நம் சத்துருக்களுக்குத் தாம் சத்துருவாக இருப்பதாக தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் (யாத்திராகமம் 23:22). பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேலரின் சத்துருக்கள் எல்லாரும் மனுஷர்களாயிருந்தார்கள். இன்று சாத்தானும் (அவனது பொல்லாத ஆவிகளும்) நமது மாம்சத்தில் உள்ள இச்சைகளும் மட்டுமே நமக்கு சத்துருக்கள். நாம் மாம்சத்துடனும் இரத்தத்துடனும் போராடக் கூடாது (எபேசியர் 6:12). மனுஷருடன் ஒருபோதும் சண்டையிடப்போவதில்லை என்று நீங்கள் தீர்மானம் செய்தால் மட்டுமே தேவன் உங்களுக்காகப் போராடுவார். சாத்தானுக்கு விரோதமாக தேவன் எப்போதும் உங்கள் பட்சத்திலே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பேதுருவைப் புடைக்க சாத்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டது, ஏனென்றால் தேவன் பேதுரு மீது அத்தகைய நம்பிக்கை வைத்திருந்தார்; மேலும் அவனுக்காக ஒரு பெரிய ஊழியத்தை வைத்திருந்தார். ஆனால், பேதுருவைப் புடைத்தெடுக்கும் போது அவனுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு இயேசு அவனுக்காக ஜெபித்தார். நீங்கள் சாத்தானால் புடைக்கப்படும் போதெல்லாம் இயேசு உங்களுக்காக ஜெபிப்பார் என்பதை அறிவது ஒரு பெரிய ஆறுதல்.
ஒரு வீடு தீப்பிடித்து எரியும் போது, ஜனங்கள் அந்த வீட்டிற்குள் இருக்கும் மிகவும் மதிப்புமிக்க பொருளையே காப்பாற்றிட விரும்புவார்கள். உள்ளே ஒரு குழந்தை இருந்தால், பெற்றோர்கள் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற விரும்புவார்களே அல்லாமல் பழைய செய்தித்தாள்களைக் காப்பாற்ற விரும்ப மாட்டார்கள். அதேபோல, பேதுரு அக்கினியின் வழியாகச் சென்றபோது, அவனுடைய விசுவாசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றே இயேசு ஜெபித்தார். அது மட்டுமே மிகவும் மதிப்புமிக்கது. மீதமுள்ளவை அனைத்தும் பழைய செய்தித்தாள்கள் போலவே பயனற்றவை.
நீங்கள் சாத்தானால் புடைக்கப்படும் போது, உங்கள் விசுவாசம் ஒருபோதும் ஒழிந்துபோகக்கூடாது. உங்களுக்கு விசுவாசம் இருந்தால், கடுமையான சோதனையின் மத்தியில், “என் பரலோகத் தகப்பன் என்னை மிகவும் ஆழமாக நேசிக்கிறார், அவர் பூமியிலும் பரலோகத்திலும் ஆளுகை செய்கிறார். இயேசு கிறிஸ்து சாத்தானை சிலுவையில் தோற்கடித்திருக்கிறார். சாத்தான் ஒரு பொய்யன், என் வாழ்க்கையில் அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. சகலமும் என் நன்மைக்காகவே நடந்தேறும்படி தேவன் செய்கிறார்" என்று நீங்கள் அறிக்கைசெய்வீர்கள். ஒழிந்துபோகாத விசுவாசத்தைக் கொண்ட ஒரு மனுஷனின் அறிக்கை இதுவாகவேயிருக்கும். இயேசு பேதுருவிடம், அவன் புடைத்தெடுக்கப்பட்ட பிறகு, அவன் மனந்திரும்பி தன் சகோதரர்களை ஸ்திரப்படுத்த முடியும் என்று கூறினார் (லூக்கா 22:31,32). நாம் சோதிக்கப்படும்போது நமது விசுவாசம் ஒழிந்துபோய்விட்டால் மற்றவர்களை நம்மால் ஸ்திரப்படுத்த முடியாது.
"சாத்தான்" (மத்தேயு 16:23) என்று அழைக்கப்பட்டபோதும் கூட, பேதுரு மனம் புண்படாததால், பேதுருவுடன் இயேசு அதிக காரியங்களைச் செய்ய முடிந்தது. ஆனால் பெத்தானியாவில் இயேசு கொடுத்த ஒரு சிறிய திருத்தத்தால் யூதாஸ் மனம் புண்பட்டபடியால் அவனுக்காக அவர் ஜெபிக்கவில்லை (யோவான் 12:4-8 உடன் மத்தேயு 26:8-15 ஐப் படிக்கவும்).
கர்த்தர் உங்களைத் திருத்தும்போது நீங்கள் மனம் புண்படக்கூடாது. உங்கள் ஒவ்வொருவரின் மூலமாகவும் நிறைவேற்ற தேவன் ஒரு பெரிய நோக்கத்தை வைத்திருக்கிறார். நோக்கம் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் சாத்தானால் புடைக்கப்பட தேவன் உங்களை அனுமதிப்பார். ஆனால் நீங்கள் ஒவ்வொரு சோதனையிலும் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் வெளியே வருவீர்கள்.