WFTW Body: 

1. ஐக்கியம்:

“என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்” என்று உன்னதப்பாட்டு 2:4ல் மணவாட்டி கூறுகிறாள். இதனால் அவர் என்னை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அனைவருமே காண முடியும். கெட்ட குமாரனின் தகப்பன் தன்னுடைய குமாரனை மேஜைக்கு (விருந்துபண்ண) அழைத்து வந்தார். இயேசு தம்முடைய சீஷர்களோடே ஒரு மேஜையில் பந்தியிருக்க அமர்ந்தார். மேஜை ஐக்கியத்தை குறித்துப் பேசுகிறது. ஒரு மேஜையில், நாம் நம்முடைய கர்த்தருக்காக ஊழியத்தில் ஈடுபடுகிறதில்லை, மாறாக நம்முடைய கர்த்தரோடே ஐக்கியம் கொள்கிறோம். நாம் அவரோடே போஜனம் பண்ணுகிறோம் (வெளிப்படுத்தல் 3:20). நம்முடைய வாழ்க்கையில் ஊழியம் ஒருபோதும் முதன்மையான கவனத்தில் இருக்கக்கூடாது. கர்த்தர் மீதுள்ள அன்பு எப்பொழுதும் முதன்மையாக இருக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கர்த்தருக்கு முழுநேர ஊழியம் செய்தபின்பு, நான் சொல்ல விரும்புகிறது இதுதான், என்னுடைய எல்லா ஊழியங்களுக்கும் நான் கர்த்தர் மீது கொண்டிருக்கும் பக்திதான் அடிப்படை காரியமாகும். நாம் கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் பக்தி குறைந்து விடுமேயானால், தேவனுடைய பார்வையில் நம்முடைய ஊழியத்திற்கு எந்த மதிப்புமே இருக்காது. கர்த்தருக்கு உண்மையான ஊழியம் அனைத்துமே கிறிஸ்துவின் மீது தனிப்பட்ட நேசமும் பக்தியும் கொண்ட உறவான ஊற்றிலிருந்து பாய்ந்து ஓடுவதேயாகும்.

2. பாராட்டு:

“நீ ரூபவதி (நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்)!” (உன்னதப்பாட்டு 4:1) என்று மணவாளன் மணவாட்டியைப் பாராட்டுகிறார். இதுபோன்ற வார்த்தைகளை நாம் கர்த்தரிடமிருந்து கேட்பது அவசியமாகும் - அது கர்த்தர் நம்மில் உண்மையாகவே களிகூருகிறார் என்பதை உறுதியளிக்கிறது. கணவனும் மனைவியும் இத்தகைய பாராட்டுகிற வார்த்தைகளை ஒருவரிடமிருந்து ஒருவர் கேட்பது அவசியமாகும். மணவாளன் மணவாட்டிக்குச் சொல்லும் நீண்ட பாராட்டுகளைச் உன்னதப்பாட்டு 4ம் அதிகாரத்தில் கேட்கிறோம். ஆவிக்குரிய வளர்ச்சியின் ஒரு அடையாளம் என்னவென்றால், பேசுவதைக் காட்டிலும் கர்த்தருக்கு செவிகொடுக்க நாம் கற்றுக்கொள்கிறதே ஆகும். மணவாட்டி அவ்வாறு செவிகொடுக்கும்பொழுது, தன்னுடைய மணவாளன் தன்னை வியந்து போற்றுகிறதைக் கண்டுகொள்கிறாள். அவர் அவளுடைய ஒவ்வொரு பகுதியையும் வியந்து போற்றி, பின்னர் "என் பிரியமே! நீ பூரண ரூபவதி" (உன்னதப்பாட்டு 4:7) என்று முடிவாக சொல்கிறார். மணவாட்டி மீது தன்னுடைய பாராட்டுகளை மணவாளன் மேலும் வெளிப்படுத்துகிறார் (உன்னதப்பாட்டு 6:4–10). "எல்லா ஸ்திரீகளிலும், என்னுடைய மணவாட்டியைப் போலப் பூரண ரூபவதி ஒருவருமில்லை. எல்லோருக்கும் மேலாக நான் அவளைத் தெரிந்துகொள்கிறேன்" என்று அவர் கூறுகிறார். ஒவ்வொரு கணவனும் தன்னுடைய மனைவியை இப்படித்தான் பார்க்க வேண்டும்: “உலகிலே கவர்ச்சிகரமான ஸ்திரீகள் அநேகர் உள்ளனர், ஆனால் என் மனைவியைப் போல ஒருவருமில்லை. என்னுடைய பார்வையில் அவள் முதலிடம் பெறுகிறாள்”. இதைத்தான் கர்த்தர் நம்மைக் குறித்தும் சொல்கிறார். உலகில் உள்ள எல்லா புத்திசாலி மக்களைக் காட்டிலும், எல்லா ஐசுவரியவான்களைக் காட்டிலும், எல்லா பெரிய மனிதர்களைக் காட்டிலும் அவர் நம்மை அதிகமாகப் பாராட்டுகிறார். தன்னுடைய மணவாட்டியை எவ்வாறாக மணவாளன் வியந்து பாராட்டுகிறான் என்பதை உன்னதப்பாட்டு 7:1–9ல் நாம் வாசிக்கிறோம். நமக்கு அநேக பலவீனங்கள் இருக்கிறபோதிலும், நம்முடைய கர்த்தர் உண்மையிலேயே நம்மைப் பாராட்டிப் போற்றுகிறார் என்பதை நாம் தெளிவாகக் காண வேண்டும். கர்த்தர் தங்களை வியந்து போற்றுகிறார் என்பதை அவர்கள் நம்பாமல் இருக்கிறதினிமித்தம் அநேக விசுவாசிகள் தொடர்ச்சியாக தங்களையே ஆக்கினைக்குள்ளாக்கி கொள்ளும் ஓர் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

3. சிநேகம்:

"அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; இவர் என் சிநேகிதர்" என்று உன்னதப்பாட்டு 5:16ல் மணவாட்டி மணவாளனை வியந்து பாராட்டுகிறாள். இயேசு உங்கள் இரட்சகர் மாத்திரமல்ல, அவர் உங்கள் சிநேகிதருமாக இருக்கிறார் என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்களுடைய பூமிக்குரிய கணவன்/ மனைவி பற்றி என்ன? அவரும் (கணவன்/மனைவி) இந்த பூமியிலே உங்களுடைய சிறந்த சிநேகிதராக இருக்கிறாரா? அது அவ்வாறு இருக்க வேண்டும். அநேக கணவர்களும் - மனைவிகளும் ஒருவரையொருவர் நேசிக்கிறோம் என்று சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் சிறந்த சிநேகிதர்களாக இல்லை. அவர்களுடைய சிறந்த நண்பர்கள் மற்றவர்களிடையே காணப்படுகிறார்கள். அது துரதிர்ஷ்டவசமானது. இயேசு என்னுடைய நெருங்கிய அன்பான நண்பர் - என்னுடைய மனைவியை விட எனக்கு நெருக்கமானவர். ஆனால் பூமியில் உள்ளவர்களில், என் மனைவி என்னுடைய நெருங்கிய சிறந்த தோழி - அவள் என் வாழ்நாள் முழுவதும் அப்படித்தான் இருப்பாள். இது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையையும் என்னுடைய திருமண வாழ்க்கையையுமாகிய இரண்டையும் பெரு மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.