WFTW Body: 

இயேசுவின் வாழ்க்கை பூரண இளைப்பாறுதல் கொண்டதாயிருந்தது. அவருடைய வாழ்க்கையில் எவ்விதமான மனக்கிலேசமும் இருந்ததில்லை. ஒரு நாளின் 24 மணி நேரத்தில், பிதாவின் சித்தம் முழுமையையும் செய்வதற்குப் போதுமான அவகாசம் அவருக்கு இருந்தது. ஆனால், அவர் தமக்கு நன்மையாய்த் தோன்றிய எல்லாவற்றையும் செய்ய விரும்பியிருந்தால், 24 மணி நேரம் கூட அவருக்குப் போதுமானதாய் இருந்திருக்காது!! மேலும், அவருடைய நாட்கள் பெரும்பாலானவை மனக்கிலேசத்திலும், இளைப்பாறுதல் இல்லாமையிலும் முடிந்திருக்கும்.

'அலங்கார வாசல்' என்ற தேவாலய வாசலண்டையில் சப்பாணியாய் இருந்த ஒரு மனுஷன், பிச்சை கேட்டுக்கொண்டிருந்ததை இயேசு கண்டார். அவர் அவனைப் பலமுறை கண்டிருந்தும், அவனைக் குணமாக்கவில்லை. ஏனென்றால், அப்படிச் செய்வதற்கு அவருக்குப் பிதாவினிடத்திலிருந்து வழிநடத்துதல் இல்லை! ஆனால், அவர் பரத்துக்கு ஏறின பின்பு பிதா நியமித்த சரியான வேளையில் யோவானும், பேதுருவும் அவனுக்கு சுகம் கொடுத்தபடியால், அநேகர் தேவனிடத்தில் திரும்புவதற்கு அந்நிகழ்ச்சி ஏதுவாயிருந்தது!! (அப்போஸ்தலர் 3:1-26, அப்போஸ்தலர் 4:1-4). அதுவே, அந்த மனிதன் சுகமாவதற்கு பிதாவின் வேளையாய் இருந்தது, அதற்கு முன்னால் அல்ல! ஒருவேளை முன்கூட்டியே அந்த மனிதனுக்கு இயேசு சுகம் கொடுத்திருந்தால், அவர் பிதாவின் சித்தத்திற்கு முட்டுக்கட்டையாய் இருந்திருப்பார்!! தம் பிதாவின் வேளையே பூரணமானது என்று அறிந்திருந்தபடியால், எதைச் செய்வதற்கும் அவர் அவசரப்பட்டதேயில்லை.

ஒவ்வொரு நாளிலும் வந்த எல்லா தடங்கலின் மத்தியிலும் இயேசு மகிழ்ச்சியாய் இருந்தார். ஏனெனில், சர்வ அதிகாரம் படைத்த பரலோகப் பிதா தம்முடைய அனுதின அலுவல்களைத் திட்டமிட்டிருக்கிறார் என்கிற உண்மையை இயேசு நிச்சயமாய் அறிந்திருந்தார். எனவே குறுக்கிடுகிற தடங்கல்களினிமித்தம் அவர் ஒருபோதும் அலைக்கழிக்கப் படவில்லை! இயேசுவின் ஜீவனானது நம்முடைய உள்ளான ஜீவனிலும் பரிபூரண இளைப்பாறுதலைக் கொண்டுவந்துவிடும். இதற்கு அர்த்தம், நாம் ஒன்றுமே செய்யாமல் இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக பிதாவின் சித்தம் எதுவோ, அதை மாத்திரமே நாம் செய்ய வேண்டும்! அப்பொழுது, நம்முடைய ஒரு நாளுக்குரியதோ அல்லது ஒரு வருஷத்திற்குரியதோ நம் சொந்த அட்டவணையில் இருக்கிற காரியங்களைச் செய்து முடிக்காமல், பிதாவின் சித்தத்தை மாத்திரம் செய்துமுடிக்க வாஞ்சையாய் இருப்போம்.

ஆத்தும கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்தக் கிரியைகளைச் செய்வதற்கே விடாப்பிடியாய் இருக்கிறபடியால், அவர்கள் எரிச்சலும், பதட்டமும் அடைந்து, முடிவில் மனதிலோ, சரீரத்திலோ சுகவீனத்திற்கும் கூட ஆளாகிவிடுகிறார்கள்! ஆண்டவருக்கும், அவருடைய சீஷர்களுக்கும் தன்னலமற்ற சேவை செய்ததில் மார்த்தாள் ஒரு பாவமும் செய்யவில்லை, ஒருபோதும் இல்லை! ஆனாலும் அவள் இளைப்பாறுதல் இல்லாமல் மரியாளைக் குற்றம் சாட்டுகிறவளாய் இருந்தாள். இதுவே மனுஷிகமான ஊழியத்தை சரியாய் படம்பிடித்துக் காண்பிக்கிறது. எப்போதுமே ஓர் ஆத்தும கிறிஸ்தவன் இளைப்பாறுதல் இல்லாதவனாயும், எரிச்சல் அடைகிறவனாயும் இருப்பான். அவன் தன் சொந்தக் கிரியைகளை விட்டு ஓய்ந்திராததினால், தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கக் கூடாதவனாயும் இருக்கிறான் (எபிரெயர் 4:10). அவனுடைய விருப்பம் நல்லதுதான். தன்னலமற்ற சேவையைத்தான் செய்தான்! ஆனால், அவனது “சொந்தக் கிரியைகள்” எவ்வளவு நன்மையானதாய் இருந்தாலும், தேவனுடைய பார்வையில் அவைகள் அழுக்கான கந்தையாகத்தான் இருக்கும்! (ஏசாயா 64:6).

