தேவன் ஆதாமை உண்டாக்கி, ஜீவனைத் தந்தவுடன், ஆதாம் கண்களைத் திறந்து, முதன்முதலில் கண்ட நபர் யார்? தேவன். ஆம் அவர் தேவனைத்தான் சந்தித்தார். அவர் தேவனோடு பேசினார். அவருக்கு மனைவியெல்லாம் இருக்கவில்லை. அவரும் தேவனும் மாத்திரமே இருந்தனர். இதற்கெல்லாம் பிறகுதான், அவர் ஒரு மனைவியைப் பெற்றார். இதன் மூலமாக தேவன் ஆதாமிற்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்பினார்? “எல்லாச் சமயத்திலும், நான்தான் உன் வாழ்வில் முதலாவது இருக்க வேண்டும். உன் மனைவியைப் பார்ப்பதற்கு முன்பாக, நீ முதலில் என்னைப் பார்க்க வேண்டும். உன் மனைவிக்குக் கொடுக்கும் மதிப்பைவிட, நீ எனக்கு அதிகமான மதிப்பளிக்க வேண்டும்” என்னும் மிக எளிமையான ஒரு பாடத்தைத்தான், அவர் ஆதாமுக்குக் கற்றுக் கொடுக்க விரும்பினார். ஆகவேதான் மனைவியைக் கொடுப்பதற்கு முன், ஆதாமைத் தனியாக உருவாக்கி, அவருடன் ஐக்கியப்பட்டார்.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வதென்ன? நீங்கள் உங்களது வாழ்நாள் முழுவதும், ஒருவேளை உங்களுக்குத் திருமணமாகி, 50 ஆண்டுகள் அல்லது 75 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், தேவன்தான், ஒவ்வொரு நாளிலும், எப்பொழுதுமே முதலாவதாக இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டவர்களாய் இருக்கும் அநேகர், முதலாவது தங்களது மனைவிகளுக்குத் தான் முதலிடம் தருகின்றனர். சிலர் தங்களது பெற்றோருக்குத்தான் முதலிடம் தருகின்றனர். அவர்களைப் பற்றிப் பின்னர் பேசுகிறேன். இப்போது ஏவாளின் சிருஷ்டிப்பைக் குறித்துப் பார்க்கலாம். தேவன் ஆதாமை நித்திரையில் ஆழ்த்தினார். அது ஆழ்ந்த நித்திரை எனச் சொல்லப்படுகிறது (ஆதி 2:21). அதனால் அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. அவரது விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அதைச் சதையினால் அடைத்து, அந்த விலாவிலிருந்து ஸ்திரீயை உண்டுபண்ணினார். அந்த விலாவிலிருந்து ஒரு ஸ்திரீயை உண்டுபண்ணி அவளுக்குள் சுவாசத்தை ஊதி, உயிர் பெறச் செய்தவுடன், அவள் முதலாவதாக யாரைப் பார்த்தாள்? ஆதாமையல்ல.
ஆதாமென்று ஒருவன் இருப்பதையே அவள் அறிந்திருக்கவில்லை. தான் ஒருவள் மாத்திரந்தான் மானிடப் பிறவி என்பதாக எண்ணினாள். அவளுக்கு ஆதாமைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆதாம் கண்களைத் திறந்தவுடன், முதலில் தேவனைப் பார்த்தது போலவே, ஏவாளும் கண்களைத் திறந்தவுடன், முதலாவதாக தேவனைத்தான் பார்த்தாள். ஆதாம் தோட்டத்தின் ஒரு புறத்திலே உறங்கிக் கொண்டிருந்தார். ஏவாள் உயிருடன் இருப்பது ஆதாமுக்குத் தெரியாது; அது போலவே ஆதாம் உயிருடன் இருப்பது ஏவாளுக்குத் தெரியாது. அவள் தேவனைச் சந்தித்தாள். அவளுடன் உரையாட இருந்த நபர் தேவன் தான். அதற்குப் பிறகுதான் அவர் ஆதாமை அவளிடத்தில் கொண்டுவந்தார். ஆதலால் தேவன் ஏவாளுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்பினார்? ஆதாமுக்குக் கற்றுக் கொடுத்ததைத்தான். “உன்னுடைய வாழ்க்கையில் நான் தான் முதலாவதாக இருக்க வேண்டும். உன்னுடைய கணவனுடன் ஐக்கியப்படுவதற்கு முன்னர், என்னுடன் நீ ஐக்கியப்பட வேண்டும்.”
