“நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்” என்று மத்தேயு 5:17 கூறுகிறது. தேவனுடைய கற்பனைகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படைக் கோட்பாடு அவரது ஜீவனேயாகும். தேவன் தமது சுபாவம் எப்படிப்பட்டது என்பதை நியாயப்பிரமாணத்தில், ஒரு சிறிய அளவிற்கு, எழுத்து வடிவத்தில் பதிவு செய்தார். விக்கிரகாராதனை இல்லாதிருப்பதும் தேவனுக்கு முதலிடம் கொடுப்பதும், தகப்பனையும் தாயையும் கனப்படுத்துவதும், கொலை, விபச்சாரம் அல்லது இதுபோன்ற எவ்விதத்திலும் மற்றவர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காமல் இருப்பதுமாகிய இவையெல்லாம் மனிதன்மூலமாக வெளிப்படும் தேவனுடைய சுபாவமாகும். இயேசு அந்த ஜீவனை வெளிப்படுத்தினார். அவர், “நான் நியாயப்பிரமாணத்தை அழிக்க வரவில்லை” என்றார். நியாயப்பிரமாணத்திற்குப் பின்னால் இருக்கும் அடிப்படைக் கோட்பாடு ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை. சிலர் அந்த வசனத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, ஓய்வுநாளையும் நாம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
“ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது” என்று கொலோசெயர் 2:16 கூறுகிறது. ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது என்ற நான்காவது கட்டளையை அவர் இங்கு சேர்த்திருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அது வெறும் நிழல் என்று அவர் கூறுகிறார். அது கிறிஸ்துவில் நிறைவேறிவிட்டது. இன்றைய வழக்கில், அது ஒரு புகைப்படம் போன்றது என்று நீங்கள் கூறலாம். கிறிஸ்து வரும் வரை, உங்களுக்கு புகைப்படம் தேவைப்பட்டது. நான் என் மனைவியுடன் சேர்ந்து பயணம் செய்யவில்லை என்றால், அவர்களுடைய புகைப்படத்தை என்னுடன் எடுத்துச் சென்று, அதை நான் எடுத்துப் பார்க்கலாம். ஆனால் நான் என் மனைவியுடன் சேர்ந்தே பயணம் செய்கிறேன் என்றால், நான் ஏன் அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்க்க வேண்டும்? தன் மனைவியுடன் பயணம் செய்யும் ஒரு மனிதன், அவளது புகைப்படத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தால் அவனிடத்தில் ஏதோ தவறு இருக்கிறது!
கிறிஸ்து வந்து விட்டபடியால் இப்போது நியாயப்பிரமாணம் முடிந்துவிட்டது. அது வெறும் நிழல் என்று அவர் கூறுகிறார். அது கிறிஸ்துவின் துல்லியமான ஒரு படம் - பழைய ஏற்பாட்டில் பல விஷயங்கள் கிறிஸ்துவைத் துல்லியமாக சித்தரித்தன - ஆனால் அது ஒரு புகைப்படம் மட்டுமேயாகும். யதார்த்தம் கிறிஸ்துவில் இருக்கிறது. நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதைப் பற்றி இயேசு பேசும்போது நாம் இதை மனதில் கொள்ள வேண்டும். ஓய்வுநாள் கிறிஸ்துவில் நிறைவேறிவிட்டது. இப்போது ஆண்டவர் நம் இருதயங்களுக்குள் உள்ளான ஓய்வுநாளைக் (இளைப்பாறுதலைக்) கொண்டுவரவே விரும்புகிறார். “என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). நாம் அவருடைய நுகத்தை நம்மீது எடுத்துக்கொள்ளும்போது அந்த உள்ளான இளைப்பாறுதல் நமக்குள் வருகிறது. ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது என்பது ஒருபோதும் நீக்கப்படக்கூடாத ஒரே கற்பனை என்று சிலர் நினைக்கிறார்கள். இல்லை, நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதல் இப்போது பரிசுத்த ஆவியின் மூலமாக நம் இருதயங்களுக்குள் இருக்கிறது.
ரோமர் 8:4-இல், இது இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது: “மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்.” இப்படித்தான் நியாயப்பிரமாணம் நிறைவேற்றப்படுகிறது. நாம் வசனத்தை வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நியாயப்பிரமாணம் ஒழிந்து போகாது. இயேசு நியாயப்பிரமாணத்தை ஒழிக்க வரவில்லை, அதை நிறைவேற்ற வந்தார். அது நமக்குள்ளும் நிறைவேற வேண்டும். அது நமக்குள் எப்படி நிறைவேறப் போகிறது? நாம் மாம்சத்தின்படி நடவாமல், ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியின்படி நடக்கும்போது, நியாயப்பிரமாணத்தின் நீதியான எதிர்பார்ப்பு நம்மில் நிறைவேறுகிறது (ரோமர் 8:4). அது ஓய்வுநாளையோ அல்லது பிற கற்பனைகளையோ கடைப்பிடிப்பதன் மூலமாக நிறைவேறுகிறதில்லை.
