இப்பூமியிலே நாம் கடந்து செல்லும் எல்லாப் பாடுகளும் 'கொஞ்ச காலம்' மாத்திரமே (1பேதுரு 1:6) என்று அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடையமுதலாம் நிருபத்திலே கூறுகிறார். நித்தியத்தின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, 100 வருடங்களும் ஒரு கணப்பொழுதாகவே உள்ளது. ஆகவே,நாம் எல்லாவித பாடுகள் மத்தியிலும் இந்த நித்திய கண்ணோட்டம் (அணுகுமுறை) உடையவர்களாகவேதான் எப்போதும் இருக்க வேண்டும். எல்லாஅப்போஸ்தலர்களும் இதே கண்ணோட்டம் உடையவர்களாகவே இருந்தார்கள். யாக்கோபு இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, நம் ஜீவன் கொஞ்சம் காலம்தோன்றி மறைகிற புகையைப் போல் இருக்கிறது என்கிறார் (யாக்கோபு 4:14). பவுல் இதை இலேசான உபத்திரவம் என்றே குறிப்பிடுகிறார் (2கொரிந்தியர் 4:17). பேதுருவின் முதல் நிருபத்தின் கருப்பொருளே 'மெய்யான தேவக் கிருபை' என்பதை நாம் நினைவிற்கொள்வோமாக. ஆகவே, நாம் முதலாவதாக அறிந்து கொள்ள வேண்டிய காரியங்களில் ஒன்று என்னவென்றால், மெய்யான தேவக் கிருபையைப் பெறுகிற யாவரும், பலவிதமான பாடுகளினாலே மிகவும்நெருக்கப்படுவதென்பது ஒரு சாதாரண காரியம் என்பதாகும்.
"பொன்னானது அக்கினியினாலே புடமிடப்படுவதைப்" போலவே, உங்கள் விசுவாசத்தின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதே, பாடுகளின் நோக்கமாக இருக்கிறது. நிலத்திற்கடியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொன்னானது சுத்தமானதாக இருப்பதில்லை. அக்கினியில் போடுவதுதான் அதைச்சுத்திகரிப்பதற்கான வழியாகும். வெறும் சோப்பையும், தண்ணீரையும் கொண்டு அழுத்தித் தேய்ப்பதின் மூலம் அதைச் சுத்திகரித்துவிட முடியாது. அது வெறும் அழுக்கை மட்டுமே அகற்றும். ஆனால், அதில் கலந்து இருக்கும் உலோகக் கலவைகளை அகற்ற வேண்டுமானால், அது அக்கினியில் போடப்படவேண்டும். அப்போதுதான் அதிலிருக்கும் உலோகக் கலவைகள் எல்லாம் உருகி சுத்தமான பொன் வெளிவரும். ஒருவேளை நீங்கள் கடந்து செல்லும்பாடுகள் மிகவும் உக்கிரமாக இருக்கக் கூடும். அது உங்களைக் காயப்படுத்துகிறது. நீங்கள் அக்கினியில் இருப்பதைப் போல உணருகிறீர்கள். அதனுடைய நோக்கமெல்லாம் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் மாசுக்கள் எல்லாவற்றையும் அகற்ற வேண்டும் என்பதுதான். உதாரணமாக, சில தேசங்களில் கிறிஸ்தவர்கள் உபத்திரவப்படுத்தப்பட்டு, அவர்களுடைய ஆஸ்திகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன் விளைவு என்னவாயிற்று? அவர்கள் மேன்மையானமோட்சப் பயணிகளாக மாறி விட்டனர். அவர்களிடத்தில் இருந்ததெல்லாம் எடுபட்டுப் போனதால், தங்கள் ஆஸ்திகளின் மேல் இருந்த பற்று குறைந்துபோனது. ஆனால், எங்கு உபத்திரவம் இல்லையோ, அங்கெல்லாம் மிகச் சிறந்த விசுவாசிகள் கூட தங்கள் ஆஸ்திகள் மீதும், உடைமைகள் மீதும் மிகுந்த பற்றுடன் வாழுகிறவர்களாக இருப்பார்கள். நாம் அதிலெல்லாம் நமக்குப் பற்று இல்லை என்று கற்பனை செய்து கொண்டு. நம்மை நாமே வஞ்சித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தேவன் ஒருநாள் நம் தேசத்திலும் உபத்திரவத்தை அனுப்பலாம். அப்போது நாமும் சுத்திகரிக்கப்படுவோம்.
