WFTW Body: 

புதிய ஏற்பாட்டில், “என்னைப் பின்பற்றுங்கள்” என்று கூறிய இரண்டு நபர்கள் உள்ளனர். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளில் எவரும் “என்னைப் பின்பற்றுங்கள்” என்று ஒருபோதும் சொல்ல முடியவில்லை. அவர்களது வாழ்க்கை பின்பற்றக் கூடிய ஒரு முன்மாதிரியாக இல்லை. ஏசாயாவோ, மோசேயோ, ஒருவராலும் சொல்ல முடியவில்லை. “கர்த்தர் என் மூலம் சொல்வதைக் கேளுங்கள். இவையெல்லாம் கர்த்தருடைய வார்த்தைகள்” என்று மட்டுமே அவர்களால் அறிவிக்க முடிந்தது. ஆனால் அவர்களில் ஒருவராலும் “என்னை மாதிரியாகக் கொண்டு பின்பற்றுங்கள்” என்று சொல்ல முடியவில்லை. மோசே தனது மனைவியுடன் சண்டையிட்டு, தனது மகனுக்கு விருத்தசேதனம் செய்யாமல் இருந்ததால் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நல்ல முன்மாதிரிகள் அல்ல; ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தையைத் துல்லியமாக அறிவித்து, “...என்று தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார்” என்று சொல்ல முடிந்தது. ஆனால் புதிய உடன்படிக்கையில், “...என்று தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார்” என்று மட்டும் நாம் சொல்வதில்லை. “தேவன் கூறுவதை வந்து கேளுங்கள்” என்று மட்டும் நாம் சொல்லுவதில்லை.

புதிய உடன்படிக்கையில், “தேவன் என்ன செய்திருக்கிறார் என்று வந்து பாருங்கள்” என்று நாம் கூறுகிறோம். இது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் “தேவன் என்ன சொல்கிறார் என்று வந்து, கேளுங்கள்” என்று கூறுவதற்கு மாறாயிருக்கிறது. புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசியோ, “தேவன் என் வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறார் என்று வந்து பாருங்கள். என் குடும்பத்தில் ஆண்டவர் என்ன செய்திருக்கிறார் என்று வந்து பாருங்கள். தேவன் எனக்குள் என்ன செய்திருக்கிறார் என்று வந்து பாருங்கள். இவ்வித காரியங்களை தேவன் உங்கள் வாழ்க்கையிலும் செய்யும்படிக்கு, இயேசு கட்டளையிட்டதைக் கைக்கொள்ள இப்போது நான் உங்களுக்குக் கற்பிக்க விரும்புகிறேன். என்னைப் பின்பற்றுங்கள்” என்று கூறுகிறார்.

