WFTW Body: 

உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய பரிபூரண திட்டத்தை நிறைவேற்றுவதை விட இந்த பூமியிலே நீங்கள் பெரிதாக சாதிக்கக்கூடியது எதுவுமில்லை. உங்கள் வாழ்க்கையின் மூலமாகவும் உங்கள் பிரயாசத்தின் மூலமாகவும் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் தம்முடைய சபையைக் கட்ட தேவன் ஒரு நாள் உங்களைத் தம் கையில் ஒரு கருவியாகப் பயன்படுத்துவார் என்பதே எனது ஜெபம். உங்களது கல்வியும், வேலையும், உங்கள் பூமிக்குரிய தேவைகளுக்காக நீங்கள் மற்றவர்களைச் சாராமல் வாழ்வதற்கான ஒரு வழி மட்டுமே. ஆனால், வாழ்க்கையில் உங்கள் அழைப்பானது நீங்கள் தேவனுக்காக மாத்திரமே வாழ வேண்டும் என்பதாகவே இருக்கிறது. எனவே, உங்கள் வேலையை ஒரு விக்கிரகமாக ஆக்கிவிடாதீர்கள்.

தேவன் உங்கள் பூமிக்குரிய வாழ்வின் ஒவ்வொரு காரியத்தையும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளார். அதில் உங்கள் கல்வியும் - நீங்கள் சேரவிருந்த பள்ளி, கல்லூரி மற்றும் கல்லூரியில் நீங்கள் எடுக்கும் படிப்புகளும் - அடங்கும். இந்த எல்லாக் காரியங்களிலேயும் அவர் வல்லமையாய் ஆளுகை செய்து, நீங்கள் இறுதியாக சரியான வேலைக்கு வழிநடத்தப்படுவதை உறுதி செய்கிறார். எனவே சில சூழ்நிலைகளில், நீங்கள் சிறந்த முயற்சிகள் எடுத்திருந்த போதிலும், நீங்கள் எதிர்பார்த்த அல்லது விரும்பிய படிப்புகள் அல்லது விரும்பிய வழி திறக்கப்படவில்லை எனில், தேவனைத் துதியுங்கள். அப்பொழுது அது உங்களுக்குத் தெரிந்திராவிட்டாலும் - பல ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் உங்கள்மீது நோக்கமாயிருந்ததையும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலும் வல்லமையாய் ஆளுகை செய்ததையும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். அது உங்களுக்குச் செயல்பட்ட விதம் உண்மையில் தேவன் உங்களுக்கென்று தெரிந்துகொண்ட மிகச் சிறந்த காரியமாகவே இருக்கும். (ரோமர் 8:28). தேவனுடைய இந்த வார்த்தையில் நம்பிக்கை வைத்து வாழுங்கள்.

இங்கே, இந்தப் பூமியில், நீங்கள் இயேசுவின் வாழ்க்கையை வெளிப்படுத்துவதன் மூலம் நீங்கள் அவருடைய சாட்சியாக இருக்க வேண்டும் என்பதே உங்களைக்குறித்த தேவனுடைய தலையாய நோக்கமாயிருக்கிறது. எனவே உங்களுடைய இலட்சியங்கள் ஒருபோதும் பூமிக்குரியதாக மாற வேண்டாம். வாழ்க்கையை ஜாக்கிரதையாக எடுத்துக் கொள்ளுங்கள். தேவனுடைய பரிபூரண சித்தத்தைத் தேடுங்கள். கடைசியாக நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தருக்கு முன்பாக நிற்கும்போது, ​​நீங்கள் வாழ்ந்த விதத்தை குறித்து நினைத்து வருந்தாத வகையில் வாழ்க்கையை வாழுங்கள். அந்தக் கடைசி நாளில் முக்கியமானதாக இருக்கப்போகும் GPA ('சராசரி தரவரிசைப் புள்ளி')யானது, கல்லூரியில் நீங்கள் பெறும் GPA -வாக இருக்காது, ஆனால் அது 'தேவனுடைய பாராட்டு மற்றும் அங்கீகாரம்' (God's Praise & Approval) என்ற GPA -வாகத் தானிருக்கும். (1கொரிந்தியர் 4:5). அதில் அதில் நீங்கள் பெறும் மதிப்பெண் மட்டுமே அப்போது முக்கியமானதாக இருக்கும்.

