WFTW Body: 

யோசுவாவின் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் அவனுக்கு வழங்குவதாக கர்த்தர் யோசுவாவிற்குச் சொன்னார் (யோசுவா 1:3). அத்துடன் அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் அவனுக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்றும் அவனிடத்தில் சொன்னார் (யோசுவா 1:5). இவ்வசனமானது புதிய உடன்படிக்கையில் "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல், கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது" என ரோமர் 6:14-ல் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்திற்கு நிகரான அடையாளமாக உள்ளது. கானான் தேசமானது கடந்த காலங்களில் பல அரக்கர்களால் ஆளப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் அனைவருமே முறியடிக்கப்பட வேண்டியவர்களாவர். அது போலவே நம்மால் வெற்றிசிறக்க முடியாது என்று சொல்லப்படத்தக்க ஒரு பாவம்கூட (அது எவ்வளவுதான் வலிமையுடையதாய் இருந்தாலும் சரிதான்) இல்லை. இதுதான் நம்மைப் பற்றியதான தேவசித்தமாகும். ஆனால் யோசுவா செய்ய வேண்டியதெல்லாம், அங்குள்ள ஏதேனும் ஒரு பிரதேசத்தில் தன்னுடைய பாதத்தைப் பதிய வைத்து, கர்த்தருடைய நாமத்தில் அதை உரிமை கொண்டாடுவதாகும். அதன் பிறகுதான் அது அவனுக்குச் சொந்தமாகும். இன்று நமக்கும் இதுதான் நடைமுறையாகும். நாம் நம்முடைய சுதந்தரத்தை விசுவாசத்தில் உரிமை பாராட்டிக் கேட்க வேண்டும். நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்முடையதென்று கைப்பற்றாவிடில், நம்முடைய ஜீவியங்களில் அவை ஒரு போதும் நிறைவேறாது.

"நீ மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு, அதைவிட்டு வலது இடது புறம் சாயாதிருப்பாயாக" (யோசுவா 1:7) என்று கர்த்தர் யோசுவாவைப் பார்த்துச் சொன்னார். "பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது" என்று தேவனுடைய வார்த்தை சொல்லுமானால், நீங்கள் அதை விசுவாசித்து, அறிக்கையிடுங்கள். வலது இடது புறம் சாயாதீர்கள். அதன் பொருள் என்னவெனில்: அந்த வாக்குத்தத்தத்தின் சுவாசத்தை அமுக்காதீர்கள். அது ஒரு சில பாவங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று வரையறை வகுக்காதீர்கள். அதே வேளையில் அதில் சொல்லப்பட்டதற்கு மேலாகவும் அர்த்தப்படுத்திவிடாதீர்கள். கிறிஸ்து இருந்தது போலவே நாமும் இப்பூமியிலே பூரணர்களாய் இருக்க முடியும் எனவும் அர்த்தப்படுத்திவிட வேண்டாம். நாம் இப்பூமியிலே பாவமற்ற பூரணத்துடன் இருக்க முடியாது. அவ்வாக்குத்தத்தம் சொல்லுவதும் அதுவன்று. பாவமென்று நாம் அறிந்தவற்றின் (உணர்வடைந்த பாவம்) மீது பெறும் வெற்றியைப் பற்றித்தான் இங்கு குறிப்பிடப்படுகின்றது. கிறிஸ்து திரும்ப வரும்போதுதான் நம்மால் முழுவதுமாய் அவரைப் போலவே இருக்க முடியும். 1யோவான் 3:2, இதை நமக்கு மிகவும் தெளிவுபடுத்துகின்றது. ஆதலால், நாம் வேதத்தைத் தாண்டிப் போகவும் வேண்டாம்; அது வாக்குத்தத்தம் செய்வதற்குக் குறைவாக விசுவாசிக்கவும் வேண்டாம்.

கிறிஸ்துவைப் போல மாறுவதென்பது, கானான் தேசம் முழுமையும் சுதந்தரிப்பதற்கோ அல்லது ஓர் உயர்ந்த மலையின் மேல் ஏறுவதற்கோ சமமாகக் கூறலாம். நாம் மனந்திரும்பி மறுபடியும் பிறக்கும் போது, நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, கடந்த காலம் கழுவப்படுகின்றது. ஆனாலும் நாம் பலவித பாவங்களின் அடிமைத்தளையில் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறோம். பாவங்கள் கழுவப்பட்ட நிலையை, நாம் ஒரு மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்துவிட்டதற்கு ஒப்பிட்டுச் சொல்ல முடியும். பின்பு நாம் மலையின் மீது ஏறத் தொடங்குகிறோம். மலையுச்சி என்பது கிறிஸ்துவின் பூரண சாயலுக்கு ஒப்பானதாகும். கிறிஸ்து மறுபடியும் வரும்போதுதான் நாம் அதைச் சென்றடைய இயலும். ஆனால் நாமோ அந்த மலையடிவாரத்திலேயே, அதாவது பாவத்தால் தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே நிரந்தரமாய்த் தங்கிவிடக்கூடாது."பூரணராகும்படி கடந்து போவோமாக" (எபி 6:2) என்று வேதம் நமக்குக் கூறுகின்றது. "பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்" (2 கொரி 7:1) என்று வேதம் நமக்குப் புத்தி சொல்லுகின்றது.

