WFTW Body: 

நாம் பரலோகம் சென்றடைகையில், இந்த பூமியின் சாலைகளில் நாம் பயணம் செய்தபோது நம்மைப் பாதுகாத்த தேவ தூதர்களை அங்கு காண்போம். கடைசி நாளில் நம் முழு வாழ்க்கையின் காணொளி இயக்கப்படுவதைக் காணும்போது, நம்மைப் பாதுகாத்த சில ஆயிரம் தேவ தூதர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியிருப்பதை அங்கு கண்டுபிடிப்போம். சாலைகளில் நாம் “மயிரிழையில் உயிர்தப்பிய” சில சம்பவங்களை மட்டுமே நாம் இப்போது அறிந்திருக்கிறோம். ஆனால் இதைப் போன்று நாம் “மயிரிழையில்” காக்கப்பட்ட இன்னும் அதிகமான பல சம்பவங்கள் இருந்ததை நாம் அந்த நாளில் கண்டுபிடிப்போம். எனவே நன்றியறிதல் உள்ளவர்களாய் இருங்கள்.

சகலமும் நம்முடைய சிறந்த நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு விபத்து நேரிட்டபோது, நான் தேவனிடம், “கர்த்தாவே, நீர் கல்வாரியில் எனக்குச் செய்ததற்கான நன்றிக்கடனை இன்னும் முழுமையாக நான் உமக்குச் செலுத்தவில்லை. எனவே ‘உமக்கு நன்றி’ என்று சொல்வதற்காக இன்னும் கொஞ்சம் காலத்தை எனக்குத் தாரும் என்று கூறினேன்”. பின் இந்த வாசகம் என் நினைவில் வந்தது: “கர்த்தர் நமக்காக சிலுவையில் செய்தவற்றுக்காய் நம் வாழ்க்கையானது தொடர்ந்தேச்சையாக அவருக்கு நன்றியை வெளிப்படுத்துவதாய் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு. யாக்கோபைக் குறித்து, “விசுவாசத்தினாலே அவன் கோலின் (அது உண்மையில் ஓர் ஊன்றுகோலாய் இருந்தது. ஏனெனில், தேவன் அவனது தொடைச்சந்தைத் தொட்டதினாலே அவன் ஊன்றுகோலின் துணையின்றி நடக்க இயலாதவனாய் இருந்தான்) முனையிலே சாய்ந்து தேவனைத் தொழுதுகொண்டு அவர்களை ஆசீர்வதித்தான் (எபிரெயர் 11:21)." அந்த ஊன்றுகோலானது உறுதியான சுய நம்பிக்கைகொண்ட யாக்கோபுக்கு, எல்லாவற்றிக்கும் தேவனையே சார்ந்து இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவூட்டுவதாய் இருந்தது. இப்படித்தான் அவன் தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்ட தேவனது ஓர் இளவரசனான இஸ்ரவேலாக மாறினான். அந்த வசனம் கூறுவது போல், அவன் அப்படி ஒரு பலவீனமான நிலைக்கு வந்தபோதுதான் அவனால் மற்றவர்களை ஆசீர்வதிக்க முடிந்தது. உங்கள் மனுஷீக பலமானது நொறுக்கப்பட்டு தேவனை மட்டுமே சார்ந்து இருக்கும்போது, நீங்கள் இயல்பாக மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பதைக் காட்டிலும் மிகுந்த ஆசீர்வாதமாய் மாறுவீர்கள். அதற்கு இந்த யாக்கோபின் அனுபவத்தை நீங்கள் பெறவேண்டும் .

தேவன் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டிருக்கிறார். இயேசுவை பிசாசு தாக்கும்படி அவர் அனுமதித்தது போலவே உங்களையும் பிசாசு தாக்கும்படி அவர் அனுமதிக்கிறார். ஆனால் இயேசுவோ தம் ஆவியை சுத்தமாகக் காத்துக் கொண்டார். நீங்களும் கூட உங்கள் ஆவியை சுத்தமாகக் காத்துக்கொள்ள முடியும். “உங்களுக்கு நேரிடும் எல்லாக் காரியங்களையும், நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் கூட, அவையெல்லாவற்றையும் தேவன் அறிந்திருக்கிறார்” (யோபு 23:1 லிவிங்(Living) மொழிபெயர்ப்பு). அவர் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம்பண்ணுகிறார் (ரோமர் 8:28). இதுவே உங்களுடைய ஆறுதல். நீங்கள் சந்திக்கும் சூழ்நிலைகளில் “மனுஷனுடைய உதவி விருதா” என்று நீங்கள் உணர்ந்துகொள்ளுகிற, தேவனை மட்டும் சார்ந்திருக்கிற ஓர் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வது நல்லது. இந்த வழியில் மட்டுமே நாம் ஆவிக்குரிய வளர்ச்சியை அடையமுடியும். சி. டி. ஸ்டட்(C. T. Studd) ஒருமுறை, “இக்கட்டான சூழ்நிலை என்னும் பெருவாழ்வை நான் மிகவும் விரும்புகிறேன், ஏனெனில் அப்போதுதான் தேவன் அதில் எனக்கு என்ன அற்புதம் செய்வார் என்பதை நான் காணமுடியும்” என்று கூறினார்.

பிதாவாகிய தேவன் நம்மைத் தெரிந்து கொண்டிருக்கிறார், குமாரனாகிய தேவன் தம் இரத்தத்தினாலே நம்மைக் கிரயத்துக்குக் கொண்டிருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்று முத்திரையிட்டிருக்கிறார் (எபேசியர் 1:1-13) என்பதை நாம் உணர்ந்துகொள்ளும்போது, அது ஒரு பெரிய விடுதலையை நமக்குள்ளே கொண்டு வருகிறது. நமது இரட்சிப்பு என்பது முற்றிலும் தேவ கிருபையினாலேயே உண்டாயிற்று. தேவனும் நாம் “ஆம்” என்று சொல்வதற்காக மட்டும் காத்திருந்து பின் சகலத்தையும் அவரே செய்துவிட்டார் (எபேசியர் 2:1-8). நமது அனுமதி இல்லாமல் அவர் நம்மை மீட்டிருக்க முடியாது, ஏனென்றால் நாம் இயந்திர மனிதர்கள் அல்ல.

தேவன் உலகத்தோற்றத்துக்கு முன்னதாகவே நம்மைத் தெரிந்துகொண்டார் - நாம் நன்மை தீமை எதையும் செய்வதற்கு முன்பதாகவே (ரோமர் 9:11) - கிறிஸ்துவின் ஆவியினுடைய ஒவ்வொரு ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதிக்கும்படி அவர் தீர்மானித்தார். எனவே நம்மைக் குறித்த தமது எண்ணங்களை அவர் இப்பொழுது மாற்றிக்கொள்ளப் போவதில்லை.