ஒரு சமயம், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு தேசத்திற்கு நான் போக யோசித்துக் கொண்டிருந்த போது, மத்தேயு 28:18,19 வசனங்களை ஆண்டவர் எனக்கு நினைவுபடுத்தினார். நம் ஆண்டவருக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டதினிமித்தமே, நம்மை சகல தேசத்திற்கும் புறப்பட்டுச் சென்று அவர்களை சீஷர்களாக்கும்படி கட்டளை கொடுத்தார் என்பதை அன்று நான் கண்டேன். இவ்வாறு ஆண்டவருடைய சகல அதிகாரத்தையும் விசுவாசித்துச் சென்றிடாதபட்சத்தில், நாம் எங்கு சென்றாலும் பிரச்சனைகளைத்தான் சந்திப்போம்.
மத்தேயு 28-ல் உள்ள வசனங்களில் “ஆகையால்....” என்ற வார்த்தை மிக முக்கியமான வார்த்தையாகும். இன்று அநேக பிரசங்கிகள் இந்த வசனத்திலுள்ள “போங்கள்” என்ற வார்த்தையைத்தான் வலியுறுத்துகிறார்கள்! அது நல்லதுதான். ஆனால் நாம் எதைச் சார்ந்து போக வேண்டும்? நம் ஆண்டவருக்குப் பூமியிலுள்ள சகல ஜனங்கள் மீதும், சகல பிசாசுகள் மீதும் முழு அதிகாரம் இருக்கிறது என்ற விசுவாச அடிப்படையில் மாத்திரமே நாம் சென்றிட வேண்டும்! இதை மெய்யாகவே நீங்கள் விசுவாசியாத பட்சத்தில், நீங்கள் எந்த இடத்திற்கும் போகாமல் இருப்பதே நல்லது!
சுவிசேஷத்திற்கு கடினமான தேசத்திற்குள் சென்றிட நான் தயங்கிய அந்த வேளையில்தான், மத்தேயு 28-ம் அதிகாரத்தின் மேற்கண்ட வசனங்கள் ஒரு புதிய வெளிப்பாடாய் எனக்கு வந்தது! அப்பொழுது, எந்தத் தயக்கமும் இன்றி நான் அந்த தேசத்திற்குச் சென்றிடமுடியும் என்று உணர்ந்தேன். பின்பு, நான் அந்த தேசத்திற்குள் பிரவேசித்த பின்பும்கூட, இயற்கையாகவே எனக்குள் பயங்கள் இருந்ததைக் கண்டேன்! ஆனால், நானோ என் தீர்மானத்தை அந்த பயங்களின் அடிப்படையில் எடுக்கவில்லையே!
இந்த சர்வலோகத்தில், ஏதேனும் சில தேசத்தில் ஆண்டவர் இயேசுவுக்கு முழு அதிகாரமும் கொடுக்கப்படவில்லை என நீங்கள் எண்ணினால்.... அந்த தேசத்திற்கு நீங்கள் போகவேண்டாம் என்றே நான் ஆலோசனை கூறுவேன்! அதுபோன்ற இடத்திற்கு நானேகூட செல்லமாட்டேன்! மெய்யாகவே, எனக்கும் மனதில் பீதி ஏற்படத்தான் செய்யும். ஆனால், இந்த பூமியில் “ஆண்டவருடைய ஆளுகை இல்லை!” எனக் கூறும்படியான ஒரு இடம்கூட இல்லை என்பதற்காய் நான் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்! ஆம், இந்த பூமியின் ஒவ்வொரு மூலை முடுக்கும்கூட நம் ஆண்டவருடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டு தான் இருக்கிறது!