"பூரணம்" என்ற வார்த்தையைக் கண்டு நாம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அதை நோக்கி நாம் முன்னேற வேண்டும். பவுல் தனது வாழ்வின் முடிவிலே, "நான் இன்னும் அந்த உச்சியை எட்டவில்லை. ஆனால் அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறேன்" (பிலி 3:12-14) என்று சொல்கின்றார். இப்போதும் ஆண்டவர் நம்மில் அநேகரைப் பார்த்து, "நீ போதுமான அளவு மலையடிவாரத்திலேயே தங்கி இருந்துவிட்டாய். இப்பொழுது அதன் மீது ஏறு. மேல் நோக்கி முன்னேறு" என்று சொல்லுகின்றார். எனவே நாம் இடது வலது புறம் சாய வேண்டாம்.

"தேவனுடைய வார்த்தையான இந்த புத்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக" (யோசுவா 1:8). தேவனுடைய வார்த்தையை நாம் இருதயத்திலே பெற்றிருக்க வேண்டும். அதே சமயம் அது நம்முடைய வாயிலும் இருக்க வேண்டும். நாம் தேவனுடைய வார்த்தையை நம்முடைய வாய்களின் மூலமாக அறிக்கை செய்ய வேண்டும். ஆனால் அநேகக் கிறிஸ்தவர்கள், தாங்கள் இச்சையுடன் தேடுகின்ற காரியங்களையே தங்களது நாவினாலே அறிக்கை செய்கிறார்கள். இதுவே அவர்களின் பிரச்சனையாக உள்ளது. "நான் ஒரு பெரிய பங்களாவைப் பெற்றுக் கொள்வேன் என்பதை அறிக்கை செய்கின்றேன். நான் ஒரு நல்ல வேலையில் அமர்வேன் என்பதை அறிக்கை செய்கின்றேன். நான் ஒரு நல்ல காரைப் பெற்றுக் கொள்வேன் என்பதை அறிக்கை செய்கின்றேன்" என அவர்கள் கூறுகின்றனர்!! ஆனால் நாம் இதையெல்லாம் விட்டுவிட்டு, "ஆண்டவரே, நான் கோபத்தின் மேல் வெற்றி சிறப்பேன் என்று அறிக்கை செய்கிறேன். நான் என் கண்களின் இச்சை மீது முற்றிலும் வெற்றி சிறப்பேன் என்று அறிக்கை செய்கிறேன். நான் பண ஆசையின் மீது வெற்றி சிறப்பேன் என்று அறிக்கை செய்கிறேன்" என்று தேவனுடைய வார்த்தையை அறிக்கை செய்வோமாக. இவற்றை எல்லாம்தான் நாம் எப்பொழுதும் நம்முடைய வாய்களினாலே அறிக்கை செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவற்றை எல்லாம் நாம் அறிக்கை செய்வதை விரும்பாத பிசாசானவன், நம்மை உலகப் பொருட்களின் மேல் நமக்கிருக்கும் இச்சையை அறிக்கையிடப் பண்ணுகிறான்.

உலகப் பொருட்களின் மேல் வேட்கை கொண்டிருக்கின்ற மக்களைக் கொண்டு உங்களால் சபையைக் கட்ட முடியாது. பரலோகக் காரியங்கள் மீதும், தேவபக்தியுள்ள வாழ்க்கை மீதும் வேட்கை உள்ள மக்களைக் கொண்டுதான் உங்களால் சபையைக் கட்ட முடியும். பூமிக்குரிய செல்வச் செழிப்பைத் தருவதாகச் சொல்லி தப்பான ரக மக்களை உங்களது சபையை நோக்கி நீங்கள் கவர வேண்டாம். தேவனுடைய வார்த்தையானது உங்களுக்கு ஒரு வீட்டையோ அல்லது ஒரு காரையோ தருவதாக வாக்குப் பண்ணி இருக்கிறதா? இல்லை. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நீங்கள் பாவத்தை ஜெயிக்க முடியும் எனவும், ஒரு நாளின் 24 மணி நேரமும் கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருகின்ற வாழ்விற்குள் உங்களால் பிரவேசிக்க முடியும் எனவும், சோர்வடையாமல், அதைரியப்படாமல், வீழ்ச்சியுறாமல் எப்பொழுதும் வெற்றி சிறந்தவர்களாய் இருக்க முடியும் எனவும், எப்போதும் எல்லாவற்றிற்காகவும், எல்லாருக்காகவும் மகிழ்ந்து களிகூர முடியும் எனவும் உரைக்கின்றன. வேதமானது வாக்குத்தத்தம் பண்ணுகிற பாலும் தேனும் ஓடுகிற புதிய உடன்படிக்கையின் வாழ்க்கை இதுவே ஆகும். ஆகவே நீங்கள், "ஆண்டவரே, இந்த வாழ்க்கையைத்தான் நான் என் வாழ்நாட்கள் முழுவதும் வாழ விரும்புகிறேன்" என்று அறிக்கையிடுங்கள்.

