WFTW Body: 

சபை சரித்திரத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு மிகப்பெரிய பாடம் உள்ளது. தேவன் தம்முடைய ஜனங்களுக்கு ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பும் போதெல்லாம், அவர் எப்பொழுதும் ஒரு மனிதனைக் கொண்டே ஆரம்பிக்கிறார். அவர் இஸ்ரவேலரை மீட்டெடுக்கும்முன், அதைச் செய்வதற்கு ஒரு பொருத்தமான மனுஷனைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அம்மனுஷனுக்கு 80 ஆண்டுகள் பயிற்சிக் காலம் தேவைப்பட்டது - அது வெறுமனே எழுத்தின் படியான பயிற்சி மட்டுமல்ல. மோசே எகிப்தின் மிகச்சிறந்த கல்விக்கூடங்களில் பயின்றவனாய் இருந்தாலும், அது அவனைத் தேவனுடைய பணிக்குத் தகுதிப்படுத்த முடியவில்லை. அப்போஸ்தலர் 7-ஆம் அதிகாரத்தில் மோசே வாக்கிலும் செய்கையிலும் வல்லவனாக விளங்கினான் என்று ஸ்தேவான் கூறுகிறார். தன்னுடைய நாற்பதாவது வயதிலே, அவன் வலிமை மிக்கவனும் ஒரு சிறந்த பேச்சாளனுமாய் இருந்தான். அவன் ஒரு சிறந்த இராணுவத் தளபதியாகவும், பெரிய செல்வந்தனாகவும், உலகிலேயே மிக முன்னேற்றம் அடைந்த நாடு கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த கல்வியில் பயிற்றுவிக்கப்பட்டவனாகவும் இருந்தான் - அந்த நாட்களிலே எகிப்துதேசம் தான் உலகின் ஒரே வல்லரசாகத் திகழ்ந்தது. இவை எல்லாவற்றையும் பெற்றிருந்தும், அவன் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதி அற்றவனாகவே இருந்தான். தேவன் தன்னை இஸ்ரவேலருக்கு இரட்சகராக ஏற்படுத்தியிருக்கிறார் என்று அவர்கள் கண்டு கொள்வார்கள் என்று மோசே நினைத்திருந்ததாக ஸ்தேவான் வாயிலாக அறிகிறோம். ஆனால் அவர்களோ அவனைத் தங்களுடையத் தலைவனாக அங்கீகரிக்கவில்லை. தேவன் அவனுக்கு நியமித்திருந்த பணியைச் செய்து முடிப்பதற்கு, அவனுக்கிருந்த எல்லா பூமிக்குரிய கீர்த்தியும் திறமைகளும் அவனை ஆயத்தப்படுத்த முடியவில்லை.
இன்று அநேகக் கிறிஸ்தவர்கள், தங்களிடம் இருக்கும் வேத அறிவையும், இசைத் திறமைகளையும், திரளான பணத்தையும் வைத்துக் கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்து விடலாம் எனக் கற்பனை செய்கிறார்கள். அவர்கள் தவறாய் நினைக்கிறார்கள். அவர்கள் மோசேயின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்: 40 வருடங்களாய் இந்த உலகம் தந்த மிகச்சிறந்தவற்றையெல்லாம் தன் வசம் கொண்டிருந்தும், அவனால் தேவனுடைய ஊழியத்துக்கு ஆயத்தமாக முடியவில்லை.