மத்தேயு 5:20-இல், நியாயப்பிரமாணத்தை நாம் எவ்வளவு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதை இயேசு விவரிக்கிறார்: “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்.” இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார், நம் வாழ்க்கையிலும் கூட தேவனுடைய நியாயப்பிரமாணம் நம் இருதயங்களில் நிறைவேற்றப்பட வேண்டும். பழைய ஏற்பாட்டில், அவர்கள் அதைப் பல்வேறு வழிகளில் வெளிப்புறமாக நிறைவேற்றினார்கள் - அவர்கள் “பாத்திரத்தின் வெளிப்புறத்தை” சுத்தமாக வைத்திருந்தனர். ஆனால் இப்போது தேவன் விரும்புவது பாத்திரத்தின் உட்புறம் தான். நாம் பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு ஒளியாகவும் இருக்க வேண்டும். அந்த ஜீவனானது நமக்குள்ளாக பரிசுத்த ஆவியினிடத்திலிருந்து, வர வேண்டும்.
“அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” என்று பிலிப்பியர் 2:12,13 கூறுகிறது.
இந்த வசனத்தைப் பற்றிய சில குறிப்புகளை நாம் இங்கே பார்க்கலாம்:
(i) (கடந்தகால) இரட்சிப்பு என்பது முதலில் தேவனுடைய கோபாக்கினையிலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் பெறும் இரட்சிப்பாகும். இந்த இரட்சிப்பு தேவனிடமிருந்து வரும் ஓர் இலவசமான ஈவு. ஒருபோதும் அதை நாம் கிரியையினால் பெற முடியாது. இயேசு சிலுவையில் நமக்காக அதை “முடித்துவிட்டார்”. ஆனால் இரட்சிப்பு என்பது ஆதாமின் சுபாவமாகிய நம் மாம்சத்திலிருந்தும், பாவமும் லௌகீகமுமான நடக்கைகளாகிய குரலின் தொனியை உயர்த்துதல், எரிச்சல், அசுத்தம், பொருளாசை முதலியவற்றிலிருந்தும் நிகழ்காலத்தில் நாம் அடையும் விடுதலையையும் குறிக்கிறது. மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டிருக்கும் இரட்சிப்பு இதுதான்.
நமது இரட்சிப்பின் மூன்று காலங்கள் இதோ:
பாவத்தின் தண்டனையிலிருந்து நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.
பாவத்தின் வல்லமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம்.
கிறிஸ்து திரும்பி வரும்போது, ஒரு நாள் பாவத்தின் பிரசன்னத்திலிருந்து நாம் இரட்சிக்கப்படுவோம்.
(ii) தேவன் நம்மிடத்தில் செயல்படுவதைப் பற்றி தேவனுடைய வார்த்தை பேசும் போதெல்லாம், அது எப்போதும் பரிசுத்த ஆவியின் ஊழியத்தையே குறிக்கிறது. மேலும் அவருடைய முதன்மையான பணி நம்மை சுத்திகரிப்பதும் (பாவத்திலிருந்தும் உலகத்திலிருந்தும் நம்மைப் பிரித்து வைப்பதும்) நம்மைப் பரிசுத்தமாக்குவதுமாகும். எனவே தேவன் நமக்குள்ளாகச் “செயல்படுவதை” நாம் “செயல்படுத்த” வேண்டும். தேவன் நம்மிடத்தில் பேசும்போது, நமக்குள்ளாக மாற்றப்பட வேண்டிய சில மனப்பான்மை அல்லது சிந்தனை அல்லது நடத்தையைச் சுட்டிக்காட்டும்போது, அது தேவன் “நமக்குள்ளாகச் செயல்படுவதாகும்.” அந்தத் திருத்தத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அவர் சுட்டிக்காட்டும் “மாம்சத்திலோ அல்லது ஆவியிலோ காணப்படும் அந்தக் குறிப்பிட்ட அசுத்தத்திலிருந்து, அந்தக் குறிப்பிட்ட பழக்கத்திலிருந்து நாம் நம்மைச் சுத்திகரித்துக்” கொள்ளும்போது (2கொரிந்தியர் 7:1-ஐப் பார்க்கவும்), நாம் “நம் இரட்சிப்பைச் செயல்படுத்துகிறோம்.”