தேவனைச் சார்ந்து வாழ்கின்ற மனிதன், தண்ணீரண்டையில் நாட்டப்பட்டு தன் உணவை சம்பூரணமாய் ஈர்த்துக் கொள்ளுகிற மரத்திற்கு ஒப்பாய் இருக்கிறான் என்றே வேதம் கூறி மகிழ்கிறது (எரேமியா 17:5-8), அப்படித்தான் இயேசு வாழ்ந்தார். ஒரு மனிதனாக அவர், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து (தேவ நதியிலிருந்து) தம் ஆவிக்குரிய ஆகாரத்தைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டார்.
சோதனைகளில் இயேசுகிறிஸ்து அடைந்த வெற்றிக்குக் காரணம், அவரது மனுஷீக தீர்மானமல்ல. மாறாக, ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவர் தம் பிதாவினிடத்திலிருந்து பெற்றுக் கொண்ட வல்லமையைக் கொண்டே ஜெயம் பெற்றார். இயேசு தாம் கைக்கொண்டு போதித்த “சுயத்தை வெறுக்கும்” வழியானது, ஆத்துமா தன்னைத்தான் ஆளுகை செய்துகொள்ள முயற்சிக்கும் ஒரு வழியல்ல. இல்லை. அப்படியிருந்திருந்தால், அது யோக மார்க்கம் அல்லது புத்த மார்க்கம்! பரத்துக்கும் நரகத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசமானதாய் அதை வேதம் நமக்கு வேறுபடுத்தி போதிக்கிறது.
நாம் ஜீவிக்கவேண்டிய விதமாய் ஜீவிப்பதற்கும், தேவன் அங்கீகரிக்கிற விதமாய் ஊழியம் செய்வதற்கும் மனிதர்களாகிய நம்மிடத்தில் வல்லமை இல்லை என்பதை இயேசு போதித்திருக்கிறார். பெலனற்ற கொடி, எப்படி கனி கொடுப்பதற்கு செடியில் நிலைத்திருக்க வேண்டியதோ அப்படியே நாமும் இருக்கிறோம், என்று கூறினார். “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவான் 15:5) என்றார். எனவே பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில்லாமல் நாம் சுயமாய் முயற்சித்து செய்கிற செயல்கள் யாவும் பூஜ்யமாய்த்தான் இருக்கும். எப்பொழுதும் “ஆவியில் நிறைந்திருக்க வேண்டியதன்” அத்தியாவசியம் இதிலே விளங்குகிறது (எபேசியர் 5:18).
இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டே பிதாவுக்கு முன்பாக வாழ்ந்து, ஊழியம் செய்தார் (லூக்கா 4:1,18). மனிதன் என்கிற நிலையில், தம் ஆவியின் ஏழ்மையை இயேசு உணர்ந்திருந்தபடியால், பரிசுத்தாவியில் நிறைந்த ஜீவியம் அவருக்கு சாத்தியமானது!
தாம் உடுத்திக்கொண்ட “மனிதப் போர்வையின் பெலவீனத்தை” இயேசு உணர்ந்தவராய் இருந்தார். எனவே தனியே இருக்கக்கூடிய சமயம் எப்போது வாய்க்கும்? என்று பார்த்துக் கொண்டேயிருந்து, அந்த சமயங்களிளெல்லாம் தனியே ஜெபித்தார்! எப்படி சுற்றுலாப் பயணி ஒருவன், ஒரு பட்டணத்தில் பிரவேசிக்கும்போது, தான் பார்த்து ரசிக்கக் கூடிய இடங்களுக்காகவும், நல்ல ஹோட்டல்களுக்காகவும் தன் கண்களை விழித்துத் தேடுவானோ, அப்படியே இயேசுவும் தனியே ஜெபிப்பதற்கு இடத்தை தேடியிருப்பார் என ஒரு பரிசுத்தவான் கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு சோதனையையும் மேற்கொள்வதற்கும், தமது ஆத்தும வல்லமையை மரணத்தில் ஊற்றுவதற்கும் தேவ வல்லமையை இயேசு தேடினார்! எந்தவொரு மானிடனும் உணராத அளவுக்கு மாம்சத்தின் பெலவீனத்தை இயேசுகிறிஸ்து உணர்ந்திருந்தபடியினால், எந்த மானிடனும் தேடாத அளவுக்கு அவர் பிதாவின் சமூகத்தை 'உதவிக்காகத்' தேடி ஜெபித்தார்! அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்” வேண்டுதல் செய்தார். அதன் பலனாக, உலகிலுள்ள எந்த மனுஷனைக் காட்டிலும் அதிக வல்லமையை' பிதா அவருக்குத் தந்தருளி அவரை பலப்படுத்தினார். இவ்வாறாகவே, இயேசு ஒருமுறைகூட பாவம் செய்யாமலும், ஒருபோதும் தமது ஆத்துமாவின்படி பிழைக்காமலும் இருந்தார்! (எபிரெயர் 4:15; எபிரெயர் 5:7-9).