மிகச் சிறந்த திருமணத்திற்கான தேவத் திட்டத்தை இப்போது புரிந்து கொண்டீர்களா? ஆதாம் ஏவாளுடன் ஐக்கியம் கொள்ளுவதற்கு முன்பாக தேவனோடு ஐக்கியம் கொள்ள வேண்டும். ஏவாள் ஆதாமுடன் ஐக்கியம் கொள்ளுவதற்கு முன்பாக தேவனோடு ஐக்கியம் கொள்ள வேண்டும். இவையாவும் அங்கு எழுதப்பட்டுள்ளன. ஆதி முதல் திருமணத்தைக் குறித்ததான தேவனுடைய நோக்கம் இதுதான். கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தேவனே இருக்கும்போது, திருமணத்தில் இணைந்திருக்கும் இரு நபர்களும் தங்களுடைய வாழ்க்கையில் தேவனுக்கே முதலிடம் கொடுக்க நாடினால், என்ன நடக்கும் தெரியுமா? அவர்கள் பசையிட்டு ஒட்டினது போல ஒட்டிக் கொள்வார்கள். தேவன்தான் இந்த முழு அண்டத்திலும் மிக வலிமை வாய்ந்த இணைக்கும் சக்தியாவார். அவர் இரு நபர்களை ஒன்றாக இணைத்துப் பிடித்திருப்பாரானால், பிசாசோ, பேய்களோ, சூழ்நிலைகளோ, வறுமையோ, இந்த முழு உலகமோ அல்லது மரணமேயானாலும் அவர்களைப் பிரித்திட இயலாது.
தேவன் இரு நபர்களை ஒன்றாக இணைத்து பிடித்திருக்கவில்லையானால், ஜனங்கள்தான் தங்களது ஆற்றலைக் கொண்டு தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்த ஆற்றல்களெல்லாம் அவ்வளவு சக்திவாய்ந்தவையல்ல. ஃபெவிகோல் (Fevicol) என்னும் பசைக்குத் தரப்படும் விளம்பரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்களோ, மாட்டீர்களோ என எனக்குத் தெரியவில்லை. சிறுசிறு ஃபெவிகோல் பாட்டில்களுக்குத் தரப்படும் விளம்பரத்தை நான் பார்த்திருக்கிறேன். ஒட்டப்பட்டுள்ள இரு பொருட்களை இரு யானைகள் எதிரெதிர் திசைகளில் இழுத்துப் பிரிக்க முயன்றும் முடியாமற் போய்விடுவது போல விளம்பரப்படுத்தப் பட்டிருக்கும். கணவன் மனைவி இருவரையும் தேவன் இவ்விதமாய் இழுத்து இணைத்துப் பிடித்திருப்பாரானால், அது அதிக வலிமையுடையதாக இருக்கும். எந்த யானையும் அவர்களைப் பிரிக்க முடியாது. எந்தப் பேயும் பிரிக்க முடியாது. எந்த மனுஷனும் பிரிக்க முடியாது. ஆனால் தேவன் அவர்கள் நடுவிலே இருக்க வேண்டும். ஃபெவிகோல், எரால்டைட் அல்லது வேறெந்த உயர் தரமான ஒட்டும் பசையைக் காட்டிலும், தேவன் மேலானவராவார். கணவனும் மனைவியுமாகிய உங்களுக்கு இடையிலே தேவன் இருப்பாரானால், அவர் எந்தச் சக்தியும் பிரிக்காதவாறு உங்களை இணைத்து வைப்பார்.
