WFTW Body: 

நீங்கள் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடினால், தேவனை மட்டுமே பிரியப்படுத்த விரும்பினால், தேவனுடைய சித்தம் உங்கள் வாழ்க்கையில் ஒவொரு காரியத்திலும் நிறைவேறுவதை எதுவும் தடுக்க முடியாது, ஏனென்றால், பூமியில் சகல அதிகாரமும் நம் ஆண்டவருடைய கைகளில் இருக்கிறது. இயேசு பிலாத்துவின் முன் இரண்டு முக்கியமான அறிக்கைகளைச் செய்தார்:
(1) "என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, ஆகையால் நான் பூமிக்குரிய காரியங்களுக்காகப் போராடுகிறதில்லை" (யோவான் 18:36).

(2) "நீர் எனக்குச் செய்யும்படி என் பரமபிதா உமக்கு அனுமதிப்பது தவிர, என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இராது” (யோவான் 19:11).

கர்த்தருக்கென்று ஒரு நல்ல சாட்சியாக இருக்கும்படி தீமோத்தேயுவிடம் பவுல் கூறியபோது, இந்த இரட்டை அறிக்கைகளைத் தான் அவர் தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டினார். (1தீமோத்தேயு 6:13,14).

கடினமான சூழ்நிலைகளையும் கடினமான மனிதர்களையும் எதிர்கொள்ளும் போது, நானும் இதே அறிக்கையைத் தான் தேவனிடமும் சாத்தானிடமும் ஜனங்களிடமும் செய்திருக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு விக்கிரகமும் இல்லை என்றால் மட்டுமே நீங்கள் எப்போதும் இளைப்பாறுதலாய் இருக்க முடியும். நல்ல வேலை, வீடு மற்றும் பூமிக்குரிய வசதிகள் அநேக கிறிஸ்தவர்களுக்கு விக்கிரங்களாகிவிட்டன. இது மரம் அல்லது கல்லால் செய்யப்பட்ட விக்கிரகத்தை வணங்குவதை விட மேலானதல்ல! ஆனால் பல கிறிஸ்தவர்கள் இதை உணரவில்லை. ஆபிரகாமுக்கு ஈசாக்கு ஒரு விக்கிரகமாய் மாறினது போல, தேவன் கொடுக்கும் ஆவிக்குரிய வரங்கள்கூட (உதாரணமாக, ஊழியம்) ஒரு விக்கிரகமாக மாறிடக் கூடும். தேவன் ஒருவரே நமக்கு எல்லாமுமாக இருந்து, நம் இருதயத்திலிருந்து, "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" (சங்கீதம் 73:25) என்று நாம் உண்மையிலேயே தேவனிடத்தில் சொல்ல முடிந்தால் மட்டுமே நாம் விக்கிரக ஆராதனையிலிருந்து விடுபட்டு தேவனை ஆராதிக்கத் தொடங்குகிறோம். நீங்கள் எல்லோரும் சகல விக்கிரகங்களிலிருந்தும் விடுபட்டு தேவனை மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.

நமது விசுவாசமும் நம்பிக்கையும் எப்போதும் தேவன்மீது மாத்திரமே இருக்க வேண்டும், மனிதர்கள்மீது இருக்கக் கூடாது. இல்லாவிடில் எரேமியா 17:5,6-ல் குறிப்பிடப்பட்டுள்ள சாபம் நம்மை வாட்டிவிடும்: “மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப் போலிருந்து, நன்மை வருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர் நிலத்திலும் தங்குவான்.

நம்முடைய உண்மையான செல்வமானது நம்மிடத்தில் எவ்வளவு பணமும், சொத்துக்களும் இருக்கின்றன என்பதை வைத்துக் கணக்கிடப்படாமல், தோல்விகள் மூலமாகவும் ஆழ்ந்த சோதனைகளின் மூலமாகவும் நாம் பெற்றுக்கொள்ளும் தேவனைப் பற்றிய அறிவு எவ்வளவு என்பதை வைத்தே கணக்கிடப்பட வேண்டும். எரேமியா 9:23,24 (லிவிங் மொழிபெயர்ப்பு) இவ்வாறு கூறுகிறது: "ஞானமுள்ளவன் தன் ஞானத்திலும், வல்லமையுள்ளவன் தன் வல்லமையிலும், ஐசுவரியவான் தன் ஐசுவரியத்திலும் குளிர்காய வேண்டாம். உறுதியான அன்புகொண்ட கர்த்தர் நான் என்றும், நான் அவ்விதமாகவே இருக்க விரும்புகிறேன் என்றும் என்னை மெய்யாகவே அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்து மாத்திரமே அவர்கள் மேன்மை பாராட்டுவார்களாக” என்று கர்த்தர் கூறுகிறார். இறுதியில் அது ஒன்றே மதிப்புடையதாயிருக்கிறது. அதனுடன் ஒப்பிடும்போது உலகில் சாதிக்கக்கூடிய ஒவ்வொரு சாதனையும் குப்பைதான். நாம் அந்த உண்மையை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் ஞானவானாகி விடுவோம்.