WFTW Body: 

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத்தேயு 5:6). உலகில், மனுஷர்கள் சகலவிதமான பொருட்களுக்காகவும் பசிதாகமுடையவர்களாய் இருக்கிறார்கள். உலகில் மனுஷர்கள் பசிதாகம் கொள்ளும் காரியங்களைப் பார்த்தோமானால், அவை செல்வம், பணம், வசதியான வாழ்க்கை, வீடுகள், நிலங்கள், சமுதாயத்தில் முன்னேற்றம், தங்கள் வேலைகளில் உயர்ந்த பதவி, தங்கள் தோற்றத்தை அழகுபடுத்துதல், இந்த உலகில் தங்களுக்கான கனம், சௌகரியம் மற்றும் சிற்றின்பத்தைத் தரும் மற்ற அனைத்து காரியங்களுமாகவே இருக்கின்றன. இது பல கிறிஸ்தவர்களின் வாழ்க்கையிலும் மெய்யாயிருக்கிறது.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தங்களை மறுபடியும் பிறந்ததாகச் சொல்லிக் கொள்பவர்களும்கூட, இவற்றையே நாடித் தேடுகிறார்கள். ஆனால் தேவனுக்குரிய வாழ்க்கையை வாழ பசிதாகம் கொண்டவர்கள் - பாவத்தை மேற்கொள்ள பசிதாகம் கொண்டவர்கள் மிகச் சிலரே. ஜீவனுக்குப் போகிற வழியைக் கண்டுபிடிப்பவர்கள் வெகு சிலர்தான் என்று இயேசு கூறியதை நான் விசுவாசிக்கிறேன். இது மிகவும் அரிதான ஒரு குணாதிசயமாகும். முற்றிலும் நீதிமான்களாக இருப்பதைப் பற்றி பேசும் தேவசெய்தியில் மிக சொற்பமானவர்கள் மட்டுமே ஆர்வம் காட்டுவதைக் காணும்போது நான் ஆச்சரியப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், “நீதியாய் வாழ்வது சாத்தியமற்றது” என்று கூறும்போதும் நான் ஆச்சரியப்படுவதில்லை. ‘மலைப்பிரசங்கம் சாத்தியமற்ற தரநிலைகளைக் கொண்டுள்ளது’ என்றும், ‘யாருமே அதற்கு ஏற்ப வாழ முடியாது’ என்றும் மனுஷர்கள் கூறுகிறார்கள். ​​உலகப்பிரகாரமான கிறிஸ்தவர்களிடமிருந்தும், தங்களை மறுபடியும் பிறந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு உலகப்பிரகாரமான மனப்பான்மைகளைக் கொண்டிருக்கும் பெயர்க்கிறிஸ்தவர்களிடமிருந்தும் வேறு என்ன பதிலை நான் எதிர்பார்க்க முடியும்? மலைப்பிரசங்கத்தில் இயேசு கற்பித்த எல்லாவற்றையும் கடைபிடிக்க முடியாது என ஒருவர் புறக்கணித்தால், ‘அத்தகைய நபர் மெய்யாகவே மறுபடியும் பிறந்திருக்கிறாரா?’ என்று நான் கேட்பேன். எனவே தான் மத்தேயு 28:20-இல் “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்று கூறுவதற்கு முன்பு, “அவர்களை சீஷராக்குங்கள்” என்று இயேசு கூறினார்.

தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொரு நபரும், பரலோகத்திற்குச் செல்ல மட்டுமே விருப்பம் உடையவராய் இருந்து, ஆனால் இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றால், அவர் பரலோகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார். ஒருவர் உண்மையிலேயே சீஷராகிவிட்டால், இயேசு என்ன கற்பித்தார் என்பதை அறிய ஆர்வம் உடையவராக இருப்பார். இயேசுவின் உண்மையான சீஷனாயிருக்கும் நபரின் மனப்பான்மை எப்படியிருக்கும்? “நான் ஆவியில் எளிமையாக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினால், ஆவியில் எளிமையாக இருப்பதன் பொருள் என்ன என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புவேன், அதற்குக் கீழ்ப்படிவேன். என் பாவத்திற்காக நான் துயரப்பட வேண்டும் அல்லது நான் சாந்தமாய் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினால், அதன் அர்த்தம் என்ன என்பதையும் நான் அறிய வாஞ்சிப்பேன். நீதியின்மேல் நான் பசிதாகம் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினால், நான் நீதியின்மேல் பசிதாகம் கொள்வேன்” என்பதாகவே அவருடைய மனப்பான்மை இருக்கும்.

நீதியின்மேல் பசிதாகம் கொள்வதன் அர்த்தம் என்ன? உதாரணமாக, “எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தாகமாக இருக்கிறது” என்று நீங்கள் கூறினால், அந்த ஒரு டம்ளர் தண்ணீருக்கு எவ்வளவு பணம் கொடுக்கத் தயாராக இருப்பீர்கள்? ஒரு டம்ளர் தண்ணீரின் விலை 1,00,000 ரூபாயாக இருந்தால் என்ன செய்வது? “இல்லை, எனக்கு ஒரு டம்ளர் தண்ணீருக்கு 1,00,000 ரூபாய் கொடுத்து குடிக்கும் அளவிற்கு தாகமில்லை” என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் நீங்கள் ஏழு நாட்களாக பாலைவனத்தில் அலைந்து திரிந்து, உங்கள் உடல் முழுவதும் வறண்டு, உங்கள் நாவறண்டு, தாகத்தால் மரிக்கப் போகிறீர்கள் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 1,00,000 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தாலும் நீங்கள் அதற்குத் தயாராக இருப்பீர்கள்! அது தான் தாகம். நீங்கள் பசியால் மரித்துக் கொண்டிருக்கும்போது உணவுக்காக எந்தத் தொகையையும் கொடுக்கத் தயாராக இருப்பீர்கள்.

இயேசு கூறும் பசி மற்றும் தாகம் என்பது, எந்த விலைக்கிரயம் செலுத்தியும் நீதிமான்களாக இருக்க வேண்டும் என்ற தீராத பசிதாகமாகும், எனக்கு சௌகரியமாக இருந்தாலோ அல்லது என்னுடைய எந்த சொந்தத் திட்டத்தையும் பாதிக்காததாக இருந்தாலோ மட்டுமே நீதிமான்களாக இருப்பது என்பதல்ல. சபைகளில் அமர்ந்திருக்கும் பெரும்பாலான ஜனங்கள்கள், பரிசுத்தமாகுதலைக் குறித்த செய்திகளைக் கேட்பவர்கள் கூட, அது அவர்களது திட்டங்களை பாதிக்காவிட்டால், அல்லது அது அவர்களது எதிர்காலத்திற்கான இலட்சியங்களை அழிக்காவிட்டால், அல்லது அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணையோ அல்லது பையனையோ திருமணம் செய்வதற்கு இடையூறாக இல்லாவிட்டால் பரிசுத்தமாக இருக்க விரும்புகிறார்கள். நீதிக்காக அதிக விலைக்கிரயம் செலுத்த வேண்டியிராத வரை, அவர்கள் நீதியை விரும்புகிறார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு நீதியைக் கையளிக்கும்போது, ​​அவர்களது முதல் கேள்வி, “இதற்கான விலைக்கிரயம் என்ன?” என்பதாக இருக்குமானால், அவர்கள் உண்மையிலேயே நீதிக்கான பசியுடன் இல்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். கடுமையான தாகத்துடனோ அல்லது பசியுடனோ இருப்பவர் விலையைக் கேட்கமாட்டார். அவர், “அந்தத் தண்ணீரை எனக்குக் கொடுங்கள்! நான் பணம் தருகிறேன்! நான் மரித்துக் கொண்டிருப்பதால் என்னிடம் உள்ள அனைத்தையும் நான் உங்களுக்குத் தருகிறேன்!” என்றே கூறுவார்.

