பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஜனங்களுடைய வாழ்க்கையில் முப்பதாம் ஆண்டு மிகவும் குறிப்பிடத்தக்க நேரமாகத் தெரிகிறது.
யோசேப்பு எகிப்து தேசத்தின் அதிபதியானபோது அவருக்கு 30 வயது. யோசேப்பு 17 வயதாக இருந்தபோது, அவருடைய வாழ்க்கைக்குத் தேவன் ஒரு திட்டம் வைத்திருந்தார் என்பதைக் கனவுகளின் மூலமாக ஏற்கனவே தேவன் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். பெரும்பாலான இளைஞர்கள் அசுத்த கனவுகளைக் கண்டு கொண்டிருக்கும் வயதில், ஒரு இளைஞன் இவ்வளவு உணர்வுள்ளவனாய் தேவனிடமிருந்து கனவுகளைக் கண்டு கொண்டிருந்தார் என்பதைக் காணும்போது ஆச்சரியமாயிருக்கிறது. யோசேப்பு பாடுபட்ட காரியங்களைப் பாருங்கள் - அவருடைய சகோதரர்களின் பொறாமையும், ஒரு தீய ஸ்திரீயின் பொய்யான குற்றச்சாட்டும், சிறைச்சாலையுமாகும். அந்நாட்களில் சிறைச்சாலைகள் எலிகளும், புழுக்களும், கரப்பான்பூச்சிகளும் எல்லா இடங்களிலும் ஊர்ந்து செல்கின்ற கொடூரமான நிலவறைகளாக (dungeons) இருந்தன. ஆனால் “கர்த்தரோ யோசேப்போடே இருந்தார்” என்று ஆதியாகமம் 39:21 சொல்கிறது.
தாவீது ராஜாவாகும்போது அவருக்கு 30 வயது. 1 சாமுவேல் 16ல், பலிவிருந்துக்கு ஈசாயிடம் தம்முடைய எல்லா குமாரர்களையும் அழைத்து வரும்படி சாமுவேல் சொன்னபோது, முதல் ஏழு குமாரர்களை மட்டுமே ஈசாய் அழைத்தார். அவர் தம்முடைய இளைய மகனாகிய தாவீதை அழைக்கக் கூட பிரயாசப்படவில்லை – ஏனென்றால் யாருமே தாவீதைப் பற்றி அதிகமாக நினைத்ததில்லை. அந்த குடும்பத்தின் குழந்தையாக அவர் இருந்தார் – ஒருவேளை அவருக்கு 15 வயதாயிருந்திருக்கும். இளைஞனான தாவீது அழைக்கப்பட்டபோது, என்ன நடக்கிறதென்று கூட அவருக்குத் தெரியவில்லை. ஆனால் தேவன் அவரை கவனித்துக்கொண்டிருந்தார். கர்த்தர்மீது அவர் கொண்டிருந்த பக்தியையும் அன்பையும் பார்த்துக்கொண்டிருந்தார். தாவீது வந்தவுடன், "இவனே நான் தெரிந்துகொண்டவன்" என்று கர்த்தர் சாமுவேலிடம் சொன்னார். சாமுவேல் அவரை அபிஷேகம் பண்ணினார். கர்த்தருடைய ஆவி அந்த இளம் வாலிபன் மீது அதிக பலமாய் வந்தது.
தேவன் எரேமியாவைத் தீர்க்கதரிசனம் சொல்லும்படி அழைத்தபோது அவர் ஒரு இளைஞனாக இருந்தார். ”நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்" என்று தேவன் எரேமியாவிடம் சொன்னார் (எரேமியா 1:5). நம்முடைய தாயின் கருவில் நாம் உருவாகியவுடனேயே – ஒரு நுண்ணிய புள்ளியாக இருக்கும்போதே தேவன் நம்மீது கண் வைத்திருந்தார். அவர் எரேமியாவுக்கு ஒரு திட்டம் வைத்திருந்தது போலவே நம்முடைய வாழ்க்கைக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். இது எல்லா இளைஞர்களுக்கும் ஒரு பெரிய உற்சாகமாயிருக்கிறது. “நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக” என்று கர்த்தர் எரேமியாவிடம் சொன்னார் (எரேமியா 1:7). “நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு அடிக்கடி சொல்லுகிற வார்த்தையைக் கர்த்தர் எரேமியாவிடம் சொன்னார் (எரேமியா 1: 8).
எசேக்கியேல் தம்முடைய ஊழியத்தைத் தொடங்கியபோது அவருக்கு 30 வயது. எசேக்கியேல் ஆசாரியனாக ஊழியம் செய்யும்படி பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த ஒரு ஆசாரியனின் மகனாக இருந்தார் (எசேக்கியேல் 1:3). ஆனால் அவர் 30 வயதானபோது, தேவன் திடீரென்று அவரை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்தார் (எசேக்கியேல் 1:1). எசேக்கியேல் இளைஞனாக இருந்த நாட்களில் அவர் எரேமியாவுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும். ஒரு இளைஞராக அவர் எரேமியாவின் தீர்க்கதரிசனங்களைக் கேட்டும், அவைகளைப் படித்தும் இருந்திருப்பார். தேவன் இந்த இளைஞனின் உண்மையைக் கண்டபோது, எசேக்கியேலை ஒரு ஆசாரியனாக அல்ல, ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும்படி தீர்மானம் செய்தார். ஒரு நாள் தேவன் எசேக்கியேல் மீது வானங்களைத் திறந்து, தம்மைக் குறித்த தரிசனங்களையும், தம்முடைய ஜனங்களுக்கு ஒரு செய்தியையும் கொடுத்தார்.
