“பெருமையுள்ளவர்களையும், தன்னை உயர்த்தும் அகந்தையுள்ளவர்களையும்” சபையிலிருந்து தேவன் அகற்றவும் செய்கிறார்! (செப்பனியா 3:8-17).
அப்போஸ்தலனாகிய யோவான், தேவன் செயல்படும் இவ்வித சம்பவத்தை தன்னுடைய நாட்களிலேயே கண்டார்! அதை அவரே குறிப்பிட்டு “அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாய் இருக்கவில்லை; நம்முடையவர்களாய் இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லோரும் நம்முடையவர்கள் அல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்து போனார்கள்” (1யோவான் 2:19) எனக் கூறினார்.
தங்கள் சபையில் எவ்வித ஆவிக்குரிய தரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை, அந்தந்த சபையிலுள்ள மூப்பர்களே தீர்மானிக்க வேண்டும்! யாதொரு பரிசுத்த தரத்தையும் காத்துக்கொள்ளாத சபைகளில், ஒருவர்கூட பிரிந்து செல்ல மாட்டார்கள்! ஆனால், இயேசு கற்பித்தபடியான தரத்தின்படி வாழ விரும்பும் சபைகள், இயேசுவிற்கு நடந்ததைப்போலவே, அவர்களைவிட்டும் அநேகர் பிரிந்து செல்வதைக் காண்பார்கள்! எங்கள் நடுவிலும் இவ்வாறாகவே சம்பவித்ததை நாங்கள் கண்டிருக்கிறோம்!
பிரதானமாய், எங்கள் சபைகளை விட்டுச் சென்றவர்கள் ஐசுவரியவான்களும், பலவான்களுமேயாவர்!! இவர்கள் உலகத்தின் மத்தியிலும் அல்லது மற்ற சபைகளிலும் பெற்று வந்த “முதல் மரியாதை" எங்கள் மத்தியில் கிடைக்காதபடியால், வெகுவாய் மனம் புண்படுகிறார்கள்! அவர்கள் இயேசுவின் சீஷர்களாய் மாற முடியாமற்போனதற்கு பெரும் தடையாய் நின்றது, அவர்களது ஆஸ்தியோ அல்லது அந்தஸ்தோ அல்ல. மாறாக அவைகளின் மீது அவர்கள் கொண்டிருந்த பெருமையே காரணமாகும்! யாதொருவரின் பூமிக்குரிய ஆஸ்தியையோ அல்லது அவரது அந்தஸ்தையோ நாங்கள் ஒரு பொருட்டாய் எண்ணுவதேயில்லை! கர்த்தருக்குப் பயந்தவர்களாய் தாழ்மையுள்ளவர்கள் எவர்களோ அவர்களை மாத்திரமே நாங்கள் கனம் செய்தோம்! அப்படிப்பட்டவர்கள் ஐசுவரியவான்களோ அல்லது ஏழையோ என்பது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல!! (சங்கீதம் 15:4).
இன்னும் சிலர், எங்கள் சபைகளில் மூப்பர்களாயிருக்க விரும்பி தாங்கள் மூப்பர்களாய் நியமிக்கப்படாததினிமித்தம் எங்களை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள்! இன்னும் சிலர், மூப்பர்களாய் நியமிக்கப்பட்டு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பில் உண்மையாய் இல்லாதபடியால், அவர்களது மூப்பர் பொறுப்பிலிருந்து இறங்கும்படி கேட்டுக் கொண்டதினிமித்தம் எங்களை விட்டு விலகிச் சென்று விட்டார்கள்! இன்னும் சிலர், தங்கள் பிரசங்கத்திறமை மூலமாய் எங்கள் மத்தியில் பணம் சம்பாதிக்க விரும்பினார்கள் (1பேதுரு 5:2). அதுபோன்று, சுவிசேஷத்தைப் பணம் சம்பாதிக்கும் தொழிலாய்க் கொண்ட யாவரையும் விட்டு விலகும்படிக்கே வேதம் கட்டளையிடுகிறது! (1தீமோத்தேயு 6:3). இன்னும் சிலர் மந்தையை இறுமாப்பாய் ஆளுகை செய்ததினிமித்தமும் (1பேதுரு 5:3), இன்னும் சிலர் ஜனங்களை தேவனிடத்தில் இணைப்பதற்குப் பதிலாக தங்களிடத்தில் இழுத்துக் கொண்டதினிமித்தமும் (அப்போஸ்தலர் 20:30), அதுபோன்ற மூப்பர்களை தேவன் அகற்றினார். அதற்குப் பதிலாய் சிறந்த புருஷர்களை அந்த இடத்தில் வைத்ததினிமித்தம் அவ்வித செயல்களை தேவனே செய்தார் என்பதை ஆண்டவர் எங்களுக்கு உறுதிப்படுத்தினார்!!
