WFTW Body: 

காயீன், பிலேயாம், கோரா ஆகிய மூன்று மாதிரிகளைப் பழைய ஏற்பாட்டிலிருந்து யூதா தருகிறார்.

காயீனுடைய பிரச்சனை பொறாமையாக இருந்தது. அவனுடைய இளைய சகோதரனின் பலியின் மீது அக்கினியை அனுப்பி தேவன் அதை ஏற்றுக் கொண்டதால், தம்பியின் மீது பொறாமை ஏற்பட்டது. நீங்கள் ஏதாவது ஒரு சகோதரனின் ஜீவியம் மற்றும் ஊழியத்தின் மீது (ஒரு வேளை அவர் உங்களைவிட இளையவராக இருக்கலாம்) தேவன் அக்கினியையும், அபிஷேகத்தையும் தருவதைக் கண்டு, பொறாமைப்படுகிறீர்களா? அப்படியானால், நீங்கள் காயீனுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு யார் மீதாவது பொறாமை இருக்குமானால், நீங்கள் அவரிடத்தில் அன்புகூரவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது. இளைய சகோதரர்கள் அபிஷேகிக்கப்படுவதையும், அக்கினியாய் இருப்பதையும், தங்களைக் காட்டிலும் ஆவிக்குரிய ரீதியில் முன்னேறிச் செல்வதையும் கண்டு, மூப்பர்கள் பொறாமை கொள்ளக்கூடும். நீங்கள் பொறாமை உள்ளவர்களாகும் போது, பிசாசுடன் ஐக்கியப்பட்டு விடுகிறீர்கள். தேவபத்தியுள்ளவன் அத்தகைய இளைய சகோதரனை உற்சாகப்படுத்துகிறார். அவர் கூட்டத்தில் அமர்ந்துகொண்டு, அந்த இளைய சகோதரனைப் பிரதான பேச்சாளராக இருக்கட்டும் என விட்டுவிடுவார்.

கல்வி அறிவு இல்லாத ஒரு தொழிலாளியின் மகன் கல்லூரியில் படித்துப் பட்டம் பெறுவதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தத் தகப்பன் தன்னுடைய மகனின் பட்டமளிப்பு விழாவிற்காகக் கல்லூரிக்குச் செல்கிறான். மகன் தன்னைவிடப் படிப்பில் உயர்ந்துவிட்டதற்காக அவன்மீது பொறாமை கொள்வானா? இல்லை. என்ன காரணம்? ஏனெனில் அவன் ஒரு தகப்பனாயிருந்து, மகனை நேசிக்கிறான். நீங்கள் ஒரு சபையில் மூப்பனாய் இருந்து கொண்டு, சபையிலுள்ள எவர்மீதாவது பொறாமை கொள்வீர்களானால், நீங்கள் ஒரு தகப்பனாய் இல்லை என்பதே அதற்கான காரணமாகும். ஓர் உண்மையான தகப்பன் தன் மகனை பி.எச்டி வரைப் படிக்க உற்சாகப்படுத்துவான். ஏழைத் தொழிலாளிகள் தங்கள் பிள்ளைகள் கற்றுத் தேறுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைப் போலவே சபையிலுள்ள இளைய சகோதரர்களை முன்னுக்கு உந்தித் தள்ள ஆர்வம் கொண்ட மூப்பர்களைக் காண்பது அபூர்வமாகவே உள்ளது. அதற்கு மாறாக, தங்கள் சிங்காசனங்களில் வீற்றிருந்து கொண்டு, அபிஷேகிக்கப்பட்ட சகோதரனைப் பொறாமை கண் கொண்டு பார்க்கிற மூப்பர்களை நான் கண்டிருக்கிறேன். தங்களுடைய அதிகாரத்திற்கு அவர்களை ஓர் அச்சுறுத்தலாக எண்ணி, முடிந்த அளவிற்கு எல்லா விதத்திலும் அவர்களை நசுக்குகிறார்கள். இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் தகப்பன்மார்கள் வெகு சிலரே உள்ளனர் என்பதே அதன் பரிதாபமான நிலையாகும். அவர்களெல்லாரும் தங்களுக்கானவைகளைத் தேடுகிறவர்களாவர். மெய்யான தேவபக்தியுள்ள ஒருவன் தன்னுடைய இளைய சகோதரர்கள் முதிர்ச்சி அடைவதையும், தன்னுடைய ஊழியத்தைக் காட்டிலும் அதிக அபிஷேகமுள்ள ஊழியத்தை அவர்கள் பெற்றிருப்பதையும் கண்டு பெருமகிழ்ச்சிக் கொள்ளுவான். அவர்கள் அத்தகைய இளைய சகோதரர்களை முன்னுக்குத் தள்ளி, தங்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு பின்னணியிலேயே இருந்து கொள்வார்கள். நீங்கள் தேவபக்தியுள்ள மூப்பராய் இருக்க விரும்பினால், பொறாமைபிடித்த காயீனைப் போல இருக்க வேண்டாம்.

