WFTW Body: 

நமக்கு உதவி செய்கிற ஆண்டவர் மேல் நாம் எப்பொழுதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.

(1) நம்முடைய மாம்சத்தில் உள்ள ஒவ்வொரு இச்சையையும் மேற்கொள்வதற்கும்,

(2) ஒவ்வொரு சோதனையிலும் அவருடைய திட்டம் நம்மிடத்தில் நிறைவேறுவதற்கும்,

(3) ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஜெயாளியாய் விளங்குவதற்கும்,

(4) ஒவ்வொரு தீமை நேரிடும்போதும் கிறிஸ்துவினுடைய குணாதிசயத்தை நாம் வெளிப்படுத்துவதற்கும்,

அவர் நமக்கு உதவிசெய்கிற ஆண்டவராயிருக்கிறார்.

இப்படி அவர்மீது நாம் நம்பிக்கை கொண்டிருந்தால் நாம் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம்.

அவிசுவாசமுடைய சந்ததிக்கும் சமரசம் செய்கிற கிறிஸ்தவத்திற்கும் மத்தியில், 'நமக்காக அற்புதங்களைச் செய்கிற அன்புள்ள பரலோகத் தகப்பன் நமக்கு இருக்கிறார்' என்பதற்கான ஒரு ஜீவனுள்ள சாட்சியாய் நாம் இருக்க வேண்டும். தேவன் உங்களுடைய வாழ்க்கைக்கென்று ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் அவரை நீங்கள் கனம்பண்ணும்போது அவருடைய திட்டத்தை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். உங்களுக்கு வேண்டிய எல்லாப் பகுதிகளிலும், அது ஐக்கியமோ, வீடோ, வேலையோ அல்லது திருமணமோ எதுவாயிருந்தாலும் (இந்த காரியங்களுக்காக நேரம் வரும்பொழுது) தேவன் ஏற்ற நேரத்தில் உங்களுக்காக சரியான கதவுகளைத் திறப்பார். யார் அவரை கனப்படுத்துகிறார்களோ அவர்கள் எல்லாவற்றிலேயும் நேர்த்தியானதைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் கல்லூரியில் என்ன மதிப்பெண் பெறுகிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல; அவர்களுக்கு எந்த அளவு செல்வாக்கு இருக்கிறது அல்லது எந்த அளவு பொருளாதார நிலையில் குறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பதும் ஒரு பொருட்டல்ல; எந்த நாட்டில் எவ்வளவு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் அது ஒரு பொருட்டல்ல.

இருபதுகள் மற்றும் பதின் பருவத்தில் இருப்பவர்கள் மத்தியில் மதியீனம் பரவலாக அதிகம் காணப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பெரிய தவறுகளை செய்யாதபடிக்கு தேவனுடைய கிருபை மாத்திரம்தான் உங்களைக் காத்துக் கொள்ள முடியும். எனவே நீங்கள் தேவனுக்குப் பயந்தும் எல்லா நேரங்களிலேயும் மிகுந்த ஜாக்கிரதையாகவும் வாழ வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய திட்டத்தை நீங்கள் தவற விட்டு விடக்கூடாது. எனக்கு 19½ வயதான போது என் சொந்த வாழ்க்கையை முழு இருதயமாய் ஆண்டவருக்குக் கொடுத்தேன். இப்பொழுது அநேக வருடங்களுக்குப் பிறகு நான் திரும்பிப் பார்க்கும் பொழுது, நானாக முயற்சி செய்து "என் சொந்த கண்களுக்கு சரியாகத் தோன்றியதைச்" செய்து என்னுடைய வாழ்க்கைக்கு செய்வதைக் காட்டிலும் அதிக சிறப்பாய் தேவன் செய்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். இது நான் ஒருபோதும் பாவம் செய்யவில்லையென்றோ அல்லது புத்தியீனமான காரியங்களை நான் ஒருபோதும் செய்யவில்லையென்றோ அல்லது இவ்வளவு வருடங்களாய் நான் எந்த தவறும் செய்யவில்லையென்றோ பொருளாகாது. இவை எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன். இப்பொழுது என்னுடைய வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கும் பொழுது என் மதியீனத்தையும், தவறுகளையும் நினைத்து முற்றிலும் வெட்கப்படுகிறேன். ஆனால் தேவன் என்னிடத்தில் இரக்கமுடையவராயிருந்து அவை எல்லாவற்றையும் நீக்கி வழி நடத்தினார். என்னிடத்தில் தவறு இருந்த போதிலும் நான் முழுமனதாய் அவருடைய சித்தத்தை செய்ய முயற்சி எடுத்ததை அவர் பார்த்தார் என்று நினைக்கிறேன். யாரெல்லாம் உண்மையாய் அவரைத் தேடுகிறார்களோ அவர்கள் அநேக தவறுகளை செய்திருந்தாலும் கூட அவர் பலனளிக்கிறவராயிருக்கிறார். தேவனுடைய அதே நன்மையும், கிருபையும் உங்கள் எல்லா நாட்களிலும் உங்களையும் தொடரும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் (சங்கீதம் 23:6).