இன்னும் சிலர் எங்களைப்போன்ற ஏழை இந்திய சபையைச் சார்ந்தவர்களாய் இல்லாமல், பணக்கார மேலை நாட்டு சபைகளோடு தொடர்பு கொள்ள விரும்பியபடியாலும் எங்களை விட்டுச் சென்றார்கள்! இன்றும் கூட, ஏராளமான இந்திய கிறிஸ்தவர்கள், மேலைநாட்டுக் கிறிஸ்தவர்களைச் சிறந்த ஆவிக்குரியவர்களாக நம்பியிருக்கிறபடியால், அவர்களுக்கு கண்மூடித்தனமாய் இணங்கி அடிபணிகிறார்கள்!! இந்திய தேசத்திலுள்ள அநேக சபைகளில் விசேஷித்த கூட்டங்கள் என ஒழுங்கு செய்தால், அதில் ஒரு அமெரிக்க பிரசங்கியோ அல்லது ஒரு ஐரோப்பிய பிரசங்கியோ இல்லாமல் இருப்பதேயில்லை! இவர்களைப் பிரசங்கிக்க வைத்தால் மாத்திரமே, கூட்டங்களுக்கு ஜனங்களை இவர்களால் கவர்ந்திட முடியும்! ஆனால் நாங்களோ, எல்லா தேசத்து ஜனங்களையும் சமமாகவே பாவித்தோம்!! எங்கள் சபைகளுக்கு ஜனங்கள் ஆவியின் அபிஷேகத்தினாலும், நாங்கள் பிரசங்கித்த செய்தியினாலும் மாத்திரமே ஈர்க்கப்பட நாங்கள் விரும்பினோமேயல்லாமல், பிரசங்கியின் தோலின் நிறத்தை வைத்து அல்ல. இன்று அநேக இந்திய கிறிஸ்தவர்கள், மேலைநாட்டுக் குழுக்களோடு தங்களை இணைத்துக் கொள்வதற்கு விரும்பும் காரணமாயிருப்பதெல்லாம் “பொருளாதார ஆதாயமும்” அந்த வெளிநாட்டிற்குச் செல்லக் கிடைக்கும் “இலவச விமானப் பயணமுமே”யாகும்!! இவ்வாறு ஒருவன் “தனக்கானதைத் தேடுவதற்கு” விரோதமாகவே நாங்கள் எப்போதும் எதிர்த்து நின்றோம்!!