இதுபோலவே, ஏதோ ஒரு ஸ்தலத்தில் யாரோ சிலர் மீது (அவர்கள் பயங்கர வலிமை கொண்டவர்களாயும் இருக்கக்கூடும்!) ஆண்டவருக்கு அதிகாரம் இல்லை என நீங்கள் எண்ணினாலும், அந்த சிலரைக் குறித்து நீங்கள் எப்போதும் பயந்தே வாழவேண்டியதாயிருக்கும்! ஆனால், அவருடைய ஆளுகைக்கு உட்படாத ஒரு மனிதன்கூட இந்த பூமியில் எந்த இடத்திலும் இல்லை என்பதற்காய் நான் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்! “ஒவ்வொரு மானிடன் மீதும்" ஆண்டவர் அதிகாரமுடையவராகவே இருக்கிறார். இந்த உண்மையை, நேபுகாத்நேச்சார் ராஜாகூட அறிந்திருந்தான் (தானியேல் 4:35).
நம் ஆண்டவரால் கல்வாரி சிலுவையில் தோற்கடிக்கப்படாமல் எப்படியோ 'ஒரு பிசாசு' மாத்திரம் தப்பிச்சென்று அது எங்கேயாவது ஒளிந்திருக்குமென்றால், அந்தப் பிசாசைக் குறித்து நாம் எப்போதும் பயந்திருக்கத்தான் வேண்டும். ஆனால், அவ்வாறு சிலுவையில் தோற்கடிக்கப்படாமல் ஒரு பிசாசுகூட இல்லவேயில்லை! சகல பிசாசுகளின் தலைவனாகிய சாத்தான்கூட சிலுவையில் நிரந்தரமாய் தோற்கடிக்கப்பட்டுவிட்டான்! இதுவே, சாத்தானையும் அவனுடைய பிசாசுகளையும் குறித்த எல்லா பயத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கி, நம் ஊழியத்தில் சொல்லிமுடியா தைரியத்தையும் தந்திருக்கிறது.
“ஆகவேதான்” தேவன் அழைக்கும் எந்த ஊழியத்திற்கும் நாம் புறப்பட்டுச் செல்லுகின்றோம்! சில இடங்களில் ஆபத்தான சூழ்நிலைகள் கூட இருக்கலாம். ஆனால் அந்த இடத்திற்கு ஆண்டவர் நம்மை நடத்துகிறார் என்ற முழு நிச்சயத்தை உடையவர்களாய் இருந்தால், அந்த இடத்திற்குச் செல்ல நாம் சிறிதும் பயந்திடத் தேவையேயில்லை! ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? அல்லது இல்லையா? என்பது நமக்கு ஒரு கேள்வியல்ல. நமக்கிருக்கும் ஒரே கேள்வியெல்லாம், அந்த இடத்திற்குச் செல்லும்படி ஆண்டவர் நம்மிடம் கூறினாரா? அல்லது இல்லையா? என்பது மாத்திரமே! அவ்வாறு அவர் கூறியிருந்தால், “அவருடைய அதிகாரம்” நம்மைச் சூழ்ந்து நின்று தாங்கிக்கொள்ளும் என்பதில் துளியேனும் சந்தேகம் தேவையேயில்லை! நாம் பயந்திடவும் தேவையில்லை! ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும்படி தேவன் அழைத்திருக்காவிட்டால் நாம் அங்கு செல்லவே கூடாது. அந்த ஸ்தலத்தில் உள்ள ஜனங்கள் எவ்வளவு தான் முயற்சித்து அங்கு வரும்படி நம்மைக் கட்டாயப்படுத்தினாலும் அல்லது எவ்வளவுதான் நம்மிடத்தில் உள்ள “வீரமுள்ள ஆவி” அங்கு போகும்படி தூண்டினாலும் ... நாம் செல்லவே கூடாது!
