WFTW Body: 

கணவன்மார்கள் தங்கள் மனைவிகளில் எவ்விதம் அன்புகூர வேண்டும் என்பதற்கு, கிறிஸ்து சபையின்மேல் வைத்த அன்பை மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது (எபேசியர் 5:25). தன் உள்ளத்தில் ஓரளவாவது நேர்மை கொண்ட எந்தவொரு கணவனும் இந்த வசனத்தின்படி வாழ்வதற்கு ஜீவகாலமெல்லாம் ஒரு நீண்டபயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற தன் நிலையை ஒத்துக்கொள்வான். ஏனெனில் கிறிஸ்துவின் அன்பிற்கொப்பான நிலையை ஒருமனிதன் கூட இப்பூமியில் இன்னமும் அடைந்துவிடவில்லை. ஆனால் துயரமான விஷயம் என்னவென்றால், இந்த ஒப்பற்ற நிலையை அடைவதற்கு இன்றைய விசுவாசிகள் ஆர்வமற்று இருப்பதுதான்! ஆர்வமான முயற்சி இல்லாவிட்டால் நாம் அந்த வசனத்திற்குக் கீழ்ப்படிய மாட்டோம். முழுமையாகக் கீழ்ப்படிய நாடுவதே வேதாகமம் கூறுகிற “பூரணராகும்படி கடந்துபோகும்” வாழ்க்கையாகும். கணவன்மார்களுக்கு ஒரே ஒரு கடமையுண்டு: கிறிஸ்து சபையினிடத்தில் அன்புகூர்ந்தது போல் தங்கள் மனைவிகளினிடத்தில் அன்புகூர வேண்டும். கிறிஸ்து திருச்சபையை நேசித்து, அதைப் பரிசுத்தப்படுத்தும்படி தம்மையே அதற்காக ஒப்புக்கொடுத்தது போலவே, கணவன்மார் வருடங்கள் செல்லச் செல்ல தங்கள் மனைவிகளை இன்னும் பூரணமாய் நேசிப்பதில் தேறும்படிக்கு, பூரணத்தை நோக்கி பிரயாசத்துடன் கடந்து செல்ல வேண்டும்.

சபையில் ஒரு தோல்வியைக் கண்டபோது கிறிஸ்து அந்த வீழ்ச்சியை எப்படி சரிப்படுத்தினார்? இன்றைய பெரும்பாலான கணவன்மார்கள் செய்வது போல அவர் செய்வதில்லை. அவர்கள் தங்கள் மனைவிகளினிடத்தில் தவறுகளைக் காணும்போது, “உனக்கு அறிவு இல்லையா?” எனவும் அல்லது இதற்கு ஒப்பான பேய்த்தனத்திற்கடுத்த வார்த்தைகளையும் உபயோகித்து அந்தத் தவறுகளை சரிசெய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் இயேசுவோ இவ்வாறு ஒருக்காலும் நடந்து கொண்டதேயில்லை. அவர் தம் மணவாட்டியை (சபையை) தமக்கு முன் “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பூரணமாய் நிறுத்திக் கொள்வதற்கு” அவர் விரும்பியபோது என்ன செய்தார் தெரியுமா? அவளை (சபையை) பரிசுத்தம் செய்வதற்கு “தம்மைத்தாமே அவளுக்காக (அதற்காக) ஒப்புக் கொடுத்தார்.” உங்கள் மனைவியைப் பரிசுத்தப்படுத்தும்படி நீங்கள் உங்களையே அவளுக்காக ஒப்புக்கொடுக்க நினைத்ததுண்டா? அப்படிச் செய்வது தான் தேவனுடைய வழி. முழு மனுக்குலமும் தலைகீழாகச் சென்று நேர்மாறாக நடந்துகொள்கிறது. நீங்கள் தேவனுடைய வழியைப் பின்பற்றி நடந்தால், உங்கள் திருமண வாழ்க்கை “நல்லது” என்ற நிலையிலிருந்து “மிகவும் நல்லது” என்ற நிலைக்குச் செல்லும். கணவனாகிய நீங்கள் உங்கள் மனைவியினிடத்தில் ஒரு பிழையைக் காணும்போது, நீங்கள் இயேசுவைப் பின்பற்றவேண்டும். உங்களைச் சுற்றிலுமுள்ள மனிதர்களைப் பின்பற்றக்கூடாது.