இன்னும் சிலர், நாங்கள் பிரசங்கித்த பரிசுத்தத்தின் தரம் மிக உயர்ந்ததாயிருக்கிறது எனக் கருதியபடியால் எங்களைவிட்டுச் சென்றார்கள்! நாங்கள் எவைகளைப் பிரசங்கித்தோம்: சீஷத்துவத்தைப் பிரசங்கித்தோம்! பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், அவரது வரங்களையும் பிரசங்கித்தோம்! அறிந்த பாவங்கள் அனைத்தின் மீதும் ஜெயத்தைப் பிரசங்கித்தோம் மத்தேயு 5,6,7 அதிகாரங்களின் மலைப் பிரசங்கத்தை வலியுறுத்திப் பிரசங்கித்தோம்! பூரணத்தை நோக்கிக் கடந்து செல்ல வேண்டும் எனப் பிரசங்கித்தோம். இயேசு நடந்தது போலவே நாமும் நடக்க வேண்டுமென்று பிரசங்கித்தோம். தேவபக்தி நிறைந்த குடும்ப வாழ்க்கை வேண்டுமென்று பிரசங்கித்தோம். அனுதினமும் சிலுவையை எடுத்துவர வேண்டுமெனப் பிரசங்கித்தோம். உலகத்தின் ஆவியிலிருந்து பிரிந்து வாழ வேண்டுமெனப் பிரசங்கித்தோம். பண ஆசையிலிருந்து விடுதலை பெற வேண்டுமெனப் பிரசங்கித்தோம்! உபவாசத்தையும் ஜெபத்தையும் வலியுறுத்திப் பிரசங்கித்தோம்! யாதொருவரையும் மனப்பூர்வமாய் மன்னித்திட வேண்டுமெனப் பிரசங்கித்தோம்! இயேசு நம்மை நேசிப்பதைப்போலவே பிறரையும் நேசித்திட வேண்டும் எனப் பிரசங்கித்தோம் ஸ்தல சபை கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஒப்பாகக் கட்டப்படவேண்டும் எனப் பிரசங்கித்தோம். இதுபோன்ற எங்களது பிரசங்கங்கள் ஏராளமானபேரை இடறச் செய்தபடியால், அவர்கள் எங்களைவிட்டுப் போய்விட்டார்கள்! இது ஒன்றும் எங்களுக்கு மனசஞ்சலம் கொடுத்துவிடவில்லை. ஏன்? ஏனென்றால், இயேசுவின் செய்தியைக் கேட்டவர்களில்கூட அநேகர் இடறல் அடைந்து அவரைவிட்டுப் போய்விட்டார்கள் என்ற உண்மையை நாங்கள் அறிந்திருந்தோம் (யோவான் 6:60,66). ஆகிலும் எங்களுக்கு ஆச்சரியமாயிருந்ததெல்லாம், தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிறந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் ஆவிக்குரிய ஐக்கியத்திற்கு மாத்திரம், பரிசுத்தத்தின் தரம் குறைந்த சபைகளைத் தேர்ந்தெடுப்பதை நாங்கள் கண்டதே எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாயிருக்கிறது!! இவையனைத்தும், ஜனங்கள் ஆவிக்குரியவைகளைக் காட்டிலும் பூமிக்குரியவைகளுக்கே அதிக மதிப்பு தருகிறார்கள் என்பதையும், அவர்களது ஆத்துமாக்களைவிட அவர்களது சரீரங்களுக்கே அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதையும் நிரூபிப்பதாய் இருக்கிறது!!
இன்னும் எங்களுக்கு அதிக ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால் "ஒரு தேவ பக்தியான வாழ்க்கை வாழவேண்டுமென்ற விருப்பமில்லாதவர்களும்” எங்கள் சபைகளில் இருப்பதற்குத் தெரிந்து கொண்டதே மிகுந்த ஆச்சரியமானதாகும்! இவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு ஓர் ஆரோக்கியமான சூழ்நிலையை எங்கள் மத்தியில் கண்டபடியால் எங்களோடிருக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்! எங்கள் சபையானது உறுப்பினர் கட்டணம் ஏதுமில்லாத 'ஒரு நல்ல கிளப்பாக’ அவர்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அநேக “பாபிலோனிய” கிறிஸ்தவர்கள் கூட எங்கள் சபைகளில் இன்னமும் இருக்கிறார்கள்! இயேசுவின் சபையில்கூட ஒரு யூதாஸ்காரியோத்து இருந்தானே, அதுபோல!!
ஆகிலும், அடிக்கடி நடத்தும் கூட்டங்கள் மூலமாகவும், கான்பரன்ஸ் மூலமாகவும், எங்கள் சபைகளில் உள்ள மூப்பர்கள் மத்தியில் ஓர் உயர்ந்த தரத்தைக் காத்துக்கொள்வதற்கு நாங்கள் நாடினோம். எங்கள் சபைகளில் சில சிறந்த புருஷர்களை மூப்பர்களாய் தேவன் எழுப்பியிருக்கிறார். அவர்களில் பெரும்பாலோர் பேச்சில் நயம் கொண்ட பிரசங்கிகள் அல்ல. ஆனால், அவர்களோ கிறிஸ்துவின் மகிமையை நாடுகிறவர்களாயும், தேவ ஜனத்தின் நன்மையில் மெய்யான அக்கறை கொண்டவர்களாயும் இருக்கிறார்கள் (பிலிப்பியர் 2:19-21). ஒரு ஸ்தலத்தில், இதுபோன்ற ஒரு சகோதரனை எங்களால் காணமுடியாத பட்சத்தில், அங்கு ஒரு சபையை நாங்கள் தொடங்குவதேயில்லை! ஏனெனில், பக்தியுள்ள ஒரு மேய்ப்பன் இல்லை என்றால், ஆடுகள் வழிதவறிச் சென்றுவிடும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்!!
