WFTW Body: 

விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் மட்டுமே வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக்கொள்ள முடியும் என்று எபிரெயர் 6:12-ல் வாசிக்கிறோம். எனவே விசுவாசம் மட்டுமே போதாது. தேவனுடைய வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக்கொள்ள தேவனுடைய சித்தத்தைச் செய்தபின் பொறுமை தேவையாயிருக்கிறது என்று அதையே எபிரெயர் 10:36 வசனமும் கூறுகிறது. NASB மேற்கண்ட வசனங்களில் 'பொறுமை' என்ற வார்த்தையை 'சகிப்புத்தன்மை' என்று மொழிபெயர்க்கிறது - அதுவே சரியாகவும் உள்ளது.

நமக்குப் பிரச்சனைகளை உண்டாக்கும் எவருக்கும் எதிராக நமக்கு எந்த புகார்களும் இல்லை, ஏனென்றால் மற்றவர்கள் நமக்குச் செய்யும் அனைத்தையும் தேவன் நம் நன்மைக்காகவே நடத்துகிறார் (ரோமர் 8:28). ரோமர் 8:28 நீர் வடிகட்டி போன்றது. ஜனங்கள் அதில் எந்த அழுக்கு நீரை ஊற்றினாலும், வெளியேறும் நீர் முற்றிலும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்கும். மற்றவர்கள் நமக்கு என்ன செய்தாலும், நன்மையோ தீமையோ - அவர்கள் நம்மைப் புகழ்ந்தாலும் அல்லது சபித்தாலும், அவர்கள் நமக்கு உதவி செய்தாலும் அல்லது நமக்கு தீங்கு செய்தாலும் - ரோமர் 8:28-ஐ நாம் விசுவாசித்தால், அதிலிருந்து நாம் பெறுவது எப்போதும் நல்லதாகவே இருக்கும்! ஆனால் நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசம் என்பது மின்சாரம் மூலம் இயங்கும் நீர் வடிகட்டிக்கு சுவிட்ச்(switch) போடுவது போன்றது. விசுவாசம் என்னும் மின்சாரம் அதன் வழியாகச் செல்லாமல் அது இயங்காது.

'முழுமை' என்ற பொருள்கொள்ளும் எபிரெய வார்த்தையான (‘revayyah’)'ரேவய்யா' பழைய ஏற்பாட்டில் இரண்டு முறை மட்டுமே வருகிறது:

(1) சங்கீதம் 23:5 – “ஓடி வழிகிறது” (KJV), “நிரம்பி வழிகிறது” (NASB)

(2) சங்கீதம் 66:12 - "செல்வம் நிறைந்த இடம்" (KJV), "மிகுதி" (NASB)

இரண்டு பத்திகளையும் ஒன்றாக இணைத்து, பின்வரும் ஆவிக்குரிய உண்மையைப் பெறுகிறோம்: தேவன் நம் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்த பிறகு (சங்கீதம் 23:5), அவர் நம்மை வலைக்குள் (நெருக்கமான சூழ்நிலைகளுக்குள்) கொண்டு வந்து, வருத்தமான பாரத்தை (ஆனால் அது நாம் தாங்கக்கூடியதை விட அதிகமான பாரம் அல்ல) நம் மீது சுமத்துகிறார்; மனுஷர்களை நம் தலைக்கு மேல் ஏறிப்போகப்பண்ணி, நெருப்பிலும் தண்ணீரிலும் நம்மை அழைத்துச் செல்கிறார் (சங்கீதம் 66:11,12). இதன் மூலமே, நம் பாத்திரம் நிரம்பி வழியும் இடத்திற்கு நம்மைக் கொண்டுவருகிறார் (சங்கீதம் 66:12 மற்றும் சங்கீதம் 23:5). எனவே அபிஷேகத்திற்கும் நிரம்பி வழிவதற்கும் இடையில் நாம் கடக்க வேண்டிய பல சோதனைகள் உள்ளன. அப்போதுதான் நிரம்பி வழியும் ஜீவியத்துக்கு நாம் வருவோம்.

அதனால் நமக்கு எந்த சோதனை வந்தாலும் - மற்றவர்களின் தவறுகளோ அல்லது தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் வேண்டுமென்றே செய்யும் தீய செயல்களோ அல்லது தற்செயலாக நடப்பது போன்ற தோற்றத்தைக்கொண்ட காரியங்களோ - நாம் அனைத்திலும் மகிழ்ச்சியடைய முடியும், ஏனென்றால் அவை அனைத்தையும் தேவன் நம் நன்மைக்காகவே நடத்துவார். அதாவது, (ரோமர் 8:29 சொல்வது போல்) நம்மை மேலும் கிறிஸ்துவைப் போல மாற்றுவதற்காக நடத்துவார்.

தேவனுடைய ஞானமும், வல்லமையும், அன்பும் நம் வாழ்வில் இத்தகைய சூழ்நிலைகளை அனுமதிப்பது மட்டுமல்லாமல், உண்மையில் நம்முடைய மிகச் சிறந்த நன்மைக்கென்று அவையெல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வடிவமைக்கிறதாயும் இருக்கிறது. தேவனுடைய அந்த ஞானத்தின்மீதும், வல்லமையின்மீதும், அன்பின்மீதும் வைக்கும் முழு நம்பிக்கையே விசுவாசமாகும்.

குறிப்பு: KJV(King James Version), NASB(New American Standard Bible) என்பவை ஆங்கில வேதாகமத்தின் வெவ்வேறு மொழிபெயர்ப்புகள்.