தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார் (எபேசியர் 2:4). நாம் மனந்திரும்பினபோது நம்மில் ஒவ்வொருவரும் உணர்ந்த அவருடைய திவ்ய சுபாவத்தின் முதல் குணாதிசயம் அவருடைய இரக்கமேயாகும். நாமும் அந்த திவ்ய சுபாவத்தை மெய்யாகவே பெற்றிருந்தால், மற்றவர்கள் நம்மைச் சந்திக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் முதல் உணர்வும் அதுவாகத்தான்(இரக்கம்) இருக்க வேண்டும்.
நரகத்தில் எந்த இரக்கமும் இல்லை. நம் மாம்சத்திலும் எந்த இரக்கமும் இல்லை. நமது மாம்சம் இயல்பாகவே மற்றவர்களிடம் கடினமாக இருக்கும். அத்தகைய கடினத்தன்மை தேவனுடைய கண்டிப்பின் ஒரு பகுதி தான் என்று கூறிக்கொண்டு நம்மை நாமே எளிதாக ஏமாற்றிக் கொள்ள முடியும். பாவத்தின் வஞ்சகம் அவ்வளவாயிருக்கிறது.
இப்போது பரலோகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று நம்மால் பார்க்கமுடியுமானால், தேவன் தொடர்ந்து மற்றவர்களை மன்னித்து கொண்டிருக்கிறார் என்பதை அறிவோம். இவ்வுலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும், விசுவாசிகளும், அவிசுவாசிகளும், தங்களுடைய பாவங்களுக்காகவும், தங்கள் தோல்விகளுக்காகவும் மன்னிப்புக் கேட்டு அவரிடம் தொடர்ந்து கதறி அழுதுகொண்டே இருக்கிறார்கள். அவர் அவர்களை எந்நேரமும், ஒரு நாளின் 24 மணிநேரமும், மன்னிக்கிறவராய் இருக்கிறார். சிலர் 1000வது முறையாக செய்த பாவத்திற்காக மன்னிப்பு கேட்கலாம். அவர் இன்னமும் மன்னிக்கிறார், ஏனென்றால் அது அவருடைய இயல்பு. நாமும் அதே விதமாக மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று இயேசு கூறினார் (மத்தேயு 18:35).
ஒரு நாளில் ஏழுதரம் நம் சகோதரர்களை மன்னிக்க வேண்டும் என்றும் இயேசு கூறினார் (லூக்கா 17:4). ஒரு நாளில் (பகல் நேரம்) 12 மணி நேரம் உண்டு. ஒரு நாள் காலை 6 மணிக்கு உங்களுடைய சகோதரன் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்து, காலை 7 மணிக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டால் நீங்கள் அவரை மன்னிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். உங்களுக்கு விரோதமாக அதே பாவத்தை காலை 8 மணிக்கு செய்து 9 மணிக்கு மன்னிப்புக் கேட்டால் நீங்கள் அவரை மீண்டும் மன்னிக்க வேண்டும். பின்னர் காலை 10 மணிக்கு அவர் மூன்றாவது முறையாக அதே பாவத்தைச் செய்கிறார், பிறகு 11 மணிக்கு உங்களிடம் மன்னிப்பைக் கேட்கிறார், நீங்கள் அவரை மன்னிக்க வேண்டும். அதே பாவத்தை மதியம் 12 மணிக்கும், 2 மணிக்கும் மாலை 4 மணிக்கும் மீண்டும் செய்கிறார். ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் கழித்து வந்து மன்னிப்பு கேட்கிறார். ஒவ்வொரு முறையும், நீங்கள் அவரை மன்னிக்க வேண்டும். அதே நாளில் நீங்கள் ஏற்கனவே எத்தனை முறை மன்னித்தீர்கள் என்பதைக் குறித்து வைக்காமல் அவர்களை மன்னிக்க வேண்டும். பிரமாணத்துவமாக சிந்திக்கும் சிலர், ஏழு முறை வரை குறிப்பு வைத்திருக்கும்படி இயேசு கூறினார் என்று கூறலாம். பேதுரு ஒரு முறை இயேசுவிடம் இதைத்தான் கூறினார். ஆனால் அவர் தனது சகோதரனை 490 தரம் மன்னிக்க வேண்டும் என்று இயேசு கூறினார் (மத்தேயு 18:21,22)
தேவனுடைய சுபாவமும் அப்படித்தான் இருக்கிறது. புதிய உடன்படிக்கையின் நற்செய்தி, நாமும் அவருடைய சுபாவத்தில் பங்குபெற முடியும் என்பதேயாகும். அந்த சுபாவத்தில் பங்கேற்பதை விட அதைப் பற்றி பேசுவது எளிது என நம்முடைய அனுபவத்தில் நாம் அனைவரும் அறிவோம். ஆனால், "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது " (1கொரிந்தியர் 4:20).
நாம் பறைசாற்றும் பல அற்புதமான "சத்தியங்கள்" மூலமாகவோ, உபதேசங்களின் மூலமாகவோ அல்லாமல், தேவனுடைய அன்பை நாம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதின் வாயிலாகவே கிறிஸ்துவின் மகிமை நம் மூலமாகப் பரவுகிறது.