நீங்கள் தேவனைக் கனம் பண்ண நாடும்பொழுது உங்களுக்கு அநேக இன்ப அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருக்கும். ஏனென்றால், "தேவன் தம்முடைய அன்பினிமித்தம் உங்களுக்காக எப்பொழுதும் அமைதியாய் திட்டம் பண்ணிக் கொண்டிருக்கிறார்" (செப் 3:17 - பொழிப்புரை). உங்கள் எதிர்காலத்தைக் குறித்ததான ஆவிக்குரிய மற்றும் உலகப் பிரகாரமான ஒவ்வொரு விவரமும் அந்தத் திட்டத்தில் அடங்கி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உங்களுடைய வாழ்க்கையில் தேவனை கனம்பண்ணத் தீர்மானித்தால் நீங்கள் தேவனிடத்திலிருந்து மிகச் சிறந்ததைப் பெற்றுக் கொள்ள முடியும். உலக மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் திட்டம் பண்ணுவது போல் நாம் நம்முடைய எதிர்காலத்தைத் திட்டம் பண்ணுவதில்லை. தேவன் நம் பட்சத்தில் இருந்து நமக்காக கிரியை செய்கிறார். வேலைவாய்ப்பு போன்ற உலகக் காரியங்களிலும் கூட எதற்கும் தகுதியில்லாத நமக்கு சிறந்த வெகுமதிகளைக் கொடுக்கிறார். எனவே எதிர்காலத்தைக் குறித்து நாம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. ஆகவே, நாம் இயேசு போதித்தது போல, அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் என்ற மனப்பான்மையோடு ஒவ்வொரு நாளும் வாழ்கிறோம். ஆகாயத்துப் பட்சிகளைப் போல, நாம் எல்லா பயத்துக்கும் மன அழுத்தத்திற்கும் விலகி வாழ்கிறோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

பவுல் தன்னுடைய ஓட்டத்தை சந்தோஷத்தோடு முடிக்கவே விரும்பியபடியால், அவர் தன்னுடைய பிராணனை அருமையாக எண்ணவில்லை (அப்போஸ்தலர் 20:24 - KJV மொழிபெயர்ப்பு). பெற்றோர் தங்கள் சிறு குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது, அந்தப் பிள்ளை எப்பொழுது பள்ளிப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்று வெளியே வரும் என்று அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். தேவனும் இதே போலத்தான் நம்முடைய வாழ்க்கைக்கான ஒரு பாதையைத் தீர்மானம் செய்திருக்கிறார். நாம் இந்த பூமியில் செய்து முடிக்க வேண்டும் என்று தேவன் ஒதுக்கி இருக்கிற எல்லாவற்றையும் நாம் செய்து முடிக்க வேண்டும். நம்முடைய இந்த பூமிக்குரிய வாழ்க்கையில் நாம் மதியீனமான காரியங்களையும் மற்றும் தவறுகளையும் செய்கிறோம். மேலும் மதியீனமாய் நேரத்தை வீணாக்குகிறோம். நல்ல வேளையாக, இவையெல்லாம் நாம் பள்ளிகளில் கணக்கு போடும்போது செய்யக்கூடிய தவறுகளைப் போலத்தான் இருக்கின்றன. வேலை, திருமணம் போன்ற பல முக்கியமான காரியங்களில் தேவன் நமக்காக ஒரு நேர்த்தியான திட்டத்தை வைத்திருக்கிறார். ஆனால், பரிசுத்தம் என்ற பகுதியில் நாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும்படியாய் நாடும் பொழுது மாத்திரமே மேலே சொல்லப்பட்ட எல்லாம் நம் வாழ்க்கையில் நிறைவேறும். நாம் முழு இருதயமாய் பரிசுத்தத்தை நாடினால், நம்முடைய வாழ்க்கைக்காக தேவன் திட்டம் பண்ணின எல்லா உலகக் காரியங்களும் நிறைவேறுவதை தேவன் உறுதிசெய்வார்.