எபிரேயர் 11ஆம் அதிகாரத்தின் மூலமாக யாக்கோபுவின் கடைசி நாட்களில் அவனுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பற்றிய குறிப்பை நம்மால் பெற முடிகிறது. இதே அதிகாரத்தில், சிங்கத்தின் வாயை அடைத்ததும், மரித்தோரை உயிரோடு எழுப்பியதுமான பெரிய காரியங்களைச் செய்த பழைய ஏற்பாட்டின் விசுவாச புருஷர்களின் பெயர் பட்டியலையும் நாம் காண்கிறோம். இந்தப் பட்டியலில் யாக்கோபின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவனுடைய பெயர் எதற்காக இங்கு இடம் பெற்றுள்ளது என்று நீங்கள் நினைக்கீறீர்கள்? "அவன் தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்" (வ.21). மிகப் பிரம்மாண்டமான நிகழ்வுகளடங்கிய இந்த அதிகாரத்தில் இது போன்ற ஒரு சாதாரண விஷயம் பதிவு செய்யப்பட்டிருப்பது ஒரு முரண்பாடான காரியமாகவே தோன்றுகிறது!
நிச்சயமாகவே யாக்கோபுடைய செயல் 'விசுவாசத்தினால் உண்டான அற்புதம்' என்பது போலவே காணப்படவில்லை. ஆனால் அது அப்படிப்பட்ட அற்புதந்தான். சொல்லப்போனால் அந்த அதிகாரத்தில் சொல்லப்பட்ட மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் இதுவே மேலான அற்புதம் என்று சொல்லலாம். பெனியேலிலே அவனுக்குத் தொடைச்சுழுக்கு ஏற்பட்டபடியால், அவனுக்கு அந்தக் கோல் கட்டாயமாகத் தேவைப்பட்டது. தன்னுடைய பிடிவாதமான சுயசித்தத்தை உடைத்து, தேவன் அவனது வாழ்வில் நடப்பித்த அற்புதத்தை என்றென்றும் நினைவுகூர்ந்தவனாய், அக்கோலின்மீது சாய்ந்துகொண்டான். தான் ஓர் உதவியற்றவன் என்பதையும், ஒவ்வொரு கணப்பொழுதும் தேவன்மீதே சார்ந்திருக்க வேண்டுமென்பதையும் உணர்த்தும் நினைவுச் சின்னமாக அவனுக்கு அக்கோல் மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் ஒரு நொறுங்கிப் போன மனிதனாய் அவன் தேவனைத் தொழுது கொண்டான். தன்னுடைய பலவீனத்தையும், வலிமையற்ற நிலையைக் குறித்துமே மேன்மை பாராட்டினான். அதுவே அவனது அன்றாட சாட்சியாகவும் மாறியிருந்தது.
பவுலுடைய வாழ்க்கையும் இதுபோலவேதான் இருந்தது. காலாகாலமாய் தேவனுக்காய் வாழ்ந்த புருஷர்கள் மற்றும் ஸ்திரீகளின் வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது. அவர்கள் அனைவருமே தங்களுடைய சாதனைகளில் களிகூராமல், பெலவீனங்களிலேயே களிகூர்ந்தனர். பெருமையிலும், சுயநம்பிக்கையிலும் நிறைந்து வாழ்கிற 20 -ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு இது எவ்வளவு பெரிய பாடம்!
வாழ்க்கையின் முடிவிலே, யாக்கோபை ஒரு தீர்க்கதரிசியாகப் பார்க்கிறோம். அவன் தன் சந்ததியாரின் எதிர் காலத்தைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கிறான் (ஆதி 49). தேவனுடைய கரத்தில் தன்னை அர்ப்பணித்து, தெய்வீக சிட்சைகளுக்குத் தன்னை உட்படுத்தி வாழ்கின்ற மனிதனே தீர்க்கதிரிசனம் உரைப்பதற்குத் தகுதியானவனாக இருக்க முடியும். யாக்கோபு தன் அனுபவத்தின் வாயிலாய் கற்றறிந்த மனுஷன். அவன் வேத கல்லூரியிலே கற்றுத் தகுதி அடைந்தவனல்லன். அவன் சூடான அடுப்பு வழியாய்க் கடந்து வந்து தேவனுடைய கலாசாலையிலே பட்டம் பெற்றவன். அவன் தேவனுடைய இரகசிய ஆலோசனைகளையெல்லாம் நன்றாய் அறிந்தவன். மெய்யாகவே அவன் தேவனுடைய இளவரசன்தான்! தேவனால் சுத்திகரிக்கப்படுவது எவ்வளவு அற்புதமான விஷயம் பாருங்கள்! அதன் முடிவு எவ்வளவு பலனுள்ளதாக அமைகிறது!
