WFTW Body: 

"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33) என்று இயேசு கூறினார். நாம் உபத்திரவங்களுக்கு - அவை பெரிய உபத்திரவமோ அல்லது சிறிய உபத்திரவமோ - தப்பித்துக் கொள்ளுவோம் என்று ஒருபோதும் அவர் வாக்குப் பண்ணவில்லை. ஆனால் அவர் ஜெயித்தது போலவே நம்மாலும் ஜெயிக்க இயலும் என்று சொன்னார். நம்மை அவர் உபத்திரவத்திலிருந்து இரட்சிக்க விரும்புவதைவிட, அவற்றை நாம் ஜெயிக்க வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறையுடன் இருக்கிறார். ஏனெனில் நாம் சுகமாய் வாழ வேண்டும் என்பதைக் காட்டிலும் நம்முடைய சுபாவம் மாற வேண்டும் என்பதில்தான் அவருக்கு அதிக ஆர்வம் உள்ளது. உண்மையாய் இருப்பதற்குப் பலனாக நாம் வரப்போகும் உபத்திரவத்திலிருந்து தப்பிக் கொள்வோம் என்று சிலர் சொல்லுவதையும் இயேசு ஒருபோதும் ஆமோதிக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக, அவருக்காக எல்லாவற்றையும் விட்டுவந்தவர்கள், அவரைப் பின்பற்றாதவர்களைக் காட்டிலும் இன்னும் அதிக உபத்திரவப்படுவார்கள் என்றுதான் சொன்னார் (மாற்கு 10:30). "நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்" என்று சொல்லி இயேசு தன் சீஷர்களுக்காக ஜெபித்தார் (யோவான் 17:15). ஆகவேதான் அவர் தம்முடைய சீஷர்கள் உபத்திரவத்தைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக அவர்களை உடனடியாகத் தம்மிடத்தில் எடுத்துக் கொள்ளுவதை அவர் விரும்பவில்லை.

3-ஆம் நூற்றாண்டிலே, கிறிஸ்தவர்கள் ரோம அரங்கங்களிலே சிங்கங்களுக்கு இரையாக வீசப்பட்ட போதும், மரத்தூண்களிலே கட்டிவைக்கப்பட்டு எரிக்கப்பட்ட போதும், ஆண்டவர் அவர்களை அந்த உபத்திரவங்களிலிருந்து காப்பாற்றவில்லை. தானியேலின் நாட்களிலே, சிங்கங்களின் வாயைக் கட்டி, அக்கினிச் சூளையின் வல்லமையைத் தணித்த அந்த தேவன், இயேசுவின் சீஷர்களுக்கு அந்தவிதமான அற்புதங்களையெல்லாம் செய்யவில்லை. ஏனெனில் புதிய உடன்படிக்கைக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய மரணத்தின் மூலம் தேவனை மகிமைப்படுத்த வேண்டியவர்களாய் இருந்தார்கள். அவர்களும் தங்களது ஆண்டவராகிய இயேசுவைப் போலவே பன்னிரெண்டு லேகியோன் தூதர்கள் வந்து தங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்கவுமில்லை; எதிர்பார்க்கவுமில்லை. தமது குமாரனின் மணவாட்டி சிங்கங்களால் பீறுண்டு கொல்லப்படுவதையும், எரித்துச் சாம்பலாக்கப்படுவதையும் தேவன் பரலோகிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தார். கொடூரமான சரீரப்பிரகாரமான மரணத்தை எதிர்கொண்ட போதும் அவர்கள் "ஆட்டுக்குட்டியானவர் எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றியவர்கள்" (வெளி 14:4) என்ற சாட்சியைப் பெற்று, தேவனை மகிமைப்படுத்தினார்கள். "முடிவு பரியந்தம் உண்மையுள்ளவனாயிரு; அப்பொழுது ஜீவக் கிரீடத்தை உனக்குத் தருவேன்" (வெளி 2:10) என்ற வார்த்தையை மட்டுந்தான் கர்த்தர் அவர்களுடன் பேசினார். இன்றும் கூட, அநேக தேசங்களிலே, இயேசுவின் சீஷர்கள் சித்ரவதை செய்யப்பட்டு, உபத்திரவப்படுத்தப்படும் போது, ஆண்டவர் அவர்களை இந்த பூமியிலிருந்து எடுத்துக் கொள்ளவில்லை. அது போலவே அவர் மகா உபத்திரவத்திற்கு முன் நம்மைப் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளமாட்டார். ஆனால் அதைவிட மேலான ஒன்றை அவர் நமக்குச் செய்வார். மகா உபத்திரவத்திற்கு மத்தியிலே அவர் நம்மை ஜெயங்கொள்ளுகிறவர்களாக மாற்றுவார்.