தேவன் அவனை இன்னும் 40 வருடங்களுக்கு அரண்மனைச் சூழ்நிலையிலிருந்து வனாந்தரமான வேறுபட்ட சூழ்நிலையில் கொண்டு போய் வைத்து, தயார் செய்ய வேண்டியிருந்தது. அவனுடைய மனுஷீகப் பலம் உடைக்கப்பட வேண்டியதாய் இருந்தது. 40 (நீண்ட) வருடங்களாக வனாந்தரத்திலே ஆடுகளை மேய்ப்பதின் மூலமும், மாமனாருக்கு வேலை செய்வதின் மூலமும், மாமனாருடன் சேர்ந்து வசிப்பதின் மூலமும், மோசேயை உடைக்கும் பணியைத் தேவன் நிறைவேற்றினார். புருஷனாய் இருப்பவனுக்கு தன் மாமனாருடன் ஒரு வருட காலம் வாழ்வதென்பதே மிகவும் சிறுமைப்படுத்துகிற விஷயமானதாகும்! இந்தியாவிலே அநேகத் திருமணமான பெண்கள் அவர்களுடைய மாமனார் வீடுகளிலே வாழ்நாள் முழுவதையும் கழிப்பதை நான் அறிவேன். ஆனால் ஒரு புருஷன் அவ்விதமாக மனைவியின் தகப்பன் வீட்டிலே இருந்து அவனுக்கு வேலை செய்வதென்பது வித்தியாசமான காரியமாகும். அது புருஷனைப் பொறுத்தமட்டில் ஒரு சிறுமைப்படுத்துகிற அனுபவமாகவே இருக்கும். ஆனால் தேவன் மோசேயை உடைப்பதற்கு இந்த முறையையே கையாண்டார். தேவன் யாக்கோபையும் இப்படித்தான் உடைத்தார். அவனும் மாமனாருடன் 20 வருடங்கள் வசிக்க வேண்டியிருந்தது. தேவன் தமது பிள்ளைகளை உடைப்பதற்கு மாமனார்களையும், மாமியார்களையும் பயன்படுத்துகிறார். எகிப்திலிருந்த பல்கலைக்கழகங்களெல்லாம் போதிக்க முடியாத காரியங்களை, ஆடுகளை மேய்ப்பதன் மூலமும், மாமனாருக்குப் பணிவிடை செய்வதன் மூலமும் மோசே கற்றுக் கொண்டான். வாக்கில் வல்லவனும், தன்னால்தான் இஸ்ரவேலருக்கு மீட்பு கிடைக்கும் என்று நினைத்தவனுமான மோசே அவ்வளவாய் உடைக்கப்பட்டு 40 ஆண்டுகளின் முடிவில் சொல்வதைப் பாருங்கள்: "ஆண்டவரே, நான் தகுதியற்றவன். என்னால் சரிவரப் பேசக் கூட முடியாது. தயவுசெய்து வேறு யாரையாவது உம்முடைய ஜனங்களை வழிநடத்தும்படி அனுப்பும்" என்று கூறுகிறார். அதன் பிறகுதான் தேவன், "கடைசியாக நீ ஆயத்தமாகி விட்டாய். நான் இப்பொழுது உன்னைப் பார்வோனிடத்திற்கு அனுப்புவேன்" என்று சொன்னார் (யாத்திராகமம் 4:10-17).

யாக்கோபு, மோசே போன்றோரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? இதுதான்: நீங்கள் உங்களை ஆயத்தமென்று நினைக்கும் போது, நீங்கள் ஆயத்தமாயில்லை. நீங்கள் உங்களைத் திறமைசாலியென்றும், பலவான் என்றும், அறிவுள்ளவன் என்றும், பேசத் தெரியும் பாடத் தெரியும் இசைக் கருவிகளை இசைக்கத் தெரியும் என்றும், தேவனுக்கென்று அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும் என்றும் நினைக்கிறவர்களாய் இருந்தால், தேவன் உங்களுக்குத் தரும் பதில் இதுதான்: "நீ தகுதி அற்றவன். நீ உடைக்கப்படும் வரை நான் காத்திருக்க வேண்டும்". இந்த வழிமுறை யாக்கோபுக்கு 20 ஆண்டுகளும், மோசேக்கு 40 ஆண்டுகளும், பேதுருக்கு 3 ஆண்டுகளும், பவுலுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும் தேவைப்பட்டது. நமக்கு இது எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்? இது நாம் தேவனுடைய பலத்த கரத்துக்குள் எவ்வளவு சீக்கிரமாக அடங்கியிருக்கக் கற்றுக்கொள்கிறோம் என்பதைத்தான் சார்ந்துள்ளது. இது நமக்கு ஒரு செய்தியையும், எச்சரிப்பையும் சுமந்து நிற்கிறது. தேவன் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். ஆனால் நீங்கள் உடைக்கப்படும் வரை, அத்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. 10 வருடங்களுக்குள் செய்யப்பட வேண்டிய உங்களைக் குறித்ததான அவருடையத் திட்டம் 40 வருடங்கள் வரை கூடத் தாமதமாகலாம். எனவே, தேவனுடைய பலத்த கரத்துக்குள் எப்பொழுதும் நம்மைச் சீக்கிரமாகத் தாழ்த்திக்கொள்வது நல்லது. நம்முடைய பாதையிலே அவர் அனுப்பும் சூழ்நிலைகளே அவருடைய பலத்த கரமாகும்.

"தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது (தன்னைத் தானே தாழ்த்தி, உடைபடுதல்) மனுஷனுக்கு நல்லது" என்று புலம்பல் 3:27 கூறுகிறது. நீங்கள் வாலிபப் பருவத்திலிருக்கும் போது, தேவன் உங்களை நொறுக்க இடங்கொடுங்கள். தேவன் உங்கள் வாழ்க்கையில் அனுமதிக்கும் சூழ்நிலைகளை எதிர்த்துப் போராட வேண்டாம். அது தேவனுடைய திட்டத்தைத் தாமதப்படுத்தத் தான் செய்யும். உங்களுடைய எல்லா வேத அறிவும் இசைத் திறமைகளும் பணமும் தேவனுடைய ஊழியத்திற்கு உங்களைத் தகுதிப் படுத்த முடியாது. நொறுங்குதல் இன்றியமையாதது. மெய்யான சபையாகிய எருசலேமை நீங்கள் கட்ட விரும்பினால், நீங்கள் உடைக்கப்பட்டிருக்க வேண்டும். மனிதர்களாலும் சூழ்நிலைகளாலும் நீங்கள் தேவனால் சிறுமைப்படுத்தப் பட்டிருக்கவேண்டும். அந்த சூழ்நிலைகளில் நீங்கள் எதிர்த்து நிற்கவில்லையென்றால், தேவன் உங்களுக்குள் சீக்கிரமாக ஒரு கிரியைச் செய்ய முடியும்.

கன்மலை அடிக்கப்பட்ட போதுதான் தண்ணீர் புறப்பட்டது என்று யாத்திராகமம் 17ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். கன்மலை அடிக்கப்படவில்லையெனில், தண்ணீர் புறப்பட்டிருக்காது. ஒரு பரணியில் பரிமளதைலத்தைக் கொண்டுவந்த ஸ்திரீ, அதை இயேசுவின் பாதத்தில் உடைத்தாள். பிறகுதான், அந்த வீடு முழுவதும் இனிய வாசனையினால் நிறைந்தது. அந்த பரணி உடைக்கப்படாதவரையில், யாருமே அதின் பரிமளத்தை நுகர முடியவில்லை. இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்தபோது, ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் அவர் அதை உடைத்தபோது (பிட்டபோது), ஐயாயிரம்பேர் போஷிக்கப்பட்டார்கள். இந்த எல்லா உதாரணங்களிலிருக்கிற செய்தி என்ன? “நொறுங்குதலே ஆசீர்வாதத்தின் வழி”. அணு பிளக்கப்படும்போது என்னே (எவ்வளவு) ஆற்றல் (வல்லமை) வெளியாகிறது! அது ஒரு முழு பட்டணத்திற்கும் மின்சாரத்தைக் கொடுக்கமுடியும்! ஒரு சிறிய அணு (ஒரு நுண்ணோக்கியால் கூட பார்க்கமுடியாத அளவிற்கு அது அவ்வளவு சிறியது) உடைக்கப்படும்போது, அதிலிருந்து வெளியிடப்படும் ஆற்றலைக் கற்பனைச் செய்து பாருங்கள். இயற்கையிலும் வேதாகமத்திலும் இருக்கிற செய்தி இதுதான்: தேவனுடைய வல்லமை உடைபடுதலின் மூலமாகவே வெளிப்படுகிறது. இந்த செய்தி உங்கள் வாழ்க்கையை இறுகப் பற்றிக்கொள்ளட்டும்.