WFTW Body: 

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:1 நமக்கு முக்கியமான ஒன்றைக் கற்பிக்கிறது. அப்போஸ்தலருடைய நடபடிகள் பவுலின் சக ஊழியரான லூக்காவால் எழுதப்பட்டது. அவர் அப்போஸ்தலருடைய நடபடிகளை எழுதுவதற்கு முன்பாக லூக்கா சுவிசேஷத்தை எழுதினார். இவை இரண்டையும் தெயோப்பிலு என்பவருக்கு எழுதினார். “அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்” என்று, தான் முன்பு எழுதிய சுவிசேஷத்தைக் குறித்து அப்போஸ்தலருடைய நடபடிகளின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார். அவருடைய சுவிசேஷத்திற்குத் தலைப்பைக் கொடுக்கும்படி நீங்கள் லூக்காவிடம் கேட்டால், “இயேசு செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கிய அனைத்தும்” என்று அவர் கூறுவார். “இயேசு உபதேசித்த அனைத்தும்” என்று கூறாமல், “இயேசு செய்து உபதேசித்த அனைத்தும்” என்று கூறுவார். தாம் செய்யாததை உபதேசிக்கக் கூடாது என்பது இயேசுவின் வாழ்க்கையில் ஒரு கோட்பாடாக இருந்தது. கோட்பாடு இது தான்: “செய்தபின் உபதேசி.” உபதேசித்தபின் செய்வதல்ல, செய்தபின் உபதேசிக்க வேண்டும். இயேசு தாம் பிரசங்கித்ததைக் கைக்கொண்டார் என்று அல்லாமல், தாம் ஏற்கனவே கைக்கொண்டதையும் இப்பொழுது தொடர்ந்து கைக்கொள்ளுகிறதையும் உபதேசித்தார். அது தான் கோட்பாடு.

அதன் அடிப்படையில், அப்போஸ்தலருடைய நடபடிகளுக்கு ஒரு தலைப்பைக் கொடுக்கும்படி லூக்காவிடம் கேட்டால், அவர் என்ன தலைப்பு கொடுப்பார் என்று நினைக்கிறீர்கள்? “இயேசு இப்பூமியில் தம்முடைய பௌதீக சரீரத்தில் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின அனைத்தும்” என்பது லூக்காவின் சுவிசேஷமாக இருக்குமென்றால், “இயேசு தம்முடைய ஆவிக்குரிய சரீரமாகிய சபையின் மூலமாக தொடர்ந்து செய்து உபதேசித்த அனைத்தும்” என்பது அப்போஸ்தலருடைய நடபடிகளின் தலைப்பாக இருக்கும். அவர் முப்பத்து மூன்று வருடங்கள் பூமியில் வாழ்ந்தபோது, அவர் செய்யவும் கற்பிக்கவும் தொடங்கியதை நாம் தொடர்ந்து செய்வதும் கற்பிப்பதும் தான் நமது ஊழியமாகும். அதனால்தான் சபை இயேசு கிறிஸ்துவின் சரீரம் என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் இயேசு உபதேசித்த அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். ஏனென்றால் நாம் அதைக் கைக்கொள்ள வேண்டும், பின்னர் அதனை உபதேசிக்கவும் வேண்டும்.

அப்போஸ்தலருடைய நடபடிகளின் பிற்பகுதிகளில் இதற்கு ஒரு சிறந்த உதாரண விளக்கம் இருக்கிறது. அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:4-இல், ரோம நூற்றுக்கதிபதியாகிய கொர்நேலியுவிடம், “உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது” என்று கூறும்படி ஒரு தூதனை தேவன் அனுப்புகிறார். ஆனால் தூதன் ஏன் அவருக்கு சுவிசேஷத்தைக் கொடுக்கவில்லை? “நீ ஒரு பாவி, கிறிஸ்து உன்னுடைய பாவங்களுக்காக மரித்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார், நீ மனந்திரும்பி விசுவாசித்து அவரை உன் ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தூதன் ஏன் கொர்நேலியுவிடம் சொல்லவில்லை? தூதன் அப்படிச் சொல்லக்கூடாது. தேவதூதன் அவரிடம் சொல்லக்கூடியது என்னவென்றால், “உன் ஜெபங்களும் உன் தருமங்களும் அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது, இப்பொழுது நீ யாரையாவது அனுப்பி, பேதுருவை அழைத்துக்கொண்டுவா. அவர் யோப்பா என்கிற பட்டணத்தில், தொலை தூரத்தில் இருக்கிறார். பேதுரு இங்கே வருவதற்கு சில நாட்கள் ஆகலாம், ஆனால் நீ காத்திருக்க வேண்டும்” என்பதாகும். இதனைச் சொல்லிவிட்டு தேவதூதன் அங்கிருந்து சென்றுவிட்டான். பேதுரு கொர்நேலியுவிடம் சொல்வதை அப்படியே அந்தத் தூதன் சரியாகச் சொல்லியிருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? தூதன் சுவிசேஷத்தை மிகத் தெளிவாக அறிந்திருந்தான். சர்வவல்லமையுள்ள தேவன் கொர்நேலியுவுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கத் தேவதூதனை அனுமதிக்காததற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. தேவதூதன் சுவிசேஷத்தை அனுபவிக்காதபடியினால், பேதுரு வரும் வரை கொர்நேலியு சுவிசேஷத்தைக் கேட்பதற்கு அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. “நான் ஒரு பாவி, ஆனால் இயேசு எனக்காக மரித்தார், அவருடைய இரத்தம் என் பாவத்தைச் சுத்திகரித்தது, நான் மன்னிக்கப்பட்டேன்” என்று பேதுருவைப் போல தூதனால் சொல்ல முடியவில்லை.

