எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   குடும்பம்
WFTW Body: 

குடும்பத்திலுள்ள உறவுகளை, புருஷர்களுக்கும், மனைவிகளுக்கும் இடையிலான உறவு (எபே 5:22-33), பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையிலான உறவு (எபே 6:1-4) மற்றும் எஜமான்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் இடையிலான உறவு (எபே 6:5-9) என மூன்றுவிதமான உறவுகளாக எபேசியர் 5-ஆம், 6-ஆம் அதிகாரங்களில் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. இங்குள்ள கடைசிப் பிரிவில், வீடுகளில் வேலை செய்யும் வேலைக்காரர்களையும், தொழிற்சாலைகளிலும், அரசாங்கத்திலும் மேலதிகாரிகளின் கீழ் பணிபுரிபவர்களையும் முன்னிறுத்தி, இரு தரப்பினருக்குமே சொல்லப்படுகின்றது. எனவே இப்புத்திமதிகளெல்லாம், ஒரு குடும்பத்தில் அல்லது ஓர் அலுவலகத்தில் நாம் எஜமான்களாகவோ/எஜமானிகளாகவோ, வேலைக்காரர்களாகவோ எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை எடுத்துச் சொல்லுகின்றது. நாம் எல்லாருமே நம்முடைய நேரத்தைக் குடும்பம் மற்றும் அலுவலகம் ஆகிய இரு இடங்களில்தான் அதிகமாகச் செலவிடுகின்றோம். ஆவியில் நிறைந்த ஒரு நபர் வீட்டிலும், பணி ஸ்தலத்திலும் கிறிஸ்துவின் ஆவியை வெளிப்படுத்துவார். இந்த ஆவியைக் கொண்டுதான் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்ட முடியும்.

கிறிஸ்துவின் சரீரம் கட்டப்படுவது பற்றி எபேசியர் பேசுகிறது. "தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்" (எபே 5:21) என்பதுதான் நாம் ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அடிப்படைக் கோட்பாடாக விளங்க வேண்டும். மனைவிகள் தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிந்திருப்பது போலவே, புருஷர்களும் தங்கள் மனைவிகளுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். அதைப் போலவே தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், எஜமான்கள் தங்கள் வேலைக்காரர்களுக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். இதன் பொருளென்ன?

தேவன் ஒவ்வொருவருக்கென்றும் ஓர் எல்லையை வகுத்து வைத்திருக்கிறார். ஆகவே நாம் யாவரும் அந்த எல்லைகளை மதிக்க வேண்டும். இப்படித்தான் நம்மால், "எல்லாரையும் கனம்பண்ண" முடியும் (1பேதுரு 2:17). புருஷர்கள், மனைவிகள், தகப்பன்மார்கள், பிள்ளைகள், எஜமான்கள், வேலைக்காரர்கள் ஆகியோரைச் சுற்றிலும் தேவன் அவரவர்களுக்கென்று ஓர் எல்லையை வரைந்துள்ளார். உங்களுடைய வீட்டிலே ஒரு வேலைக்காரர் வேலை செய்வாரானால், அவருக்கென்று ஒரு சில உரிமைகளோடு கூடிய ஓர் எல்லையைத் தேவன் வரைந்திருப்பார். அதை உங்களால் மீற முடியாது. உதாரணமாக, அவருக்குரிய ஊதியமானது உரிய நேரத்தில் வழங்கப்படுவது, அவருடைய கௌரவம் மதிக்கப்படுவது, சிறுமைப்படுத்தாமல் திருத்தப்படுவது ஆகியவற்றைச் சொல்லலாம். இப்படியாக ஓர் எஜமான் தன்னுடைய வேலைக்காரனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

