WFTW Body: 

கிறிஸ்தவர்களிடத்தில், பிறரை நியாயந்தீர்ப்பது சரிதானா? அல்லது இல்லையா? என்ற ஏராளமான குழப்பம் உள்ளது. “நியாயந்தீர்ப்பது” என்ற வார்த்தையை தவறாய் விளங்கிக்கொண்டதே அதற்குக் காரணம்.

விசுவாசிகளாகிய நாம் ‘பிறரை நியாயந்தீர்ப்பதின் பொருள்' ‘ஜனங்களை நாம் (பகுத்தறிந்திட) நிதானித்திட வேண்டும்' என்பதேயாகும். ஒருவர் பிரசங்கித்ததை நாம் கேட்ட பின்பு “அவர் பேசிய செய்தியை நிதானித்து அறிய வேண்டும்" அல்லது “நியாயந்தீர்த்துப் பார்க்க வேண்டும்” என்று தேவ வார்த்தை நமக்குக் கூறுகிறது (1கொரிந்தியர் 14:29). ஆகவே, நாம் ஒவ்வொருவருடைய 'பிரசங்க செய்தியையும்' நியாயந்தீர்த்துப் பார்க்க வேண்டுமென்றே பரிசுத்தாவியானவர் கட்டளையிடுகிறார். இன்றைய கிறிஸ்தவ உலகில் காணப்படும் ஏராளமான வஞ்சகப் பிரசங்கிகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்கு “இது ஒன்றே” வழியாகும்!

மேலும் தேவனுடைய வார்த்தை, “உலகத்தில் அநேகம் கள்ளதீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” (1யோவான் 4:1) என்று கூறுகிறது.

இயேசுவும், நாம் பிறரை எவ்வாறு நிதானித்து அறிய வேண்டும் என்று கூறினார். “உங்கள் தீர்ப்பில் நேர்மையாயிருங்கள்! வெளித்தோற்றத்தின்படி தீர்மானிக்காமல், நியாயமாகவும் நீதியாகவும் தீர்ப்புச்செய்யுங்கள்” (யோவான் 7:24 - விரிவாக்க வேதாகமம்) என்றார்.

ஆகவே “ஒருவரையும் குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள்” என இயேசு மத்தேயு 7:1-ம் வசனத்தில் கூறியதின் அர்த்தம் என்ன?

நியாயந்தீர்ப்பது” என்ற வார்த்தையின் மற்றொரு அர்த்தம் “ஆக்கினைக்குள்ளாக்குவது” என்றும் கிரேக்க மூலபாஷையில் உள்ளது. எனவே, விரிவாக்க வேதாகம மொழிபெயர்ப்பு இந்த வசனத்தை “நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடி பிறரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காதிருங்கள்” (மத்தேயு 7:1) என்று கூறுகிறது.

இயேசு தம்மைக் குறித்துக் கூறும்போது, “நான் ஒருவனையும் ஆக்கினைக்குள்ளாகவோ அல்லது மரணத்திற்கேதுவாகவோ” தீர்ப்பதில்லை (யோவான் 8:15 - விரிவாக்க வேதாகமம்) என்று கூறினார்.

ஆகவே, (நம் வார்த்தையினாலோ அல்லது மனதிலோ) நாம் ஒருவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதும், மரணத்திற்கு ஏதுவாகத் தீர்ப்பதும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்திட தேவனுக்கு மாத்திரமே உரிமை உண்டு!

ஆகிலும் நாம் சோதித்து நிதானித்து அறிய வேண்டும்!

இயேசுவைப் பற்றிய தீர்க்கதரிசனம், “அவர் தமது கண் கண்டபடியோ அல்லது தமது காது கேட்டபடியோ நியாயந்தீர்க்காமல், நீதியாய் ஜனங்களை நியாயந்தீர்ப்பார்” (ஏசாயா 11:3,4) என்றே கூறுகிறது. நாமும் அவருடைய மாதிரியைப் பின்பற்றி, யாதொன்றையும் அல்லது யாதொருவரையும் நாம் காண்கிறபடியோ அல்லது கேட்கிறபடியோ மாத்திரம் நியாயந்தீர்த்துவிடக்கூடாது. ஒரு விஷயத்தை முழுவதும் விசாரித்தபின்பே, நீதியாகவும் யாதொரு பாரபட்சமில்லாமலும் நியாயந்தீர்த்திட வேண்டும்!

தேவனுடைய குடும்பமாயிருக்கும் நாம், முதலாவது நம்மையே நியாயந்தீர்த்திட வேண்டும் என 1பேதுரு 4:17 கூறுகிறது. ஆகிலும், ‘நமக்குள்ளாக' நோக்கிப் பார்த்து நம்மை நியாயந்தீர்த்து வாழக்கூடாது. நாமோ, இயேசுவின் மாதிரியைக் கண்ணோக்கி, நம்முடைய சொந்த குறைகளை அவருடைய ஜீவியத்தின் ஒளியில் கண்டு, அதன்படி நம்மையே நியாயந்தீர்க்க வேண்டும். எழுதியிருக்கிறபடி “கர்த்தாவே, உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்” (சங்கீதம் 36:9).

தேவனுடைய ஒளியில் நம்மை நியாயந்தீர்ப்பது, நம் கிறிஸ்தவ ஜீவியத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமாகும். இந்தப் பாடத்தை அநேகர் கற்றுக்கொள்ளாதபடியால், அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் எந்த வளர்ச்சியும் இல்லாதிருக்கிறார்கள்.

இப்போது தங்களை இவ்வித உத்தமத்தோடு நியாயந்தீர்த்துக் கொண்டவர்களுக்கு “கடைசிநாளில், அவர்கள் தேவனால் நியாயந்தீர்க்கப்படமாட்டார்கள்” என்ற ஆச்சரியமான வாக்குதத்தம் அவர்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. ஆம் “நம்மை நாமே சரியாக நியாயந்தீர்த்துக் கொண்டால், நமக்கு நியாயத்தீர்ப்பில்லை” (1கொரிந்தியர் 11:31).

நாம் பிறரை நியாயந்தீர்க்காவிட்டாலும், நாமோ பாவத்தை வலிமையாய் கண்டித்துப் பிரசங்கிக்கவேண்டும்! கோபம், கண்களின் பாலிய இச்சை, பணத்தை நேசிப்பது, கவலைப்படுவது, பயம், பொல்லாத சிந்தைகள், பொய்சொல்லுதல், மனுஷனுடைய கனத்தைத் தேடுதல், நம் சத்துருக்களை வெறுப்பது போன்ற சில குறிப்பிட்ட பாவங்களை மத்தேயு 5, 6 மற்றும் 7 அதிகாரங்களில் இயேசு வலிமையாய் கண்டித்துப் பேசினார்! இதோடு சேர்த்து, தற்காலத்திய பாவங்களையும் நாம் கண்டித்துப் பேச வேண்டும். குறிப்பாக “இணையதளத்தில் அருவருப்பான பாலிய ஆபாசத்தைப் பார்த்திடும் பாவத்தையும்” கண்டித்து, அதேசமயம் யாரையும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காமல் பேசவேண்டும்! இயேசு யாரையும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதற்காக இந்த உலகத்திற்கு வராமல், உலகத்தை இரட்சிக்கவே வந்தார் (யோவான் 3:17), "தேவன் ஒருவர் மாத்திரமே எல்லோருக்கும் நீதிபதியானவரும் நியாய(ஆக்கினை)த்தீர்ப்புச் செய்கிறவருமானவர்!" (யாக்கோபு 4:12).