தேவன் நம் வாழ்க்கையை எவ்வளவு அற்புதமான முறையில் திட்டமிடுகிறார்! என் சொந்த வாழ்க்கையில் நான் மீண்டும் மீண்டும் கண்டது இதுதான். இதுவே வரவிருக்கும் நாட்களில் அவருடைய பணிக்கு என் வாழ்க்கையை இன்னும் முழு இருதயத்துடன் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொடுக்கிறது. "அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருடைய ஆத்தும வருத்தத்தின் பலனை ஆதாயப்படுத்தும்" பணிக்கு என்னை இன்னும் முழு இருதயமாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொடுக்கிறது. அதுதான் 18 ஆம் நூற்றாண்டின் மொராவியன் கிறிஸ்தவர்களின் (இப்போதைய செக்கோஸ்லோவாக்கியா) குறிக்கோளாக இருந்தது, அதன் தலைவர் கவுண்ட் ஜின்சென்டார்ஃப் (Count Zinzendorf) ஆவார்.

உங்கள் வாழ்க்கைக்காக தேவன் வைத்திருக்கும் பரிபூரணமான திட்டமானது, பூமிக்குரிய தகுதிகள் இல்லாததால் தடைபடவே முடியாது. உங்களுடைய மனத்தாழ்மையையும் விசுவாசத்தையும் மட்டுமே சார்ந்து அவருடைய திட்டம் பூர்த்தியாகும். எனவே, அந்த நற்பண்புகள் எப்போதும் உங்களிடம் இருக்கட்டும்.

நம்மில் யாரும் மதியீனமான தவறுகளைச் செய்யாமலேயே நம் வாழ்க்கையை நடத்தவில்லை. ஆனால், நாம் (அறியாத காலங்களில்) செய்த பல மதியீனமான காரியங்களை தேவன் காணாதவர்போல் இருந்தார் என்று என் சொந்த வாழ்க்கையிலிருந்து என்னால் சாட்சியளிக்க முடியும். மற்றவர்களைக் குறை கூறாமல், "ஆண்டவரே, நான் குழப்பமுண்டாக்கும் காரியங்களைச் செய்துவிட்டாலும், என் வாழ்க்கைக்கான உமது திட்டத்தை நீர் நிறைவேற்றுவீர் என்று உம்முடைய இரக்கத்தை நான் நம்புகிறேன்" என்று கூறுமளவுக்கு மனத்தாழ்மை கொண்டிருப்போமானால், அவர் அப்படிச் செய்வார். அநேக விசுவாசிகள் தேவனிடம் அந்த வார்த்தைகளைச் சொல்வதில்லை, ஏனென்றால், அவர்கள் தங்கள் தோல்விகளால் மிகவும் சோர்வடைந்து, தேவனுடைய இரக்கத்தின்மீது நம்பிக்கை வைக்க மறுக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தேவனுடைய சர்வ ஆளுமை மற்றும் அவரது இரக்கத்தின் மீது நம்பிக்கை வைக்காமல் தங்கள் தோல்விகளையே உயர்த்துவதன் மூலம் தேவனை அவமதிக்கிறார்கள். நீங்கள் தேவனை நம்பி அவருடைய பெரிதான இரக்கத்தை மகிமைப்படுத்த வேண்டும். அப்பொழுது அது உங்களுக்கு நன்மையாக அமையும் - ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட இன்னும் சிறப்பாக அமையும்.