என்னைப் பின்பற்றுங்கள்” என்று வேதாகமத்தில் முதன்முதலில் கூறியவர் இயேசுவே. பின்னர், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல என்னைப் பின்பற்றுங்கள்” என்று பவுல் கூறுவதை நாம் வாசிக்கிறோம் (1கொரிந்தியர் 11:1). அவர் பிலிப்பியர் 3:17-இல், “சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால், நீங்கள் அவர்களது முன்மாதிரியையும் பின்பற்றலாம்” என்று கூறுகிறார். “கிறிஸ்து 10,000 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின் உச்சியில் ஏறிய நபரைப் போன்றவர். அவர் உச்சியை அடைந்துவிட்டார், நாம் அவரைப் பின்தொடர்கிறோம். பவுல் நமக்கு முன்னால் இருக்கலாம். ஒருவேளை அவர் 3,000-4,000 மீட்டர் மேலே சென்றிருக்கலாம். அவர் தனக்குப் பின்னால் வந்துகொண்டிருப்பவர்களைப் பார்த்து, “என்னைப் பின்பற்றுங்கள்” என்று கூறுகிறார். ஒருவேளை நான் 500 மீட்டர் வரை மட்டுமே சென்றிருக்கலாம். மலைப்பாதையில் இன்னும் கீழே வந்துகொண்டிருப்பவர்களைப் பார்த்து, “என்னைப் பின்பற்றுங்கள்” என்று என்னால் சொல்ல முடியும். எனக்கு முன்னால், கிறிஸ்துவைப் பின்பற்றி சிகரத்திற்குச் செல்பவர்களின் முன்மாதிரியை நான் பின்பற்ற முடியும். சிகரம் என்பது கிறிஸ்துவைப் போன்றது. அதுதான் இலக்கு. உலகிலுள்ள அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்துவது நமது குறிக்கோள் அல்ல. ஆனால் நம் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவைப் போல முழுமையாக மாறுவதே குறிக்கோள் ஆகும். அந்த ஜீவனிலிருந்து நிரம்பி வழிந்தோடும் ஊழியம் பிறக்கும்.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு தாம் செய்த அதே ஊழியத்தை ஜனங்கள் செய்யவேண்டுமென்று நாம் அறிவிக்கும்படி கூறவில்லை. பவுல், “என்னைப் பின்பற்றுங்கள்” என்று சொன்னபோது அவரது ஊழியத்தைப் பின்பற்றுபடி கூறியிருப்பாரானால் நாம் அதைச் செய்ய முடியாது. அவர் நம்மை அப்போஸ்தலர்களாக மாறச் சொல்லவில்லை. எல்லோரும் எப்படி அப்போஸ்தலராக முடியும்? பவுலைப் போல எல்லோரும் எப்படி ஒரு தீர்க்கதரிசியாகவோ அல்லது சுவிசேஷகராகவோ இருக்க முடியும்? பவுல், “என் வாழ்க்கையில் என்னைப் பின்பற்றுங்கள். நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல் என்னைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார். அப்போஸ்தலரான பவுல் கூட, எல்லாப் பிணியாளிகளையும் குணப்படுத்துவதும், தண்ணீரில் நடப்பதும், அல்லது ஐந்து அப்பங்களைக் கொண்டு 5,000 பேரைப் போஷிப்பதும் போன்ற கிறிஸ்துவின் அற்புத ஊழியத்தைப் பின்பற்ற முடியாது. பவுல் தான் பசியாக இருப்பதாகக் கூறிய தருணங்களும் இருந்தன (2கொரிந்தியர் 11:27). பவுல் குளிரில் நடுங்கின போது, தன்னுடைய தேவைக்காய் ஒரு போர்வையைக் கொண்டுவரும்படி தீமோத்தேயுவிடம் கேட்டார் (2தீமோத்தேயு 4:13). ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பல வழிகளில் துன்பப்பட்டனர். சிங்கங்களுக்குள் வீசப்பட்டபோது அவர்கள் பாதுகாக்கப்படவில்லை, ஆனால் அவர்கள், சிலுவையில் அறையப்பட்ட போது பாதுகாப்பை மறுத்த இயேசுவைப் பின்பற்றினார்கள். நாம் பின்பற்ற வேண்டியது அவருடைய ஜீவனைத் தான். இயேசுவை அவருடைய ஊழியத்தில் நாம் பின்பற்ற முடியாது.

இதற்கு மிகத் தெளிவான உதாரணம் என்னவென்றால், அவருடைய ஊழியத்தில் உலகத்தின் பாவங்களுக்காக மரிப்பதும் அடங்கும். உலகில் நாம் அந்த ஊழியத்தை எவ்வாறு பின்பற்ற முடியும்? நம்மால் முடியாது. எனவே, நாம் பின்பற்றுவது அவரது ஜீவனில் தான். இயேசுவின் வாழ்க்கைக்கும் அவரது ஊழியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நாம் பார்க்க வேண்டும். இயேசு தம்முடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் பிதாவின் சித்தத்தைச் செய்தார் என்று ஒரே வாக்கியத்தில் நாம் சொல்ல முடியும். நம் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நமக்கான ஆண்டவரின் சித்தத்தைச் செய்ய முடியும். நம் வாழ்க்கையில், இயேசுவின் முன்மாதிரியைச் சரியாக பின்பற்றுவது தான் நமக்கான தேவ சித்தமாகும். பவுல் அதைத்தான் செய்தார். நம் ஊழியத்தில், நமக்குக் கொடுக்கப்பட்ட கிறிஸ்துவின் சரீரத்தில் அந்த குறிப்பிட்ட செயல்பாட்டை நிறைவேற்றுவதே நமக்கான தேவனுடைய சித்தமாகும். இயேசுவின் ஜீவனுக்கும் இயேசுவின் ஊழியத்திற்கும் இடையிலான இந்த வேறுபாட்டை நாம் புரிந்து கொண்டால், நாம் வஞ்சிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப் படுவோம்; ஏராளமான உண்மையற்ற தன்மையிலிருந்தும் மாய்மாலத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம். இயேசு செய்த அதே காரியங்களைச் செய்வதாக நடிக்கும் கிறிஸ்தவர்களிடம் நிறைய மாய்மாலம் இருக்கிறது.