கம்யூனிசக்காரர்களால் ரஷ்யா ஆட்சி செய்யப்பட்ட போது, கிறிஸ்துவர்களால் கல்லூரிப் படிப்பையோ, நல்ல வேலையையோ பெற முடியவில்லை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தெருக்களைச் சுத்தம் செய்வது போன்ற கீழ்த்தரமான வேலைகளையே அவர்களால் பெற முடிந்தது. அத்தகைய சூழ்நிலைகளில் நாம் இருக்கும்போது, உயர்ந்த பதவிகளினாலும், பெரிய வேலைகளினாலும் வரும் கனம் மற்றும் தன்னை முக்கியமானவனாக எண்ணும் உணர்வு போன்றவற்றிலிருந்து நம்மால் எளிதில் விடுபட முடியும். பொன்னிலுள்ள எல்லா மாசுக்களும் எரிக்கப்பட்டு, உண்மையாகவே நாம் சுத்தமாக்கப்படுகிறோம். ஆகவேதான் இவ்வுலகில் இன்று எந்தெந்த இடங்களிலெல்லாம் உபத்திரவம் உண்டோ, அங்கெல்லாம் நேர்த்தியான விசுவாசிகளைக் காணமுடியும். அதினிமித்தமே இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் வேண்டாம் என்று நான் ஒரு போதும் ஜெபித்ததே இல்லை. அப்படிச் செய்தால், சபை சுத்திகரிக்கப்படுவதற்கு விரோதமாக ஜெபிக்கிறவனாக இருப்பேன். உபத்திரவம் வேண்டும் என்றும் ஜெபிக்க மாட்டேன்,வேண்டாமென்றும் ஜெபிக்க மாட்டேன். அந்தந்த காலத்திற்கு சபைக்கு எது மிகச் சிறந்தது எனக் கர்த்தர் அறிவார். ஆகவே அவரே அதைத் தீர்மானிக்கும்படி விட்டுவிடுகிறேன். எதுவாயிருந்தாலும் எனக்குச் சம்மதம்தான். மெய்யான தேவக் கிருபையைப் பெறும் போது, நம் அனைவரின் மனப்பான்மையும் இப்படித்தான் இருக்கும்.
மேலும் இவை யாவும் கிறிஸ்து திரும்ப வரும்போது, உங்களுக்குப் புகழ்ச்சியையும், கனத்தையும் மகிமையையும் உண்டாக்கும் என்று பேதுரு கூறுகிறார். இந்தப் பாடுகளின் மத்தியில், நாம் இயேசுவைக் காணாவிட்டாலும், நாம் அவரிடத்தில் அன்பு கூர்ந்து, அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாத சந்தோஷத்தினால் களிகூருகிறோம். பேதுரு சரீரப் பிரகாரமான இயேசுவைக் கண்டிருந்தார். ஆனால் "காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்" (யோவான் 20:29) என்று இயேசு கூறினார். பேதுருவைப் போலவே சரீரப் பிரகாரமாக இயேசுவைப் பார்த்தவர்களைக் காட்டிலும், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களாகிய நாம் அதிக பாக்கியவான்கள் என்னும் இந்த வசனத்தை நம்மில் எத்தனை பேர் விசுவாசிக்கிறோம் என்று எனக்குத் தெரியவில்லை. இயேசு அப்படிச் சொல்லியிருப்பதால், இதை நான் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். பாடுகளின் வழியாய் உண்மையாய்க் கடந்து போகையில், நாம் விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பை அடைந்து கொள்வதாக பேதுரு தொடர்ந்து கூறுகிறார் (1பேதுரு1:9). நரகத்திலிருந்து இரட்சிக்கப்படுவதைப் பார்க்கிலும், நமது ஆத்தும இரட்சிப்பைக் குறித்தே அப்போஸ்தலர்கள் அதிகமாய்ப் பேசினர்.
நமது ஆத்துமா, ஆதாமிடமிருந்து சுயநலத்தையும், பெருமையையும் மற்றும் பலவிதத் தீமைகளையும் சுதந்தரித்துள்ளது. உலகப் பொருளின்மேலுள்ள பற்று, கனத்தை நேசிப்பது மற்றும் சுயத்தை மையமாக கொண்டு வாழ்வது போன்ற எல்லாவிதமான பொல்லாப்புகளிலிருந்தும் நாம் இரட்சிக்கப்பட வேண்டியது அவசியமாகும். உக்கிரமான பாடுகளும், உபத்திரவங்களும், நாம் அநேகவிதமான தீமைகளிலிருந்து விடுதலையாவதற்குப் பேருதவி புரிகின்றன.