தானியேல் ஒத்தவேஷம் தரியாதவராகவும் உண்மையுள்ளவராகவும் ஒரு இளைஞனாகத் தொடங்கியபோது, எவ்வளவு பெரிய ஊழியத்தை பெற்றுக்கொள்ளப் போகிறார் என்பதை அவர் அறியாதிருந்தார். அவர் சிறிய காரியங்களிலும் பெரிய காரியங்களிலும் தேவனுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். தேவன் அவர் மூலமாக ஒரு பெரிய ஊழியத்தை நிறைவேற்றினார். தானியேல் புத்தகத்தின் தொடக்கத்தில் அவருக்கு 17 வயதாகவும், புத்தகத்தின் முடிவில் அவருக்கு 90 வயதாகவும் இருக்கலாம். அவர் சிறையிருப்பின் 70 ஆண்டுகள் முழுவதிலும் வாழ்ந்து, முற்றிலும் உண்மையுள்ளவராக இருந்தார். அதனால்தான், பாபிலோனிலிருந்து எருசலேமுக்குச் செல்லும் இந்த இயக்கத்தைத் தொடங்க தேவன் அவரைப் பயன்படுத்தினார். இன்றும்கூட, 17 வயது நிரம்பிய இளைஞனைத் தேவன் தெரிந்துகொண்டு, தீர்க்கதரிசியாக மாற்றி, தமக்கென்று நிலையாய் நிற்கும்படியாக அதிகாரத்தை அருள்வார்.
சகரியா ஒரு இளைஞனாக ஆகாய் தீர்க்கதரிசியோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்தவர். ஆகாய் தீர்க்கதரிசியை விட சகரியா இளையவராக இருந்தபோதிலும், தேவன் அவருக்கு அதிகமாய் தீர்க்கதரிசனம் உரைக்க செய்தார். தேவனுக்கு வயது ஒரு பொருட்டல்ல. சகரியா மிகவும் இளைஞனாக இருந்தபோதே தேவன் அவருக்கு தரிசனங்களையும் தீர்க்கதரிசன செய்திகளையும் கொடுக்கத் தொடங்கினார் (சகரியா 2:4). நீங்கள் இளம் வயதினராக இருக்கும்போதே, தேவன் உங்களை தெரிந்துகொண்டு, பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பண்ணி, ஆகாய் போன்ற வயது முதிர்ந்த தேவ பக்தியுள்ள சகோதரனோடு ஒன்றுசேர்ந்து, கடைசியாக அவரைக் காட்டிலும் பரந்த ஊழியத்தை உங்களுக்குக் கொடுக்கக்கூடும். சோர்ந்துபோன ஜனங்களை ஊக்கப்படுத்துகிற ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஊழியத்தை சகரியா பெற்றிருந்தார்.
இயேசுவானவர் தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தைத் தொடங்கியபோது அவருக்கு 30 வயது. அவருடைய ஊழியத்திற்குள் வருவதற்கு முன்பாக 30 ஆண்டுகளாய் யோசேப்புக்கும் மரியாளுக்கும் கீழ்ப்படிகிறதான பயிற்சி இயேசுவுக்கும் கூட தேவைப்பட்டது. இது நமக்கும் அதிகம் தேவை அல்லவா?
பெரும்பாலான அப்போஸ்தலர்கள் தங்களுடைய ஊழியத்தைத் தொடங்கியபோது அவர்களுக்கு ஏறக்குறைய 30 வயது. இன்றும்கூட, ஒருவேளை அதே வயதிலே தான், அவருடைய பிள்ளைகளுக்கென்று வைத்திருக்கிற குறிப்பிட்ட ஊழியத்திற்கு நேராகத் தேவன் அவர்களை வழிநடத்தத் தொடங்குகிறார். ஆனால் அந்த நாட்களுக்கு முன்பாக, அந்த குறிப்பிட்ட ஊழியத்திற்காக நம்மை ஆயத்தம் செய்வதற்காக தேவன் அநேக ஆண்டுகளைச் செலவழிக்கிறார். உங்களை முற்றிலும் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, உங்களுடைய பதின் பருவத்திலும் இளம் பருவத்திலும் உங்களைத் தயார் செய்யும்படி நீங்கள் அவரை அனுமதித்தால், தேவன் உங்களுக்காகத் திட்டமிட்டுள்ள அந்த குறிப்பிட்ட ஊழியத்திற்கு, நீங்கள் 30 (அல்லது 35) வயதாகும்பொழுது நீங்கள் ஆயத்தமாக இருக்க முடியும்.