வேதத்தின் பக்கங்கள் முழுவதிலும் ஓர் உற்சாகமான வார்த்தை ஒரு நூலிழைப் போன்று பரவியிருப்பதைக் காணலாம். தேவன் தன்னை, "ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன் ("இஸ்ரவேல்" அல்ல "யாக்கோபு") என்றே அழைத்துக்கொள்கிறார். இது உண்மையிலேயே ஓர் அற்புதமான விஷயமாகும். அவர் யாக்கோபின் தேவன். அவர் தனது நாமத்தை, எத்தன், ஏமாற்றுக்காரன் என்று பொருள்படும் யாக்கோபின் பெயரோடு இணைத்துக்கொண்டார். இதுவே நாம் பெற்றுக்கொள்ளும் உற்சாகமாகும்.
நம்முடைய தேவன் திருக்கான ஆள்த்துவத்தைக் கொண்ட மனிதனின் தேவனாவார். நம்முடைய தேவன் கடினமான மனநிலையையுடைய ஸ்திரீயின் தேவனாவார். " யாக்கோபின் தேவன் நமது அடைக்கலம்" என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளது (சங் 46:7,11)! அவர் சேனைகளின் கர்த்தர் மட்டுமல்ல; யாக்கோபின் தேவனும் கூட. அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!
தேவன் நமக்குள்ளே தொடங்கினதைப் பூர்த்தியாக்குவார். பிதாவினுடைய சிருஷ்டிப்புப் பணி எவ்வளவு பூரணமானதோ, குமாரனின் மீட்பு பணி எவ்வளவு பூரணமானதோ அதே அளவு நம்மைப் பரிசுத்தமாக்கும் பரிசுத்தாவியின் கிரியையும் பூரணமானதாகும். தேவன் உண்மையுள்ளவர்!
"(நமக்குள்ளே) நற்கிரியையைத் தொடங்கின அவர் இயேசு கிறிஸ்து மறுபடியும் வரும் அந்த நாளிலே அது (நமக்குள்ளே) நிறைவடையும் வரை (நாம்) கிருபையிலே பெருகி வளர்வதற்குத் தொடர்ந்து உதவி செய்வார் " (பிலி 1:5 LB). யாக்கோபிடத்திலே தன்னுடைய கிரியை நிறைவேற்றினவர், நமது வாழ்க்கையிலும் அவருடைய கிரியை செய்து முடிப்பார். ஆனால் நாமும் யாக்கோபு பெனியேலிலே செய்தது போலவே தேவனுக்குப் பிரதியுத்திரம் சொல்ல வேண்டும். ஒரு வேளை நாம் அவருக்கு ஒத்துழைக்காமல், அவர் நமக்குள் செய்கிற கிரியைகளையெல்லாம் முறியடிக்கிறவர்களாய் இருப்போமானால், அவருடைய வருகையின் நாளிலே வீணடிக்கப்பட்டதும், கனியற்றதுமான வாழ்க்கையை உடைய துயரத்தோடுதான் காணப்படுவோம். நாம் கனியுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென தேவன் விரும்பினாலும், அவர் நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. அவர் நம்மைக் கிறிஸ்துவின் சாயலுக்குள் மறுரூபப்படுத்த விரும்பினாலும், நம் சுயாதீன சித்தத்தைத் தாண்டி எதையும் செய்வதில்லை.
கிறிஸ்துவின் ஜீவனையடையும் பாதையானது, சிலுவையில் நொறுக்கப்படுவதன் மூலமாகவே நமக்குக் கிட்டுகிறது. ஓர் அணுவானது உடைக்கப்படும் போது எவ்வளவு பெரிய சக்தி வெளிப்படுகிறது! தேவனுடைய கரத்திலே அவருடைய பிள்ளை நொறுக்கப்படும் போது, எவ்வளவு வல்லமை வெளிப்படமுடியும்!