எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   வாலிபர்
WFTW Body: 

வெளி 15:3,4-ல், "அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின" என்று வாசிக்கிறோம்.

பழைய ஏற்பாட்டிலே மோசேயின் இரு பாடல்கள் உள்ளன. ஒன்று யாத்திராகமம் 15:1-18 -ல் உள்ளது. இது இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தைக் கடந்த போது, பார்வோன் அவனது சேனையுடன் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து மூழ்கிப் போன சமயத்தில் பாடினதாகும். அங்கே மோசே, "கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்" என்று பாடினான். வெளிப்படுத்தல் 6-ஆம் அதிகாரத்தில், அந்திக் கிறிஸ்து ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் அமர்ந்து சவாரி செய்கிறவனாய் சித்தரிக்கப்படுவதைக் காண்கிறோம். தேவன் அக் குதிரையையும், அதின் மேல் அமர்ந்திருந்தவனையும் கீழே விழத் தள்ளினபடியால், ஜெயங்கொண்டவர்கள் தேவனைத் துதித்துப் பாடுவதை அங்கு பார்க்கிறோம்.

அர்மகெதோன் என்னும் கடைசி யுத்தத்தின் போது, அந்திக் கிறிஸ்து அவனுடைய சேனைகளுடன் சேர்ந்து இஸ்ரவேல் நாட்டுக்குள் நுழைந்து, அதைத் தாக்குவான் என்று சொல்லப்படுகிறது. அந்த நேரத்திலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவருடைய பரிசுத்தவான்களுடன் இறங்கி வருவார். அவருடைய பாதங்கள் ஒலிவ மலையின் மேல் நிற்கும். அவர் அந்திக் கிறிஸ்துவின் சேனைகளை அழித்துப் போடுவார். தேவ ஜனங்கள் அனைவரும், எந்த வித யுத்தமும் செய்யாமலேயே, அந்த வெற்றியைக் கண்டு அதிலே பங்கு கொண்டு ஆரவாரிப்பார்கள்.

இன்றும் கூட இதே முறையில்தான் நாம் ஒவ்வொரு வெற்றியையும் ஜெயிக்க வேண்டும். மனுஷீக ஆயுதங்களைக் கொண்டு நாம் ஜெயிக்கிறதில்லை. நாம் அமர்ந்திருந்து கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருக்கிறோம். கர்த்தரே சத்துருக்களை அழிக்கிறார். ஆகவே இது போன்ற விசுவாசத்தை உடையவர்கள் இந்த மோசேயின் பாடலைப் பாடலாம்!! வாழ்க்கையில் சந்திக்கின்ற யுத்தங்களிலெல்லாம் நாம் மோசேயின் பாடலைப் பாட முடியும். நாம் "அமர்ந்திருந்து" ஆண்டவர் நம்முடைய சத்துருக்களுக்கு என்ன செய்கிறார் என்பதைக் காண முடியும்.

உபாகமம் 31:30 லிருந்து 32:43 வரையுள்ள பகுதியில் மோசேயின் இரண்டாவது பாடலைப் பார்க்கிறோம். "ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின் மேலும் தமது ஜனங்களின் மேலும் கிருபையுள்ளவராவார்" (உபா 32:43) என்று பாடுகிறான்.

இரு பாடல்களிலுமே நாம் ஒரு சத்தியத்தைக் காண்கிறோம். தேவ ஜனங்கள் தங்களுடைய சத்துருக்களைப் பழிவாங்குவதில்லை. அவர்கள் அவருக்குப் பின்பாக நிற்கிற வேளையில், அவரே அவர்களுக்காய் யுத்தம் செய்து, அவர்களுடைய சத்துருக்களைப் பழிவாங்குகிறார். இந்தப் பாடலை நாம் கற்றுக் கொள்ளுவதுதான் நம்முடைய இப்போதைய தேவையாயிருக்கிறது. அப்படிக் கற்றுக் கொண்டால் ஒரு நாளிலே நாம் தேவனுடைய சுரமண்டலங்களைக் கொண்டு அவருடைய மகிமையிலே பாடுவோம். நம்முடைய அன்றாட ஜீவியத்தின் சூழ்நிலைகள் யாவும் ஒரு பாடல் குழுவிலே சேர்ந்து நாம் இப் பாடலைக் கற்றுக் கொள்ளப் பயிற்சி எடுப்பதற்கு ஒப்பாகச் சொல்லலாம்.

ஜெயங்கொள்ளுகிறவர்கள் எல்லாரும் தேவனுடைய வழிகள் பூரணமானவைகள் என்று சொல்லிப் பாடுகிறார்கள். "இயேசு எல்லாவற்றையும் செம்மையாய்ச் செய்திருக்கிறார்" என்று சொல்லி நாம் பரலோகத்திலே பாடுவோம். அந்நாளிலே, இப்பூமியில் தேவன் நம்மை நடத்தி வந்த வழிகளை எல்லாம் பின்னோக்கிப் பார்க்கும் போது, அவை எல்லாவற்றையும் (ஆம், எல்லாவற்றையுமே) நம்முடைய மிகச் சிறந்த நன்மைக்காகவே அவர் நியமித்திருந்தார் என்று நாம் கண்டு கொள்ளுவோம். அநேகக் காரியங்கள் ஏன் இப்படி நடக்கின்றன என்பதை இன்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அன்றைய நாளிலே, எல்லாவற்றையுமே பூரணமாகப் புரிந்து கொள்ளுவோம். ஆனால் விசுவாசிக்கிற மனுஷனோ அந்த நாள் வரைக்கும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் இப்பொழுதே விசுவாசிக்கிறவனாகவும், காரியங்களை அறிகிறவனாகவும் இருக்கிறான். இப்பூமியில் அவன் தனக்கு நிகழ்ந்தவற்றிற்கானக் காரணகாரியங்களை எல்லாம் அந்நாளிலே தேவன் அவனுக்கு விவரித்துச் சொல்லும் வரைக்கும் காத்திருக்க மாட்டான். இப்பொழுதே, "கர்த்தாவே! உம்முடைய வழிகள் எல்லாம் பூரணமானவைகள்" என்று சொல்லிப் பாடுகிறவனாய் இருக்கிறான்.