அது போலவே, ஒரு பிள்ளையானவன் அவனுடைய கெட்ட நடத்தைகளுக்காக தண்டிக்கப்படும்போது, அவனுடைய கௌரவம் மதிக்கப்பட வேண்டும். பிள்ளைகளைச் சுற்றி வகுக்கப்பட்டுள்ள எல்லைகளுக்குப் பெற்றோர்கள் கீழ்ப்படிய வேண்டும். நான் ஒரு தகப்பனாய், என்னுடைய பிள்ளைகளை ஒருபோதும் மற்றவர் முன்னிலையில் தண்டிப்பதில்லை என்பதை ஒரு விதிமுறையாகவேக் கொண்டிருந்தேன். விருந்தினர்கள், அவர்களுடைய சகோதரர்கள் ஆகியோரின் முன்னிலையில் பிள்ளைகளைத் தண்டித்தால், அது அவர்களுக்கு இரட்டிப்பான தண்டனைப் பெற்றதைப் போல் இருக்கும். பிரம்பால் பெறுவது முதல் தண்டனையாகவும், பிறர் முன்னிலையில் அவமானப்படுவது இரண்டாவது தண்டனையாக அமைந்துவிடும். அவர்களுக்கு பிரம்படியைப் பார்க்கிலும் அவமானப்படுவது, வலி மிகுந்ததாக இருந்துவிடக் கூடும். ஆதலால், ஒரு பிள்ளைக்கென்று கௌரவம் என்னும் எல்லை அவனைச் சுற்றி இருக்கும்; அதைத் தகப்பனானவன் மதிக்க வேண்டும். அப்படியே, ஒரு மனைவியானவளும் தன்னைச் சுற்றி ஓர் எல்லையைப் பெற்றிருக்கிறாள். அவள் சமையலறையிலே, தனது விருப்பப்படிச் சிலவற்றைச் செய்யும்படி விரும்புவாள். அது அவளது வட்டமாகும். அவள் சமையலறையை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கணவன் குறுக்கிடக் கூடாது. எல்லாவற்றையும் மிக ஒழுங்காகச் செய்யும் ஒரு தேவபக்தியான மனிதனைக் குறித்து நான் கேள்விப்பட்டேன். அவருடைய மனைவியோ அவருக்கு நேரெதிரானவள். அவள் தட்டுக்களையும், கத்திகளையும் ஒன்றாய்ச் சேர்த்து ஏனோதானோவென்று வைக்கும் பழக்கம் உடையவளாய் இருந்தாள். கணவன் எப்பொழுதெல்லாம் சமையலறையிலே பாத்திரங்களைக் கழுவுகிறாரோ, அப்பொழுதெல்லாம் அவர் கழுவிய தட்டுக்களையும் கத்திகளையும் தனித்தனியே ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டுமென சோதிக்கப்பட்டார். ஆனால் மனைவி அதைப் பார்த்தால், தன்னால் அதுபோல ஒழுங்காக வைக்க முடியவில்லையே எனச் சோர்ந்து போவாள் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே அவரும் மனைவி செய்வதைப் போலவே எல்லாவற்றையும் அரைகுறையாக வைத்துவிட்டுப் போய்விடுவார். அப்படிச் செய்ததால், மனைவிக்குச் சமையல்கட்டில் நிம்மதியாக இருக்க முடிந்தது. அதன் விளைவு என்னவாய் இருந்தது? அவர்களுடைய சமையலறை அலங்கோலமாய்க் கிடந்தாலும், அவர்களுடைய ஐக்கியமோ மகிமையானதாக இருந்தது!! அச்சகோதரன் கிறிஸ்துவுக்குப் பயந்ததினிமித்தம், தன்னுடைய மனைவிக்கு எப்படிக் கீழ்ப்படிய வேண்டுமென அறிந்திருந்தார்! தனக்கும், மனைவிக்கும் இடையே உள்ள ஐக்கியம்தான் மிக முக்கியமானது என்பதைக் கண்டு கொள்ளும்படியான ஞானத்தைப் பெற்றிருந்தார். தட்டுகளும், கத்திகளும் அந்தந்த இடத்தில் சரியாக வைக்கப்பட்டுள்ளனவா, அல்லது அலங்கோலமாய்க் கிடக்கின்றனவா என்பதைப் பற்றியெல்லாம் அவர் அக்கறைப்படவில்லை. சில தம்பதியினர் பரஸ்பர ஐக்கியத்தைவிட, வீடு சுத்தமாக இருப்பதற்கே முக்கியத்துவம் தரும் மதியீனர்களாக உள்ளனர்.

