மத்தேயு 6:5-8-இல், எப்படி ஜெபிக்கக் கூடாது என்று இயேசு நமக்குக் கற்பித்தார். அதாவது, மாயக்காரர்களைப் போல, திரும்பத் திரும்பச் சொல்லும் அர்த்தமற்ற வார்த்தைகளால், நீண்ட ஜெபங்களால் நாம் ஜெபிக்கக் கூடாது என்றும், நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே நமக்கு இன்னது தேவை என்று நம் பிதா அறிந்திருக்கிறார் என்று விசுவாசித்து ஜெபிக்க வேண்டும் என்றும் கற்பித்தார். இயேசு அடுத்ததாக நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று நமக்குச் கற்றுத்தருகிறார். கிறிஸ்தவர்களை நான் கவனித்ததில், ஒரு குழந்தைகூடப் புரிந்துகொள்ளக்கூடிய இயேசுவின் இந்த எளிய வார்த்தைகளின்மீது மிகச் சிலரே உண்மையில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை நான் காண்கிறேன். எப்படி ஜெபிக்க கூடாது என்பதை அவர் நமக்குப் போதித்தார், ஆனால் அநேகர் அதை ஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு, எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதையும் அவர் நமக்குப் போதித்தார், அதையும் கூட அநேகர் ஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ளவில்லை.
நாம் கண்மூடித்தனமாக மீண்டும் மீண்டும் சொல்வதற்காக ஒரு ஜெபத்தை அவர் நமக்குக் கொடுக்கவில்லை. அதன் ஒவ்வொரு வாக்கியத்தையும் நீங்கள் உணர்ந்து சொன்னால், அதை மீண்டும் மீண்டும் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இயேசு, நம்முடைய எல்லா ஜெபங்களிலும் இருக்க வேண்டிய ஒரு வழிமுறையை (மாதிரியை) நமக்குப் போதித்தார்.
“நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: ‘பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே’” என்றார் இயேசு. அவர் சொன்ன முதல் காரியம் என்னவென்றால், நீங்கள் தேவனிடத்தில் பேசும்போது, அவரை அப்பா என்று அழையுங்கள். பழைய ஏற்பாட்டில் இருந்த எவரும் தேவனை நோக்கிப் பார்த்து, “அப்பா” என்று சொல்லத் துணியவில்லை. பழைய ஏற்பாட்டு ஜெபம் எப்போதும், “ஓ தேவனே, சர்வவல்லமையுள்ள கர்த்தாவே” என்றே இருந்தது. ஏனென்றால், தேவன் இப்பிரபஞ்சத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) போலவும், அவருடைய ஜனங்கள் ஒரு தொழிற்சாலையில் உள்ள சிறிய ஊழியர்களைப் போலவும் இருந்தனர். ஒரு தலைமைச் செயல் அதிகாரியிடம் நீங்கள் விரும்பியபடி பேச முடியாது! ஆனால் புதிய உடன்படிக்கையில், நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். ஒரு தலைமைச் செயல் அதிகாரியின் மகன் தன் தந்தையின் அலுவலகத்திற்குள் சென்று அவரை “அப்பா” என்று அழைப்பதைப் போலவே, நாமும் தேவனுடைய பிள்ளைகளாக இருப்பதன் இந்த சிலாக்கியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது அடிப்படையிலேயே வேறுபட்டது!
இருப்பினும், உண்மை என்னவென்றால், பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை, அவர்கள் தேவனை “அப்பா” என்று அழைக்காமல், அவரை “ஓ தேவனே” என்றுதான் அழைக்கிறார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. அவர் தேவன் தான், அவரை தேவன் என்று அழைப்பது சரியானதுதான்; ஆனால் நீங்கள் அவரை தேவன் என்று மட்டும் அழைத்து, தந்தையாகவும் அழைக்கவில்லை என்றால், அதில் ஏதோ தவறு இருக்கிறது.
பழைய ஏற்பாட்டில், தேவனுக்கு யெகோவா (அல்லது யாஹ்வே) என்ற ஒரு பெயர் இருந்தது (எபிரெய எழுத்துக்களில் உயிரெழுத்துக்கள் இல்லாததால், அதன் சரியான உச்சரிப்பு யாருக்கும் தெரியாது). என்னைப் பொருத்தவரை, இது முற்றிலும் முக்கியமற்ற ஒரு விவாதம், ஏனென்றால் நான் தேவனை யெகோவா என்றோ அல்லது யாஹ்வே என்றோ அழைப்பதில்லை! நான் அவரை அப்பா என்று அழைக்கிறேன்.