“இயேசு கடைசி இராப்போஜனத்திற்குப் பிறகு, 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்' (யோவான் 14:12,16) என்று கூறியதன் அர்த்தம் என்ன?” என்று ஜனங்கள் சில சமயங்களில் கேட்கிறார்கள். பரிசுத்த ஆவி வரும்போது, இயேசு செய்த கிரியைகளையும், அவற்றைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் நாம் செய்ய முடியும் என்பதையே அவர் கூறினார். நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இயேசு என்னென்ன கிரியைகளைச் செய்தார் என்று யாரிடமாவது கேட்டால், அவர்கள் உடனடியாக நோயாளிகளைக் குணப்படுத்தியதையும், மரித்தோரை எழுப்பியதையும், தண்ணீரின் மேல் நடந்ததையும், ஐந்து அப்பங்களைக் கொண்டு 5000 பேரைப் போஷித்ததையும் பற்றிப் பேசுவார்கள். அப்படியானால் நீங்கள் இயேசுவின் வாழ்க்கையின் கடைசி 10%த்தைப் பற்றி மட்டுமே பேசுவீர்கள்! இதைத்தான் அவர் தமது வாழ்க்கையின் கடைசி மூன்றரை ஆண்டுகளில் செய்தார். அவர் செய்தது அவ்வளவுதானா? அவரது வாழ்க்கையின் மீதமுள்ள 90%த்தைப் பற்றி என்ன? அவரது வாழ்க்கையின் அந்த 90%த்தில் அவர் என்ன செய்தார்? அவரது வாழ்நாள் முழுவதும் அவர் என்ன செய்தார்? ஒரு வாக்கியத்தில் சொல்லவேண்டுமானால்: ‘அவர் தமது பிதாவின் சித்தத்தைச் செய்தார்.யோவான் 6:38-இல், “நான் மரித்தோரை எழுப்பவும், நோயாளிகளை குணப்படுத்தவும், தண்ணீரின் மேல் நடக்கவும் பரலோகத்திலிருந்து வரவில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்” என்று இயேசு தாமே கூறியிருக்கிறார்.

அதுவே “இயேசுவின் கிரியைகள்” என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறலாம். அவர் தமது சொந்த சித்தத்திற்கு “இல்லை” என்று சொல்லி, தமது பிதாவின் சித்தத்தைச் செய்ய வந்தார். மலைப்பிரசங்கத்தைப் பிரசங்கிப்பது, நோயாளிகள் அனைவரையும் குணப்படுத்துவது, சில சமயங்களில் பெதஸ்தா குளத்தில் செய்ததைப் போல ஒருவரை மட்டும் குணப்படுத்துவது, தண்ணீரின் மேல் நடப்பது, பேதுருவைத் தண்ணீரின் மேல் நடக்கச் செய்வது, 5,000 பேரை ஐந்து அப்பங்களால் போஷிப்பது ஆகியவையெல்லாம் அவரது பிதாவின் சித்தத்தில் அடங்கும். பவுலுக்கான பிதாவின் சித்தத்தில் தண்ணீரில் நடப்பது அல்லது 5,000 பேரை 5 அப்பங்களால் போஷிப்பது அல்லது லாசருவைப் போல நான்கு நாட்கள் மரித்திருந்த ஒருவரை எழுப்புவது ஆகியவை அடங்கியிருக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் இல்லாமலேயே பிதாவின் சித்தத்தை பவுல் நிறைவேற்ற முடிந்தது.

அதுதான் காரியம். ‘தேவனுடைய சித்தம் செய்ததேஇயேசு செய்த கிரியைகள் என்று ஒரு வாக்கியத்தில் நாம் கூறலாம். பவுலும் அதைத் தான் செய்தார். அவருக்கு, தேவனுடைய சித்தம் என்பது பல இடங்களுக்குப் பிரயாணம் செய்து சபைகளைக் கட்டுவதும், வேத வாக்கியங்களை எழுதுவதுமாய் இருந்தது. இயேசு எந்த வேதவாக்கியத்தையும் எழுதவில்லை, ஆனால் பவுல் எழுதினார். நாம் வேதவாக்கியங்களை எழுதும்படி அழைக்கப்படவில்லை. ஆனால் நாம் நம் பிதாவின் சித்தத்தைச் செய்யும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசுவின் கிரியைகளில் அவர் தமது வீட்டில் யோசேப்புக்கும் மரியாளுக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்ததும் அடங்கும். மரியாள் கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் கொண்டு வரச் சொன்னால், இயேசு ஒரு முழுவாளி தண்ணீரைக் கொண்டு வருவார். சிறிய விஷயங்களிலும், பெரிய விஷயங்களிலும் பிதாவுக்குக் முற்றிலும் கீழ்ப்படிந்ததே இயேசுவின் கிரியைகள். நாம் யாவரும் அதைச் செய்ய முடியும்.