“நான்” என்கிற நம்முடைய சுயத்தை விட்டுவிடுவது தான் மிகவும் கடினமான ஒன்றாயிருக்கிறது. “நான்” என்ற மிக முக்கியமான மனுஷன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான். இந்த சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் “நான்” என்ற இராஜாவின் எதிர்பார்ப்புக்கேற்றபடி மனைவி ஒன்றைச் செய்யாவிட்டால் அவன் அதிகம் மனம் புண்பட்டு விடுகிறான். இவ்வேளையில் நீங்கள் உங்கள் மனைவியைப் பரிசுத்தம் செய்ய வேண்டுமென்றால், இந்த வலிமையான “நான்” என்ற சுயத்தை கிறிஸ்துவைப் போலவே ஒப்புக்கொடுத்துவிட வேண்டும்! ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்து சென்ற இந்த வழியில் செல்வதற்கு ஆர்வம் கொண்ட விசுவாசிகளாகிய கணவன்மார்கள் மிகவும் சொற்பமான பேர்களே இருக்கிறார்கள். நீங்கள் இந்த வழியில் செல்லாவிட்டால், வளர்ச்சிக்குப் பதிலாக அதிகமதிகமாய் வீழ்ச்சிக்குள்ளே தான் இறங்கிச் சென்றுகொண்டிருப்பீர்கள். ஆனால் இவ்வழியில் செல்வதற்கு நீங்கள் மெய்யாகவே விருப்பம் கொண்டிருந்தால், நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்க ஆர்வமும் ஜாக்கிரதையும் கொள்வீர்கள். “அன்பு” என்பதற்குரிய விளக்கத்தை அகராதி கூறும் விளக்கத்தின்படி கற்றுக்கொள்ளாமல், “கிறிஸ்து சபையை நேசித்து தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்ற தேவனுடைய வழியின்படியே நாம் அன்பைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது உங்களுக்குரிய “நான்” என்ற ஸ்தானத்திலிருக்கும் நீங்கள் “மரிப்பதே” அதன் பொருளாகும். கணவர்களாகிய நமக்கு தேவன் தந்திருக்கும் அழைப்பு இதுதான்.

இயேசு நம் எல்லோருக்கும் குரு என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் உலகத்தாரைப் போலல்லாமல் நம்முடைய ஒப்பற்ற குரு தம் ஜீவியத்தின் கடைசிநாட்களில் எங்கு இருந்தார் தெரியுமா? ஆம், அவர் தம் மணவாட்டியின் (சீஷர்களின்) பாதபடியில் அமர்ந்து அவர்களுடைய பாதங்களைக் கழுவிக்கொண்டிருந்தார். குருவினுடைய இந்த பூரணத்திற்கு ஒருவன் வந்து அடைந்திருப்பானென்றால், அவனும் தன் குருவைப் போலவே தன் மனைவியைப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, அவளது பாதத்திற்குத் தன்னைத் தாழ்த்தி, அவள் பாதங்களைக் கழுவி, அவளுக்கு உதவிசெய்கிறவனாய்க் காணப்படுவான். பாதங்களைக் கழுவுவது என்றால் என்ன? அது, உதவும்படிக்கு இழிவான வேலைகளைச் செய்வதைக் குறிக்கும். இருப்பினும் இவ்வாறு உதவி செய்யும் கணவன்மார்களை சுயநலமாய் தங்களுக்கு ஆதாயம் தேடி பயன்படுத்தும், அவர்கள் மீது ஆளுகை செய்யும் மதியீனமான மனைவிமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லோரும் மதித்துச் செல்லும் மிதியடியைப் போல இயேசு இருக்கவில்லை. சில மனைவிமார்கள், ‘கணவன் தன் மனைவியின் பாதங்களைக் கழுவும்படி எந்த இழிவான வேலைகளையும் செய்யலாம்’ என நாம் கூறும் இந்த சத்தியத்தைத் தவறாய் புரிந்துகொள்கிறார்கள். அதாவது, அவர்களுடைய புருஷர்கள் அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாய், தங்கள் வீட்டில் ஓர் அடிமையாக மாறிவிடுகிறார்கள். ஆனால் இந்த செய்தியின் அர்த்தம் அப்படி அல்லவே அல்ல! இயேசு ஒரு “மிதியடியாய்” இருக்கவில்லை. இருப்பினும் இயேசு தம்முடைய சீஷர்களோடு உட்கார்ந்திருக்கும் போது அவர்களில் தலைவர் யார் என கண்டு கொள்வது நமக்குக் கடினமாயிருக்காது. நீங்கள் தவறுதலாகக் கூட பேதுருவையோ அல்லது மத்தேயுவையோ 'தலைவன்' என கருதமாட்டீர்கள். அங்கு எல்லோரையும் வழிநடத்திச் செல்லும் ஒருவராக இருந்த இயேசுவின் தலைமை மிகவும் தெளிவகாகக் காணப்பட்டது! இதைப் போலவே ஒரு கணவனுடைய நிலையும் இருக்க வேண்டும். ஒரு தலைவனாகவும் அதே சமயம் ஒரு வேலைக்காரனாகவும் இருப்பது, மேன்மையானதொரு சமநிலையாகும். இந்த சமநிலையை நாம் இயேசுவினிடத்திலிருந்து தான் கற்றுக்கொள்ள முடியும். இந்த வகையான தலைமைத்துவத்திற்கு நமக்கு ஞானம் வேண்டும், அதை நீங்கள் ஜெபத்தில் ஆண்டவரிடம் கேட்டால், அவரால் மட்டுமே அதை வழங்க முடியும்.

