எலிசா, எலியாவின் மீதிருந்த அபிஷேகத்தின் மீது தாகங்கொண்டு, அதை இவ்வுலகிலுள்ள எதைக் காட்டிலும் அதிகமாக இச்சித்தான். இச்சமயத்தில், எலியா அவனை எவ்வாறெல்லாம் சோதித்தான் என்பதை 2ராஜாக்கள் 2:1-10 -ல் நாம் வாசிக்கிறோம். முதலில் அவன் எலிசாவை கில்காலிலேயே தங்கும்படி சொல்லிவிட்டு, முன்னே நகர்ந்தான். ஆனால் எலிசாவோ எலியா தன்னைவிட்டுப் போக மறுத்துவிட்டான். பின்பு எலியா அவனை பெத்தேலை நோக்கி மேற்கு முகமாக 15 மைலும், மீண்டுமாய் எரிகோவை நோக்கி 12 மைலும் திரும்பிவரச் செய்து, அங்கிருந்து யோர்தானின் கிழக்கே 5 மைலும் நடக்கும்படி செய்து, அதன் மூலமாக ஒவ்வொரு நிலையிலும் அவனுடைய விடாமுயற்சியையும், ஆர்வத்தையும் சோதித்தறிந்தான். முடிவில் எலியா தான் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக, தன்னிடத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்வதற்கு ஏதாவது காரியம் உண்டோவென எலிசாவிடம் கேட்டான். அதற்கு எலிசா, “எனக்கு ஒன்று மாத்திரந்தான் வேண்டும். அதற்காகத்தான் நான் உம்மை இவ்வளவு காலமாய்ப் பின்தொடர்ந்தேன். அதற்காகத்தான் நீர் என்னை உதறித்தள்ள முயன்ற போதும், உம்மை விடாமலிருந்தேன். உம்முடைய ஆவி எனக்கு இரட்டிப்பாக வேண்டும்” என்றான். எலிசா அபிஷேகத்திற்காக முழு இருதயமாய் ஏங்கினான். அதற்குக் குறைவான எதிலும் அவன் மனநிறைவு காண விரும்பவில்லை. அதன்படியே அவன் கேட்டதைப் பெற்றுக் கொண்டான்.
எலியா எலிசாவைச் சோதித்தது போலவே, நாமும் பரிசுத்த ஆவியின் முழுமையான அபிஷேகத்திற்குக் குறைவான ஒன்றைப் பெற்றுக் கொண்டு, அதிலேயே திருப்தி அடைந்து விடுகிறோமா என்று தேவன் நம்மைச் சோதித்தறியும்படி நடத்துகிறார் என நான் விசுவாசிக்கிறேன். நாம் ஒருவேளை குறைவானதிலே திருப்தி அடைவோமானால், அந்த அளவுக்குத்தான் பெற்றுக்கொள்வோம். தேவனுடைய அபிஷேகம் இல்லாமலேயே காரியங்கள் சுமூகமாக நடந்துவிடும் என்ற அற்பத் திருப்தியும், மெத்தனப்போக்கும் உடைய விசுவாசிக்கு தேவன் ஒருபோதும் அதைத் தருவதில்லை.
இதைவிட்டால் நமக்கு வேறு கதியில்லை எனவும், இதற்கு மேலாக வேறெதுவும் இல்லை எனவும், இதைப் பெற்றுக் கொள்வதற்காக எலிசா எலியாவைப் பின் தொடர்ந்து சென்றதைப் போலவும், “கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை நான் விடமாட்டேன்” என யாகோபைப் போல உத்தமத்துடன் சொல்லக் கூடியவர்களாகவும், உண்மையாகவே பேரார்வத்துடன் பரிசுத்த ஆவியின் வல்லமையை, இந்த உயிர்த்தெழுதலின் வல்லமையை, இச்சிக்கிறவர்களாகவும் இருக்கின்ற உணர்வு நமக்கு இருக்குமானால், நிச்சயமாகவே நாம் பெற்றுக் கொள்வோம். அப்பொழுது நாம் மெய்யாகவே, தேவனோடும், மனிதரோடும் வல்லமையுள்ள, இஸ்ரவேல்களாக இருப்போம்.
நம்முடைய ஜீவியங்களில் இந்த அபிஷேகம் எவ்வளவு அவசியமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ளும்படிக்கு, தேவன் பலவிதமான தோல்விகளையும், ஏமாற்றங்களையும் அடிக்கடி அனுமதிக்கிறார். நாம் உபதேசத்தில் சுவிசேஷ நோக்குடையவர்களாகவும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசஞ்செய்கிறார் என்று சொல்லிக் கொள்பவர்களாகவும் இருப்பதைப் பார்க்கிலும், தேவ ஆவியானவர் வல்லமையுடன் நம்மேல் தங்கியிருக்க வேண்டிய அவசியத்தை நாம் அறிந்து கொள்வதையே அவர் அதிகம் விரும்புகின்றார்.
அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்வதென்பது அவ்வளவு சாமானியமான விஷயமன்று. எலியா எலிசாவின் வேண்டுகோளைக் கேட்டவுடன், “ஓ, நீ ஒரு சாதாரண காரியத்தைத்தான் கேட்டிருக்கிறாய். நீ சும்மா இங்கே மண்டியிடு, நான் உன் தலைமீது கைவைத்தவுடன் நீ பெற்றுக் கொள்வாய்” என்று சொல்லவில்லை. இல்லை. எலியா எலிசாவிடம், “அரிதான காரியத்தைக் கேட்டாய்” என்று சொன்னான். ஆம், அது ஓர் அரிதான காரியந்தான். நாம் அதற்கென்று ஒரு விலைக்கிரயம் செலுத்த வேண்டும். அதற்காக நாம் இவ்வுலகிலுள்ள எல்லாவற்றையும் விட்டுவிட மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
நாம் இப்பூவுலகிலுள்ள பணம், சொகுசு, இன்பம் ஆகியவற்றை விடவும், கீர்த்தி, பிரசித்தி ஆகியவற்றை விடவும் அல்லது கிறிஸ்தவ வேலையில் ஈட்டும் வெற்றியை விடவும் அதிகமாக இந்த அபிஷேகத்தை இச்சிக்க வேண்டும். ஆம், உள்ளபடியே இது ஓர் அரிதான காரியமே. ஆனால் நாம் இதைத்தான் தாகம் எனக் கூறுகிறோம். நாம் இந்த இடத்தை எட்டும்போது, இயேசுவிடம் சென்று பருக முடியும். அப்பொழுது வேத வாக்கியங்கள் சொல்லியபடி, மரணத்திலிருந்து உயிர்ப்பை அருளும் ஜீவத்தண்ணீர் நம்மிடமிருந்து பல திசைகளிலும் பாய்ந்தோடும் (யோவான் 7:37-39; எசே 47:8,9).
நாம் அபிஷேகத்தைப் பெற்றிருப்போமானால், அதை இழந்து விடாதபடிக்கு என்ன கிரயத்தையும் செலுத்த ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். நாம் அதைப் பெற்றுக் கொள்ள முடியும்; ஜாக்கிரதையில்லாமல் இருந்தால் அதை இழந்துவிடவும் முடியும். நாம் இரக்கமற்ற விமர்சனம், நெறிதவறிய உரையாடல்கள், அசுத்தமான கற்பனைகள் ஆகியவற்றில் ஈடுபட்டாலோ அல்லது பெருமையின் உறைவிடமாய் இருப்பது அல்லது பகையை இருதயங்களில் வைத்திருப்பது ஆகியவற்றைச் செய்தாலோ, அபிஷேகத்தை இழந்து விடுவோம்.
பவுல் அப்போஸ்தலன், பிறருக்குப் பிரசங்கித்த தான் ஆகாதவனாய்ப் போகாதபடிக்குத் தன் சரீரத்தின் உறுப்புகளைக் கடுமையாய் ஒழுங்குபடுத்தி வைத்திருந்ததாக 1கொரிந்தியர் 9:27 –ல் கூறுகின்றார். அவர் இந்த இடத்திலே தன்னுடைய இரட்சிப்பை இழந்து போவதையல்ல, அபிஷேகத்தை இழந்து போவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடுவதாகவே நான் விசுவாசிக்கிறேன். அநேக சபைகளை ஸ்தாபித்த பிறகும், அநேக அற்புதங்களை நடப்பித்த பிறகும், தேவனால் மிக வல்லமையாகப் பயன்படுத்தப்பட்ட பிறகும் அந்த வல்லமையான அப்போஸ்தலனாகிய பவுல் சற்று அஜாக்கிரதையாக இருந்தாலும் அபிஷேகத்தை இழந்து போகிற நிலையிலேயே இருந்ததாகக் குறிப்பிடுவதைக் கண்டு, நான் இடையறாது வியப்பெய்துகிறேன். அவரே அவ்வாறென்றால், நாமெல்லாம் எங்கு நிற்பது? “கர்த்தாவே, வாழ்க்கையில் நான் எதை இழந்து போக நேரிட்டாலும் பரவாயில்லை, உம்முடைய அபிஷேகத்தை நான் இழந்துவிடக் கூடாது” என்று நாம் தொடர்ச்சியாய் ஜெபிப்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகும்.