WFTW Body: 

பெரும் வஞ்சகத்தின் நாட்களிலும், மனுஷருடைய அன்பு தணிந்து போய் (சகோதரனுக்கு எதிராக சகோதரன்) ஒருவரையொருவர் காட்டிக் கொடுப்பார்கள் என்று இயேசு எச்சரித்த காலங்களிலும் நாம் வாழ்ந்துவருகிறோம். எனவே நாம் அனைவரிடமும் அன்பில் நிலைத்திருப்பது மட்டுமல்லாமல், சச்சரவுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதுமே தயாராயிருக்கும் நபர்களைத் தவிர்ப்பதில் புத்திசாலித்தனமாக இருக்கவும் வேண்டும்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருபோதும் யாருக்கும் தீமை செய்வதில்லை, மனுஷர்களுடன் சண்டையிடுவதில்லை. ஆனால் தவறான போதனைகளை நாம் தொடர்ந்து வெளியரங்கப்படுத்துவோம்.

நாம் "ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்திற்காகவும் வாயைத்திறக்கவும், வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்யவும்" (நீதிமொழிகள் 31:9) வேண்டும். முரட்டாட்டம் நிறைந்த அப்சலோமின் பாளையத்தில் அகித்தோப்பேலின் ஆலோசனையின் மூலம் தேவன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தாவீது ஜெபித்தான் (2சாமுவேல் 15:31). தேவன் அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார் (2சாமுவேல் 17:23). தமக்குத் தீங்கிழைத்தவர்களை பிதா மன்னிக்கும்படி இயேசு ஜெபித்தார். அதே சமயத்தில், மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பவர்களை அவர் இரக்கமின்றி கடிந்துகொண்டார் (மத்தேயு 23-இல் பரிசேயர்களை அவர் கடிந்துகொள்வதைப் பாருங்கள்).

இப்போது, புத்தியுள்ள கன்னிகைகளைப் பற்றிய உவமையைக் குறித்து ஒன்றைக் கூற விரும்புகிறேன்:

ஓர் உவமைக்கான ஒரு குறிப்பிட்ட விளக்கத்தை நாம் கேட்கும்போது, அந்த உவமைக்கான வேறொரு விளக்கத்தை தேவன் நமக்குத் தரமுடியாத அளவுக்கு நம் மனது அந்த ஒரு குறிப்பிட்ட விளக்கத்தையே மிகவும் உறுதியாகப் பிடித்துக்கொள்வது எளிது. சில காலத்திற்கு முன்பு, ஒரு உவமைக்கு ஒரு விளக்கம் தான் இருக்க முடியும் என்ற நிலைப்பாட்டிலிருந்து வெளியேறி, இந்த உவமையை அதன் சூழமைவோடு புரிந்துகொள்ள நான் தேவனை நாடினேன். எந்த உவமையையும் அதன் சூழமைவோடு விளக்குவதே சிறந்த வழியாகும்:

மத்தேயு 24:12 இல், அநேகருடைய அன்பு கடைசி நாட்களில் தணிந்துபோய் விடும், ஆனால் முடிவுபரியந்தம் (அவர்களுடைய அன்பு அணைந்துபோகாமல்) நிலைத்திருப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் (அதாவது, தேவனுடைய வீட்டிற்குள் பிரவேசிப்பார்கள்) (மத்தேயு 24:13) என்று இயேசு கூறினார். பின்னர் அவர் கன்னிகைகளைப் பற்றிய உவமையைக் கூறினார்- ஐந்து விளக்குகள் அணைந்து விட்டன, மற்ற ஐந்து பேர் முடிவுபரியந்தம் நிலைத்திருந்து வீட்டிற்குள் பிரவேசித்தனர் (மத்தேயு 25). எனவே அவர் சொன்ன எண்ணெயின் ஒரு பொருள் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொடுக்கிற தெய்வீக அன்பைக் குறிப்பதாக இருக்கவேண்டும். ஆகவே, மணவாளன் வரும்போது தேவனுடைய வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டுமானால், நாம் முடிவுபரியந்தம் தெய்வீக அன்பில் நிலைத்திருக்க வேண்டும். “கூடுதலான எண்ணெய் பாத்திரம்” வைத்திருப்பதன் அர்த்தம் இதுதான், அது நம் விளக்குகளை இறுதிவரை எரிய வைக்கும்.

"முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்" (யோவான் 15:25) என்று இயேசு கூறினார். ஆனால் அதற்கு பதிலாக, அவர் எந்தக் காரணமும் இல்லாமல் அவர்களை நேசித்தார். நாமும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி முடிவுபரியந்தம் நேசித்திடுவோம். இல்லையெனில், "சுயத்திற்கு மரித்தல்" என்பது ஒரு வெற்று உபதேசமாக மாறியிருக்கும். அதைப் பற்றி பிரசங்கிக்கும் பலருக்கு அது அவ்வாறே (ஒரு வெற்று உபதேசமாகவே) ஆகிவிட்டது. சிலுவையின் வழியில் நடப்பதைப் பற்றிப் பேசும் பல “விசுவாசிகள்” அன்பில் குறைவுபடுவது மட்டுமின்றி, சாதாரண மனித நேயமும் மரியாதையும் இல்லாதவர்களாக இருப்பதை நான் காண்கிறேன். அவர்கள் "பரிசுத்த உபதேசம்" என்று அழைத்துக்கொள்வதில் பெருமை கொள்கிறார்கள், ஆனால் அவர்களின் ஜீவியமோ துர்நாற்றம் வீசுகிறது. நமது உபதேசம் உண்மையிலேயே தூய்மையானதாக இருந்தால், கிறிஸ்துவின் அன்பின் நறுமணம் நம் வாழ்விலிருந்து வீசும்.

19-ஆம் நூற்றாண்டின் குவாக்கர்(Quaker) மிஷனரி, ஸ்டீபன் கிரெல்லட்(Stephen Grellet) என்பவர் ஒருமுறை, "நான் இந்த உலகத்தை ஒருமுறை மட்டுமே கடந்து செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன். ஆகையால், நான் செய்யக்கூடிய எந்த நல்ல காரியத்தையோ அல்லது எந்த சக மனிதரிடமும் நான் காட்டக்கூடிய தயவையோ, இப்போதே செய்திடட்டும். நான் அதை ஒத்திவைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ கூடாது - ஏனென்றால் நான் மற்றொருமுறை இந்த வழியில் செல்ல மாட்டேன்", என்று கூறினார். அந்த ஆலோசனையைப் பின்பற்றும்படி நான் உங்களை உற்சாகப்படுத்துகிறன்.