WFTW Body: 

நான் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” (மத்தேயு 4:19) என்ற எளிய கூற்றைக் கருத்தில் கொள்வோம். உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்கப் போவது யார்? கிறிஸ்துவே. எந்த மனுஷனும் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாற்ற முடியாது. நீங்கள் ஒரு வேதாகமக் கல்லூரிக்குச் சென்று அங்கே பல வருடங்களை செலவிடலாம். ஆனால், அது உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாற்றாது. வேதாகமத்தைப் படிப்பதாலோ, மிஷனரியின் சவாலைக் கேட்டு ஊழியத்திற்கு அர்ப்பணிப்பதாக கையை உயர்த்துவதாலோ, அல்லது தேவனுடைய பணிக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்படி முன்னோக்கி பிரசங்க மேடையினண்டை வந்து முழங்காற்படியிடுவதாலோ நீங்கள் மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாற மாட்டீர்கள். அப்படியல்ல, நீங்கள் மனுஷரைப் பிடிக்கிறவர்களாக இருக்க விரும்பினால், ஆண்டவர், “என்னைப் பின்பற்றுங்கள்” என்று கூறுகிறார். “வேதாகமத்தைப் படியுங்கள்” என்று கூட அல்ல, “என்னைப் பின்பற்றுங்கள்” என்றே கூறுகிறார்.

ஆதி கிறிஸ்தவர்களிடம் வேதாகமம் இல்லாதிருந்தது. அவர்கள் எப்படி மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாறினார்கள்? இயேசுவைப் பின்பற்றியதன் மூலமே. இதை நாம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த வேதபாடத்தின் ஆரம்பத்தில் நாம் கற்றுக்கொண்டது போல், நாம் நிச்சயமாக வேதவசனங்களைப் படிக்க வேண்டும்: “மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத்தேயு 4:4). ஆனால் நாம் வேதாகமத்தை விக்கிரகமாக வணங்குகிறவர்களாக மாறிவிடக்கூடாது. வேத-விக்கிரகாராதனையாளராக மாறிவிடாதீர்கள். வேதாகமம் இயேசுவை நாம் இன்னும் மேன்மையான விதத்தில் பின்பற்ற நமக்கு உதவுவதற்காகவே இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் மகிமையை நமக்குக் காட்டும்படி வேதவாக்கியங்களைப் பயன்படுத்துகிறார். இயேசுவைப் பின்பற்றுவதே மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாறுவதற்கான வழி. உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாற்றப்போவது இயேசு கிறிஸ்துவேயன்றி, ஏதோ ஒரு மிஷனரி வேதாகமப் பயிற்சி நிறுவனம் அல்ல. தேவன் மனிதர்களைப் பயன்படுத்தலாம், ஆனால் இறுதியில் கிறிஸ்துவே உங்களுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்க விரும்புகிறார்; அவரால் மட்டுமே உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாற்ற முடியும்.

மனுஷரைப் பிடிக்கிறவர்களாக இருப்பது என்றால் என்ன? மனுஷரைப் பிடிக்கிறவர்கள் என்பது கடலுக்குள் அல்லது ஆற்றுக்குள் சென்று வலைகளை வீசி மீன்களைப் பிடித்து கரைக்குக் கொண்டுவரும் மீனவர்களைப் போன்றதே. அவர்கள் அவற்றை ஒரு சுற்றுச்சூழலிலிருந்து இன்னொரு சுற்றுச்சூழலுக்குக் கொண்டு வருகிறார்கள். இயல்பாகவே மீன்கள் தரையில் சௌகரியமாக (comfortable) இருக்காது; அவை கடலில் தான் சௌகரியமாக இருக்கும்! ஒரு மீனவர் அந்த மீனைத் தண்ணீரிலிருந்து பிடித்து, அது இருந்த சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலாகிய தரைக்குக் கொண்டு வருகிறார்.

இது சிங்கத்தையோ அல்லது யானையையோ பிடித்து கூண்டிலில் அடைப்பது போன்றதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம், ஏனென்றால் சிங்கம் ஏற்கனவே கடலில் அல்ல, தரையில் வாழப் பழகிவிட்டது. ஆனால், நீங்கள் ஒரு மீனைப் பிடிக்கும்போது, அது ஒரு சூழலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, முற்றிலும் மாறுபட்ட சூழலில் போடப்படுகிறது. நிலமும் நீரும் எதிரெதிர் போன்றவை. எனவே மனுஷரைப் பிடிக்கிறவர்களாக - அதாவது, மெய்யாகவே மனுஷரைப் பிடிக்கிறவர்களாக - இருப்பது என்பது, இந்த உலகத்தின் நீரில் உள்ள மனுஷர்களிடம் சென்று, அங்கிருந்து அவர்களை அழைத்து, பரலோகராஜ்யம் என்னும் முற்றிலும் மாறுபட்ட சூழலுக்குக் கொண்டுவருவதாகும்.

