WFTW Body: 

1.மாய்மாலம்: நாம் உண்மையில் இருப்பதைவிட அதிக பரிசுத்தமாய் மற்றவர்களிடம் காண்பித்துக் கொள்வதே மாயக்காரராய் இருப்பதாகும். அது பொய்யனாயிருப்பது அல்லது ஒரு பொய் சொல்வது போன்றதே. மத்தேயு 23:13-29 வசனங்களில், இயேசு மாய்மாலக்காரர்கள் மீது சாபத்தை ஏழு தரம் உரைத்தார். இயேசு பரிசேயர்களை நோக்கி, உங்களுடைய அந்தரங்க வாழ்க்கை (உட்புறம்) கொள்ளையினாலும் அநீதத்தினாலும் (ஆங்கில வேதாகமத்தில் “Self indulgence” - தங்களுடைய சுயம் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலும்) நிறைந்திருக்கிறது எனக் கூறினார் (மத்தேயு 23:25). இதனுடைய அர்த்தம், தங்களை பிரியப்படுத்திக் கொள்ள மட்டுமே அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதாகும். ஆயினும் அவர்கள் நன்கு வேதத்தை அறிந்திருந்ததாலும், உபவாசித்து ஜெபித்ததாலும், தசமபாகம் செலுத்தியதாலும், தங்களைப் பரிசுத்தவான்கள் என்று மற்றவர்களுக்கு காண்பித்துக் கொண்டனர். அவர்கள் வெளிப்புறத்தில் மிகவும் பயபக்தியாய் தோன்றினர். பொது இடங்களில் அவர்கள் நீண்ட ஜெபம் செய்தார்கள், ஆனால் அந்தரங்கத்திலோ அவ்வளவு அதிகமான நேரம் ஜெபம் செய்யவில்லை. இன்றும் அநேகர் இப்படித்தான் ஜெபம் செய்கிறார்கள். எல்லா நேரங்களிலும் நம்முடைய இருதயத்தில் துதியின் ஆவி இல்லாமல், ஞாயிறு காலையில் மட்டுமே தேவனைத் துதிப்போமேயானால் அது மாய்மாலமாகும்.

2.ஆவிக்குரிய பெருமை: பரிசுத்தத்தை நாடுகிறவர்களிடையே அதிகமாகக் காணப்படும் பொதுவான பாவம் ஆவிக்குரிய பெருமையே ஆகும். தன்னுடைய ஜெபத்தில் கூட மற்றவர்களை அசட்டைச் செய்த சுய நீதி கொண்ட பரிசேயனைப் பற்றின உவமையை நாமனைவரும் அறிவோம் (லூக்கா 18:9-14)! பொது இடங்களில் விசுவாசிகள் ஏறெடுக்கும் சுமார் 90 சதவீதத்திற்கும் மேலான ஜெபங்கள், கேட்கிற மற்றவர்களைக் கவர வேண்டும் என்ற பிரதான நோக்கத்துடனே ஏறெடுக்கப்படுகிறதே அல்லாமல் தேவனிடத்தில் ஏறெடுக்கப்படவேயில்லை. இந்த உவமையிலுள்ள பரிசேயன் தன் வெளிப்புற வாழ்வில், ஒருவேளை மற்ற பாவிகளைப் போல பொல்லாதவனாய் இருந்திருக்கமாட்டான். ஆனால் தன்னுடைய ஆவிக்குரிய ஈடுபாடுகளை நினைத்துப் பெருமையடைந்ததை இயேசு வெறுத்தார். அப்பெருமையின் நிமித்தம் மற்றவர்களை அசட்டைப் பண்ணினான். விசுவாசிகள் இந்த ஆவிக்குரிய பெருமையினிமித்தமே, மற்ற விசுவாசிகளை எப்பொழுதும் நியாயந்தீர்க்கிறார்கள். தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்று இயேசு போதித்தார் (மத்தேயு 18:4). மனத்தாழ்மையே பரலோகத்தில் காணப்படும் மிகச்சிறந்த நற்குணம்.

3.அசுத்தம்: நம் கண்கள் மற்றும் நம் காதுகள் மூலமாய் நம்முடைய இருதயத்திற்குள் அசுத்தம் பிரதானமாய் நுழைகின்றது. பின்பு இந்த அசுத்தம் நம் இருதயத்திலிருந்து வெளிவந்து, சரீரத்தின் பல்வேறு அவயவங்கள் மூலமாய் வெளிப்படுகிறது – பிரதானமாய் நம்முடைய நாவுகள் மற்றும் நம்முடைய கண்கள் மூலமாய் வெளிப்படுகிறது. ஆகவே தூய்மையை நாடுகிற ஒவ்வொருவரும், தான் காண்பவைகளைக் குறித்தும், தான் கேட்பவைகளைக் குறித்தும் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். இயேசு வெகு அதிகமாய் அசுத்தத்தை வெறுத்தபடியால், சீஷர்களை நோக்கி, “உங்கள் அவயவங்களில் ஒன்றைக் கொண்டு பாவஞ்செய்வதைக் காட்டிலும், உங்கள் வலது கண்ணைப் பிடுங்கி எறிந்து போடவும், வலது கையைத் தறித்து எறிந்து போடவும் தயாராக இருக்க வேண்டும் (மத்தேயு 5:27-30)” எனக் கூறினார். வலது கையையோ அல்லது கண்ணையோ அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு மருத்துவர் எப்பொழுது பரிந்துரைப்பார்? இந்த அவயவங்கள் அகற்றப்படாவிட்டால் முழு சரீரமும் மரித்துவிடும் என்ற மோசமான நிலைமை வந்தால் மாத்திரமே! பாவத்தைக் குறித்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இது தான். பாவம் மிகவும் அபாயகரமானது. அது நம்முடைய ஜீவனுக்கே ஆபத்தை விளைவிக்கும்.

