WFTW Body: 

நம் ஆவிக்குரிய படிப்பினையின் ஒரு பகுதியாக கர்த்தர் நம்மை சில கடினமான அனுபவங்களின் வழியாய் அழைத்துச் செல்கிறார். உதாரணமாக நம்முடைய விசுவாசத்தைப் பார்த்து மற்றவர்கள் நம்மைக் கேலி செய்ய அவர் அனுமதிக்கலாம். நம்மைக் கிண்டல் செய்யும் பெரும்பாலான மக்கள் பொதுவாக தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவர்களாயும் நம்மேல் பொறாமை கொண்டவர்களாயும் இருப்பார்கள். எனவே, நாம் அவர்களுக்காக பரிதாபப்பட வேண்டும். அவர்கள் நம்மைக் கேலி செய்வதினால் நமக்கு ஏற்படும் நன்மை என்னவென்றால், மனுஷருடைய அபிப்பிராயங்களிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம். என்னுடைய வாழ்க்கையை நான் இப்பொழுது திரும்பிப் பார்க்கும் போது என்னுடைய விசுவாசத்தினிமித்தம் கப்பற்படையில் கப்பலிலுள்ள என்னுடைய சக அதிகாரிகளிடமிருந்து நான் சந்தித்த கேலிப் பேச்சுக்களும் (நான் வாலிபனாக இருந்தபோது) அதற்குப் பின்பு நான் எதிர்கொண்டவைகளுமாகிய - இவைகளெல்லாம் நான் மனுஷரைப் பிரியப்படுத்த முயற்சிப்பதிலிருந்து விடுதலையாக எனக்கு உதவியது. இப்படித்தான் கர்த்தர் என்னை எனது ஊழியத்துக்காக ஆயத்தப்படுத்தினார்.

நாங்கள் குடும்பமாய் சந்தித்த ஒவ்வொரு சோதனையினூடேயும் வெற்றிகரமாகச் செல்லும்படி கர்த்தர் கிருபை கொடுத்தமைக்காக நான் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். எங்கள் மீது பொறாமை கொண்டிருந்த பலரை எங்களுக்குத் தொல்லை கொடுக்குமாறு சாத்தான் ஏவினான். ஆனால், நாங்களோ பிசாசை ஜெயிக்கும்படியாகவும், எங்களைப் பற்றித் தீமைபேசித் தீங்கு செய்ய முயன்றவர்களின் மீது நல்ல மனப்பான்மை கொள்ளவும் தேவனிடத்திலிருந்து கிருபை பெற்றோம் - உண்மையில் அவர்களால் எங்களுக்கு எந்த தீங்குசெய்யவும் இயலவில்லை. ரோமர் 8:28 -இல் உள்ள வாக்குத்தத்தத்தின் படி ஜனங்கள் செய்த சகலமும் எங்களது நன்மைக்கேதுவாகவே நடந்தேறியது.

நம்மைப் பற்றிப் பிறர் கூறும் தீமையான விஷயங்கள் நம்மைத் தீயவராக்க முடியாது, நம்மைப் பற்றி அவர்கள் கூறும் நன்மையான விஷயங்கள் நம்மை நல்லவராக்கவும் முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் என்னவாக வேண்டுமோ அதை நாம்தான் தீர்மானிக்கிறோம் – அது, நாம் அனுதினமும் நம் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவைப் பின்பற்றி, மற்றவர்கள் நமக்கு என்ன செய்தாலும் அல்லது பேசினாலும், நமது பதில் நடவடிக்கை கிறிஸ்துவைப் போலவே இருக்கிறதா என்பதை பொருத்ததாகும்.

நமது கடந்தகாலத் தோல்விகள் - எவ்வளவு ஆழமானதாகவும் பெரிதாகவும் இருந்தாலும்கூட - வருங்காலங்களில் இன்னுமதிகமாய் முழுமனதோடிருந்து கடந்துபோன காலத்தை ஈடுசெய்வோம் என்று நாம் தீர்மானித்தால், நம் வாழ்வுக்கான தேவனுடைய நோக்கம் நிறைவேறுவதைத் தடுக்க முடியாது.

நான் மறுபடியும் பிறந்த பிறகு, பல வழிகளில் தேவனுடைய எதிர்பார்ப்பின்படி வாழவில்லை. ஆனால், நான் தோல்வியுற்றதுபோல் தோல்வியுறாத மற்றவர்களைக் காட்டிலும் இன்னும் முழுமனதோடு இருப்பேன் என்று நான் 1975இல் தீர்மானம் செய்தேன். (அப்போது எனக்கு கிட்டத்தட்ட 36 வயதாக இருந்தது. நாங்கள் எங்கள் வீட்டில் சபையாகக் கூடிவர ஆரம்பித்திருந்தோம்). இன்று இத்தனை வருடங்களுக்குப் பிறகு, வருஷந்தோறும் அதிகமதிகமான கிருபைகளைக் கொடுத்து, தேவன் என் தீர்மானத்தைக் கனம் பண்ணியிருக்கிறார் என்று என்னால் சொல்ல முடியும். எனவே குற்றமே செய்யாது சாதனைபடைத்தவர்களையோ அல்லது ஒரு போதும் சறுக்கி கீழே விழாதவர்களையோ தேவன் தேர்ந்தெடுப்பதில்லை என்று எனது அனுபவத்தின் வாயிலாக அறிந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், பெரும்பாலும் அதிகம் விழுந்தவர்களைத்தான் தேவன் அதிகமாகப் பயன்படுத்துகிறார். இதுதான் எங்கள் சபைக்கு வந்த மோசமான பாவிகள் மீது எனக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

எலிசா சூனேமியாளிடம், பிள்ளையும் மற்ற எல்லோரும் சுகம்தானா என்று கேட்டபோது, தன் பிள்ளை அப்போதுதான் மரித்திருந்தபோதிலும் “ஆம், சுகம் தான்”, என்று கூறினாள்(2இராஜாக்கள் 4:8,26)! ஆம், அவளால் அதைச் சொல்ல முடிந்தது - ஒரு அற்புதமானதொரு விசுவாசம். தேவன் அவளது மகனை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பி அவ்விதமாக அவளது விசுவாசத்தைக் கனம் பண்ணினார்! இப்படிப்பட்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் வெட்கப்பட்டுப் போவதில்லை. சில சமயங்களில் நீங்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும்போதும், அல்லது பாவத்தில் விழுந்து தேவனை வருத்தப்படுத்தும்போதும் (இதுவும் நேரிடலாம்), எப்பொழுதும் தேவன் பேரில் இத்தகைய விசுவாசம் கொண்டு வாழ்வீர்களாக.

ஆண்டவரால், எந்த “மரித்துப்போன” சூழ்நிலையிலும் உயிர்த்தெழுதலைக் கொண்டுவரமுடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவருடன் நேர்மையாக இருப்பதேயாகும். (நீங்கள் எந்த மனிதனிடமும் உங்கள் பாவத்தை அறிக்கையிட அவசியமில்லை, ஆனால் நீங்கள் தேவனிடம் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும்).