WFTW Body: 

நம்மை இயேசுவைப் போல் உருவாக்குவதே தேவனுடைய இலக்காயிருக்கிறது. அது தொடர்பாக மூன்று முக்கியமான வசனங்கள் இதோ:

(அ) ரோமர் 8:28,29: நம் பிதாவானவர், நம்மை இந்த இலக்கை அடையச்செய்யும்படிக்கு சகலத்தையும் வெளிப்பிரகாரமாக நடந்தேறச் செய்கிறார்.

(ஆ) 2கொரிந்தியர் 3:18: பரிசுத்த ஆவியானவர், நம்மை இந்த இலக்கை நோக்கி வழிநடத்தும்படிக்கு நம்மை உட்புறத்தில் நிரப்புகிறார்.

(இ) 1யோவான் 3:2,3: கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவரும் இந்த இலக்கை நோக்கிச் செயல்படுவார்கள்.

நாம் இயேசுவோடு மரித்தால் நிச்சயமாக அவருடன் பிழைத்திருப்போம். நமக்கு தேவன் மேல் விசுவாசம் இருந்தால், இந்த "இயேசுவின் மரணம்" என்ற காரியத்திற்கு நாம் சம்மதிப்போம். அதாவது, தேவன் நமக்குக் கொடுக்கும் தெய்வீக வாழ்க்கையானது நாம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் அழுகிய ஆதாமிய வாழ்க்கையை விட மிக உயர்ந்ததாக இருக்கும் என முழுமையாக நம்பி, தேவன் நமக்காக ஏற்பாடு செய்யும் சூழ்நிலைகளில் (நம் சொந்த மகிழ்ச்சி, நமது மரியாதை, நமது கௌரவம் போன்றவற்றைத் தேடுகிற) நமது சுய சித்தத்திற்கு மரிப்போம்.

இயேசுவின் உயிர்த்தெழுந்த ஜீவனானது நாம் அனைவரும் நம் பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொண்ட ஜீவனை விட எத்தனையோ மடங்கு உயர்ந்தது. ஆனால், தேவன் இயேசுவின் ஜீவனை நமக்குக் கொடுக்கவேண்டுமென்றால், அந்த ஆதாமின் ஜீவனை மரணத்திற்கு விட்டுக்கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும் (2தீமோத்தேயு 2:11; 2கொரிந்தியர் 4:10). ஓர் உவமையைப் பயன்படுத்த வேண்டுமானால், இது தேவன் வழங்கும் பத்து இலட்ச ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு நம் பிச்சைக்கார தகர டப்பாவில் உள்ள சில நாணயங்களை அவரிடம் கொடுத்துவிடுவது போன்றதாகும். ஒரு முட்டாள் மட்டுமே அத்தகைய பரிமாற்றத்தை நிராகரிப்பான். ஆனால் உலகம் இப்படிப்பட்ட முட்டாள்களால் நிறைந்திருக்கிறது. ஆகவே, தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பு அவர்கள் பூமியில் எதிர்கொள்ளும் சோதனைகளைப் பயன்படுத்தி ஆவிக்குரிய ரீதியில் (திவ்விய சுபாவத்துடன்) ஐசுவரியவான்களாக மாறுவதற்குப் பதிலாக, (அழுகிய ஆதாமிய வாழ்க்கையாகிய) தங்களது சில நாணயங்களைப் பற்றி பிடித்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை முடிக்கிறார்கள். வேதாகமம் நம் இச்சைகளை மோசம்போக்கும் இச்சைகள் என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை (எபேசியர் 4:22), ஏனென்றால் அவை நம்மை மகிழ்விக்கப் போவதாக எண்ணச்செய்து நம்மை ஏமாற்றுகின்றன!

தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பின் இரண்டு அடையாளங்கள் என்னவென்றால், சிறிய விஷயமாக இருந்தாலும், அவற்றில் நாம் தவறும்போது அவர் நம்மைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறார் (எபிரெயர் 12:5-8; வெளி 3:19) என்பதேயாகும். அவர் நம்மை அவருடைய புத்திரராக எண்ணி நடத்துகிறார் என்பதை இது நிரூபிக்கிறது. இயேசுவைப் போல மாறவேண்டும் என்ற இலக்கைக்குறித்து நாமே தீவிரமாகக் கரிசனை கொள்ளும்போது, அந்த இலக்கை நோக்கி தேவன் உறுதியுடன் செயல்படுகிறார்.

நம்முடைய முழு இருதயத்தோடும் அவரைத் தேடினால் மட்டுமே நிறைவேறக்கூடிய ஒரு திட்டத்தை நம்முடைய வாழ்க்கைக்கென்று தேவன் வைத்திருக்கிறார் - அப்படித் தேடாவிடில் அது நிறைவேறாது (எரேமியா 29:11-13 ஐப் படிக்கவும்). தம்மை ஜாக்கிரதையாய்த் தேடுபவர்களுக்கு தேவன் பலன் அளிக்கிறவராயிருக்கிறார் (எபிரெயர் 11:6 – KJV ஆங்கில மொழிபெயர்ப்பு). எனவே, இப்போதிருந்தே நீங்கள் அவரை ஜாக்கிரதையாய்த் தேட வேண்டும்.