WFTW Body: 

வேதாகம நிருபங்களில் வழங்கப்பட்ட கடைசி வாக்குத்தத்தங்களில் ஒன்று "கர்த்தர் வழுவாதபடி உங்களைக் காக்க வல்லவர்!" (யூதா 1:24) என்பதாகும். ஆம், உண்மைதான். நம்மை வழுவாதபடி காக்க, அவர் மெய்யாகவே வல்லவர்தான்! ஆனால் நம்மை முற்றிலுமாய் அவருக்கு ஒப்புக்கொடாத பட்சத்தில், நம்மை வழுவாதபடி காத்திட அவரால் இயலாது! ஏனெனில், அவர் தமது விருப்பத்தை எந்த மனிதனிடமும் கட்டாயமாய்த் திணிப்பதில்லை.

கிறிஸ்துவோடு விசுவாசிகளாகிய நமக்கிருக்கும் உறவானது, திருமணத்திற்காகக் காத்திருக்கும் நிச்சயிக்கப்பட்ட கன்னிக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது (2கொரிந்தியர் 11:2, வெளி 19:7). ஆகிலும், அன்று ஏவாளை சாத்தான் வஞ்சித்ததுபோலவே, இன்று நம்மையும் வஞ்சித்து, "கிறிஸ்துவைப் பற்றியிருக்கும் நமது பற்றைப் பறித்துக் கொள்வானோ?'' என பவுல், தான் பயந்திருந்ததாகக் கூறினார் (2கொரிந்தியர் 11:3). அன்று பரதீசிலிருந்த ஏவாள், சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, பரதீசிலிருந்தே தேவனால் துரத்தப்பட்டாள்! இன்றோ, கிறிஸ்துவுக்கென "திருமணநிச்சயம் செய்யப்பட்ட" நாம் பரதீசுக்குச் செல்ல இருக்கிறோம். இந்நிலையில், சாத்தான் "நம்மையும்" வஞ்சித்து விட்டால், நாம் ஒருபோதும் பரதீசுக்குச் சென்றடைய முடியாது!

மணவாட்டியானவள் உலகத்தோடும் பாவத்தோடும் வேசித்தனம் புரிந்தால், அவளைத் திருமணநிச்சயம் செய்த மணவாளன் அவளைத் திருமணம் செய்யக் கண்டிப்பாய் மறுத்துவிடுவார். இப்படிப்பட்ட வேசித்தனமான சபையே வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் பாபிலோன் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது! முடிவில், அந்த சபையை ஆண்டவர் புறக்கணித்துவிட்டார்.

நீங்கள் மெய்யாகவே ஆண்டவரை நேசிப்பவராய் இருந்தால், உங்களைச் சுற்றியுள்ள மற்ற விசுவாசிகள் உலகத்தோடும் பாவத்தோடும் வேசித்தனத்தில் களித்துக் கொண்டிருந்தாலும், நீங்களோ கர்த்தருக்கென உங்களைச் சுத்தமுள்ளவர்களாய்க் காத்துக்கொண்டு வாழ்வீர்கள்! கடைசி நாட்களில் "அநேகருடைய அன்பு தணிந்துபோகும்" என்று இயேசு எச்சரித்தார். (இந்த வசனம் விசுவாசிகளைக் குறித்தே கூறுகிறது. ஏனெனில், அவர்கள் மாத்திரமே ஆண்டவரிடத்தில் அன்புகூருபவர்கள்). இருப்பினும், "முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்" (மத்தேயு 24:12-13).

சாத்தான், நம்மெல்லோரையுமே வஞ்சிக்க வகைதேடுகிறான்! ஆனால் வேதாகமம் எச்சரிப்பது யாதெனில் "நாம் வஞ்சிக்கப்படுவதற்கு தேவனும் அனுமதி தருகிறார்!" என்பதுதான். ஆம், "நாமும் இரட்சிக்கப்படத்தக்கதாய் சத்தியத்தின்மேல் உள்ள அன்பை விட்டு விட்டால், பொய்யை விசுவாசிக்கிறவர்களாய்" மாறும் கதியை அடைவோம் (2தெசலோனிக்கேயர் 2:10-12).

தேவனுடைய வார்த்தையில் எழுதப்பட்டிருக்கும் சத்தியத்தை நாம் ஏற்றுக்கொண்டால், பரிசுத்த ஆவியானவர் நமக்குக் காண்பிக்கும் நம்முடைய ஜீவியத்திலுள்ள பாவங்களைக் குறித்த சத்தியத்தை நாம் நேர்மையாய் ஏற்றுக்கொண்டால், அந்த எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் இரட்சிக்கப்பட ஆவலுள்ளவர்களாயிருந்தால், நாம் ஒருபோதும் வஞ்சிக்கப்பட்ட மாட்டோம்.

ஆனால், தேவனுடைய வார்த்தையில் தெளிவாய் எழுதப்பட்டிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அல்லது பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட நாம் வாஞ்சிக்காவிட்டால், நாம் வஞ்சிக்கப்படவும் பொய்யை விசுவாசிக்கவும் தேவன் நம்மை அனுமதித்துவிடுவார். ஆம், இங்கு நாம் கோடிட்டு எழுதும் "நித்திய பாதுகாப்பு" என்ற உபதேசத்தில் மாத்திரம் அல்ல, மற்ற அநேகம் பகுதிகளிலும் வஞ்சிக்கப்பட விட்டுவிடுவார்!!

இப்போது காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக:

அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து நம் அனைத்து பாவங்களையும் மன்னித்தபடியால், நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்! ஆகவே அவருடைய கிருபையைக் கொண்டு நம் மனச்சாட்சியை எப்பொழுதும் சுத்தமுள்ளதாய்க் காத்துக்கொள்கிறோம்! நாம் அவரிடத்தில் அன்புகூர்ந்து முடிவு பரியந்தம் அவரைப் பின்பற்றுவோம்! ஆம், இவ்வாறாகவே நாம் நித்திய பாதுகாப்பு உடையவர்களாய் இருக்கிறோம்!!

இயேசுவைப் பின்பற்றும் அவருடைய ஒவ்வொரு சீஷனும் நித்திய நித்தியத்திற்கும் பாதுகாப்பு உடையவனாய் இருக்கிறான்!

ஆனால், தான் நிற்கிறேன் என எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவன்! (1கொரிந்தியர் 10:12)

கேட்பதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.