WFTW Body: 

ஒருவருக்கொருவர் மன்னிப்பதைக் குறித்து சிந்தியுங்கள். தன் சுயத்தை வெறுக்கும் எவராலும் மற்றொருவர் மீது கசப்பும் வெறுப்பும் வைத்திருக்கவோ அல்லது யாதொரு நபரையும் மன்னிக்காமல் இருக்கவோ முடியாது. சுயம் இன்னும் சிங்காசனத்தில் இருக்கும் இதயங்களில் மட்டுமே வெறுப்பு உள்ளமர்ந்து இருக்கும்.

இயேசு ஒருமுறை ஒரு வேலைக்காரனைப் பற்றிய உவமையைக் கூறினார்: அவன் தனது எஜமானனால் அதிகம் மன்னிக்கப்பட்டிருந்தாலும், தனது சக வேலைக்காரனுடைய அற்ப கடனை அவனால் மன்னிக்க முடியவில்லை. இதைக் கேட்ட அவனது எஜமான், இரக்கமில்லாத அந்த வேலைக்காரனை உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். “அதுபோலவே, நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்" (மத்தேயு 18:35) என்றார் இயேசு. 'உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுப்பது' என்பதை, 'தண்டனை அளிப்பது' என்று நாம் புரிந்துகொள்ளலாம். சக விசுவாசிகளுக்கு எதிராக மன்னிக்க முடியாத மனப்பான்மையைக் கொண்டவர்களுக்கு அல்லது மன்னிக்காத ஆவியை சற்று இருதயத்தில் வைத்து வைத்தவர்களுக்கு இவ்விதமாகவே நடக்கும் என்று இயேசு கூறினார். மன்னிப்பு இதயத்திலிருந்து வர வேண்டும் என்று இயேசு வலியுறுத்தியதை கவனியுங்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது முழு மனதுடன் இருக்க வேண்டும், வெளிப்புறமாக, ஏதோ பெயருக்காக மன்னிப்பதல்ல. ஒருவர்மீது உங்கள் இதயத்தில் இன்னும் கசப்பு வைத்துக்கொண்டு, நீங்கள் அவரை மன்னிக்கிறீர்கள் என்று அவரிடம் கூறுவது அர்த்தமற்றது.

நாம் தேவனுடைய அன்பின் பிரமாணத்தை மீறும் போது, ​​கிறிஸ்துவின் சரீரத்தின் செயல்பாட்டைத் தடுக்கிறோம். அது மட்டும் அல்ல, நமக்கு நாமே தீங்கும் செய்துகொள்கிறோம். "இந்த சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்" என்ற புத்தகத்தில் டாக்டர். எஸ்.ஐ. மெக்மில்லன் இவ்விதமாகக் கூறுகிறார்: “நான் ஒரு மனிதனை வெறுக்கத் தொடங்கும் அந்தக் கணப்பொழுதிலேயே, நான் அவனுடைய அடிமையாகி விடுகிறேன். எனது வேலையை என்னால் இனி மகிழ்ச்சியாய் செய்யமுடிவதில்லை, ஏனென்றால் அவன் என் எண்ணங்களைக் கூட கட்டுப்படுத்துகிறான். என் மனக்கசப்பு என் உடலில் அதிகமான அழுத்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மேலும், சில மணிநேரம் மட்டுமே வேலை செய்தாலும் நான் களைப்படைந்துவிடுகிறேன். நான் முன்பு ரசித்து செய்த வேலை இப்போது எனக்கு மந்தமாகிவிடுகிறது. விடுமுறைகள் கூட எனக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. நான் எங்கு சென்றாலும் நான் வெறுக்கும் மனிதன் என்னை வேட்டையாடுகிறான். என் மனதைப் பிடித்திருக்கும் அவனது கொடுங்கோல் பிடியிலிருந்து என்னால் தப்பமுடியவில்லை.”

உள்ளத்தில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் வெறுப்பும் கசப்பும் இன்று உலகம் முழுவதும் உள்ள அநேக கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ ஊழியர்களின் செயல்திறனையும், உடல் ஆரோக்கியத்தையும் கூட அழித்துக்கொண்டிருக்கிறது.

நாம் காயப்படுத்திவிட்டதாக ஒரு சகோதரன் (சரியாகவோ அல்லது தவறாகவோ) உணர்ந்தாலும், ஐக்கியத்தை மீட்டெடுப்பதில் நாம் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று இயேசு கற்பித்தார்.

நீ தேவனுக்கு பலி செலுத்த நின்று கொண்டிருக்கும்போது, உன்பேரில் உன் நண்பனுக்கு குறை உண்டென்று திடீரென்று நீ நினைவுகூர்ந்தால், உன் பலிபீடத்தின் அருகே உன் பலியை விட்டுவிட்டு, அவனிடம் சென்று மன்னிப்புக் கேட்டு, அவனோடு ஒப்புரவு செய்துகொள். பிறகு வந்து உன் பலியை தேவனுக்கு செலுத்து” (மத்தேயு 5:23,24 - லிவிங் பொழிப்புரை) என்று இயேசு கூறினார்.

அவ்வாறே,
நீங்கள் ஜெபிக்கும்போது, ​​நீங்கள் யார்மீது எரிச்சல் கொண்டிருக்கிறீர்களோ முதலாவது அவர்களை மன்னியுங்கள், அப்போது உங்கள் பரலோகப் பிதா உங்கள் பாவங்களையும் மன்னிப்பார் (மாற்கு 11:25 - லிவிங் பொழிப்புரை) என்றார்.

எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மை நாமே வெறுத்து, நம் பெருமையைக் களைந்துபோட்டு, ஐக்கியம் எங்கெல்லாம் உடைந்திருக்கிறதோ அதை மீட்டெடுப்பதற்கு "இரண்டு மைல் தூரம் செல்ல" இயேசு நம்மை அழைக்கிறார். சில சமயங்களில், ஒப்புரவாகும்படி நாம் சிறந்த முயற்சி எடுத்தாலும், ஒரு சகோதரன் ஒரு கடினமான, மன்னிக்கமுடியாத மனப்பான்மையைப் பற்றிக்கொண்டிருக்கலாம்; ஆனால் ஒப்புரவாகும்படி நாம் முயற்சி செய்திருப்போமானால், தேவனுக்கு முன்பாக நமது பொறுப்பை நிறைவேற்றியவர்களாயிருப்போம்.

நமக்கும் கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள மற்ற யாதொரு அவயவத்திற்கும் இடையே பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தால், அல்லது ஒப்புரவாவதற்கு நாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால், நமது ஆராதனையையோ, நமது ஊழியத்தையோ அல்லது நாம் தேவனுக்கு அளிக்கும் வேறு எதையுமோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இயேசுவின் வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன. எத்தனை கிறிஸ்தவர்கள் இயேசுவின் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று சில சமயங்களில் நான் ஆச்சரியப்படுகிறேன். அநேகர் தேவனுடைய கட்டளைகளை சாதாரணமாகக் கருதி, அதன் மூலம் ஆவிக்குரிய மரணத்தை கிறிஸ்துவின் சரீரத்திற்குள் கொண்டு வருகிறார்கள்.

மன்னிக்கவேண்டியதற்கான மற்றொரு காரணம், "சாத்தானால் மோசம்போகாமல் இருப்பதற்காக" என்று பவுல் கூறுகிறார் (2கொரிந்தியர் 2:11 - லிவிங் பொழிப்புரை).