நான் ஒரு கிறிஸ்தவ வாலிபனாய் இருந்த போது, வேதம் இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் எனக்குத் தருகின்றது என்பதைக் கண்டு, இந்த வாழ்க்கையை வாழ விரும்பினேன். ஆனால் என்னைச் சுற்றியிருந்த கிறிஸ்தவ தலைவர்களையெல்லாம் நான் பார்த்த போது, அவர்களெல்லாம் பாவத்தினால் தோற்கடிக்கப்பட்டவர்களாய் இருப்பதைக் கண்டேன். அப்போது நான், "கர்த்தாவே, நான் அவர்களை நியாயந்தீர்க்க வேண்டாம். அது எனது வேலையன்று. அதே சமயம் நான் அவர்களை என்னுடைய முன்மாதிரிகளாயும் வைக்க விரும்பவில்லை. தேவனுடைய வார்த்தையை மாத்திரமே பார்க்க விரும்புகிறேன். உம்முடைய வாக்குத்தத்தங்களை மட்டுமே காண விரும்புகிறேன். இயேசுவை மட்டுமே என்னுடைய முன்மாதிரியாக வைக்க விரும்புகிறேன்" என்று சொன்னேன். ஒரு விசுவாசியாக நான் பல ஆண்டுகளாய் தோற்கடிக்கப்பட்டவனாய் இருந்தேன். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருந்த சுதந்தரத்தை நான் கண்டேன். அப்படிக் கண்ட மாத்திரத்திலேயே, தேவனுடைய வார்த்தையில் தொடர்ச்சியான சந்தோஷத்தையும், தொடர்ச்சியான வெற்றியையும் அருளும் அந்த வாக்குத்தத்தங்களை அறிக்கையிட்டுக் கொண்டே இருந்தேன். இறுதியில் தேவன் என்னுடைய இருதயத்தின் வாஞ்சையை நிறைவேற்றினார். இந்த விதமாகத்தான் நான் இப்பொழுது வாழ விரும்புகிறேன். என் வாழ்நாளின் முடிவுபரியந்தமும் இப்படியாகத்தான் வாழ விழைகின்றேன்.

ஆகவே தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உங்களுடைய வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக. இந்தச் செய்தியை நீங்கள் பிரசங்கித்தால், பிரபலப் பிரியர்களாய் இருக்க விரும்பும் பிரசங்கிகளுக்கு மத்தியிலே, உங்களது குரல் மாத்திரம்தான் தேவனுக்கென்று தனித்து தொனிப்பது போல சில வேளைகளில் உணருவீர்கள். சோர்ந்துவிட வேண்டாம். கடைசி வரைக்கும் தேவன் உங்களுக்கு அருகிலேயே நிற்பார்.

இரவும் பகலும் தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கும்படி, யோசுவா கட்டளையிடப் பட்டான். புறஜாதிகளின் தேவை என்ன என்பதைப் பற்றி தியானிக்கும்படியான அவசியம் நமக்கில்லை. அப்படித் தியானிப்பது ஒரு நல்ல விஷயம் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கவில்லையென்றால், உங்களால் ஒரு போதும் அந்த புறமதஸ்தருக்கு உதவிட முடியாது. யோசுவா தேவனுடைய வார்த்தையை தியானிக்கும் வேளையிலே, அவனுக்குச் செழிப்பும் வெற்றியும் கைகூடிவரும் என தேவன் வாக்குப்பண்ணினார் (யோசுவா 1:8). நாம் நம்முடைய ஜீவியங்களில், பரலோகத்தின் காரியங்களிலும், ஆவிக்குரிய ரீதியிலும் அதிகதிமாக வளமுடனும், வெற்றியுடனும் மாறிக் கொண்டே இருப்பதுதான் மெய்யான "செழிப்பின் சுவிசேஷம்" ஆகும். "செழிப்பு மற்றும் வெற்றி" ஆகியவற்றைத்தான் இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் தேடுகின்றனர். ஆனால் அவர்கள் அவற்றை யோசுவா 1:8-ல் தேவன் சொன்ன வண்ணமாகத் தேடுவதில்லை.