“பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” என்ற கட்டளையை 2கொரிந்தியர் 7:1-இல் நாம் வாசிக்கிறோம். ஆகவே, கடந்த வருடத்தைவிட இன்று நம்முடைய பரிசுத்தம் அதிக பூரணத்திற்குள் வளரவில்லையென்றால், நாம் தேவனுக்குப் போதுமான அளவு பயந்து வாழவில்லை என்றே நிரூபணமாகிறது. நாம் சகோதரர்களின் காவலாளராயிருக்கிறபடியால், மூப்பர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் இவ்விஷயத்தில் உதவி செய்ய வேண்டும். ஆகவேதான், ஒவ்வொரு சபையிலும் ஒன்றிற்கு மேற்பட்ட மூப்பர்களை தேவன் நியமனம் செய்கிறார்! “நாம் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு, நாள்தோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்ல” வேண்டுமென எபிரெயர் 3:13 கூறுகிறது. இவ்வாறாக, நாம் வஞ்சிக்கப்படாமல் இருப்பதற்கு, ஒருவருக்கொருவர் உதவிசெய்திட முடியும்.
ஏசாயா 13:3-இல், கர்த்தருடைய ஆவியானவர், இயேசுவை “கர்த்தருக்கு பயப்படுகிற பயத்திற்கு உணர்வுள்ளவராயிருக்கும்படிச் செய்தார்” எனக் காண்கிறோம். பரிசுத்தாவியானவருக்கு நாம் இடம் கொடுத்தால், நம்மையும் தேவபயத்திற்கு உணர்வுள்ளவர்களாய் அவர் மாற்றுவார்! நாம் மெய்யாகவே பரிசுத்தாவியினால் நிறைந்திருந்தால், தேவபயத்தால் நிறைந்திருப்போம்! தேவன் எப்போதுமே நம் பட்சத்தில் இருக்கிறார். பரிசுத்தாவியால் நாம் நிரப்பப்பட வேண்டும் என்று நாம் விரும்புவதைக் காட்டிலும், நம்மைப் பரிசுத்தாவியால் நிறைப்பதற்கு அவர் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்! நமக்கு எவ்வளவு பெலவீனங்கள் இருந்தாலும், நம்மில் யாரைக் கொண்டும் ஒரு பெரிய கிரியையை தேவன் செய்திட முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்மை நாமே தாழ்த்தி, அவருடைய முகத்தைத் தொடர்ச்சியாய்த் தேடுவதுதான்! நமது மாம்சத்திற்கு விரோதமாகவும், பிசாசுக்கு விரோதமாகவும் நின்றிட, தேவன் எப்போதும் நம் பட்சத்திலேயே இருக்கிறார்.
‘ஒருபோதும் சீஷத்துவத்தைக் கேட்காத’ வேறொரு இயேசு கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரசங்கிக்கப்படுகிறதும், ஜனங்களைப் பரிசுத்தமாக்காமல் 'போலி வரங்களை' வழங்கும்' வேறொரு ஆவி ஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதும், சுகத்தையும் செல்வச்செழிப்பையும் அறிவிக்கும் வேறொரு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறதுமான நாட்களில் இன்று நாம் வாழ்ந்துவருகிறோம். (2கொரிந்தியர் 11:4). ஆகவே, நம்முடைய காலத்தில், நாம் மெய்யான இயேசுவையும், மெய்யான பரிசுத்தாவியையும், தேவனுடைய கிருபையைப்பற்றிய மெய்யான சுவிசேஷத்தையும் உயர்த்திப் பிடிக்க உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
தன்னைத் தானே நியாயப்படுத்தாமல் மன்னிப்பு கேட்டல்:
நாம் நொறுங்குண்டவர்களும், நருங்குண்டவர்களும், ஆவியில் எளிமையுள்ளவர்களுமாய் இராவிட்டால், ஏதோ தவறு செய்துவிட்டதை நாம் உணர்ந்த மாத்திரத்தில், அதைக்குறித்து எல்லா மனத்தாழ்மையோடும் மன்னிப்பு கேட்பதற்குத் தயக்கம் உள்ளவர்களாயிருப்போம்!
மனுஷர்களில் பெரும்பாலோனோருக்கு மிகவும் கடினமான பத்து வார்த்தைகள் என்னவென்றால், “நான் வருந்துகிறேன். அது என்னுடைய தவறு தான். தயவு செய்து என்னை மன்னியுங்கள்” ("I am Sorry. That was my mistake. Please forgive me”) என்பவைகளே ஆகும்.