மனநிலை குன்றிய பிள்ளையை உடையவர்களைக் குறித்ததான பாடுகளை சிந்தித்துப் பாருங்கள். அது ஒரு துர்ப்பாக்கியம் என்று சிலர் நினைக்கிறார்கள். தங்களுக்கு அப்படிபட்ட ஒரு பிள்ளை வேண்டும் என்று நம்மில் ஒருவரும் ஜெபிக்கமாட்டோம். ஆனால், தம்மை நேசிக்கிற ஒரு குடும்பமானது அத்தகைய குழந்தையைப் பெறுவதற்கு அவர் ஒருவேளை அனுமதிப்பாரானால், அதையும் தேவன் அவர்களுடைய நன்மைக்காக மாற்றுவார் என்பதை நாம் நிச்சயப்படுத்தி கொள்ளலாம். அப்படிபட்ட குழந்தைகளுடன் பிறந்த மற்ற பிள்ளைகளிடத்தில், பிற குடும்பங்களில் உள்ள பிள்ளைகளிடத்தில் இல்லாத அளவுக்குக் கனிவும், தியாகமுள்ள ஆவியுடன் கூடிய சேவையும் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். புத்திசாலித்தனமும், திறமையும் கொண்ட பிள்ளைகளை உடைய பெற்றோர்கள், அடிக்கடி அவர்களை அறியாமலே அவர்களுடைய இருதயங்களுக்குள் பெருமை அடைந்து விடுவதுண்டு. பெருமை என்பது பரத்திற்குரியதல்ல; அது நரகத்திற்கு உரியதாகும். ஆனால், துரதிருஷ்டவசமாக, அநேக விசுவாசிகளின் குடும்பங்களிலே பெருமை காணப்படுகின்றது.
தமது பிள்ளைகள் எல்லாருமே பாடுகளை எதிர்கொள்ளும்படி தேவன் அனுமதிக்கிறார். தம்முடைய அனந்த ஞானத்தினாலே, அவற்றை எப்போது அனுப்பலாம் என்பதையும் அவர் துல்லியமாக அறிந்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் அவர் அனுமதித்த பாடுகளில் ஒன்றில் கூட அவர் ஒரு சிறுதவறும் செய்யவில்லை என்பதை கர்த்தருக்கு முன்பாக நாம் நிற்கும் நாளிலே அறிந்து கொள்வோம். அவர் அனுமதித்த ஒவ்வொரு பாடும், நம்மைப் பொன்னைப் போலச் சுத்திகரிக்கப்பதற்காகவே என்பதை அந்நாளிலே நாம் கண்டறிவோம். நீங்கள் இவற்றையெல்லாம் விசுவாசித்தால், எல்லா நேரத்திலும் தேவனைத் துதிப்பீர்கள். உங்கள் பாடுகளின் மத்தியிலும் நீங்கள் சொல்லிமுடியாத சந்தோஷத்தை உடையவர்களாய் இருப்பீர்கள். அதன் விளைவாக உங்களது ஆத்துமா இரட்சிப்படையும். இந்த இரட்சிப்பைக் குறித்து அறிந்து கொள்வதற்காக, கடந்த நாட்களில் தீர்க்கதரிசிகள் கருத்தாய் ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களால் அது முடியாமற்போனது. இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதர்களும் ஆசையாயிருந்தார்கள் (1பேதுரு 1:12). பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவர், இந்தச் சுவிஷேத்தை அறிவிப்பதற்காக ஜனங்களை அபிஷேகம் செய்திருக்கின்றார். ஆதலால்,இப்படிப்பட்ட அற்புதமான சுவிசேஷத்தை நாம் பெற்றிருக்கிறபடியாலும், கொஞ்சகாலம் மட்டுமே இவ்விதமான பாடுகளை நாம் அனுபவிக்க வேண்டியவர்களாக இருக்கிறபடியாலும், கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கியவர்களாய், நம்முடைய மனங்களை கூர்மையாக்கி, நாம் எதிர்கொள்ளுகிற பாடுகளைக் கண்டு கலங்காதவர்களாய் இருக்க வேண்டும் என பேதுரு சொல்கின்றார் (1பேதுரு 1:13).