WFTW Body: 

நேர்மையாக இருங்கள்

மத்தேயு 5:28-இல், “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” என்று இயேசு கூறினார். இந்தப் பாவ சுபாவத்திலிருந்து விடுபட நாம் தேவனிடத்தில் செல்ல வேண்டும். முதல் படியாக நாம் நேர்மையாக இருக்க வேண்டும். நீங்கள் கோபமடைந்தால், அதைக் குறித்து நேர்மையாக இருங்கள். நீங்கள் தவறு செய்த நபரிடம் சென்று, “சகோதரரே, என்னை மன்னித்துவிடுங்கள்; நான் உங்களிடத்தில் பேசிய விதத்திற்காக நான் வருந்துகிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் ஒரு நாளில் பத்து முறை கோபம் என்ற பாவத்தில் வீழ்ந்தாலும், அந்த நபரிடம் பத்து முறை சென்று மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் நேர்மையும் தாழ்மையும் கொண்டவர் என்பதை தேவன் கண்டால், அதிலிருந்து விடுபடுவதற்கான வல்லமையை அவர் உங்களுக்கு வழங்குவார்.

ஆனால் நீங்கள் அதை மூடி மறைத்து, அதற்கு ஒரு சாக்குபோக்குக் கூறி, உங்கள் கோபத்தை நியாயப்படுத்த முயற்சித்தால், நீங்கள் ஒருபோதும் விடுதலையாக மாட்டீர்கள். உங்களுடைய கோபம் உங்களைப் பற்றியதாக அல்லாமல், தேவனுடைய மகிமையைப் பற்றியதாக இருக்கும் போது மட்டுமே அது நியாயமானதாக இருக்கும்.

ஸ்திரீகளின் மீதுள்ள இச்சை என்று வரும்போது, நீங்கள் ஒருபோதும் அதை நியாயப்படுத்த முடியாது. நீங்கள் உங்கள் மனைவியைப் பார்த்து ரசிக்கலாம், ஆனால் வேறு எந்தப் பெண்ணையும் ரசிப்பது கூடாது. அது தேவனுடைய சித்தம் அல்ல. நீங்கள் இந்தக் காரியத்தில் தீவிரமானவராக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். முதலாவதாக, நீங்கள் நேர்மையாக இருந்து, “ஆண்டவரே, நான் விபச்சாரம் செய்தேன்” என்று சொல்ல வேண்டும். “நான் ஓர் அழகான முகத்தை ரசித்தேன்” என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக, “நான் விபச்சாரம் செய்தேன்” என்று சொல்லுங்கள்.

நீங்கள் நேர்மையாக இருந்தால், தேவன் உங்களை விடுவிப்பார்.

தீவிரமாயிருங்கள்

நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு விஷயம் பலவந்தம் செய்கிறவர்களாய் இருக்க வேண்டும். “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” (1கொரிந்தியர் 6:18) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் கணினியைப் (கம்ப்யூட்டரைப்) பயன்படுத்தும்போது சோதிக்கப்பட்டால், அங்கிருந்து எழுந்து அதை விட்டு ஓடுங்கள் அல்லது அதை அணைத்து விட்டு, “ஆண்டவரே, நான் எதை இழந்தாலும் எனக்கு கவலையில்லை, ஆனால் நான் இங்கே பாவத்தில் விழ விரும்பவில்லை” என்று சொல்லுங்கள். “உன் வலது கண் உன்னை இடறலடையச் செய்தால், அதைப் பிடுங்கிப் போடு” என்று இயேசு கூறும்போது, அவர் நமது வலது கண்ணை சரீர ரீதியாக வெளியே பிடுங்கி எறிந்திடும்படி கூறவில்லை. ஏனென்றால், அப்படியானால் நீங்கள் இன்னும் இடது கண்ணினால் இச்சிக்க முடியுமே. இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் பாவத்தின் மீது ஒரு தீவிரமான அணுகுமுறையை எடுக்க வேண்டும்; உங்கள் நாவின் மீதும் உங்கள் கண்களின் மீதும் ஒரு தீவிரமான அணுகுமுறையை எடுக்க வேண்டும்.

