WFTW Body: 

தேவனுடைய மாபெரும் கட்டளையை நிறைவேற்றும் விஷயத்தில் ஒரு சமநிலையைக் கொண்டு வரவேண்டும் என்பது என் இருதயத்தின் பாரமாயிருக்கிறது. இயேசு இந்த பூமியை விட்டுப் பரமேறிச் செல்வதற்கு சற்று முன்பு தமது சீஷர்களுக்கு ஒப்புவித்த “மாபெரும் கட்டளையை” நிறைவேற்றவேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை அனைத்து கிறிஸ்தவர்களும் அறிவார்கள்.

மாபெரும் கட்டளையின் முதலாவது பகுதி மாற்கு 16:15 -இல் நாம் பார்க்கிறபடி, “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்” என்பதாயிருக்கிறது. ஆனால் இந்த மாபெரும் கட்டளையின் மறுபாதியாகிய இன்னுமொரு பகுதி மத்தேயு 28:18-20 -இல் விவரிக்கப்பட்டுள்ளது. இயேசு அவர்களை நோக்கி: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார்.

நான் மறுபடியும் பிறந்ததிலிருந்து கடந்த 52 ஆண்டுகளில் கிறிஸ்தவ உலகில் உள்ள மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களை, கிறிஸ்தவ இயக்கம் மற்றும் கிறிஸ்தவ சபைகளை கவனித்திருக்கிறேன். மாபெரும் கட்டளையின் முதலாவது பகுதியான மாற்கு 16:15 -இல் உள்ளதை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வலியுறுத்துவதை நான் காண்கிறேன். வெகு சிலரே அந்த கட்டளையின் மற்றொரு பகுதியான மத்தேயு 28:19 -ஐ வலியுறுத்துகிறார்கள். என்னுடைய யூகம் என்னவென்றால், 99% பேர் மாற்கு 16:15 -இலேயே தங்கள் முதன்மையான கவனத்தைச் செலுத்துகிறார்கள்; அதே நேரத்தில் சுமார் 1% பேர் மட்டுமே மத்தேயு 28:19-20 -க்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். ஓர் உதாரணத்தின் மூலமாக இதை விளக்கிக் கூறவேண்டுமானால், இது, ஒரு நூறுபேர் ஒரு கனமான மரத்துண்டைத் தூக்கிச் செல்ல முயற்சிப்பது போன்றதாகும். மரக்கட்டையின் ஒரு முனையில் 99 பேரும் மறுமுனையில் ஒரு நபர் மட்டும் பிடித்துக்கொண்டு அந்தக் கட்டையைத் தூக்க முயற்சித்து சிரமப்படுகிறார்கள். அப்படித்தான் இதை நான் பார்க்கிறேன்.

ஆகவே, கர்த்தர் அவருடைய வார்த்தையைப் போதிக்கும் வரத்தை எனக்குக் கொடுத்து, நான் பிரசங்கிக்கத் தொடங்கியபோது, ​​மாபெரும் கட்டளையின் இரண்டாவது அம்சத்தை வலியுறுத்த வேண்டும் என்பதே அவர் எனக்குக் கொடுத்த கட்டளையாகக் கண்டேன். மாபெரும் கட்டளையின் இந்த இரண்டாம் பாதியானது சுமார் 1% மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. உண்மையான சமநிலை 50-50 என்று இருக்க வேண்டுமே! மாபெரும் கட்டளையின் முதலாவது பகுதி சுவிசேஷம் அறிவித்தல் என்று நமக்குத் தெரியும். இது பொதுவாக மிஷனெரி ஊழியம் (நற்செய்தி அருட்பணி) என்று அழைக்கப்படுகிறது, மேலும் பெரும்பாலும் சுவிசேஷம் சொல்லப்படாத பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். சுவிசேஷ நற்செய்தியை (மனிதன் பாவத்தில் இருக்கிறான் என்றும், எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமை அற்றவர்களானார்களென்றும், கிறிஸ்து உலகத்தின் பாவங்களுக்காக மரித்தாரென்றும், அவரே பிதாவிடம் செல்ல ஒரே வழி என்றும், கிறிஸ்து ஒருவரே மரித்தோரிலிருந்து எழுந்தருளினார் என்றும், அவரை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்றும், விசுவாசிக்காதவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவார்கள் என்றும்) அறிவிக்கப்படாத இடங்களுக்குக் கொண்டு வருவது மிகவும் அவசியம்.

ஆனால் அது அங்கேயே நிறுத்தப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினாரா? ஒரு நபர் விசுவாசித்தவுடன், அவர் தான் ஒரு பாவி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவைத் தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவ்வளவுதானா? சற்றும் இல்லை. மத்தேயு 28:19 -இல் சகல ஜாதிகளுக்கும் போய், அவர்களைச் சீஷராக்கும்படி நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

முதல் முறையாக இந்தக் கட்டளையைக் கேட்ட ஆரம்பகால அப்போஸ்தலர்களுக்கு “சீஷர்கள்” என்பதன் அர்த்தம் என்ன என்பதில் அவர்கள் மனதில் எந்த சந்தேகமும் இல்லை, ஏனென்றால் லூக்கா 14 -இல் இயேசு அதை அவர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கியிருந்தார். லூக்கா 14:25 -இல் நாம் வாசிக்கிறபடி, அவரோடுகூட திரளான ஜனங்கள் வருவதை இயேசு கண்டபோது, அவர் திரும்பி வந்து, யாரிடமும் பேசியிராத சில கடினமான வார்த்தைகளை அவர்களிடம் கூறினார்.

அடுத்த சில வாரங்களில், இந்த “சீஷத்துவத்தின் நிபந்தனைகள்” ஒவ்வொன்றையும் நாம் மிக ஆழமாகப் பார்ப்போம். நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இயேசு விளக்கியபடி நாம் சீஷர்களாக மாறியிருக்கிறோமா? மாபெரும் கட்டளையைப் பற்றியும், சீஷத்துவத்திற்கு இயேசு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பற்றியும் நமக்கு இருக்கும் புரிதலில் சரியானதொரு சமநிலை இருக்கிறதா?