மார்த்தாளைப்போல ஊழியம் செய்கிறவர்கள், அதை எவ்வளவு உத்தமமாய் செய்தாலும் உண்மையாகவே “அவர்கள் தங்களுக்கே ஊழியம் செய்கிறார்கள்." அவர்களை கர்த்தருடைய ஊழியக்காரர்கள் என்று அழைக்க முடியாது! ஏனென்றால், ஒரு நல்ல ஊழியக்காரன், ஊழியம் செய்வதற்கு முன்பாக எஜமான் என்ன சொல்கிறார் என்று கேட்டே ஊழியம் செய்வான்!! இயேசுவோ இப்படிப்பட்ட எவ்வித மனப் பதட்டத்திற்கும் ஆளாகாமல் இருந்தார். காரணம், அவர் தம் உள்ளான மனிதனில் பூரண இளைப்பாறுதலுடன் இருந்தார். அவர் நம்மிடம், “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கும் இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29) எனக் கூறுகிறார்.

தேவ வார்த்தையில், தேவ ஆவியானவர் காண்பிக்கிற இயேசுவின் மகிமை இதுவே! இந்த மகிமையைத்தான் அவர் நம்மிடம் கொடுத்து, நம்மூலம்அதைப் பிரகாசிக்கச் செய்யவும் விரும்புகிறார்.

ஆண்டவர் நம்முடைய மேய்ப்பன்! அவர் தம்முடைய ஆடுகளை இளைப்பாறுதலான மேய்ச்சல் நிலத்திற்கே நடத்துகிறார்!! ஆடுகள், தங்களுடைய மனம்போனபோக்கில் அடுத்து எந்த நிலத்திற்கு மேயப் போகலாம்?' என்று தீர்மானிக்கிறதில்லை. அவைகள் செய்வதெல்லாம், மேய்ப்பனைப் பின்பற்றும் ஒரே ஒரு செயல் மாத்திரமே! அவ்வாறு பின்பற்றிட ஒருவன் முழுமையாய், தன் சுய நம்பிக்கை, சுய திறமை யாவற்றையும் வெறுமையாக்கியிருக்க வேண்டும். இயேசுவும்கூட தம் பிதாவை ஒரு வாய் திறவாத ஆட்டைப் போலவே சாந்தமாய்த் தொடர்ந்தார்! ஆனால் ஆத்தும கிறிஸ்தவர்களோ 'அவ்வித ஆடுகளாய்' இருக்க விரும்புகிறதில்லை. ஆகையால் தங்கள் சுய புத்தியினால் அவர்கள் திசை தப்பிபோகிறார்கள். நம்முடைய புத்தி தேவன் கொடுத்த மிகப் பிரயோஜனமான ஈவுதான்! ஆனால், நம் வாழ்க்கையில் நம்மை ஆண்டுகொள்ளும்படி அதையே நாம் உயர்த்தினால், எல்லா ஈவுகளையும்விட அதிக அபாயமுள்ள ஈவாக அது மாறிவிடும்!!

நம் ஆண்டவர், தம் சீஷர்களுக்கு “பிதாவே உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்றே ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். பரலோகத்தில் தேவ சித்தம் எப்படிச் செய்யப்படுகிறது? தேவ தூதர்கள் அங்கே “தேவனுக்காக எதையாவது செய்ய வேண்டும்!” என்று இங்குமங்கும் அலைந்து கொண்டிருப்பதில்லை. அப்படியிருக்குமானால், பரலோகத்தில் குழப்பம்தான் இருக்கும். அப்படியானால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அந்த தேவ தூதர்கள் ஒவ்வொருவரும், தேவ சமூகத்திற்குச் சென்று “தேவன், என்ன சொல்லுவார்?” என்று காத்திருந்து, அவர் சொல்லுகிறது எதுவோ அதை அப்படியே செய்கிறார்கள்!! சகரியாவுடன் பேசின காபிரியேல் தேவதூதன் சொல்லுகிறதைக் கேளுங்கள்: “நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்! உன்னுடன் பேச அனுப்பப்பட்டு வந்தேன்” (லூக்கா 1:19). இதே நிலையைத்தான் இயேசுவும் வகித்தார். பிதாவின் சமூகத்தில் காத்திருந்து! அவருடைய சத்தத்திற்குச் செவிசாய்த்து! அவருடைய சித்தம் செய்தார்!!

ஆத்தும கிறிஸ்தவர்கள் கடினமாய் உழைக்கவும், அதிகமாய் தியாகமும் செய்யலாம். ஆனால் இவர்களது கடின உழைப்பை நித்தியத்தின் வெளிச்சம் இரா முழுவதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் பிடிக்கவில்லை என்பதையே காட்டும்! மாறாக, அனுதினமும் தங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, தங்கள் ஆத்தும ஜீவனை மரணத்தில் ஊற்றினவர்கள், வலை நிறைய மீன் பிடித்தவர்களாய் இருப்பார்கள். காரணம், அவர்கள் ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வலையைப் போட்டவர்கள்!! (யோவான் 21:1-6).

“நான் அவனுக்கென்று திட்டம்பண்ணியிருக்கும் பணியிலிருந்து கவனச்சிதறல் அடையும் எவனும், தேவனுடைய இராஜ்ஜியத்திற்குத் தகுதியுள்ளவன் அல்ல” என்றே இயேசு கூறினார் (லூக்கா 9:62 - லிவிங் மொழிபெயர்ப்பு).