவேறுவதே பரிசுத்தமாக்கப்படுதல் ஆகும் (ரோமர் 8:4). இதைத்தான் இயேசு, மத்தேயு 5:17-48ல் உள்ள வசனங்களில் வலியுறுத்தினார். தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடு அன்புகூருவதையும், நம்மில் நாம் அன்புகூருவதுபோல பிறனிடத்தில் அன்புகூருவதையும் நியாயப்பிரமாணத்தின் மொத்த அடக்கமாக இயேசு தொகையிட்டுக் கூறினார் (மத்தேயு 22:36-40). இந்த அன்பின் பிரமாணத்தையே தேவன் இப்போது நம் இருதயத்தில் எழுதும்படி வாஞ்சிக்கிறார். ஏனெனில், இதுவே அவரது திவ்விய சுபாவமாகும் (எபிரேயர் 8:10; 2 பேதுரு 1:4). இதை வெளியரங்கப்படுத்தி ஜொலிப்பதுதான், எல்லா அறிந்த பாவங்களிலிருந்தும் ஜெயம் பெற்று வாழும் ஜெயவாழ்வு! மற்றும் இயேசுவின் எல்லா கற்பனைகளுக்கும் கீழ்ப்படியும் கீழ்ப்படிதல் (யோவான் 14:15)!! இயேசு பிரகடனம் செய்த சீஷத்துவத்தின் நிபந்தனைகளை முதலாவது நிறைவேற்றாமல், இந்த ஒப்பற்ற வாழ்விற்குள் பிரவேசிப்பது கூடாத காரியம் (லூக்கா 14:26-33). இந்த சீஷத்துவம் வலியுறுத்துவதெல்லாம், ஒருவன் தன் உறவினர்களுக்கும், தன் சுய வாழ்க்கைக்கும் மேலாகக் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதும், தன் எல்லா உலக ஆஸ்தி உடைமைகளிலிருந்தும் சற்றும் பிடிப்பில்லாமல் விடுபட்டிருக்கவேண்டும் என்பதே ஆகும். நாம் முதலாவது பிரவேசிக்க வேண்டிய இடுக்கமான வாசல் இதுவே! அதைத் தொடர்ந்து வருவதே பரிசுத்தமாகுதல் என்னும் இடுக்கமான வழி!! இந்த பரிசுத்தமாகுதலை நாடாத ஒருவரும் தேவனைத் தரிசிக்கவே முடியாது. (எபிரேயர் 12:14).

3.மகிமையடைதல்:
நாம் இவ்வுலகத்தில் இப்பொழுதே, நம் மனசாட்சியில் பூரணமடைவது சாத்தியமானது (எபிரேயர் 7:19; 9:14). ஆனால், நாம் மகிமையடைந்த சரீரத்தை இயேசு திரும்ப வரும்போது பெற்றுக்கொள்ளும் வரைக்கும், நாம் "பாவமில்லாத பூரணம்' (Sinless Perfection) அடைவது சாத்தியமே இல்லை. அவர் வரும்போதுதான் நாம் அவருக்கு ஒப்பாயிருப்போம் (1 யோவான் 3:2)! அதுவரைக்கும் உள்ள இந்த உலக வாழ்க்கையில் இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம், அவர் நடந்தபடியே நாமும் நடக்க வேண்டும். (1 யோவான் 2:6). நாம் எவ்வளவுதான் பரிசுத்தம் அடைந்திருந்தாலும், நமக்கு இந்தப் பாவசரீரம் இருக்கும்வரை, அதில் "அறியாத பாவங்கள்" (Unconscious Sin) இருக்கத்தான் செய்யும் (1 யோவான் 1:8). ஆனால் நாம் முழு இருதயம் உடையவர்களாக இருந்தால் (1 கொரிந்தியர் 4:4) நம் மனசாட்சியில் பூரணர்களாகவும் (அப்போஸ்தலர் 24:16), "அறிந்த பாவங்களில்" இருந்து விடுதலை பெற்றவர்களாகவும் இருக்க முடியும் (1 யோவான் 2:1). இவ்வாறு நாம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காகவும், நம்முடைய இரட்சிப்பின் இறுதிப் பகுதியாகிய மகிமையடைதலுக்காகவும் காத்திருக்கிறோம். அப்பொழுது பாவமில்லாத பூரணராயுமிருப்போம் (ரோமர் 8:23; பிலிப்பியர் 3:21).