உடைக்கப்படாத ஓர் ஆவியானது, நாம் மன்னிப்பு கேட்கும்போது, நம்மை நியாயப்படுத்தவும் செய்துவிடும்! ஆனால், ஏதாவது ஒரு வகையில் தன்னை நியாயப்படுத்திக்கொண்டு மன்னிப்புக் கேட்பது, உண்மையில் மன்னிப்புக் கேட்பதாகவே ஆகாது! நம்முடைய மன்னிப்பு கேட்பதில் தன்னை நியாயப்படுத்தும் செயலின் ஒரு சிறு வாசனை இருந்தாலும் நாம் இன்னமும் நொறுங்கவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். தன்னை நியாயப்படுத்தும் செயலை பரிசேயர்களின் ஓர் அடையாளமாய் இயேசு கூறினார் (லூக்கா 16:15). நாம் செய்த எதோ ஒரு காரியம் தவறு என உணர்ந்தால், அதை உடனடியாக ஏற்றுக்கொண்டு, உடனடியாக சரிசெய்ய வேண்டும்! இவ்வாறு செய்வதற்கு ஒரு நொறுங்குண்ட மனிதனுக்கு யாதொரு சிரமமும் இருக்காது. நொறுங்காத மனிதனோ இந்த இரண்டையும் செய்யத் தாமதிப்பான். அப்படியே அவன் மன்னிப்புக் கேட்டாலும், வேறொருவரைக் குற்றம் சாட்டவும் செய்வான். ஆதாம் பாவம் செய்தபோது, விலக்கப்பட்ட கனியை, தான் புசித்ததை ஒத்துக்கொண்டான். ஆனால், அதை அவன் நியாயப்படுத்தி, தேவன் அவனுக்கு தந்த ஸ்திரீயே, தனக்கு அந்தக் கனியைக் கொடுத்தாள் என்றான். இவ்வாறாக, அவன் தன் மனைவியைக் குற்றம் சாட்டினான். அப்படிப்பட்ட மனைவியைக் கொடுத்ததற்காக தேவனையும் அவன் குற்றம் சாட்டினான். எந்த ஒரு பாவத்தையோ அல்லது தவறையோ அறிக்கை செய்வதற்கான வழி அது அல்ல!
ஆனால், தாவீது தன் பாவத்தை சங்கீதம் 51-ல் எவ்வாறு அறிக்கை செய்தார் என்பதைப் பாருங்கள். அதில் ‘தன்னை நியாயப்படுத்துதல்' என்ற வாசனை சிறிதுகூட வீசவில்லை. அதுதான், மெய்யாகவே நொறுங்குண்ட ஒரு மனிதனின் உண்மையான அடையாளம். நீங்கள் யாவருமே 51-ம் சங்கீதத்தை ஆழமாக தியானித்து, நொறுங்குதல் என்பது உண்மையில் என்ன என்றும், உங்கள் பாவங்களை எவ்வாறு அறிக்கை செய்யவேண்டும் என்றும் அறிந்துகொள்ள தேவனைத் தேடுங்கள்! மேலும், உங்களை நியாயப்படுத்துவதற்காக ஒரு பொய் சொல்லும் நிலைகூட ஏற்படலாம். அந்த பொய் வெகு சிறிதான அளவில் ‘மிகைப்படுத்தி பேசியோ' அல்லது உங்களை 'நல்ல வெளிச்சத்தில் காண்பிக்கும் பொருட்டு' சில நிகழ்ச்சிகளை மறைத்தோ பேசுவதாக இருந்திட முடியும். ஒரு பொய் சொல்லுவது எளிது. ஆனால் ஒரே ஒரு பொய்' சொல்லுவது கடினம்! ஏனென்றால் நீங்கள் ஒரு பொய் சொன்னவுடன், அந்த முதல் பொய்யை நிலைநிறுத்துவதற்கு இன்னும் அதிகமான பொய்கள் சொல்ல நேரிடும்! நாம் பொய் சொல்வதை வெறுத்து, உண்மையை முழு இருதயமாய் நேசிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நம்முடைய அபிஷேகத்தை நாம் இழப்போம்! தேவன் நம் ஜீவியத்தின்மீது கொண்டிருக்கிற தயவுள்ள சித்தத்தையும் இழப்போம்! அது நாம் தாங்கிக் கொள்ளக்கூடிய எந்த இழப்பையும் விட, ஒரு கொடிய இழப்பாகும்.
வெளியரங்கமாக்கப்பட்டு அழிக்கப்படவேண்டிய எதோ ஒரு பெருமையை தேவன் நம்மிடத்தில் காணும்போது, ஏதோ ஒரு விதத்தில் நாம் இடறி விழுகிற ஒரு சிறிய சம்பவத்தை அவர் அனுமதிப்பார்! இதையே எசேக்கியேல் 3:20-இல், “நீதிமான் திரும்பும்படி.... நான் அவன் முன் இடறலை வைப்பேன்” என ஆண்டவர் கூறினார். நாம் வீழ்ச்சி அடையும்போது, (1) நம்மை விழச்செய்த ‘பெருமையை' நாம் ஒத்துக்கொள்கிறோமா? (2) நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை செய்கிறோமா? (3) தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துகிறோமா? (4) மனுஷரிடம் நாம் காரியங்களைச் சரிசெய்கிறோமா? என்று தேவன் நம்மைப் பரீட்சிப்பார். நாம் நம்மை நாமே நியாயந்தீர்த்து, இந்த நான்கையும் நாம் செய்தோமானால், நாம் நியாயந்தீர்க்கப்படுவதில்லை! ஆனால் நம்மை நாமே நியாயப்படுத்திக் கொண்டால், 'நொறுங்காத நிலையில் தேங்கியிருந்து' ஒரு நாளில் இந்த உலகத்தோடு ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவோம். (1கொரிந்தியர் 11:31,32).