இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்த முதல் மூன்று ஜெப வேண்டுகோள்கள்: “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக,” “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக.” எல்லாமே தேவனைப் பற்றியவையாகவே இருப்பதைக் கவனியுங்கள். மனிதன் அடிப்படையில் சுயநலமாக இருப்பவன். நாம் ஆதாமிடமிருந்து பெற்றிருப்பது நம்மை மையமாகக் கொண்ட ஒரு சுயநல வாழ்க்கை. அது முதன்மையாக நம்மைக் குறித்தும், பல நேரங்களில் நம்மை மட்டுமே குறித்தும் சிந்திக்கச் செய்கிற ஒரு சுயநல வாழ்க்கையாகும். நான், எனது, என் குடும்பம் என்பதுதான் பெரும்பாலான மக்களுக்குக் கரிசனையாக உள்ளது. அவர்கள் மனமாற்றத்தின் பின்னும் ‘நான், எனது, என் குடும்பம்’ என்பதே தொடர்கிறது. அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகும் கூட, கிறிஸ்து ‘என்னையும்’, ‘என் குடும்பத்தையும்’ எவ்வாறு ஆசீர்வதிப்பார் என்பதை மட்டுமே இப்போது சிந்திக்கிறார்கள். அது கிறிஸ்தவம் அல்ல. நம்முடைய எல்லாத் துயரங்களுக்கும் மகிழ்ச்சியின்மைக்கும் மூல காரணமாயிருக்கும் இந்த சுயநல வாழ்க்கையிலிருந்து நம்மை விடுவிக்க இயேசு வந்தார்.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாயிருக்க முடியாததற்குக் காரணம், அவர்கள் தங்களை மையமாகக் கொண்டிருப்பதுதான். ஏதாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சியடைகிறார்கள்; விரும்பியபடி ஏதாவது நடக்கவில்லை என்றால் — எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றால் — தங்கள் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். ஏன்? தேவன் இன்னும் சிங்காசனத்தில் இருக்கிறார்; உங்கள் பாவங்கள் இன்னும் மன்னிக்கப்பட்டுள்ளன; சாத்தான் இன்னும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறான்! ஆனாலும், நீங்கள் விரும்பிய ஒன்று கிடைக்கவில்லை என்பதினிமித்தம், மகிழ்ச்சியாயிருக்க முடியவில்லை. நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணமான சுயநல வாழ்க்கையிலிருந்து நம்மை விடுவிக்க இயேசு வந்திருக்கிறார்.
நாம் உணவுக்காக ஜெபிக்கலாமா? நிச்சயமாக ஜெபிக்கலாம். இயேசு மத்தேயு 6:11-இல், “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். ‘வேண்டிய ஆகாரம்’ என்பது உணவு, உடை, தங்குமிடம், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியது. ஏனென்றால் அவர்கள் கல்வி பெற்று, வேலை கிடைத்து, தங்கள் அன்றாட ஆகாரத்தைச் சம்பாதிக்க வேண்டும். இவற்றைக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. “எங்கள் பாவங்களை மன்னியும்” என்பதும் “தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்பதும் நல்ல வேண்டுதல்களே. ஆனால் நம்மைப் பற்றிய இந்த மூன்று வேண்டுகோள்களும், தேவனுடைய நாமம், தேவனுடைய ராஜ்யம், தேவனுடைய மகிமை ஆகியவற்றைத் தேடிய பிறகு வருகின்றன. இயேசு நம்முடைய முன்னுரிமைகளை மாற்றுகிறார்.
தேவனுடைய ராஜ்யம், அவருடைய நாமம், அவருடைய சித்தம் ஆகியவற்றை நம் சிந்தனையில் முதன்மையாகக் கொண்டு ஜெபிப்பதே நாம் ஜெபிப்பதற்கான சரியான முறையாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால் தேவனுடைய நாமம், தேவனுடைய ராஜ்யம், தேவனுடைய மகிமை ஆகியவற்றின் அடிப்படையில் இப்போது சிந்திக்க, என் முழு வாழ்க்கை முறையையும் நான் மாற்ற வேண்டும். அதுதான் உண்மையான ஆவிக்குரிய கிறிஸ்தவம். இந்த ஜெபத்தை யார் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சொல்லலாம் - ஒரு கிளி கூட சொல்லிவிடும். ஆனால் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் மட்டுமே இந்த ஜெபத்தைத் தங்கள் இருதயங்களிலிருந்து ஜெபிக்க முடியும், ஏனென்றால் தேசத்திலும், திருச்சபையிலும், தங்களுக்குள்ளும், தங்கள் குடும்பங்களிலும் தேவனுடைய நாமம் பரிசுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பதே தங்கள் வாழ்க்கையின் முதன்மையான அக்கறை என்று அவர்களால் மட்டுமே நேர்மையாகச் சொல்ல முடியும்.