4.மற்றவர் தேவையை உணராமை: “ஒரு மனிதனை ஓய்வுநாளில் சொஸ்தமாக்க கூடாது என்று தேவாலயத்தின் தலைவர்கள் விரும்புகிறார்கள்” என்பதை அறிந்து, இயேசு கோபமடைந்தார். “அவர்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு கோபமடைந்தார்” (மாற்கு 3:5). யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக் கட்டளையிடப்பட்டுள்ளோம் (கலாத்தியர் 6:10). வாழ்வின் அடிப்படைத் தேவையிலுள்ள சகோதரர்களுக்கு, அவர்களுடைய தேவைகளைச் சந்திக்க எவ்விதத்திலும் உதவாதவர்கள், கடைசி நாளில் தம்முடைய சமூகத்தை விட்டு அகற்றப்படுவார்கள் என்று இயேசு போதித்தார் (மத்தேயு 25:41–46). வியாதியுற்ற விசுவாசிகளைக் குணப்படுத்த, நமக்கு குணமாக்கும் வரமில்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக நம்மெல்லாராலும் வியாதியுற்றவர்களைச் சந்தித்து, அவர்களை விசாரித்து, நிச்சயம் அவர்களை உற்சாகப்படுத்த முடியும். அதையே தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். தன் சகோதரனும், உடன் யூதனும், ஆபிரகாமின் குமாரனுமான லாசருவை விசாரியாததினாலேயே, ஐசுவரியவான் பாதாளத்திலே தள்ளப்பட்டான். நல்ல சமாரியன் உவமையிலே, காயப்பட்டு வழியருகே கிடந்த தங்கள் உடன் யூத சகோதரனுக்கு இரக்கஞ்செய்யாததினாலேயே, ஆசாரியனையும் லேவியனையும் மாய்மாலக்காரர்களாக இயேசு வெளியரங்கப் படுத்தினார்.

5.அவிசுவாசம்: அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயத்தைப் பற்றி எபிரெயர் 3:12-ல் வேதாகமம் உரைக்கிறது. இயேசு தம்முடைய சீஷர்களின் அவிசுவாசத்தினிமித்தம் ஏழு முறை அவர்களைக் கடிந்துகொண்டார் ( மத்தேயு 6:30; 8:26; 14:31; 16:8; 17:17-20; மாற்கு 16:14; லூக்கா 24:25). அவர் வேறு எதற்குமே தம்முடைய சீஷர்களை கடிந்து கொண்டதில்லை எனத் தோன்றுகிறது!! அவிசுவாசம் தேவனை அவமானப்படுத்துவதாகும், ஏனென்றால் அது, உலகத்திலுள்ள பொல்லாத தகப்பன் தன் பிள்ளைகளை விசாரித்து அவர்கள் தேவையை சந்திக்குமளவுக்குக்கூட, தேவன் தன் பிள்ளைகளை விசாரிக்கவோ அவர்கள் தேவையை சந்திக்கவோ மாட்டார் என்று சொல்வதைப் போன்றதாகும். பரலோகத்திலிருக்கிற அன்புள்ள தகப்பன் மீதும் அவருடைய வார்த்தையில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அற்புதமான வாக்குத்தத்தங்கள் மீதும் விசுவாசம் வைக்கும்பொழுது மட்டுமே மன அழுத்தம் (Depression), கெட்ட மனநிலை (Bad moods), அதைரியம் (Discouragement) ஆகியவற்றின் மீது நமக்கு வெற்றி கிடைக்கும். இரண்டு முறை இயேசு வியந்ததைக் குறித்து வேதாகமத்தில் வாசிக்கிறோம் – ஒரு முறை விசுவாசத்தைப் பார்த்த பொழுது, மற்றொரு முறை அவிசுவாசத்தைப் பார்த்த பொழுது!! (மத்தேயு 8:10; மாற்கு 6:6). இயேசு ஜனங்களிடத்தில் விசுவாசத்தைக் கண்டபொழுதெல்லாம் உற்சாகமடைந்தார். ஜனங்கள் ஒரு அன்புள்ள பரமபிதாவை நம்ப விருப்பமில்லாதபோதோ, அவர் ஏமாற்றமடைந்தார்.