இயேசு, தம் மந்தைக்கு மாதிரியாக முன்செலும் ஒரு மேய்ப்பராய் இருக்கிறார். தன் மந்தைக்குப் பின்னால் இருந்து அவைகளை விரட்டி ஓட்டாமல், முன்னால் நிற்கும் ஒரு “மாதிரியாய்" திகழ்ந்தார். உங்கள் வீட்டில் காரியம் எல்லாம் சீர்பட்டு நடைபெற நீங்கள் விரும்பினால் இயேசுவைப்போலவே நீங்களும் ஒரு நல்ல மாதிரியாய் இருப்பதற்கு வாஞ்சை கொள்ளுங்கள். ஏராளமான புத்திமதிகளை மனைவிக்குக் கூறிக்கொண்டிராமல் அவள் பின்பற்றத்தகுந்த ஒரு நல்ல வாழ்க்கையை இயேசுவைப்போல மாதிரியாக வாழ்ந்து காண்பியுங்கள். ஒரு கணவனாயிருக்கும் நீங்கள் இயேசுவின் மாதிரியைப் போலவே உங்கள் மனைவியை நடத்திச் செல்லும்படி ஒரு நல்ல மேய்ப்பனாய் இருக்க வேண்டும். உங்கள் மனைவி ஜீவியத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தடுமாறுவார்களென்றால், அன்புள்ள சகோதரனே, இப்போது உங்களைப் பார்த்து நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டுபார்க்க வேண்டும். “தேவன் எனக்குத் தந்த மனைவியை (ஆட்டை) தேவன் விரும்பிய பாதையில் நான் சரியாய் நடத்திச் செல்கிறேனா?" என்றே உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். உங்கள் மனைவிக்குப் பின்னால் உங்கள் பிள்ளைகளாகிய ஆட்டுக்குட்டிகளும் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாவரும் மேய்ப்பனாகிய ஒரு மனிதனையே (கணவனாகிய உங்களையே) சார்ந்திருக்கிறார்கள். கணவனுக்கு சுய-கட்டுப்பாடு இல்லாதிருந்தால், அவனுடைய குடும்பமாகிய மந்தை எப்படி சரியாய் நடக்க முடியும்? அவன் பயத்தோடும் நடுக்கத்தோடும் தன் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படாவிட்டால், அவன் இயேசுவைப் பின்பற்றாவிட்டால், அவனுடைய குடும்பம் எந்த திசையில் செல்லும்? இவ்வுலகத்தாரைப் போலவே அது தேவன் நியமித்த வழியை விட்டு எதிர் திசையிலேயே சென்று கொண்டிருக்கும்.

ஆகவே, திருமண வாழ்க்கை “நல்லது” என்ற நிலையிலிருந்து “மிகவும் நல்லது” என்ற நிலையை அடைந்திடவேண்டும் என்றால், “இயேசுவைப் பின்பற்றி நடப்பதை” ஜாக்கிரதையாய் எடுத்துக்கொள்ளும் கணவன்மார்கள் வேண்டும். “இயேசுவைப் பின்பற்றுவது” அந்தக் கணவனுக்கு ஜீவியகால வாஞ்சையாய் இருக்கவேண்டும். சபைக் கூட்டத்தில் மாத்திரம் இயேசுவைப் பின்பற்றுவது என்று அல்லாமல், தன் முழுநேர வேலையாகவே அதைக் கருத வேண்டும். இப்படிப்பட்ட திருமண வாழ்க்கை சீஷர்களுக்கானதேயன்றி, ‘மரித்தபின் பரலோகம் செல்லவேண்டும்’ என்று வாழும் நபர்களுக்கானதல்ல.