WFTW Body: 

எபிரேயர் 10:5 -ம் வசனத்தில் “தேவன் நம்முடைய காணிக்கைகளை விரும்பவில்லை” என்றே வாசிக்கிறோம். “தேவன் உங்கள் காணிக்கைகளை விரும்புகிறார்” என தொடர்ந்து பிரசங்கித்தவர்களின் கீழ் துயரத்தோடு வாழ்ந்த ஜனங்களுக்கு, இந்த வசனத்தை கோடிட்டு காண்பித்திருக்கிறேன். நம்மிடத்தில் தேவன் எதை விரும்புகிறார்? என இந்த வசனம் கேட்கிறது. ‘நம்முடைய சரீரங்களையே' அவர் கேட்கிறார். பழைய உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்ட செய்தி, "உங்கள் தசமபாகங்களை லேவியர்களுக்கு செலுத்துங்கள்!'' என்பதேயாகும். புதிய உடன்படிக்கையில் கூறப்படுகிற வலியுறுத்துதல், "உங்கள் சரீரங்களை தேவனுக்கு கொடுங்கள்" என்பதேயாகும் (ரோமர் 12:1). தங்கள் தசமபாகங்களை செலுத்தும்படி, தொடர்ச்சியாக ஜனங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு சபை, பழைய உடன்படிக்கையின் சபையாகும்! ஒரு புதிய உடன்படிக்கை சபையானது, தங்கள் சரீரங்களை - அதாவது தங்கள் கண்களை, தங்கள் கரங்களை, தங்கள் நாவுகளை, ஆகிய இவைகளை - தேவனுக்கு ஜீவ பலியாக தரும்படியே எப்போதும் வலியுறுத்தும். இன்று, 'பொருளாதார காணிக்கைகளை' தேவன் நம்மிடமிருந்து விரும்பாமல், நம்முடைய சரீரங்களையே விரும்புகிறார்! கிறிஸ்து சிலுவையில் மரித்தது, பழைய உடன்படிக்கையில் ஆட்டுக்குட்டியை பஸ்காவின் நாளில் பலி கொடுத்ததற்கு ஒப்பாயிருக்கிறதுபோல, புதிய உடன்படிக்கையில் நம்முடைய சரீரங்களை தேவனுக்கு கொடுப்பது, பழைய உடன்படிக்கையில் 'தசமபாகம்' கொடுப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. இந்த பூமியில் நடைபெறும் தேவனுடைய ஊழியங்களுக்கு இனி நாம் யாதொரு பணமும் கொடுக்க வேண்டியதில்லை என்று அர்த்தமா? நீங்கள் நிச்சயமாய் கர்த்தருக்கு கொடுக்கலாம். ஆனால், நீங்கள் மனமகிழ்ச்சியுடன் கொடுப்பதை மட்டுமே தேவன் விரும்புகிறார் (2 கொரிந்தியர் 9:7). எப்படியிருந்தாலும், எதைக் காட்டிலும் முதலாவதாக உங்கள் சரீரத்தையே தேவன் விரும்புகிறார். இவ்வாறாக தங்கள் சரீரங்களை தேவனுக்கு கொடுப்பவர்கள், தங்களுக்குரிய யாவையும் அவருக்குக் கொடுப்பார்கள். ஆனால் எல்லாவற்றையும் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொடுக்க வேண்டும்.

இயேசு இந்த உலகத்திற்கு வந்தபோது, தசமபாகங்களையோ அல்லது பொருளாதார காணிக்கைகளையோ தம் பிதாவுக்கு கொடுப்பதற்காக வரவில்லை (எபிரேயர் 10:5). தம் சரீரத்தையே ஒரு பலியாக கொடுக்க வந்தார். அவர் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராய் இருக்கிறார். நம்மிடம் பிரதானமாய் நம் சரீரத்தையே தேவன் விரும்புகிறார் என போதித்தார்.

இயேசு பரலோகத்திலிருந்தபோது, ஒரு சரீரம் அவருக்கு இருந்ததில்லை. ஆனால், இந்த உலகத்திற்கு அவர் வந்தபோது, பிதாவானவர் ஒரு சரீரத்தை அவருக்குத் தந்தார். அந்த சரீரத்தைக் கொண்டு அவர் என்ன செய்ய வேண்டும்? தம் பிதாவின் மீது கொண்ட அன்பை காட்டுவதற்காக கஷ்டம் நிறைந்த ஆப்பிரிக்காவிற்கு ஒரு மிஷனெரியாக செல்லவேண்டுமா? அல்லது, ஒவ்வொரு நாளும் நான்கு மணிநேரங்கள் ஜெபமும், ஒரு வாரத்தில் இருமுறை உபவாசமும் செய்யவேண்டுமா? இவைகளில் யாதொன்றுமில்லை! “தேவனே நான் இந்த உலகத்திற்கு உம்முடைய சித்தம் செய்யவே வந்தேன்! பலிகளை செலுத்த அல்ல" என கூறினார் (எபிரேயர் 10:7), இவ்வாறாகவே இயேசு தம் சரீரத்தை பயன்படுத்தினார்! இவ்வாறாகவே நாமும், நம்முடைய சரீரத்தை பயன்படுத்த வேண்டும். நம்முடைய சரீரங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்போது, நம் கண்கள், கரங்கள், நாவுகள், வாஞ்சைகள், விருப்பங்கள் ஆகிய அனைத்தையும் கொண்டு இனி அவருடைய சித்தத்தைச் செய்யவே ஒப்புக்கொடுக்கிறோம். நம் ஜீவியத்தின் ஒரே வாஞ்சையாய் இப்போது இருப்பதெல்லாம் “ஒவ்வொரு நாளும் தேவனுடைய சித்தம் செய்ய வேண்டும்' என்பதேயாகும்!

