நம்முடைய விசுவாசம் அசைக்கப்பட முடியாததாய் இருக்க வேண்டுமென்றால், அது தேவனைப் பற்றிய மூன்று சத்தியங்களில் வேரூன்றி நிலைத்திருக்க வேண்டும்: 1) அவருடைய பரிபூரண அன்பு, 2) அவருடைய சர்வ வல்லமை, 3) அவருடைய அனந்த ஞானம். முதலாவதாக அவருடைய அன்பைக் குறித்து நிச்சயம் கொண்டிருப்போமென்றால், அதற்கிணையாக அவருடைய ஆளுகை செய்யும் சர்வ வல்லமையைக் குறித்தும் உறுதியான நிச்சயம் கொள்ள வேண்டியதும் மிக அவசியம்!
எனவேதான், நாம் ஜெபிக்க ஆரம்பிக்கும்போது “பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைத்து ஜெபிக்க இயேசு கற்றுத் தந்தார்.
“எங்கள் பிதாவே” என்பது அவருடைய பூரண அன்பையும், “பரமண்டலங்களிலிருக்கிற - பிதாவே” என்பது சர்வத்தையும் செம்மையாய் ஆளும் அவரது சர்வ வல்லமையையும் வலியுறுத்துகிறது. அவர் பரலோகில் இருக்கிறபடியால், பூமியில் உள்ள நம்மைக் காட்டிலும் அதிக ஞானம் நிறைந்தவர்! எனவேதான், அவருடைய பரிபூரண ஞானத்தால் நம்முடைய வாழ்வில் வழிகளை ஆயத்தம் செய்து கட்டளையிடுகிறார்.
“தேவனுடைய வழி உத்தமமானது (அவர் ஞானத்தில் பரிபூரணமானவர்... என் வழியைச் செம்மைப்படுத்துகிறவர் (என் சூழ்நிலைகளை செம்மையாய் ஆயத்தம் செய்து கட்டளையிடுகிறவர் தேவனே!)” என சங்கீதம் 18:20,32-ல் வாசிக்கிறோம்.
தேவனானவர் அன்பிலும், வல்லமையிலும், ஞானத்திலும் பூரணமுள்ளவராய் இல்லையென்றால், நம்முடைய விசுவாசம் நிலைத்திருப்பதற்கு அஸ்திபாரம் ஏதும் இருக்காது. ஆனால் இம்மூன்றிலும் அவர் நிறைவாய் இருக்கிறபடியால், நாம் ஒருபோதும் அசைக்கப்பட வேண்டியதேயில்லை!
அளவற்ற தேவ அன்பிலும்; அவரது சர்வ வல்லமையிலும்; அவரது பரிபூரண ஞானத்திலும் நம்பிக்கையாய் இருந்து, நம் ஆள்த்துவம் முழுவதையும் அவரில் சார்ந்திருக்கச் செய்வதே விசுவாசமாகும்!!
பூமியைக் காட்டிலும் பரலோகம் உயர்ந்திருக்கிறபடியால், தேவஞானம் நம்மைக் காட்டிலும் மேலானது என்பதை ஒத்துக்கொள்வதற்கு நம்மில் யாருக்கும் பிரச்சனை இருக்காது என்றே எண்ணுகிறேன்.
“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசாயா 55:8-9).
தேவனுடைய வழிகளை, நாம் அநேக சமயங்களில் புரிந்துகொள்ள முடியாததற்கு இதுவே முக்கிய காரணம்! இது எப்படியெனில், ஒரு குழந்தை எவ்வாறு தன் தகப்பனுடைய எல்லா வழிகளையும் புரிந்துகொள்ள முடியாதோ அதைப்போல! நாம் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சியடைந்து, அவருடைய திவ்விய சுபாவத்தில் அதிகமதிகமாய் பங்குபெறும்போது மாத்திரமே, தேவனுடைய வழிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் அறிய ஆரம்பிப்போம்!!
