WFTW Body: 

மத்தேயு 25:1-13 -ல் இயேசு பத்துக் கன்னிகைகளைப் பற்றி பேசினார். அவர்களில் யாரும் வேசிகளல்ல என்பதைக் கவனியுங்கள் (ஆவிக்குரிய வேசித்தனத்தின் வரையறையை யாக்கோபு 4:4 -ல் காண்க). அவர்கள் அனைவருமே கன்னிகைகள். வேறு வார்த்தைகளில் சொன்னால், மற்றவர்களுக்கு முன்பாக நற்சாட்சி பெற்றிருந்தார்கள். அவர்களுடைய விளக்குகளெல்லாம் எரிந்து கொண்டிருந்தன (மத்தேயு 5:16). அவர்களுடைய நற்கிரியைகளை மற்றவர்கள் கண்டார்கள். ஆயினும் இவர்களில் ஐந்து கன்னிகைகள் மட்டுமே புத்தியுள்ளவர்கள். ஆனால் தொடக்கத்தில் இந்தக் காரியம் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. அவர்களில் ஐந்து கன்னிகைகள் மட்டுமே தங்கள் குடுவைகளில் (flasks) எண்ணெய் கொண்டுபோனார்கள் (மத்தேயு 25:4).

அந்தக் குடுவையிலுள்ள எண்ணெய், எரிகிற விளக்குத் தெரிகிறதுபோல இரவில் கண்களுக்குத் தெரிவதில்லை. தேவனுக்கு முன்பாக இருக்கிறதும், இந்த உலகத்திலுள்ள அந்தகாரத்தினால் மனிதர்களால் பார்க்க முடியாததுமான நம்முடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி அது பேசுகிறது. நம்மெல்லாருக்கும் ஒரு குடுவை இருக்கிறது. அந்தக் குடுவையில் எவ்வளவாவது எண்ணெய் இருக்கிறதா இல்லையா என்பதுதான் நமக்குக் கேள்வி.

எண்ணெய் பரிசுத்த ஆவியானவரின் அடையாளமாக வேதாகமம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணெய், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஆவியோடு தொடர்புகொண்டு கொடுக்கிற தேவனுடைய ஜீவனாகும். அந்தரங்கத்தில் இந்த எண்ணெய் பெற்றிருக்கிற வாழ்க்கையின் வெளியரங்கமான வெளிப்பாடு ஒளியாகும். வெறுமனே தங்கள் வெளிப்புறமான சாட்சியைக் குறித்தே அதிக கரிசனை உடையவர்களாய் அநேகர் இருக்கிறார்கள். இது அவர்களின் மதியீனம். வெளிப்புறமான ஒளி மட்டுமே நமக்கு போதாது என்பதைச் சோதனை நேரத்திலும் பிரச்சனை நேரத்திலும் நாம் அறிந்துகொள்கிறோம். வெற்றிகரமாக நம்மை நடத்திச்செல்லத் திவ்விய சுபாவம் கொண்ட ஒரு அந்தரங்க வாழ்க்கை நமக்குத் தேவைப்படுகிறது.

நீங்கள் ஒரு நெருக்கடியின் காலத்தில் பெலவீனமாக இருந்தால், உண்மையில் நீங்கள் பெலவீனமானவர்கள் (நீதிமொழிகள் 24:10). நாம் எவ்வளவு வலிமையானவர்கள் அல்லது பெலவீனமானவர்கள் என்பதை வாழ்க்கையின் நெருக்கடிகள் நமக்குக் காட்டுகின்றது. மணவாளன் தம்முடைய வருகையைத் தாமதித்ததே இந்த உவமையின் நெருக்கடி. நம்முடைய ஆவிக்குரிய தன்மையின் யதார்த்தத்தை “காலமே” நிரூபிக்கும்.

முடிவுபரியந்தம் விசுவாசத்தில் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். நம்முடைய அந்தரங்க வாழ்க்கையில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதையும் "காலமே" நிரூபிக்கும். சீக்கிரத்தில் முளைக்கிற விதைகளைப் போல அநேகர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையில் உண்மையில்லை. அவர்களுடைய இருதயங்களில் ஆழமான மண் இல்லை (மாற்கு 4:5).

புதிய விசுவாசிகளுடைய ஆவிக்குரிய தன்மையைக் குறித்தோ முழு இருதயத் தன்மையைக் குறித்தோ அறிந்துகொள்வது கடினமாகும். நாம் பொறுமையோடு காத்திருந்தால், "காலம்" எல்லாவற்றையும் வெளிப்படுத்தும். நம்முடைய அந்தரங்க வாழ்க்கையில், நம்மைச் சுற்றியுள்ள ஜனங்கள் பார்க்க முடியாத நம்முடைய எண்ணங்களிலும், மனப்பான்மைகளிலும் நோக்கங்களிலும், தேவனுக்கு முன்பாக தூய்மையும் உண்மையும் பெற்றிருப்பதே கிறிஸ்துவின் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவதற்குரிய வழியாகும். இதை நாம் பெற்றிருக்காமல், கிறிஸ்துவின் வருகைக்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோம் என்று நினைத்தால், நம்மை நாமே வஞ்சித்துக் கொள்கிறோம்.