இன்றுள்ள எங்கள் சபையை நாங்கள் காணும்போது, தேவன் விரும்புகிற தரத்திற்கு இன்னும் நாங்கள் வெகுதூரமாயிருப்பதையே காண்கிறோம். இருப்பினும், யார் சபையில் சேர்ந்து கொள்கிறார்கள், அல்லது யார் எங்களைவிட்டுப் போகிறார்கள், என்பதை ஒரு பொருட்டாக எண்ணாமல், இயேசு கற்பித்த பரிசுத்தத்தின் தரத்தைப் பாதுகாப்பதற்கே நாங்கள் பாடுபட்டுப் பூரணத்தை நோக்கிக் கடந்து செல்கிறோம்!!
பழைய ஏற்பாட்டில் உள்ள கூடாரத்தைப் போலவே, இன்றுள்ள சபையும் தேவன் தங்கும் வாசஸ்தலமாகவே இருக்கிறது. அந்தக் கூடாரத்தில் வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என மூன்று பகுதிகள் இருந்தன. வெளிப்பிரகாரத்தில் பாவ மன்னிப்பிற்கு ஒப்பான பலிபீடமும், தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு ஒப்பான கழுவும் தொட்டியும்,. அதைச்சூழ, ஏராளமான ஜனங்களும் இருந்தார்கள். ஆனால் பரிசுத்த ஸ்தலத்திலோ குறைவான ஜனங்களே இருந்தார்கள்! பரிசுத்த ஸ்தலத்தில், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கொப்பான குத்து விளக்கும், தேவனுடைய வார்த்தையைக் காத்துக்கொள்வதற்கொப்பான சமூகத்து அப்பமும், ஜெபத்திற்கு ஒப்பான தூபகலசமும் இருக்கிறது!! ஆனால் "மகா பரிசுத்த ஸ்தலத்திலோ” பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒருவர்கூட உள்ளே பிரவேசிக்க முடியவில்லை. “இந்தத் தூய்மையான பகுதி” தேவனோடு ஐக்கியம் கொண்டிட விரும்பி, தங்கள் முழுமையையும் அவருக்கே அர்ப்பணித்திடநாடி, தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வாஞ்சிக்கிறவர்களுக்கு மாத்திரமே புதிய ஏற்பாட்டில் இப்போது திறக்கப்பட்டிருக்கிறது!
கூடாரத்தின் இந்த மூன்று பகுதிகள் தேவனோடு கொண்ட உறவின் மூன்று வட்டங்களைக் குறிப்பதாயிருக்கிறது. ஒவ்வொரு சபையும் (எங்களது சபைகளும்) இந்த மூன்று வட்டங்களில் ஏதாவது ஒரு வட்டத்தில் ஜீவிப்பதற்குத் தெரிந்துகொள்ளும் ஜனங்களால் நிறைந்திருக்கிறது! “ஜெயம் கொண்டவர்கள்” மாத்திரமே மகா பரிசுத்த ஸ்தலத்தைத் தங்களது ஜீவிய ஸ்தலமாக எப்போதும் தெரிந்து கொண்டு, அந்த ஸ்தலத்தில் முடிவு பரியந்தம் தங்கள் ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாய் தங்கியிருக்கிறார்கள்! எங்கள் சபைகளில் மாத்திரமல்ல, ஒவ்வொரு சபையின் உண்மையான பெலனும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஜீவிக்கும் இந்த ஜனங்களைக் கொண்டே இன்றும் கணக்கிடப்படுகிறது!!