“எல்லா சூழ்நிலைகளையும் ஜனங்களையும்” தேவனே முழுமையாய் அரசாளுகிறார் என்ற சத்தியத்தை அநேக விசுவாசிகள் சந்தேகித்து, தயங்கித் தேங்கி நின்றுவிட்டனர்! தங்கள் உதடுகளால் ஒருவேளை இச்சத்தியத்தை அங்கீகரித்து ஏற்கலாம். ஆனால் இவர்களோ தங்களின் அன்றாட ஜீவிய சூழ்நிலைகளில் இதைக் - “கிரியையில்” விசுவாசித்ததே இல்லை, இருப்பினும், தேவன் எவ்விதமாய் தன் ஜனத்தினிமித்தம் அவர்களுக்கு விருப்பமற்ற வழியின் மூலமாகவும் ஆளுகை செய்து கிரியை செய்கிறார் என்ற எண்ணற்ற உதாரணங்களால் வேதாகமம் நிறைந்திருக்கிறது!
“அற்புத வழிகளின் மூலமாய்” எவ்வாறு ஜனங்களினிமித்தம் தேவன் கிரியை செய்தார் என்பதை நாம் ஏராளமாய் அறிந்திருக்கிறோம்! அதாவது, இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையான அற்புத நிகழ்ச்சியைப் போல! ஆனால் இதைவிடப் பெரிய அற்புதமாக, சாத்தான் தேவ ஜனங்களைத் தாக்கும்போது, அவனுக்கு எதிராகவே அத்தாக்குதலை தேவன் எவ்வாறு திசை திருப்புகிறார் என்பதைக் காண அநேகர் தவறுகின்றனர்!
உதாரணமாய், யோசேப்பின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைத் தியானித்துப் பாருங்கள்! “தேவ அற்புதம்” அவன் வாழ்வில் பளிச்சிடுவதை நீங்கள் காண்பீர்கள்!! அவன் 30-வயதாகும்போது அவனை எகிப்தின் இரண்டாவது அதிபதியாக்கும்படி தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார்.
யோசேப்பு கர்த்தருக்குப் பயந்த மனுஷனாயிருந்ததின் நிமித்தம், சாத்தானால் அவன் மிகவும் வெறுக்கப்பட்டான். எப்படியாகிலும் யோசேப்பை ஒழிக்கும்படி அவனுடைய மூத்த சகோதரர்களை சாத்தான் தூண்டிவிட்டான். ஆனால் அவர்களோ யோசேப்பின் ஜீவனை எடுத்துவிட முடியாதபடி தேவன் யோசேப்பைக் காத்துக்கொண்டார். இருப்பினும் அவர்கள் அவனை இஸ்மவேல் வியாபாரிகளிடம் விற்றுவிட மாத்திரமே முடிந்தது. ஆனால், இந்த வியாபாரிகள் யோசேப்பை எங்கு கொண்டு சென்றார்கள் தெரியுமா? எகிப்திற்கே தான்! இது தேவனுடைய திட்டம் நிறைவேறியதின் முதற்படி ஆகும்.
எகிப்தில் யோசேப்பு, படைத்தளபதியான போத்திபாரால் விலைக்கு வாங்கப்பட்டான் (இதுவும் தேவன் நியமித்த ஏற்பாடே ஆகும்). போத்திபாரின் மனைவியோ ஒரு பொல்லாதப் பெண்மணி. அவள் யோசேப்பின் சௌந்தரியத்தில் கண்போட்டு, மறுபடியும் மறுபடியும் அவனைத் தன் ஆசை வலையில் வீழ்த்த முயற்சித்தாள். கடைசியில் அவளது முயற்சி தோல்வியடைந்ததால் யோசேப்பின்மீது பொய்யாய்க் குற்றஞ்சாட்டி, அவனை சிறையில் அடைக்கும்படி செய்தாள். சிறையில் அவன் யாரைச் சந்தித்தான் என்று எண்ணுகிறீர்கள்? பார்வோனின் பானபாத்திரக்காரன்! இவ்வாறு பானபாத்திரக்காரனும் ஒரே நேரத்தில் சிறைக்கு வரும்படி செய்து, யோசேப்பு அவனைச் சந்திக்கும்படியாய் தேவன் ஏற்பாடு செய்தார். இது, தேவனுடைய திட்டம் நிறைவேறிய இரண்டாம்படி ஆகும்.
தேவனுடைய மூன்றாவது படியானது, பார்வோனின் பானபாத்திரக்காரன் யோசேப்பை 2-வருடங்கள் மறந்து போகும்படி தேவன் அனுமதித்ததே ஆகும். பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான். இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான். (ஆதியாகமம் 40:23; ஆதியாகமம் 41:1 வாசியுங்கள்).