சுத்தமும், தூய்மையுமான இல்லத்தைப் பார்க்கிலும், பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான ஐக்கியமே முக்கியமானதாகும். நாம் நம்முடைய பிள்ளைகளுக்குத் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்கவும், பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்கவும் நிச்சயமாகச் சொல்லித்தர வேண்டும். ஆனால் அவர்கள் சிறுவர்களாய் வீட்டிற்குள்ளேயே விளையாடித் திரியும் போது, எல்லா நேரமும் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது கடினமான விஷயம்தான். குழந்தைகளுக்குத் தங்களுடைய வீடுகள்தான் சுதந்திரமாக இருக்கக்கூடிய இடமாகும். தனிப்பட்ட விதமாக என்னுடைய வீடு சுத்தமாக உள்ளதா இல்லையா என்பதைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அக்கறைப்படுவதில்லை. என்னுடைய மனைவியும், பிள்ளைகளும் குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பதையும், அவர்களோடு ஐக்கியமாய் இருப்பதையும் நான் விரும்புகிறேன். அது எனக்கு மிக முக்கியம். சுத்தமும், தூய்மையுமான இல்லத்தைப் பார்க்கிலும், ஐக்கியத்தையே அதிகமாக மதியுங்கள்.

5-ஆம் அதிகாரத்தைத் தொடர்ந்து பார்க்கும்போது, தன்னுடைய புருஷன் தனக்குத் தலையாக இருக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறான் என்பதை மனைவியானவள் அறிந்திருக்க வேண்டும். சரீரத்திற்குத் தலையாக மூளை இருப்பதைப் போல, மனைவிக்குப் புருஷன் தலையாய் இருக்கிறான். தலையானது (மூளையானது), சரீரத்தின் பிற உறுப்புகள் மீது அக்கறை கொள்கின்றது (எபே.5:28). அதுபோலவே, கணவனும் மனைவியின் மீது அக்கறை உடையவனாய் இருக்க வேண்டும். தலையாய் இருப்பது என்றால் வெறும் உத்தரவுகளை மாத்திரம் பிறப்பிப்பதல்ல. தலையானது சரீரத்தின் உறுப்புகளான கைகள், கால்கள், நாவு போன்றவற்றைப் பலவிதமான செயல்களைச் செய்யும்படிக்குக் கட்டளையிடுகின்றது. ஆனால் அந்தத் தலையானது உறுப்புகளின் மீது கரிசனையாகவும் உள்ளது. உடம்பில் ஒரு கீறல் ஏற்பட்டாலும், தலையானது அதை உடனடியாக உணர்ந்து கொண்டு, ஏதாவதொன்றைச் செய்கின்றது. அப்படிப் போலவே, கணவனும், தன்னுடைய மனைவியின் காயங்களுக்குக் கூரிய உணர்வுடையவனாக இருக்க வேண்டும். நம்முடைய தலையாகிய கிறிஸ்துவும் நம்முடன் இப்படித்தான் நடந்து கொள்கிறார். நான் சரீரத்தில் உண்டாகும் காயங்களைப் பற்றி மட்டுமே சொல்லாமல், உணர்ச்சிகளில் ஏற்படும் காயங்களைப் பற்றியும் குறிப்பிடுகிறேன். மனைவி துக்கமாகவோ, சோர்வாகவோ, எதினிமித்தமாவது காயமடைந்தோ இருந்தால், கணவன் அவளிடத்தில் பரிவாக இருந்து, அவளைக் குணமாக்க வேண்டும். இவ்வாறு கரிசனையாய் நடந்து கொள்ளாத புருஷன் தலையாய் இருப்பதற்குத் தகுதியற்றவனாவான். வெறும் ஆணைகளை மட்டும் பிறப்பிக்கிற தலைவன் ஒரு சர்வாதிகாரியாவான்! கூரிய உணர்வுடைய ஒரு கணவனும், கீழ்ப்படிகிற மனைவியும் ஒன்றிணைந்து, கிறிஸ்துவும், சபையும் எப்படி இருக்கிறார்கள் என்பதை இவ்வுலகிற்கு வெகு நேர்த்தியாய்ப் பறைசாற்ற முடியும். இத்தகைய இல்லத்தைத்தான் நாம் எல்லோரும் கட்ட வேண்டும். அதற்குக் காலம் எடுத்தாலும், நாம் அதை நோக்கி முழு இருதயத்தோடு தொடர வேண்டும்.

பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிகிறவர்களாக வளர்க்கப்பட வேண்டும் (எபே 6:1-4). பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதுதான், நாம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டிய மிக முக்கியமான காரியமாகும். வேலைக்காரர்கள் தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற கற்பனையைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், மனப்பூர்வமாய் ஊழியஞ்செய்ய வேண்டும். அந்தப்படியே எஜமான்களும் தங்கள் வேலைக்காரரை கனிவுடனும், பட்சபாதம் இல்லாமலும் நடத்தும்படி ஏவப்படுகிறார்கள். (எபே 6:5-9)