நீங்கள் சோதிக்கப்படும் நேரத்தில், குருடனும் ஊமையனுமான மனிதனைப் போல இருங்கள். ஓர் ஊமையான மனிதன் தன் குரலை உயர்த்தி யாரையாவது பார்த்து கத்த முடியுமா? ஒரு குருடன் கண்களினால் இச்சிக்க முடியுமா? முடியாது. ஒரு குருடனைப் போல இருந்து, “ஆண்டவரே, ஸ்திரீகளை இச்சிப்பதற்கென்று நீர் எனக்குக் கண்களைக் கொடுக்கவில்லை. உமது மகிமையைக் காணும்படிக்கு நீர் எனக்குக் கண்களைக் கொடுத்தீர்” என்று கூறுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், உங்கள் சரீர உறுப்புகளை வேண்டுமானால் இழக்காமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இன்னும் நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்று இயேசு கூறுகிறார். உங்கள் சரீரத்தின் ஒரு பகுதியை இழந்து (அதாவது, உங்கள் சரீரம் விரும்பும் பாவ இன்பத்தை நீங்களாகவே மறுத்து) தேவனுடைய ராஜ்யத்திற்குள் செல்வது மேலானது.

உன் வலது கையால் பாலியல் ரீதியாகப் பாவம் செய்து, அது உன்னை இடறலடையச் செய்தால், அதைத் தறித்து எறிந்து போடு” (மத்தேயு 5:30) என்று இயேசு கூறினார். உங்களுடைய ஒரு கை துண்டிக்கப்பட்டிருக்கிறது போலவும் உங்கள் வலது அல்லது இடது கையால் பாவம் செய்ய முடியாது எனவும் கற்பனை செய்து பாருங்கள். இயேசு மிகவும் தாழ்மையுள்ளவரும், நடைமுறைக்கு ஏற்றவராகவும் இருக்கிறார். பாவம் மிகவும் கொடியது என்பதால், நீங்கள் ஒரு குருடனைப் போலவும், உடல் உறுப்புக்கள் துண்டிக்கப்பட்டவனைப் போலவும் நடந்து கொள்ளும்படிக்கே இயேசு கூறுகிறார். நாம் பாவத்தின் மேல் அத்தகைய தீவிரமான அணுகுமுறையை எடுத்துவிட்டால், தேவன் நம்மை முழுமையாக விடுதலையாக்குவார் என்றும் நமக்கு ஒரு சிறந்த திருமண வாழ்க்கை இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். இச்சை என்னும் பிரச்சனைக்கு திருமணம் மட்டுமே தீர்வு என்று நினைக்க வேண்டாம். எப்பொழுதும் தங்கள் சிந்தனைகளில் விபச்சாரத்தில் விழும் திருமணமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இணையதள ஆபாசத்தைப் பார்க்கும் திருமணமானவர்கள் பலர் இருக்கிறார்கள். திருமணம் அந்தப் பிரச்சனையைத் தீர்க்காது, ஏனெனில் அது ஒரு நபருக்கு உள்ளாக இருக்கும் ஆசையாகும். பரிசுத்த ஆவியின் வல்லமையால் நீங்கள் அதை எதிர்த்துப் போராடவில்லை என்றால், நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்; அதே சமயம் நீங்கள் உங்களை ஓர் ஆவிக்குரிய கிறிஸ்தவர் என்று எண்ணி உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை ஏமாற்றிக் கொள்வீர்கள்.

இயேசு பேசும் இந்தக் காரியங்களெல்லாம் கிறிஸ்தவத்தின் முதுகலைப் பட்டப்படிப்பு நிலையா? இல்லை, அவர் நரகத்திலிருந்து தப்புவது எப்படி என்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறார். நரகத்திலிருந்து தப்புவது என்பது முதுகலை கிறிஸ்தவப் பாடம் அல்ல. அது ஓர் ஆரம்பநிலைப் பாடமேயாகும். உங்கள் முழு சரீரமும் நரகத்தில் தள்ளப்படுவதை விட உங்கள் சரீர உறுப்பு அழிந்து போவது மேலானது என்று இயேசு கூறினார். நரகத்திலிருந்து இரட்சிப்பு என்பது குறைந்தபட்சமானது. இதையே நாம் சகல தேசத்திலும் உள்ள ஒவ்வொரு சீஷருக்கும் கற்பிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இது எவ்வளவு கற்பிக்கப்படுகிறது? கிட்டத்தட்ட கற்பிக்கப்படுவதே இல்லை என்றே கூறலாம். அதனால்தான் எனது சொந்த ஊழியத்தில் இதை வலியுறுத்தும்படியான கட்டளையுடன் கர்த்தரால் நான் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.