அவர் என் அப்பா, ஏனென்றால் இயேசு, “எங்கள் பிதாவே” என்று ஜெபிக்கும்படி நமக்குக் கற்றுக்கொடுத்தார். ரோமர் 8-ஆம் அதிகாரத்தில், பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களுக்குள் வந்து, “அப்பா! பிதாவே!” என்று கூப்பிடுகிறார் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம் (ரோமர் 8:15). இருப்பினும், ஜனங்கள் பாடும் சில பாடல்களைப் பார்த்தால், உதாரணமாக, “ஓ மகா யெகோவாவே, எனக்கு வழிகாட்டும்” போன்ற பாடல்களில், அவர்கள் தங்கள் பிதாவிடம்தான் பேசுகிறார்களா? அவர் யெகோவா தான், ஆனால் நாம் அவரை நம்முடைய பிதாவே என்று அழைப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். என் பிள்ளைகள் என்னிடம் வந்து, “திரு. பூணன் அவர்களே,” என்று அழைத்தால், ஏதோ சரியில்லை என்று நான் நினைப்பேன்! அவர்கள் ஏன் என்னை திரு. பூணன் என்று அழைக்கிறார்கள்? அவர்கள் என்னை அப்பா என்றுதானே அழைக்க வேண்டும்?! நான் தேவனிடம் வரும்போது, அவருடைய பெயர் யெகோவா அல்லது யாஹ்வே என்றிருந்தாலும், நான் அவரை அந்தப் பெயர்களால் அழைப்பதில்லை. நான் அவரை 'அப்பா' என்று அழைக்கிறேன், ஏனென்றால் அவர் என் தகப்பன். நான் அவருடைய பிள்ளையாகிவிட்டேன்.
தேவனுடைய பிள்ளையாகிவிட்டோம் என்ற அந்த யதார்த்தம் பல கிறிஸ்தவர்களுக்கு இன்னும் புரியவில்லை. இதற்குக் காரணம், அவர்கள் பரிசுத்த ஆவியானவருக்குத் தங்களைத் திறந்து கொடுக்காததே ஆகும். பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனை நிரப்பும்போது, அவர் செய்யும் முதல் காரியங்களில் ஒன்று, அவனை “அப்பா பிதாவே” என்று சத்தமிட்டு அழைக்கச் செய்வதாகும், இதன் பொருள் “தகப்பன்” என்பதாகும். உங்களுக்கு அப்படி நடந்திருக்கிறதா? இது மிக, மிக முக்கியமானது. நீங்கள் இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று யாரோ ஒருவர் உங்களுக்குப் பயிற்சி அளிக்கும் காரியம் அல்ல. அது ஒரு தன்னியல்பான, உள்ளத்திலிருந்து வரும் கூக்குரல். ஒருவன் மறுபடியும் பிறக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் அவனுடைய இருதயத்திற்குள் வருகிறார், பின்பு இந்த உள்ளான யதார்த்தம் ஏற்படுகிறது. ஒரு மனிதன் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தால், அவன் தேவனைத் தன் பிதாவாக மெய்யாகவே அறிந்துகொள்கிறான். தேவனைப் பிதாவாக அறிந்துகொள்வதும், அவரை அப்பா என்று அழைப்பதும் கிறிஸ்தவ வாழ்க்கையில் மிக முக்கியமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் அவரை ஆண்டவர் என்று அழைக்கலாம், அவரை தேவன் என்றும் அழைக்கலாம். ஆனால் நீங்கள் ஜெபிக்க வேண்டிய பிரதானமான வழி, உங்கள் “அப்பா பிதாவிடம்” ஜெபிப்பதே ஆகும்.