யூதா குறிப்பிடும் அடுத்த நபர் பிலேயாம் ஆவான். அவனது பிரச்சனைப் பொருளாசையும், பண ஆசையுமாகும். பிலேயாம், மேசியாவின் வருகை உட்பட, பல நல்ல காரியங்களைக் குறித்துப் பேசினான் (எண் 24:17). அதே சமயம் அவன் பணத்துக்குப் பின்னாலும் ஓடினான். இன்றுள்ள அநேகப் பிரசங்கிகள் பல அற்புதமான சத்தியங்களையெல்லாம் பேசிவிட்டு, பொருளாசை உள்ளவர்களாய் இருப்பதைப் போலவே அவனும் இருந்தான். அப்படிப்பட்டப் பிரசங்கிகள் அனைவரும் பிலேயாமின் வழியிலே சென்றவர்கள் ஆவர்.

மூன்றாவதாக, யூதா கோராவைக் குறித்துப் பேசுகிறார். அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் பண்ணுவதே இவனுடைய பிரச்சனையாகும். கோரா எகிப்திலேயே ஓர் அடிமையாக மரித்திருந்திருப்பான். அவன் இஸ்ரவேலிலே ஒரு தலைவனாவதற்குத் தகுதியற்றவனாகவே தேவன் அவனைக் கண்டார். தேவன் மோசேயைப் பயன்படுத்தி, கோராவை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். மோசே அவனை உற்சாகப் படுத்தி, அவனுக்கு ஒரு தலைமைப் பதவியையும் கொடுத்தான். இது கோராவின் தலைக்கேறி, பின்பு அவன் மோசேயை எதிர்க்கத் துணிந்துவிட்டான். தேவன் அவனை எப்படி நியாயந்தீர்த்தார் எனப் பாருங்கள். பூமி வாயைப் பிளந்து அவனை விழுங்கிவிட்டது. காயீன் தன்னுடைய இளைய சகோதரன் மீது பொறாமை கொண்டான். ஆனால் கோரா முதிர்ந்த ஆவிக்குரிய தலைவன்மீது பொறாமை கொண்டான். அதுபோலவே, நீங்களும் உங்களை ஓர் ஆவிக்குரிய தலைவனாக எண்ணிக் கொண்டு, பெருமையடைந்து, உங்களை நடத்திப் போஷித்த, பக்தியுள்ள மனிதர்களுக்கு அடங்காதவர்களாக மாறிவிடக் கூடும். ஆனால் தேவன் ஒரு நாளிலே, தாம் யாரை அபிஷேகம் பண்ணினார் என்பதை நியாயப்படுத்துவார். அந்த நாளானது கோராவுக்கு ஒரு துக்ககரமான நாளாக அமைந்தது போலவே உங்களுக்கும் இருந்துவிட முடியும். கிறிஸ்தவ உலகிலே, அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் பண்ணுதல் என்பது சர்வசாதாரணமாக மாறியிருப்பது ஒரு துர்ப்பாக்கியமாகும். நாம் எந்த ஓர் ஆவிக்குரிய அதிகாரத்திற்கும் எதிர்த்து நிற்கவே கூடாது. நீங்கள் இருக்கும் சபையிலே உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாவிட்டால், வேறு இடம் தேடிச் சென்றுவிடுங்கள்.ஆனால் அங்கேயே தங்கித் தலைமைக்குத் தலைவலியாய் இருக்காதீர்கள். இல்லையேல், கோராவைப் போலத்தான் உங்களுடைய முடிவும் இருக்கும். நீங்கள் ஒரு குழுவினருடன் ஒத்துப் போக இயலவில்லையென்றால், அவர்களை விட்டுவிட்டு, வேறு இடத்திற்குச் செல்லுங்கள். முடிந்தால் வேறொரு குழுவைத் தொடங்குங்கள்; ஆனால் கலகம் செய்வதை விட்டுவிடுங்கள். இத்தகைய மனிதர்கள் கடலடியில் மறைந்திருக்கும் தாவரங்களுக்கு - மறைந்திருக்கும் பாறைகளுக்கு ஒப்பானவர்களாவர். இப்பாறைகளின் மீது கப்பல்கள் மோதினால் உடைந்துவிடும். இவர்கள் தாங்கள் ஆவிக்குரிய வரங்களைப் பெற்றிருப்பவர்களைப் போல ஜனங்களை ஏமாற்றுகின்றனர்; ஆனால் இவர்கள் மழைதராத மேகங்களைப் போன்றவர்கள் (யூதா 1:12).