WFTW Body: 

ஒரு வருடத்தின் இறுதிக்கு நாம் வரும்போது, நம்முடைய வாழ்க்கையை சோதித்தறிந்து, அது எவ்வாறு கடந்து சென்றது என்பதைப் பார்ப்பது நமக்கு நல்லது. ஆகாய் தீர்க்கதரிசி தன்னுடைய காலத்தில் "உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்" என்று மக்களை வலியுறுத்தினார். இது ஆகாய் 1:5,6ல் எழுதப்பட்டுள்ளது: இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: “உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்”.

“நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்”. மேற்கண்ட கேள்விகளை எல்லாம் நாம் நமக்காக இவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்: "உங்கள் வாழ்க்கையில் காரியங்கள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்" என்று கர்த்தர் நமக்கு சவாலிட்டு சொல்லுகிறார்.

உங்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய கனிகள் இருக்கின்றதா? நீங்கள் திரளாய் பயிரிட்டும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள். நீங்கள் அனேக கூட்டங்களுக்குச் சென்று இருக்கிறீர்கள், பல கிறிஸ்தவ புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள், பல கிறிஸ்தவ நாடாக்களைக் (Tapes) கேட்டிருக்கிறீர்கள், ஆனால் உங்கள் வீடு இன்று ஒரு தெய்வீக வீடாகவும் சமாதானமான வீடாகவும் இருக்கிறதா? உங்கள் மனைவியிடமோ அல்லது உங்கள் கணவரிடமோ ‘சத்தத்தை உயர்த்திப் பேசுவது’ போன்ற எளிதான காரியத்திலாவது ஜெயம் பெற்றிருக்கிறீர்களா? இல்லையென்றால், நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள். நீங்கள் வஸ்திரம் உடுத்தியும், அதினால் இன்னும் வெப்பம் ஒன்றுமில்லை. நீங்கள் அதிகமாய் பணம் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் உங்கள் பையிலே பொத்தல் (ஓட்டைகள்) உள்ளது, அதனால் பெரும்பாலானவை வீணாகின்றன.

தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை. - நாம் மிகப் பரிதாபமாக மறுபடியும் மறுபடியும் தோல்வியடைந்த பின்னும், அவருடைய பரிபூரண சித்தத்திற்கு நம்மைக் கொண்டு வருவது, அவருக்குக் கூடாது காரியம் அல்ல. நம்முடைய அவிசுவாசம் ஒன்றே அவரைக் கிரியை செய்யக்கூடாமல் தடுக்கிறது. ஒருவேளை நீங்கள், "நான் அநேக தடவைகள் தோல்வியுற்றவன். இவ்வித பரிதாபநிலை கொண்ட என்னைத் தேவன் தம்முடைய பரிபூரணத் திட்டத்திற்குள் மீண்டும் கொண்டுவருவது ஒருக்காலும் முடியாது!" எனக் கூறலாம். அப்படியானால் உங்கள் கூற்றின்படியே தேவனால் ஒன்றும் செய்யக்கூடாததாகவே மாறிவிடும்! ஏனென்றால் தேவன் உங்கள் வாழ்வில் உங்களுக்காகச் செய்ய முடிபவைகளை உங்களால் விசுவாசிக்க முடியவில்லையே! ஆனால், "நீங்கள் மாத்திரம் விசுவாசித்து விட்டால்... தேவனால் கூடாத காரியம் ஒன்றுமேயில்லை!" என்றல்லவா இயேசு கூறினார்.

ஆம், வாழ்வின் எல்லா காரியங்களுக்கும், "உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது" (மத்தேயு 9:29) என்பதே தேவனுடைய மாறாத சட்டமாய் இருக்கிறது. நாம் எதை விசுவாசிக்கிறோமோ அதை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். ஏதோ ஒரு காரியத்தை தேவனால் செய்திட முடியாது என நீங்கள் விசுவாசித்தால் அது அப்படியே உங்களுக்குச் செய்யப்படாமல் இருந்துவிடும்! ஆனால் இதற்கு நேர்மாறான காரியத்தை நீங்கள் கிறிஸ்துவின் நியாயாஸ்தனத்திற்கு முன்பாக காண்பீர்கள். அங்கே உங்களைக் காட்டிலும் தன் வாழ்வில் பயங்கர தோல்வியுற்ற இன்னொரு விசுவாசி, தேவன் அம்மனுஷனுடைய வாழ்விற்காக வரைந்திருந்த பரிபூரண திட்டத்தை நிறைவேற்றி முடித்திருப்பதை அன்று காண்பீர்கள்! "சுக்கு-நூறாக உடைந்துபோன தன் ஜீவியத்தின் உடைந்த சிதறல்களைத் தேவன் பொறுக்கி எடுத்து அவைகளை மீண்டும் சேர்த்து வைத்து மிகவும் நன்றாய் இருக்கும்படி தேவனால் செய்திட முடியும்'' என்பதை அந்த விசுவாசி விசுவாசித்தான்... அவ்வளவுதான்! தேவன் உங்கள் வாழ்விற்காக வைத்திருந்த திட்டத்தைச் சீர்குலைத்ததெல்லாம் "திரும்பத்திரும்ப ஏற்பட்ட உங்கள் தோல்விகள் அல்ல... மாறாக, உங்கள் அவிசுவாசமே அதற்குக் காரணம்!" என்ற உண்மையை நீங்கள் அந்நாளில் கண்டுகொள்ளும்போது அது எவ்வளவு பெரிய துயரமாயிருக்கும்!!

“பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே (செயல்தவிர்க்க/கலைக்க) தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவான் 3:8). நம் வாழ்வில் பிசாசு கட்டியிருக்கும் எல்லா முடிச்சுகளையும் அவிழ்ப்பதற்காகவே இயேசு வெளிப்பட்டார் என்பதே அந்த வசனத்தின் அர்த்தமாகும். இதை இப்படிச் சித்தரித்துப் பாருங்கள்: நாம் பிறந்தபோது, தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு முழுமையான (பூரணமான) உருட்டப்பட்ட நூல்பந்தைக் கொடுத்தார் என்று சொல்லலாம். நாம் வாழத் தொடங்கியதும், ஒவ்வொரு நாளும் அந்த நூல்பந்தை அவிழ்த்து அதிலே முடிச்சுகளைக் கட்ட (பாவம் செய்ய) ஆரம்பித்தோம். இன்று அநேக ஆண்டுகளாக நூல்பந்தை அவிழ்த்த பிறகு, அதிலே ஆயிரக்கணக்கான முடிச்சுகளை நாம் காண்கையில் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறோம். ஆனால் இயேசு “பிசாசு கட்டியிருக்கும் முடிச்சுகளை அவிழ்க்க” வந்துள்ளார். எனவே மிகவும் அதிகமான முடிச்சுகளுடன் இருப்பவர்களுக்கும் கூட நம்பிக்கை உண்டு.

கர்த்தர் ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்து, உங்கள் கைகளில் மீண்டும் ஒரு முழுமையான (பூரணமான) நூல்பந்தைக் கொடுக்க முடியும். இதுதான் சுவிசேஷத்தின் நற்செய்தி: நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தைச் செய்ய முடியும். "அதெல்லாம் சாத்தியமற்றது!" என்று கூறுவீர்களானால், உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகக்கடவது. உங்கள் விஷயத்தில் அது சாத்தியமற்றதாகவே போய்விடும். ஆனால், உங்கள் வாழ்க்கையைக் காட்டிலும் அதிகமாக படுதோல்வியுற்ற ஒருவர், "ஆம், தேவன் என் வாழ்வில் அதனைச் செய்திட முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று சொல்வதை நான் கேட்கிறேன். அவனுக்கும் அவன் விசுவாசத்தின்படியே ஆகக்கடவது என்பதே. அவனுடைய வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண திட்டம் நிறைவேறிவிடும்.

நீங்கள் மாத்திரம் உங்கள் எல்லாத் தோல்விகளுக்காகவும் தேவனுக்கேற்ற ஆழ்ந்த துக்கம் கொண்டுவிடுங்கள். நீங்கள் அப்படிச் செய்துவிட்டால், உங்கள் பாவங்கள் சிவேரென்று இரத்தாம்பர சிவப்பாய் இருந்தாலும், பழைய உடன்படிக்கையின் வாக்குப்படி அது உறைந்த மழையைப்போல் வெண்மையாகும் (ஏசாயா 1:18), புதிய உடன்படிக்கையின் வாக்குப்படியோ தேவன் "உங்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி மீண்டும் நினைக்கக்கூட மாட்டார்!" (எபிரேயர் 8:12). உங்களுடைய தவறுகளும் தோல்விகளும் எதுவாயிருந்தால் என்ன? நீங்கள் இன்னமும் தேவனுக்குள் ஓர் புதிய தொடக்கத்தைச் செய்ய முடியும். கடந்த காலத்தில் நீங்கள் ஆயிரம் புதிய தொடக்கங்களைச் செய்து தோல்வியுற்றிருந்தாலும், நீங்கள் இன்றும் 1001வது புதிய தொடக்கத்தைச் செய்ய முடியும். உங்கள் வாழ்வைக்கொண்டு மகிமையான காரியத்தைச் செய்திட தேவனால் கூடும். உங்கள் உயிர் உள்ளவரை… நம்பிக்கையும் உண்டு. ஆகவே தேவனை நம்பி சார்ந்துகொள்வதற்கு ஒருபோதும் தவறிவிடாதிருங்கள். அவர் தம்முடைய எண்ணற்ற பிள்ளைகளுக்கு அநேக அற்புதக் கிரியைகளைச் செய்ய முடியவில்லை. அதற்கெல்லாம் காரணம் கடந்த காலத்தின் அவர்களுடைய தோல்விகள் அல்ல... மாறாக, இன்று அவர்கள் அவரை நம்பி சார்ந்துகொள்ளவில்லை என்பதே காரணமாகும்! ஆகவே நாம் யாவரும் "விசுவாசத்தில் வலிமைகொண்டு தேவனை மகிமை படுத்துவோமாக" (ரோமர் 4:20). இனிவரும் காலங்களில் எவைகளையெல்லாம் "கூடாதது" என்று கண்டோமோ அவைகளினிமித்தம் தேவனை முற்றிலும் நம்புவோமாக. சிறியோரே! பெரியோரே!! சகல ஜனங்களே!! நீங்கள் மாத்திரம் உங்கள் தோல்விகளை ஒத்துக்கொண்டு, உங்களைத் தாழ்த்தி, தேவனை நம்பிவிடுங்கள்… அதுபோதும்! நீங்கள் கடந்த காலங்களில் எவ்வளவு தோல்வி அடைந்திருந்தாலும் உங்களுக்கு நம்பிக்கை உண்டு.