“எங்கள் பிதாவே” என்று மட்டுமல்லாமல், “பரமண்டலங்களிலிருக்கிற இருக்கிற எங்கள் பிதாவே” என்று ஜெபிக்கும்படி இயேசு கூறினார். நாம் ஏதோ ஒரு பூமிக்குரிய தகப்பனிடம் ஜெபிக்கவில்லை. என்னுடைய பூமிக்குரிய தகப்பன் என்னை மிகவும் நேசித்தாலும், ஒரு கடினமான சூழ்நிலையில் எனக்கு உதவ அவரால் இயலாமல் போகலாம். ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா உதவியற்றவர் அல்ல; அவர் பிரபஞ்சத்தை ஆளுகிறார். அவர் இந்தியாவின் பிரதமரை விட அதிக வல்லமை படைத்தவர்! இந்தியப் பிரதமரே உங்கள் தந்தையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் அப்பாவுக்குத் தொலைபேசி செய்து அதை அவரிடம் சொல்வது மட்டும்தான். உங்கள் பரலோகத் தந்தை இந்த உலகில் உள்ள யாரையும் விட வல்லமைமிக்கவரும் சக்திவாய்ந்தவரும் ஆவார். உங்கள் பிரச்சனைகளுடன் நீங்கள் ஏன் அவரிடம் செல்லக்கூடாது?
இந்த ஜெபத்தின் முதல் வாக்கியத்திலேயே இயேசு விசுவாசத்திற்கு ஒரு அடிப்படையை அமைக்க முயன்றார். “பரமண்டலங்களிலிருக்கிற இருக்கிற எங்கள் பிதாவே,” என்ற இந்த வார்த்தைகள், நான் ஜெபிக்கத் தொடங்குவதற்கு முன்பே, நான் யாரிடம் பேசுகிறேன் என்பதை என் இதயத்தில் தெளிவுபடுத்துகின்றன; அவர் என் பரலோகத் தகப்பன், என்னை ஆழமாக நேசிக்கும் என்னுடைய அப்பா அவர். இந்தத் தகப்பன் பரலோகத்தில் இருக்கிறார், அவர் சர்வவல்லமையுள்ளவர். “தேவன் என்னை ஆழமாக நேசிக்கிறார்”, “தேவன் சர்வவல்லமையுள்ளவர்” என்ற இந்த இரண்டு சத்தியங்களே என் விசுவாசத்திற்கு அடிப்படை. அவரால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியும்; அவரால் எதையும் செய்ய முடியும்; மேலும் அவர் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார். இதுவே விசுவாசத்திற்கான மிகச் சிறந்த அடிப்படையாகும்.
பின்வரும் ஆறு கோரிக்கைகளை நீங்கள் கவனமாகப் பார்த்தால், முதல் மூன்று கோரிக்கைகள் தேவனைப் பற்றியவை என்பதை நீங்கள் காணமுடியும். நீங்கள் ஜெபிக்கும்போது தேவனிடத்தில் வைக்கும் முதல் வேண்டுதல் என்ன? அது பெரும்பாலும் உங்களுக்காகவோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்காகவோ கேட்கப்படும் ஒன்றாகவே இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். “ஆண்டவரே, இந்தத் தேவையை நிறைவேற்றும்,” அல்லது “என் முதுகுவலியை குணமாக்கும்,” அல்லது “எனக்கு ஒரு வேலை தாரும்,” அல்லது “என் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும்: அவர்களுக்கு ஒரு வேலையையும் வாழ்க்கைத் துணையையும் அளியும்,” போன்றவை. இந்த வேண்டுதல்களில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் காரியங்கள் அனைத்திற்காகவும் நாம் நிச்சயமாக ஜெபிக்கலாம். சிறு சிறு விஷயங்களுக்குக்கூட, ஒவ்வொரு காரியத்திற்காகவும் நாம் அவரிடமே செல்ல வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். உங்கள் சாவியைத் தொலைத்துவிட்டாலும் கூட, அவற்றைக் கண்டுபிடிக்க உதவுமாறு நீங்கள் தேவனிடத்தில் கேட்கலாம்.
நீங்கள் தேவனிடத்தில் சிறிய விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை எல்லாவற்றையும் கேட்கலாம், ஆனால் நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்? நீங்கள் ஜெபிக்கும்போது, தேவனையும் அவருடைய தேவைகளையும் உங்கள் முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று இயேசு கூறினார். அதுவே “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்” என்பதன் அர்த்தம் ஆகும். மத்தேயு 6:33-இல் இயேசு இவ்வாறு கூறுகிறார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” நீங்கள் அவற்றைக் கேட்கலாம், ஆனால் தேவனுடைய ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுங்கள்; இதுவே தேவனுடைய வழி.