நமக்கென்று முதலாவதாக இருக்கும், தேவசித்தம் என்ன? "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே, தேவனுடைய சித்தமாயிருக்கிறது!” (1 தெசலோனிக்கேயர் 4:3). இதுவே, நம் அனைவருக்கும் தேவ சித்தம் செய்திடும் முதல் பகுதியாயிருக்கிறது. நம்முடைய ஊழியம் என வரும்போது, தேவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென, அங்குமிங்கும் நாமாக ஓடிவிடக்கூடாது. 'தேவனுடைய ஊழியத்திலும் நாம் தேவ சித்தம் செய்திட வேண்டும்! “பரமண்டலங்களில் உம்முடைய சித்தம் செய்யப்படுகிறது போலவே, பூமியிலும் உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக” என்று ஜெபிப்பதற்கே இயேசு கற்று தந்தார். பரலோகத்திலுள்ள தூதர்கள், தேவனுக்காக ஏதாகிலும் ஒரு வகையில் சுறுசுறுப்பாய் இருப்பதைப்போல் அங்குமிங்கும் ஓடி திரிவதில்லை! அவ்வாறே இயேசுவும் தம்முடைய பிதாவிற்காக ஏதாகிலும் ஒன்றைச் செய்யும்படி ஓடியாடிதிரியவில்லை. தம் பிதாவின் சித்தம் செய்திட மாத்திரமே வாஞ்சித்தார். அதை மாத்திரமே செய்து முடித்தார். ஒரு தச்சனாக 18 முதல் 30 வயது வரை வேலை செய்யும்படி பிதா கூறியிருந்தார், அதை அவர் செய்தார்! அத்தனை ஆண்டு காலமும் தம் பூமிக்குரிய வேலையில் உத்தமமாய் பணியாற்றிய பிறகு, பிதா அவரிடம் அடுத்த 3½ ஆண்டுகள் பிரசங்கிக்க செல்லும்படி அனுப்பினார்! இயேசு சுவிசேஷத்தைப் பிரசங்கித்த போதும், வியாதியஸ்தரை சுகமாக்கிய போதும் தம் பிதாவுக்கு பிரியமாயிருந்ததைப் போலவே 12 வருடங்களாய் ஸ்டூல், மேஜைகளை செய்து கொண்டிருந்தபோதும் தம் பிதாவுக்கு பிரியமாயிருந்தார்!

இயேசு இந்த பூமிக்கு ஒரு மிஷனரியாகவோ அல்லது ஒரு முழுநேர ஊழியராகவோ வரவில்லை. அவர், தம் பிதாவின் சித்தம் 'எதுவாயிருந்தாலும்' அதை செய்திடவே வந்தார். பிதாவின் சித்தம் தச்சு வேலையாயிருந்தபோது அதை அவர் செய்தார். அதன் பிறகு, பிதாவின் சித்தம் முழுநேர ஊழியமாயிருந்தபோது, அதை அவர் செய்தார்! இவ்வாறாக பிதாவின் சித்தம் செய்வதற்கே நாமும், நம்மை அர்ப்பணித்திட வேண்டுமே அல்லாமல் இந்த வேலை அல்லது வேறு வேலை எனக் கூடாது! தேவன் உங்களை ஒரு மிஷனெரியாய் அழைக்காமல், ஒரு தச்சனாய் அழைத்திருந்தால், அதை செய்வதற்கு நீங்கள் ஆயத்தமா?

“தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய இதோ வருகிறேன்” என இயேசு கூறி, இரண்டாவது உடன்படிக்கையை நிலைநிறுத்துவதற்கு முதலாம் உடன்படிக்கையை நீக்கிப்போடுகிறார் (எபிரேயர் 10:8,9). முதலாம் உடன்படிக்கையில், ஏராளமான மார்க்க கிரியைகள் இருந்தன - குறிப்பாக ஆசரிப்பு கூடாரத்திற்குள்ளும், ஆலயத்திலும் பணிகள் இருந்தன. ஆனால் இயேசுவோ, தான் இந்த பூமியில் வாழ்ந்த 90% வாழ்க்கையில், யாதொரு மத சம்பந்தமான கிரியையை செய்யவில்லை. அவர் 30 ஆண்டுகள் வீட்டிலே தாயாருக்கு உதவினார், ஒரு தச்சராக இருந்து குடும்பத்தை ஆதரித்தார். அதை அடுத்த 3½ ஆண்டுகள் பிரசங்கித்தார். இவ்வாறாக, பிதா அவருக்கு கொடுத்த கிரியைகளை முடித்து, பிதாவை மகிமைப்படுத்தினார் (யோவான் 17:4 காண்க). தேவனுடைய பார்வையில், வியாதியஸ்தனை சுகமாக்குவது எவ்வளவு முக்கியமானதோ, வீட்டிலே உங்கள் தாயாருக்கு உதவி செய்வது அவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அங்கே கற்றுக்கொள்கிறோம். புதிய உடன்படிக்கையில், ஒரு குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் எதை செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, அதுவே தேவனுடைய சித்தமாகும் - அதுவே அந்த குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய பரிசுத்தமான செயலாகும்.