“தேவனுடைய ராஜ்யம் சீக்கிரம் வர வேண்டும், தேவனுடைய ஆளுகை சபையில் நிலைநாட்டப்பட வேண்டும், தேவனுடைய சித்தம் என் வாழ்க்கையிலும், என் குடும்பத்திலும், எல்லா இடங்களிலும் செய்யப்பட வேண்டும்” என்பதே ஓர் ஆவிக்குரிய மனிதனின் அடையாளம். இந்த மூன்றும் உங்கள் இருதயத்தின் மிக உயர்ந்த விருப்பங்களாக மாறும்வரை, உங்களை ஆவிக்குரியவர்கள் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையின் மையம் இன்னும் உங்களைச் சுற்றியே இருந்தால், மற்ற எல்லாமே அர்த்தமற்றதாக இருக்கும். பலர் மனமாற்றம் அடைந்த பிறகு, அவர்களது முந்தைய வாழ்க்கை முழுவதும் சுயநலமாகவே இருந்தபடியினால், அவர்களுக்குச் சேவை செய்ய — தங்கள் பாவங்களை மன்னிக்கவும், தங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிக்கவும், தங்களை ஆசீர்வதிக்கவும், செழிப்படையச் செய்யவும், தங்கள் நோய்களைக் குணப்படுத்தவும் - இயேசுவை தங்கள் வாழ்க்கையின் வட்டத்திற்குள் சேர்த்துக்கொண்டனர். இது கிறிஸ்தவம் அல்ல. இது மதம் கலந்த ஒரு சுயநல வாழ்க்கை. கிறிஸ்து உண்மையிலேயே நம் வாழ்க்கையில் வரும்போது, நாம் நமது சுயநல வாழ்க்கையிலிருந்து திரும்புகிறோம் (மனந்திரும்புகிறோம்), தேவன் நம் வாழ்க்கையின் மையமாகிறார்.
கர்த்தருடைய ஜெபத்தின் முடிவில் நம்மைப் பற்றிய மூன்று வேண்டுகோள்களில், இயேசு சரீரப் பிரகாரமான விஷயங்களைக் குறிப்பிடுகிறார் (எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்), ஆனால் அவர் அதனை “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்பதோடு இணைக்கிறார். “என் பிதாவே, பரலோகத்திலுள்ள தூதர்கள் உடனடி கீழ்ப்படிதலுடன் உமது சித்தத்தை நிறைவேற்றுவது போலவே, பூமியிலே என் வாழ்க்கையிலும் நான் உமது சித்தத்தைச் செய்ய விரும்புகிறேன். உமது சித்தத்தைச் செய்ய எனக்கு ஆரோக்கியம் தேவை; ஆகையால் அன்றாட ஆகாரத்தை எனக்குத் தாரும்" என்று நான் சொல்கிறேன். நீங்கள் அன்றாட ஆகாரத்திற்காக ஜெபிப்பது, தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்காகவா அல்லது உங்கள் சொந்த சித்தத்தைச் செய்வதற்காகவா? அது பாவம் செய்வதற்காகவா? அல்லது தேவனைப் பிரியப்படுத்துவதற்காகவா? “உமக்காக வாழ்வதற்கு ஆரோக்கியத்தையும் பெலனையும் பெற இன்று எனக்கு அன்றாட ஆகாரத்தைத் தாரும்” என்பது நமது ஜெபமாக இருக்க வேண்டும்.
இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த முழு ஜெபத்திலும், “நான்”, “எனது” என்ற வார்த்தைகள் இல்லை. நம்முடைய சொந்த ஜெபங்களில் “நான்”, “எனது” என்ற வார்த்தைகள் அடிக்கடி காணப்படுகின்றன, ஆனால் கர்த்தர் நமக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்த ஜெபத்தில், இந்த வார்த்தைகள் காணப்படவே இல்லை என்பது சுவாரஸ்யமாக இல்லையா? அவர் “எங்களுக்குத் தாரும்” என்று கற்றுக் கொடுத்தார் — “கர்த்தாவே, எனக்கு மட்டும் அல்ல; என் சகோதரனையும் நினைக்கிறேன், அவருக்கும் அன்றாட ஆகாரம் தேவை.” “எங்களை மன்னியும்” — “என்னை மட்டும் அல்ல, என் சகோதரனையும் மன்னியும்.” “எங்களை இரட்சித்துக்கொள்ளும்..” உண்மையான ஆவிக்குரிய மனிதன் தேவனை மையமாகக் கொண்டவன்; அவன் தன்னைப் பற்றிச் சிந்திக்கும் போது, தன்னைப் பற்றி மாத்திரம் அல்ல, தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும் சிந்திக்கிறான் - தேவனுடைய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றவர்களைப் பற்றியும் சிந்திக்கிறான். தேவன் ஒரு பெரிய குடும்பத்தின் தகப்பனாக இருப்பதால், அவன் பிறரையும் நினைக்கிறான்.
சரியான வரிசை என்னவென்றால், முதலில் கிறிஸ்து, பின்னர் நான் மட்டும் தனியாக அல்ல, மற்றவர்களையும் என்னையும் ஒன்றாக இணைத்துக் கருத வேண்டும். ஓர் ஆவிக்குரிய நபர் இப்படித்தான் ஜெபிக்கிறார்: தனது சொந்த தேவைகளுக்காக மட்டுமல்ல. அவர் இயல்பாகவே தனது பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படுகிறார், ஆனால் அவர் மற்றவர்களின் பிள்ளைகளைப் பற்றியும் கவலைப்படுகிறார். அவர் அவர்களை இழிவாகப் பார்க்க மாட்டார். நம்முடைய சொந்தப் பிள்ளைகளுக்காக பாரப்படுவது போல மற்றவர்களின் பிள்ளைகளுக்காக நாம் பாரப்படுவது மனித ரீதியாகச் சாத்தியமில்லை. நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் மீது நமக்கு ஓரளவு பாரம் இருக்க வேண்டும். எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” இது ஒரு முக்கியமான வேண்டுகோள். இயேசு இறுதியில் மறுபடியும் கூறும் ஒரே வேண்டுகோள் இதுதான். “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” என்று மத்தேயு 6:14-இல் அவர் கூறுகிறார். இந்த நிபந்தனையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம், ஏனென்றால் இயேசுவே இதைக் கூறுகிறார்: நீங்கள் மனிதர்களை மன்னிக்கவில்லை என்றால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை மன்னிக்க மாட்டார். இது உண்மையா, இல்லையா?
ஒருவர் உங்களுக்குச் செய்த விரோதச் செயலை நீங்கள் அவருக்கு மன்னிக்காதபோது, தேவன் உங்களை மன்னிப்பதைத் தவிர்த்துவிடுவாரா? நிச்சயமாகத் தவிர்த்துவிடுவார். நீங்கள் பிறரை மன்னிக்கவில்லை என்றால், அவர் உங்களை மன்னிக்கமாட்டார். தயவுசெய்து இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். “நாம் பிறரை எப்படி நடத்துகிறோமோ, அதுபோலவே தேவன் நம்மையும் நடத்துகிறார்” என்பதுதான் மனிதர்களைத் தேவன் நடத்தும் முறையில் ஓர் அடிப்படைக் கொள்கை ஆகும். நாம் பிறருக்கு இரக்கம் பாராட்டினால், தேவனும் நமக்கு இரக்கம் பாராட்டுகிறார். நாம் பிறரை மன்னித்தால், தேவனும் நம்மை மன்னிக்கிறார். “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” என்று மத்தேயு 5:7-இல் பார்க்கிறோம். “பிறரை மன்னிப்பவர்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்; பிறரை மன்னிக்காதவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்” என்று நாம் இங்கே சொல்லலாம்.
