அப்போஸ்தலர் 3-ஆம் அதிகாரத்தில் ஒரு முடவன் குணமடைந்ததைக் குறித்து வாசிக்கிறோம். அவன் சுமார் 40 வயதைக் கடந்தவனாய் (4:22), ஒரு பிறவி முடவனாய் இருந்தான். அவன் அன்றாடம் தேவாலயத்தின் அலங்கார வாசலருகே யாசிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டான். அவன் இதற்கு முன்னர் குறைந்தபட்சம் 20 வருடங்களாவது அந்த இடத்திலே அமர்ந்திருந்திருக்க வேண்டும். அவன் அடிக்கடி இயேசுவின் கண்களில் பட்டிருந்திருக்க வேண்டும். இயேசு ஒவ்வொரு முறையும் அவனுக்கு சுகத்தையல்ல, பணத்தைத்தான் தந்திருந்திருப்பார். இயேசு ஏன் அவனைக் குணமாக்கவில்லை? ஏனெனில் அவர் பிதாவிடமிருந்து யாதொரு நடத்துதலையும் பெறவில்லை. இயேசு தான் சுற்றித் திரிந்த இடங்களிலிருந்த எல்லாரையுமே குணமாக்கினார் என சிலர் எண்ணுகிறார்கள். இல்லை. அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் பெதஸ்தா குளத்தண்டையிலே சென்ற போது, அங்கே திரளான நோயாளிகள் இருந்த போதிலும், அவர் ஒரேயொரு முடவனை மட்டுமே சுகமாக்கினார். தேவாலய வாசலருகே இந்த மனிதனை அவர் அடிக்கடி பார்த்த போதிலும், அவனைச் சுகப்படுத்தவே இல்லை. ஒரு வேளை அவர் இவனைக் குணமாக்கியிருந்திருந்தால், அப்போஸ்தலர் 3-ஆம், 4-ஆம் அதிகாரங்களில் இவன் மூலமாக உண்டான எழுப்புதல்கள் நிகழ்ந்திருந்திருக்காது.
நாம் ஜெபத்திலே தேவசித்தத்தைத் தேடாமல், நம்முடைய சுய அறிவின்படி செயல்படுவோ மானால், தேவனுடைய வேலை நடப்பதற்கு அது ஒரு முட்டுக்கட்டையாக மாற முடியும். ஆகவேதான் இயேசு மார்த்தாளிடத்திலே தமக்குப் பணிவிடை செய்வது முக்கியமான காரியமல்லவென்றும், (மரியாளைப் போல) அவரைக் கவனித்துக் கேட்டு, அதன்படி செய்வதுதான் மிக முக்கியமானது என்றும் சொன்னார். பிதாவின் கால அட்டவணையின்படி அந்த முடவன் சுகம் பெற வேண்டிய நாள், பெந்தேகோஸ்தே நாளுக்குப் பிறகு பேதுருவால் நடைபெற வேண்டும் என்பதாக இருந்தது. இது நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. நாம் ஓர் ஆவிக்குரிய வரத்தைப் பெற்றிருந்தாலும்கூட, நம்முடைய பார்வையில் அதை எந்தச் சமயத்தில் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அதைப் பயன்படுத்தாமல், தேவ நடத்துதலுக்குட்பட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் இதை இந்நாட்களில் புரிந்து கொள்வோர் யார்?
பெருவாரியான விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் தொடர்பற்றவர்களாக உள்ளனர். அவர்கள் பெந்தேகோஸ்தினராக இருந்தால், "ஒவ்வொருவரும் இயற்கைக்கப்பாற்பட்ட சுகத்தைப் பெற முடியும்" என்றும், பெந்தேகோஸ்தினருக்கு எதிரானவராக இருந்தால், "எவருமே இயற்கைக்கு அப்பாற்பட்ட சுகத்தைப் பெற முடியாது" என்றும் தங்களுடைய சட்டங்களுக்கேற்ப வாழ்கிறார்கள். இயேசுவோ எவ்வித சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு வாழாமல், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலின்படி வாழ்ந்தார். பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்திருந்த இயேசுவுக்கு, அந்த மனிதனைக் குணமாக்க வேண்டும் என்று அவருடைய ஆவியில் ஒரு விடுதலையை ஆவியானவர் இயேசுவுக்குக் கொடுக்கவில்லை. எனவே, இயேசு அவ்வழியே கடந்து சென்ற ஒவ்வொரு சமயமும் பணத்தை மாத்திரமே தந்தார். இப்படியாக இயேசு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார். பின்னாளிலே அப்பக்கமாக வந்த பேதுருவினிடத்திலே அம்மனிதன் பணத்தை யாசித்த போது, பேதுரு அவனைப் பார்த்து, "உனக்குக் கொடுப்பதற்கு என்னிடத்தில் பணம் எதுவும் இல்லை, ஆனால் இயேசுவின் நாமத்தில் எழுந்துநில்" என்றான். இச்சம்பவமானது 5000 பேருடைய இரட்சிப்பில் நிறைவடைந்தது. இயேசுவானவர் 3½ ஆண்டுகளாக பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து, இந்த மனிதனை அவருடைய நாட்களில் குணப்படுத்தாததின் விளைவாக 5000 பேர் மறுபடியும் பிறந்தனர்.
நான் "என் சுயபுத்தியின்மேல் சாய்ந்து" (நீதி 3:5), பரிசுத்த ஆவியின் நடத்துதலின்படி செயல்படாமல் போனால், தேவனுடைய வேலைக்கு நான் ஒரு தடைக்கல்லாக இருக்க முடியும் என்பதற்கு இது எனக்கு ஒரு பெரும் எச்சரிக்கையாக உள்ளது. நான் செய்வது ஒரு நல்ல காரியமாக இருக்கக்கூடும். முடவனைச் சுகப்படுத்துவதைவிடச் சிறந்த விஷயம் வேறென்ன இருந்துவிட முடியும்? ஆனால் அது தேவனுடைய திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதாக இருக்க முடியும். தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளல்ல. தன்னுடைய சட்டங்களின்படி வாழும் எந்த ஓர் அறிவாளியும், தேவனுடைய நோக்கங்களுக்குத் தடையாகவேதான் இருப்பான். உத்தமமான கொள்கைகளோடும், விதிமுறைகளோடும் வாழும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள்தான் தேவனுடைய வேலைக்குப் பெரும் தடைக்கல்லாக இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவருக்குச் செவிசாய்க்கிறவன் மாத்திரந்தான், தேவனுக்கு மிகவும் பயனுள்ளவனாக இருக்கிறான்.