ஆதலால், கணவனும் மனைவியுமாக அல்லது மனைவியும் கணவனுமாக உங்கள் இருவருக்கும் இடையில், தேவனைத் தவிர வேறெதுவும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பல திருமணங்களில் வாலிப வயதுள்ள தம்பதியினருக்கு இணைப்புப் பசையாக விளங்குவது எது? அநேக சமயங்களில் அழகான தோற்றந்தான் இந்த இடத்தைப் பிடிக்கின்றது. ஒரு பெண் அழகிய தோற்றமுடன் இருப்பதால், அவளை பையனுக்குப் பிடிக்கின்றது. 50 ஆண்டுகளாக நீடித்திருக்கப் போகும் திருமண வாழ்விற்கு, வெறும் அழகு மாத்திரமே உறுதுணையாய் இருந்துவிட முடியாது. அழகிய தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் திருமணங்களில், மூன்று மாதங்களிலேயே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்க முடியும். அழகிய தோற்றமானது திருமண வாழ்வைத் தாங்கிப் பிடிக்க முடியாது. நாம் அழகிய தோற்றத்திற்கு எதிரானவர்களல்ல. நிச்சயமாக அழகிய தோற்றமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொள்ளுங்கள். ஆனால் அதுவே பிரதான காரணியாக இருந்திடக் கூடாது. அது திருமண பந்தத்தை இணைத்துப் பிடிக்காது. அநேக பெண்கள் என்ன காரணத்தை முன்னிட்டு ஒரு பையனைத் தேர்வு செய்கின்றார்கள்? நல்ல வேலை, நல்ல குடும்பம், நிறையப் பணம் – இவைகளுக்காகத்தான். இவையெல்லாம் திருமண பந்தத்தை இணைத்துப் பிடிக்கும் என நீங்கள் எண்ணுகிறீர்களா? ஒரு போதும் இல்லை. ஒரு சில பையன்கள் நிறைய வரதட்சணை கிடைக்கும் என்பதற்காகப் பெண்களை மணந்து கொள்வதுண்டு. அதுவும் திருமண பந்தத்தைத் தாங்கிப் பிடிக்காது. அது ஒரு போதும் சாத்தியம் இல்லை.
தேவன் ஆதியிலே திருமணத்தை நடத்தி வைத்த வழிமுறைதான், திருமண பந்தத்தைத் தாங்கிப் பிடிக்கும் வழியாகும். இருவரும் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் உறவைவிட மேலாக கர்த்தருக்கே முதலிடம் தந்து தேவனோடு ஐக்கியப்படுவதாகும். அதை வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் ஒரு கணவனாய் இருந்தால், உங்களது மனைவியின் பாசத்தில் நீங்கள் முதலிடம் பெற நினைக்கக் கூடாது என்று சொல்லலாம். அவளுடைய பாசப் பிணைப்பில் கர்த்தர்தான் முதலிடம் பெற வேண்டும். நீங்கள் ஒரு மனைவியாய் இருந்தால், உங்களது கணவனின் பாசத்தில் கர்த்தருக்கு முதலிடத்தையும், உங்களுக்கு இரண்டாவது இடத்தையும் விரும்ப வேண்டும். கர்த்தரை முதலாவதாக வைத்து, ஒளியிலே நடப்பவர்களுக்கு, 1யோவான் 1:7-ல், “தேவன் ஒளியிலிருக்கிறதைப் போல அவர்களும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்பார்கள்” என்று சொல்லப்படுவதைப் போல அவர்கள் இருவரும் இணைக்கப்பட்டிருப்பார்கள்.