மேலும், நாம் எதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போகிறோம் என்ற கேள்வியையும் நமக்கு நாமே கேட்டுப்பார்க்க வேண்டும். அங்கு சென்று “சீஷர்களை உருவாக்க வேண்டும்” என்ற ஒரே நோக்கம் மாத்திரமே அன்றி, வேறு எந்த நோக்கமும் நம்மிடம் இல்லாதபட்சத்தில், ஆண்டவர் வாக்குத்தத்தம் செய்தபடி “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் அவர் நம்மோடுகூட இருப்பார்” என்பதில் பூரண நிச்சமுடையவர்களாய் இருக்கலாம்! இதைத் தவிர வேறு நோக்கங்கள் நம்மிடம் இருந்தால், “இருதயத்தை சோதித்தறியும் ஆண்டவர்” அவைகளைக் கண்டறிவார் என்பதை தெய்வ பயத்துடன் அறிந்திருக்கக்கடவோம் (எரேமியா 12:3).
தன்னை ஒரு விசுவாசி என அழைத்துக் கொள்பவர்களுக்கெல்லாம், ஆண்டவர் ஒருபோதும் இணங்கி ஒப்புக்கொடுப்பதேயில்லை (யோவான் 2:24). ஆனால் நீங்கள் நேர்மையான இருதயத்துடன் ஆண்டவரைப் பார்த்து,
“ஆண்டவரே நான் அந்த இடத்திற்குச் செல்ல நீர் என்னை அழைத்ததை உணர்ந்ததினிமித்தமே செல்லுகின்றேன். அங்குள்ளவர்களை சீஷர்களாக மாற்றி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்து, நீர் கட்டளையிட்ட யாவற்றையும் அவர்கள் கைக்கொள்ளும்படி போதிப்பதற்காக மாத்திரமே அங்கு நான் செல்லுகிறேன். இதைத்தவிர, அங்கு சென்று பணம் சம்பாதிக்கவோ அல்லது எனக்கென்று புகழைத் தேடுவதற்கோ அல்லது வேறு எந்த தனிப்பட்ட இலாபத்திற்காகவோ நான் செல்லவில்லை” என நீங்கள் உண்மையாய் கூறமுடியுமென்றால் உங்களைத் தாங்குவதற்குப் போதுமான ஆண்டவருடைய வல்லமையை நீங்கள் எப்போதும் பெற்றிருப்பீர்கள்!
இவ்வாறு அவர் உங்களைத் தாங்கியிருக்கும் போது, உங்கள் மனைவிக்கு என்ன சம்பவிக்கும்? உங்கள் பிள்ளைகளுக்கு என்ன சம்பவிக்கும்? உங்கள் பொருளாதார தேவைகள் எங்ஙனம் பூர்த்தியாகும்? என்ற பயத்தில் நீங்கள் ஜீவிக்கவேண்டிய அவசியமேயில்லை! இந்த ஆச்சரியமான இடத்தை அடைவற்குத் தேவையான ஒரே கேள்வியாய் இருப்பதெல்லாம் “தேவன் உங்களை அழைத்தாரா? அல்லது இல்லையா” என்பது மாத்திரமேயாகும். அந்த ஸ்தலத்திற்கு தேவன் அனுப்பினாரா? அல்லது யாரோ சில மனிதர்கள் அனுப்பினார்களா? அல்லது “ஒன்றை சாதிக்க வேண்டும்” என்ற ஆவியினால் உந்தப்பட்டீர்களா?
தேவன் விரும்பும் செயல்திட்டம் இல்லாமல், உங்களுக்கென்று சொந்தத் திட்டம் உடையவர்களாயிருந்தால் உங்களை உற்சாகப் படுத்தும்படியான ஒரு வாக்குத்தத்தத்தைக் கூட வேதத்திலிருந்து என்னால் உங்களுக்குக் காட்டிட முடியாது! அதற்கு மாறாக, தேவனுடைய செயல் திட்டமாகிய… சீஷர்களாக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்து, இயேசு கட்டளையிட்ட யாவையும் போதிப்பதுமே உங்களுடைய செயல்திட்டமாயிருந்தால்.... நான் இப்போது உங்களுக்கு மிகுந்த ஆணித்தரமாய், “நீங்கள் எந்த மனுஷனுக்கும் அல்லது எந்தப் பிசாசுக்கும் பயந்திடத் தேவையில்லை!" எனக் கூறிடமுடியும்!