இயேசு ஒரு முறை இதைத் தெளிவாக விளக்க மத்தேயு 18:21-35-இல் ஓர் உவமையைச் சொன்னார். இது நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான உவமை. ஒரு ராஜாவுக்கு அநேக அடிமைகள் இருந்தார்கள், அவர்கள் எல்லாரும் அவருக்கு அதிகமான பணம் கடன்பட்டிருந்தார்கள். ஒரு மனிதன் அவருக்கு 10,000 தாலந்துகள் கடன்பட்டிருந்தான். அது 100 கோடி ரூபாய்க்குச் சமம் - ஒருபோதும் திருப்பி செலுத்த முடியாத ஒரு பெரிய கடன். அந்த ராஜா இரக்கமுள்ளவராக இருந்து அவனை மன்னித்தார். மன்னிக்கப்பட்ட இந்த மனிதன் வெளியே சென்று, தனக்கு வெறும் 100 ரூபாய் கடன்பட்ட இன்னொருவனைப் பார்த்து, அவனுடைய கழுத்தைப் பிடித்து, 'நீ எனக்குக் கடனைத் திருப்பிக்கொடுக்கவில்லை என்றால், நான் உன்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைப்பேன்' என்று சொன்னான். பின்னர் அவன் தான் கூறியபடியே செய்தும் விட்டான். மற்ற அடிமைகள் இதைக் கண்டதும், அவர்கள் சென்று ராஜாவிடம் அதை அறிவித்தார்கள். ராஜா அவனை அழைப்பித்து: ‘பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்ட படியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ?’ என்று சொல்லி, ராஜா கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
வேறு வார்த்தைகளில் சொன்னால், மன்னிக்கப்பட்ட அந்தக் கடன் அவன் தலையில் திரும்பச் சுமத்தப்பட்டது. அதை எப்படிக் கருதுகிறீர்கள்? நம்மை மன்னிக்கும் தேவன் அந்த மன்னிப்பு இல்லை என்று சொல்லி, திருப்பிக்கொள்வாரோ? அவர் ஏற்கனவே மன்னித்த பாவங்களை நமது தலைகள் மீது மீண்டும் சுமத்துவாரோ? இந்த வசனத்தின்படி, ஆம், தேவன் அவற்றை மீண்டும் சுமத்துவார். தேவன் நம் பாவங்களை மறந்துவிட்டார் என்று வேதாகமம் ஒருபோதும் கூறவில்லை. “உங்கள் பாவங்களை இனி நினையாமலிருப்பேன்” என்று அவர் கூறுகிறார். அதாவது, “உங்கள் பாவங்களை உங்களுக்கு விரோதமாகக் கருத மாட்டேன்” என்கிறார்.
தேவன் முழுமையாக மறந்துவிடுகிறார் என்று எந்த வசனமும் சொல்லவில்லை. நான் செய்த பாவங்களை நானே மறக்க முடியாதபோது, தேவன் எப்படி அவற்றை மறக்க முடியும்? இல்லை. அவர் இன்னும் அறிந்திருக்கிறார்; ஆனால் அவற்றை நமக்கு விரோதமாகக் கருதவில்லை. இந்த உவமை நமக்குக் கற்பிப்பது இதுதான்: நீங்கள் பிறரை மன்னித்தால், தேவன் உங்களை மன்னிப்பார்; நீங்கள் பிறரை மன்னிக்கவில்லை என்றால், தேவன் உங்களை மன்னிக்கமாட்டார்.
அதன்பின் கடைசி வேண்டுகோள், “எங்களை சோதனைக்குட்படுத்தாதேயும்” என்பதாகும். நம்முடைய திராணிக்கு மேலாக நாம் சோதிக்கப்பட தேவன் அனுமதிக்க மாட்டார் (1கொரிந்தியர் 10:13). ஆனால் நாம் இப்படி ஜெபிப்பது நல்லது, ஏனென்றால் சில சோதனைகள் நம் சமாளிக்கும் திறனுக்கு மிஞ்சியவை என்பதை நாம் உணர்ந்துகொள்வது நல்லது. நம்முடைய திராணிக்கு மேலாக நாம் சோதிக்கப்பட தேவன் அனுமதிக்க மாட்டார் என்பது நமக்குத் தெரியும், ஆனால் நமக்கு மிகவும் வலிமையான சோதனைக்குள் நாம் நடத்திச் செல்லப்படாமல் இருக்க ஜெபிக்க வேண்டும். “தீமையினின்று என்னை இரட்சித்துக்கொள்ளும்.” இங்கே நான் ஒரு தாழ்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறேன்: “இந்த சோதனையை எப்படி ஜெயிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த சோதனையை ஜெயிக்க எனக்குத் தேவையான திறன் இல்லை. ஆகையால் கர்த்தாவே, என் பிதாவே, என்னால் சமாளிக்க முடியாத வலிமையான ஒன்றிற்குள் என்னை நடத்தாதேயும்” என்று ஜெபிக்கிறேன். நான் இப்படி ஜெபிக்கும்போது, என்னுடைய இயலாமையையும் உதவியற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறேன். இது சோதனையை அணுகும் ஒரு நல்ல அணுகுமுறை.