உங்கள் முதல் வேண்டுதலானது, “பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. என் பெயரைப் பற்றி ஜனங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலையில்லை. அது முக்கியமற்றது, ஏனென்றால் என் நற்பெயர் குப்பைத்தொட்டிக்குத்தான் தகுதியானது” என்பதாகவே இருக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். தேவனுடைய நாமத்தை விட உங்கள் பெயரையும் உங்கள் நற்பெயரையும் குறித்தே நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்களா? அப்படியானால், இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்த விதத்தில் நீங்கள் ஜெபம் செய்யவில்லை. யாராவது உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் மகளைப் பற்றியோ அவதூறு பரப்பினால், அது நம் தேசத்தில் இயேசுவின் நாமம் அவமதிக்கப்படுவதை விட உங்களுக்கு அதிக வருத்தத்தை அளிக்கிறதா? கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு, பல தவறான காரியங்களைச் செய்வது நம்மைப் போதுமான அளவு பாதிக்கவில்லை, அது நம்மைச் சற்றும் பாதிக்கவில்லை என்றால், பிதாவாகிய தேவனிடத்தில் நமக்கு உண்மையான உறவு இருக்கிறதா என்று நான் வியக்கிறேன். உங்கள் பெயர், உங்கள் குடும்பப் பெயர் மற்றும் உங்கள் பிள்ளைகளைப் பற்றியும் (அவர்களைப் பற்றி ஜனங்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்தும்) நீங்கள் அதிகம் கவலைப்பட்டால், உங்கள் சிந்தனையை மாற்றி, அதை தேவனை மையமாகக் கொண்டு செலுத்த வேண்டும்.
இயேசு ஜெபத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். லூக்கா 18:1-இல் இயேசு சொன்ன காரியங்களில் ஒன்று என்னவென்றால், மனுஷர்கள் சோர்ந்துபோகாமல் எப்போதும் ஜெபிக்க வேண்டும் என்பதே. ஜெபத்தைப் பற்றி இயேசு கூறிய இரண்டு உவமைகளிலும், அவர் இடைவிடாமல், தொடர்ந்து ஜெபிப்பததைப் பற்றியே பேசினார். இதற்கு ஓர் உதாரணம், லூக்கா 18:1-8-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதவைதான். அவள் தன் எதிராளிக்கு எதிராக நீதி கிடைக்கும் வரை ஒரு நீதிபதியிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தாள். சாத்தானையும் நம் சரீரத்திலுள்ள இச்சைகளையும் ஜெயிப்பதற்கான ஒரு ஜெபம் இது. மற்றொரு உதாரணம் லூக்கா 11:5-13-இல் இருக்கிறது. அங்கே இயேசு தேவனிடத்தில் அப்பத்தைக் கேட்பதைப் பற்றிப் பேசினார் - அதாவது நம்மிடம் வரும் தேவையுள்ள ஒரு நபருக்கு உதவுவதற்காக, நமக்கு பெலனையும் வரங்களையும் தரும்படி தேவனிடத்தில் கேட்பதாகும். இந்த இரண்டு உவமைகளிலும், இடைவிடாமல் தொடர்ந்து கேட்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; அந்த மனுஷன் தனக்கு அந்த அப்பம் கிடைக்கும் வரை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தான். ஜெபத்தைப் பற்றிய இயேசுவின் முழுமையான போதனை இதுவே: ஒருபோதும் சோர்ந்துபோய் விட்டுவிடாதீர்கள்! தேவன் உங்கள் பிதா; அவர் உங்கள் தேவையை நிறைவேற்றுவார், உங்களுக்காக எதிரியை முறியடிப்பார், மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்குத் தேவையான அனைத்தையும் அவர் உங்களுக்குக் கொடுப்பார். ஆகவே நாம் தேவனுடைய மகிமைக்காகக் கேட்கும் அனைத்து காரியங்களையம் அவர் நமக்குத் தந்தருளுவார் என்று விசுவாசித்து, ஜெபத்திலும் விசுவாசத்திலும் தேவனிடத்தில் நாம் செல்ல வேண்டும். ஆமென்.