நீங்கள் ஒரு நபரை இந்த பூமிக்குரிய ராஜ்யத்திலிருந்து எடுத்து எடுத்து பரலோகராஜ்யத்திற்குக் கொண்டு வரவில்லையென்றால், நீங்கள் மெய்யாகவே அந்த மீனை வெளியே கொண்டு வரவில்லை. அநேகமாக நீங்கள் அந்த மீனை உங்கள் வலையில் வைத்திருந்திருக்கலாம், ஆனால் அது இன்னும் தண்ணீரில் இருந்தால், நீங்கள் மெய்யாகவே அதை வெளியே கொண்டு வரவில்லை. நீங்கள் மெய்யாகவே மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாறவில்லை. எந்த மீனவர் வலை போட்டு ஒரு மீனைப் பிடித்து, மீன் மிகவும் சௌகரியமாக இருக்கும் இடமாகிய தண்ணீரிலேயே இருக்கும்படி அந்த வலையிலேயே விடுகிறார்? ஆனால், நீங்கள் அதைத் தரைக்குக் கொண்டு வந்தவுடன், மீன் என்ன செய்கிறது என்பதைப் பார்க்கிறீர்கள். அது தரையில் இருக்கும்போது, துடிதுடித்து, “நான் இங்கே அவ்வளவு சௌகரியமாக இல்லை!” என்றே கூறுகிறது.

ஒரு நபர் பூமிக்குரிய ராஜ்யத்திலிருந்து பரலோகத்துக்குரிய ராஜ்யத்திற்கு மாற்றப்படும்போது, - ஒரு மீனைத் தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து தரைக்குக் கொண்டு வருவது போல - அவர் முற்றிலும் மாறுபட்ட சூழலுக்குக் கொண்டுவரப்படுகிறார். பரிசுத்த ஆவியானவரே நம்மை பரலோகத்துக்குரிய ராஜ்யத்தில் சௌகரியமாக இருப்பவர்களாக்குகிறார். எனவே, நூறு பேரை “கர்த்தராகிய இயேசுவே, என் உள்ளத்தில் வாரும்” என்று சொல்ல வைத்துவிட்டதால் நீங்கள் உங்கள் வேலையை முடித்துவிட்டீர்கள் என்றும், அதனால் நீங்கள் “மனுஷரைப் பிடிக்கிற” ஒரு நபர் என்றும் நினைக்காதீர்கள். துரதிர்ஷ்டவசமாக, பல விசுவாசிகளுக்கு அதுதான் நடந்திருக்கிறது. மனுஷரைப் பிடிக்கிறவர் என்றால் என்ன என்பதை அவர்கள் தியானிக்கவில்லை, ஏனென்றால் மற்ற மனிதர்களும் போதகர்களுமே அவர்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாற்றியிருக்கிறார்கள் - கிறிஸ்து அவர்களை மாற்றவில்லை. கிறிஸ்து உங்களை மனுஷரைப் பிடிக்கிறவராக மாற்றியிருந்தால், அது அவர் இரண்டு வசனங்களுக்கு முன்பு பிரசங்கித்த அதே கோட்பாட்டின் அடிப்படையில் தான் இருக்கும்: “மனந்திரும்புங்கள், ஏனெனில் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது.” இந்த 'மீன்கள்' முழுமையாக மனந்திரும்பி பரலோக ராஜ்யத்தைத் தேடவும், அவர்கள் இருந்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலுக்குள் வரும்படியும் நாம் கற்பிக்க வேண்டும்.

ஒரு மீனவர் அதைத்தான் செய்கிறார். அவர் ஒரு மீனை கடலில் இருந்து பிடித்து தரைக்கு எடுத்துச் செல்கிறார். நாம் மெய்யாகவே மனுஷரைப் பிடிக்கிறவர்களாக இருக்க வேண்டுமென்றால், பூமிக்குரிய ராஜ்யத்திலிருந்து மனுஷரைப் பரலோகத்துக்குரிய ராஜ்யத்திற்கு - பிசாசினுடைய ராஜ்யத்திலிருந்து தேவனுடைய ராஜ்யத்திற்கு - கொண்டுவர வேண்டும். இயேசுவால் மாத்திரமே நம்மை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாற்ற முடியும். வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது.

மனுஷரைப் பிடிக்கிறவர்கள் சுவிசேஷகர்கள் மட்டுமல்ல. சுவிசேஷகர்கள் அந்த வேலையின் ஒரு பகுதியை மட்டுமே செய்கிறார்கள். தீர்க்கதரிசி, அப்போஸ்தலர், போதகர், மேய்ப்பர், ஆகியோர் இந்த மனுஷரை அவர்களது புதிய சூழலாகிய பரலோகராஜ்யத்தில் நன்கு சௌகரியமானவர்களாகும்படி மாற்றும் வேலையைச் செய்து முடிக்க வேண்டும்.

முழுமையான பணி ஒரு நபரை கடலிலிருந்து வெளியே தரைக்குக் கொண்டு வருவதாகும். அதாவது, பூமிக்குரிய ராஜ்யத்திலிருந்து பரலோகராஜ்யத்திற்குக் கொண்டு வருவதாகும். அதற்கான வழி கிறிஸ்துவைப் பின்பற்றுவதேயாகும். நான் இயேசுவைப் பின்பற்றுவேனாகில், அவர் அந்தப் பணியை செய்ததைப் போலவே நானும் செய்வேன்.