சோதனையால் தோற்கடிக்கப்பட முடியாத அளவிற்கு நாம் மிகவும் வலிமையானவர்கள் என்று நாம் நினைக்கக்கூடாது. அதனால்தான் பலருக்குப் பாவத்தின் மீது ஜெயம் கிடைக்கவில்லை. பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பாவத்தால் தோற்கடிக்கப்படுவதற்கான காரணம், அவர்களிடம் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை இருப்பதே ஆகும். தங்களிடம் அந்தத் திறன் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள் – இன்னும் சில நல்ல தீர்மானங்களை எடுத்து, பற்களைக் கடித்துக்கொண்டு முயன்றால் ஜெயிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இல்லை, அது உதவாது. “கர்த்தாவே, என்னால் சமாளிக்க முடியாத அளவிற்கு வலிமையான சோதனையில் என்னை நடத்தாதேயும்; நான் எந்த சோதனையையும் சந்திக்கும்போது, தீமையினின்று என்னை இரட்சித்துக்கொள்ளும்; ஏனெனில் நான் என் சுய பெலத்தால் தீமையை ஜெயிக்க முடியாது” என்று நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். தீமை நமக்கு மிகவும் வலிமையானது என்பதை நாம் உணர்வோமென்றால், மற்றவர்களை மன்னிப்பதிலும் கூட அப்படி நாம் உணர்வோமென்றால், இயேசு இங்கே கற்பிக்கும் விதமாக நாம் ஜெபிப்போம். ஒருவரை மன்னிப்பது உங்களுக்குக் கடினமாக இருந்தால், அந்த நபர் உங்களுக்கோ உங்கள் குடும்பத்திற்கோ பெரிய தீங்கு செய்திருந்தால், அவர் செய்த தீமையின் நிமித்தம் அவரை மன்னிப்பது மிகவும் கடினமாக இருந்தால் — அப்போது தேவனிடத்தில் கிருபையைக் கேட்கலாம். “கர்த்தாவே, தயவுசெய்து எனக்கு உதவி செய்யும். மன்னிக்காத ஆவியின் இந்தத் தீமையிலிருந்து என்னை விடுவியும். இந்த நபரை மன்னிக்க எனக்குத் திறன் இல்லை, ஆனால் அவரை மன்னிக்க எனக்கு உதவும்படி உம்மிடம் கேட்கிறேன்” என்று கூறுங்கள்.
ஜெபம் என்பது நமது பலவீனத்தையும், தேவனைச் சார்ந்திருக்கும் உதவியற்ற தன்மையையும் வெளிப்படுத்துவதாகும். விசுவாசம் என்பது தேவன் எனக்கு உதவுவார் என்ற நம்பிக்கையாகும். ஏனென்றால் அவர் பரலோகத்தில் இருக்கும் என் பிதா. என் எல்லாப் பாவங்களிலிருந்தும் என்னை விடுவிக்க தம்முடைய குமாரனை மரிக்கும்படியாக அனுப்பினார். “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?!” என்று ரோமர் 8:32 கூறுகிறது.
இந்த ஜெபம் மத்தேயு 6:13-இல் முடிகிறது: “ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.”
“ஆண்டவரே, எல்லாவற்றிற்கும் முடிவாக, நீர் என் ஜெபத்திற்குப் பதிலளித்து, நான் கேட்ட அனைத்தையும் செய்த பிறகு, ராஜ்யம் உம்முடையது, வல்லமை உம்முடையது என்பதை நான் ஒத்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த வாழ்க்கையை வாழ எனக்கு வல்லமை இல்லை; பாவத்தை ஜெயிக்க எனக்கு வல்லமை இல்லை. அந்த வல்லமை உம்முடையதே. நான் பாவத்தை ஜெயிக்கும் போது கூட, அந்த மகிமையும் உம்முடையதே” என்று நமது ஜெபத்தை முடிப்பது மிகவும் முக்கியம்.
அதன்பின் இந்த ஜெபம் “ஆமென்” என்று முடிகிறது. “ஆமென்” என்றால் “அப்படியே ஆகட்டும்” என்று அர்த்தம்.