நம் முழு இருதயத்தோடும் தேவனைத் தேடுவதன் அர்த்தம் இதுதான். குறிப்பிட்ட மற்றவர்கள் தேவனைக் கண்டடைந்த விதமாக பலர் தேவனைக் கண்டடையாததற்கும், அவர்களுக்கு திருப்திகரமான கிறிஸ்தவ வாழ்க்கை இல்லாததற்கும் காரணம் (பெரும்பாலான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களின் நிலை இதுதான்), அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் தேவனைத் தேடாததே ஆகும். நான் அநேக நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன், 52 ஆண்டுகளாக ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன். “நான் தேவனில் மெய்யாகவே திருப்தியாயிருக்கிறேன்; என் கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவன் எனக்குக் கொடுத்த வளர்ச்சியில் நான் திருப்தியாயிருக்கிறேன்; தேவன் என்னை நடத்திய விதத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையைப் பற்றி நான் பரவசமடைகிறேன்!” என்று நேர்மையாக சொல்லக்கூடிய வெகு சில கிறிஸ்தவர்களையே என் வாழ்க்கையில் நான் கண்டிருக்கிறேன். பெரும்பாலான ஜனங்கள் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் சலிப்படைந்திருப்பதை நான் காண்கிறேன். ஒருவேளை அவர்கள் மனந்திரும்பிய நாளில் உற்சாகமாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது அவர்கள் மிகவும் சலிப்படைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேதத்தைப் படிக்க நேரமில்லை, அவர்களுக்கு ஆவிக்குரிய காரியங்களில் நாட்டம் இல்லை; அவர்கள் சபைக்குச் செல்வது, சாட்சி பகருவது மற்றும் ஏழைகளைப் பராமரிப்பது போன்ற ஒரு சில குறிப்பிட்ட செயல்பாட்டில் ஈடுபடலாம், ஆனால் அவர்கள் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் உற்சாகம் உடையவர்களாக இல்லை.

இந்த நிலைமைக்கான காரணத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனில், மனுஷனையும் தேவனையும் பற்றியதான ஒரு பிரமாணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எரேமியா 29:13-இல் தேவன் தம்முடைய ஜனமான இஸ்ரவேலரிடம், “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” என்று கூறுகிறார். நீங்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் தேடாமல், அரை மனதுடனும் அல்லது முக்கால் (¾) மனதுடனும் தேடினால் காரியம் என்னவாக இருக்கும்? நிச்சயமாக, உங்களுக்கு ஒரு மதம் இருக்கும். மதச்சடங்குகளையும் பல்வேறு செயல்பாடுகளையும் கொண்ட வெறும் மதமாக மாத்திரமே இருக்கக்கூடிய ஒரு கிறிஸ்தவம் உங்களிடம் இருக்கும், ஆனால் நீங்கள் தேவனை அறிந்திருக்க மாட்டீர்கள். இயேசுவை ஒரு தனிப்பட்ட நண்பராக நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். எனவே கிறிஸ்தவ வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் நீங்கள் தவறவிடுவீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவப் பெயரைக் கொண்டிருக்கலாம், ஒரு கிறிஸ்தவ திருச்சபையின் உறுப்பினராகவும் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஆண்டவரைத் தனிப்பட்ட முறையில் அறியவில்லையென்றால், நீங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் முக்கியமான காரியத்தைத் தவறவிட்டிருக்கிறீர்கள். நீங்கள் தேவனை உங்கள் முழு இருதயத்தோடும் தேடாததே அதற்குக் காரணமாக இருக்கலாம். உலகிலுள்ள அநேக காரியங்களை நீங்கள் முழு இதயத்தோடு தேடிக் கொண்டிருக்கலாம், ஆனால் தேவனை உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் தேடவில்லை என்பதே உண்மையாயிருக்கிறது.