கணவனுக்கும் மனைவிக்குமிடையே வருபவை எவை? அது பெற்றோர்களாக இருக்கக் கூடும். “புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுப் பிரிந்து தன் மனைவியோடே இசைந்திருக்க வேண்டும்” என்று ஆதியாகமம் 2:24 –ல் பார்க்கிறோம். அப்போதுதான் அவர்களிருவரும் ஒரே மாம்சமாயிருக்க முடியும். அந்த வசனம் கூறுவதை மீண்டுமாய் கவனியுங்கள்: நீங்கள் ஒன்றை விட்டுவிடும் போதுதான், உங்களால் இசைந்திருக்க முடியும். நீங்கள் ஒன்றை விட்டுவிடாமல், இசைந்திருக்க முயன்றால், ஒருபோதும் ஒன்றாக முடியாது. இது வியப்பளிக்கவில்லையா? உன் தகப்பனையும் தாயையும் விட்டுவிடு என்பதுதான் பாவம் இவ்வுலகில் பிரவேசிப்பதற்கு முன்னரே, வேதத்தில் நமக்கென்று தரப்பட்ட ஒரேயொரு கட்டளையாகும். திருமணமானவர்களைப் பார்த்து, நீங்கள் உங்கள் தகப்பனையும் தாயையும் விட்டுவிட்டீர்களா என்று நான் கேட்க விரும்புகிறேன். சரீரப் பிரகாரமாய்ப் பிரிவதைப் பற்றி நான் சொல்லவில்லை. நிச்சயமாகவே அவர்கள் மரிக்கும் நாள் வரை நீங்கள் அவர்களைப் பராமரிக்க வேண்டும். நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் நமது பெற்றோரைக் கனப்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் உங்களுக்கும் உங்களது திருமண வாழ்விற்கும் இடையில் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உணர்வுப் பூர்வமான காரியங்களில் அவர்களை விட்டுவிட வேண்டும். அவர்கள் உங்களைப் பல ஆண்டுகளாக வளர்த்தார்கள் என்பது நல்ல விஷயந்தான். ஆனால் இப்போது உங்களுக்கு மணமாகிவிட்டபடியால், அவர்களை விட்டுவிட வேண்டும். அநேகப் புருஷர்கள் தங்களுடைய பெற்றோர்மீதுள்ள உணர்வு ரீதியான பிணைப்பைத் துண்டித்துவிடாத காரணத்தினால், அவர்களுடைய மணவாழ்விலே குழப்பம் உண்டாகின்றது. அநேக மனைவிகளும் தங்களுடைய பெற்றோர்மீதுள்ள உணர்வு ரீதியான பிணைப்பைத் துண்டித்துவிடாத காரணத்தினால், கணவன்மார்களோடு ஒன்றுபட முடிவதில்லை. இது ஒரு துக்ககரமான விஷயமாகும்.
கர்த்தருக்கு முதலிடம் தரப்படவில்லை; பெற்றோர்கள் இடையிலே நின்று கொண்டு திருமண வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். சில நேரங்களில் வேலையானது திருமண பந்தத்திற்குப் பங்கம் உண்டாக்குகிற அளவிற்கு முக்கிய இடத்தைப் பிடித்துவிடுகின்றது. பணமோ, அல்லது பலவிதமான காரியங்களில் மூழ்கிப் போவதோ, கணவனுக்கும் மனைவிக்குமிடையே வரும் பிள்ளைகளோ தேவனுக்குத் தரப்பட வேண்டிய இடத்தைப் பிடிக்க முடியும். இது இந்தியாவில் நடக்கிற ஒன்றாகும். ஆனால் அது அப்படி இருக்கக் கூடாது. மகிழ்ச்சியான மணவாழ்வைப் பெறுவதற்கு என்ன பதில்? இதோ முதலாவது பதில். எல்லாச் சூழ்நிலையிலும் கர்த்தரை முதலாவது வையுங்கள்; ஒளியிலே நடவுங்கள்; உங்களையே நியாயந்தீர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுக்கும் உங்களது திருமண கூட்டாளிக்குமிடையே சக்திவாய்ந்த இணைப்பு உண்டாகிவிடும். எந்தச் சக்தியாலும் அதை அழிக்க முடியாது.