இயேசு நம்மை உபத்திரவங்களிலிருந்து காப்பாற்றுவதைவிட, தீமையினின்று காப்பாற்றுவதிலேதான் மிகவும் ஆர்வமுடையவராயிருக்கிறார். உபத்திரவங்கள்தான் நம்மை ஆவிக்குரிய வலிமையுடையவர்களாய் மாற்றமுடியும். ஆதலால் தேவன் நம்மை உபத்திரவங்களினூடே கடந்து போகப்பண்ணுகிறார்.

ஞாயிறுதோறும் தங்கள் இருக்கைகளை சூடுபடுத்திக் கொண்டு காதுக்கினிய பிரசங்கிகளை வருடக்கணக்கில் கேட்டுக் கொண்டிருக்கிற சுகபோகக் கிறிஸ்தவ வட்டாரத்திலே இம்மாதிரியான செய்திகளைச் சொன்னால் அது வினோதமாகத்தான் தோன்றும். ஆனால் இந்த செய்திதான் ஆதி சபைகளில் அப்போஸ்தலர்களால் பிரசங்கிக்கப்பட்டது. "சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று (அப்போஸ்தலர்களாகிய பவுலும், பர்னபாவும்) சொன்னார்கள்" (அப் 14:22).

நாம் நம்முடைய குடும்பத்திலும், வேலை ஸ்தலங்களிலும் சந்திக்கின்ற சிறுசிறு உபத்திரவங்களெல்லாம், வரப்போகும் நாட்களில் நாம் எதிர்கொள்ளப் போகும் மகா உபத்திரவத்திற்கு நம்மை தயார்படுத்துபவையாகும். ஆகவேதான் இப்பொழுதே நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பது மிகவும் இன்றியமையாததாகும். "நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப் பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்?" (எரே 12:5) என்று தேவன் சொல்லுகிறார். "இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உடன்பங்காளனுமாயிருக்கிற" (வெளி 1:9) என்று யோவான் தன்னைப் பற்றி உரைக்கின்றார். இயேசுவின் ஒவ்வொரு முழு-இருதய சீஷனும், உலகத்தில் இருக்கும் நாட்களெல்லாம், இயேசுவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கு பங்காளனாயிருக்க ஆயத்தப்பட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட வெளிப்பாட்டை, யோவான் சுகமாய் இருக்கையில் பெற்றுக்கொள்ளவில்லை. தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே உபத்திரவங்களை அனுபவிக்கையில் பெற்றுக்கொண்டார் (வெளி 1:9). கடைசி காலத்தில் அந்திக்கிறிஸ்துவினால் உண்டாகும் பெரும் உபத்திரவங்களினூடே கடந்து செல்லும் பரிசுத்தவான்களுக்கு எழுதும் பொருட்டாக அவர் தாமே உபத்திரவங்கள் வழியாக கடந்து சென்றார். மற்ற உபத்திரவப்படுகிறவர்களுக்கு செய்யும் ஊழியத்தை நமக்கு கொடுப்பதற்கு முன், அவ்வழியில் தேவன் நம்மை கடந்துப்போகப்பண்ணுவார். புதிய ஏற்பாடு முழுவதும் பொறுமையைப் பற்றி மிகவும் வலியுறுத்திச் சொல்லப்படுகின்றது. "அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள்…… முடிவுபரியந்தமும் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" (மத்தேயு 24:13) என்று இயேசுதாமே சொல்லியிருக்கிறார்.