சுவிசேஷங்களில், 'ஜெபம்,' 'ஜெபித்தார்' என்கிற வார்த்தைகள் 25 முறை இயேசுவை சம்பந்தப்படுத்தி சொல்லப்பட்டிருப்பது முக்கியமானதல்லவா? 'அதில்தான்' அவருடைய வாழ்க்கையின் இரகசியமும் ஊழியத்தின் இரகசியமும் அடங்கியிருக்கிறது!
தம் வாழ்க்கையின் முக்கியமான காரியங்களுக்கு முன்பாக மாத்திரமல்ல, அந்த முக்கிய காரியங்களை சாதித்தபிறகும்கூட இயேசு ஜெபித்தார். அற்புதமாய் ஐயாயிரம் பேரை போஷித்தபிறகு, அவர் மலைக்கு ஏறி ஜெபித்தார்! பெருமையால் பீடிக்கப்படவோ அல்லது அலட்சியமாய் மாறிவிடவோ நடத்தக்கூடிய சோதனைகளை ஜெயிப்பதற்கும், பிதாவிடமிருந்து தாம் பெற்ற பெலனை புதுப்பித்துக் கொள்வதற்குமே அப்படி ஜெபித்திருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை! (ஏசாயா 40:31). நம்மில் பெரும்பாலோர், கர்த்தருக்குச் செய்யவேண்டிய முக்கியமான காரியங்களுக்கு முன்பாக மட்டும் ஜெபிக்கிறவர்களாயிருக்கிறோம். ஆனால், இயேசு கொண்டிருந்த பழக்கத்தைப் போல, நம்முடைய பணியை முடித்த பின்னரும் பிதாவுக்கு முன்பாகக் காத்திருந்து ஜெபிப்போமானால், பெருமையடைவதிலிருந்து நம்மை நாம் காத்துக்கொண்டு, அவ்விதமாய் கர்த்தருக்கென்று இன்னும் பெரிய காரியங்களை சாதிக்க நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்பவர்களாயிருப்போம்.
இயேசு எவ்வளவு ஓய்வின்றி உழைத்தாரோ அவ்வளவுக்கு அதிகமாய் ஜெபிக்கவும் செய்தார்! அவருக்கு சில சமயங்களில் சாப்பிடவும்கூட நேரம் இல்லாமற்போயிற்று (மாற்கு 3:20; மாற்கு 6:31,33,46). 'ஆனால்' ஜெபிப்பதற்கு மட்டும் எப்பொழுதும் நேரம் எடுத்துக்கொண்டார்! அவருக்கு எப்பொழுது தூங்கவேண்டும், எப்பொழுது ஜெபிக்க வேண்டும் என்று தெரியும்! காரணம், அவர் ஆவியானவரின் வழி நடத்துதலிலேயே தரித்திருந்தார் என்பதுதான்!!
பயனுள்ள ஜெபத்திற்கு ஆவியின் எளிமையே ஒரு முன்நிபந்தனையாகும். ஜெபம் என்பது மனித உதவியற்ற தன்மையின் வெளிப்பாடாகும். மேலும் அது வெறும் சடங்காக அல்லாமல் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ அல்லது தேவனுக்கு ஊழியம் செய்ய மனித வளங்களின் போதாமையை தொடர்ந்து அங்கீகரிப்பது மிகவும் அவசியம்.
இயேசு தொடர்ச்சியாய் 'தேவ வல்லமையை' ஜெபத்தில் தேடினார். அதில் அவர் ஒருபோதும் 'பெற முடியாமல்' ஏமாந்து போனதில்லை!! எனவே வேறு எந்தவிதத்திலும் சாதிக்கமுடியாத காரியங்களைத் தம் ஜெபத்தினால் சாதித்தார்.