இறுதியாக, சரியான நேரம் வந்தபோது யோசேப்பைக் குறித்ததான தேவனுடைய கால அட்டவணைப்படி யோசேப்பு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
“கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்” (சங்கீதம் 105:19,20).
அவன் 30 வயதானவுடன், தேவனுடைய நேரம் வந்தது. பார்வோனுக்கு ஒரு சொப்பனம் உண்டாகி.... “யோசேப்பு சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுகிறவன்” என்பதை பான பாத்திரக்காரன் நினைவுகூர்ந்தான். இப்படித்தான் யோசேப்பு பார்வோனுக்கு முன்பாய் வரவழைக்கப்பட்டு, எகிப்தின் இரண்டாவது அதிபதியாக மாறினான்! தேவனுடைய நேரப்படி நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும்தான் எத்தனை பூரணமானவைகள்! ஆ, இது அற்புதம்!!
தேவன் ஒழுங்குசெய்தவிதமாக, நாம் செய்யும்படியாய் ஒருக்காலும் சிந்தித்துக்கூட இருக்கமாட்டோம்! தேவனுடைய வல்லமை நமக்கிருந்தால், ஜனங்கள் யோசேப்பிற்குத் தீமை செய்ததைத் தடுத்திருப்போம். சிந்தனைக்கெட்டாத அற்புதம் என்னவெனில், ஜனங்கள் செய்திடும் தீமையானது தேவனுடைய தீர்மானம் நிறைவேறுவதற்காய் திருப்பப்படுவதுதான்!
அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கும்படி, சாத்தானின் சதியை அவனுக்கு விரோதமாகவே திருப்புவது தேவனுக்குப் பெரு மகிழ்ச்சியாகும்!
இந்நிகழ்ச்சிகளை, நம் வாழ்வின் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
“பொறாமையினால்” நம்மை வெளியே தள்ள முயற்சிக்கும் தீய மனுஷர்களிடமும் சகோதரர்களிடம் நம்முடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? பொய்யாய் குற்றம் சுமத்திய அந்தப் பொல்லாதப் பெண்ணிடம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? அநீதியாய் சிறையில் அடைபட்டதின் நிமித்தம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்? உதவி செய்வேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு அதை மறந்து போகும் நண்பர்களினிமித்தம் நமது மனோபாவம் எப்படி இருந்திருக்கும்?
அவர்கள் வேண்டுமென்றோ - தற்செயலாகவோ செய்யும் எல்லாக் கிரியைகளையும், நம்முடைய வாழ்க்கையில் அவரது தீர்மானம் நிறைவேறும்படி தேவன் உபயோகிக்க முடியும் என்று நாம் விசுவாசிக்க முடிகிறதா? யோசேப்புக்கு அவ்வாறு நிறைவேற்றியிருந்தால், நமக்கும் அவ்வாறே நிறைவேற்றிட அவரால் முடியாதா? நிச்சயம் அவரால் முடியும்! அப்படியே நமக்கும் அவர் செய்திடுவார்!!
யோசேப்பின் வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய திட்டத்தை யார் குலைத்துப் போட்டிருக்கக் கூடும்? அது யோசேப்பே தான்! போத்திபாரின் மனைவியின் சூழ்ச்சி வலைக்கு இணங்கியிருப்பானென்றால், தேவனால் அவன் ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பானே!!
உங்கள் வாழ்க்கையில் தேவன் குறித்திருக்கும் திட்டத்தை சீர்குலைப்பதற்கு இப்பூவுலகில் ஒருவர் இருக்கக்கூடுமென்றால், அது நீங்கள் ஒருவர்தான்! மற்றபடி, ஒருவரும் சீர்குலைத்திட முடியாது. உங்கள் சிநேகிதரானாலும் முடியாது! உங்கள் சத்துருவானாலும் முடியாது! தூதர்களானாலும் முடியாது! பிசாசுகளானாலும் முடியாது!! ஆம், நீங்கள் மாத்திரமே!! இவ்வுண்மையை நாம் கண்டுகொண்டால், நமக்குத் தீமைசெய்ய விரும்புவோரினிமித்தம் ஏற்படும் எல்லாப் பயங்களுக்கும், தவறான மனோபாவத்திற்கும் நாம் நீங்கி விடுதலையாகியிருப்போம்.