தேவதூதன் அதனைச் சொல்ல முடியாத படியினால், அவனால் அதைப் பிரசங்கிக்க முடியவில்லை. தன்னுடைய மனதிற்கு மட்டுமே தெரிந்த ஒரு சத்தியத்தை அவனால் உபதேசிக்க முடியவில்லை. தூதன் ஒருவேளை பேதுருவை விடச் சிறப்பாகப் பிரசங்கித்திருக்க முடியும்; சிறப்பாகப் பிரசங்கிப்பது காரியமல்ல. தூதன் அதை அனுபவிக்காததினால் அதைப் பிரசங்கிக்க அனுமதிக்கப்படவில்லை. இது நமக்கு ஒரு அடிப்படைக் கோட்பாட்டைக் கற்பிக்கிறது: ‘நாம் அனுபவிக்காததைப் பிரசங்கிக்கத் தேவன் நமக்கு அனுமதி கொடுக்கிறதில்லை.’ தாங்கள் கைக்கொள்ளாதவற்றை அல்லது அனுபவிக்காதவற்றைப் பிரசங்கிக்கும் ஜனங்களுக்கு புதிய ஏற்பாட்டில் ஒரு வார்த்தை (பெயர்) இருக்கிறது; அந்த வார்த்தை “மாய்மாலக்காரன்” என்பதாகும். அநேக மாய்மாலக்காரப் பிரசங்கியார்கள் இருக்கிறார்கள்.

நாம் செய்யாதவற்றை உபதேசிக்காமல், செய்தபின் உபதேசிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். நாம் உபதேசிப்பதில் தொடங்காமல், செய்வதில் (கைக்கொள்வதில்) தொடங்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் இயேசு கட்டளையிட்டதை நீங்கள் செய்யாமல், ஒரு வேதாகமக் கல்லூரிக்குச் சென்று, மூன்று ஆண்டுகள் அங்கே செலவழித்து, பட்டம் பெற்று, இப்பொழுது ஜனங்களுக்கு உபதேசிக்க முடியும் என்று நினைக்காதீர்கள். ஒரு குறிப்பிட்ட வேதாகமக் கல்லூரியில் நான்கு வருட வேதாகமக் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு பட்டம் பெற்ற ஒருவருடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் தம்முடைய வகுப்பில் முதல் மாணவராக இருந்தார். அந்தக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நான் பிரசங்கித்த பிறகு, அவர் என்னைப் பார்க்க வந்தார். “இந்த நான்கு வருடப் படிப்பின் முடிவில், உங்களுடைய அந்தரங்க வாழ்க்கையின் ஆவிக்குரிய நிலை என்ன?” என்று நான் அவரிடம் கேட்டேன். “முதலில் இருந்ததை விட என் ஆவிக்குரிய நிலைமை இப்பொழுது மோசமாக இருக்கிறது; நான் பாவத்தால் அதிகமாகத் தோற்கடிக்கப்படுகிறேன்” என்று அவர் கூறினார். அவர் நேர்மையானவராக இருந்தார். “இப்போது நீங்கள் உங்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு எங்காவது போதகர் ஆகப் போகிறீர்கள்; நீங்கள் ஜனங்களுக்கு என்ன உபதேசிக்கப் போகிறீர்கள்? அநேக வசனங்களுக்கு எபிரேய மற்றும் கிரேக்க பாஷைகளின் விளக்கங்களை உபதேசிக்கப் போகிறீர்களா? அல்லது கண்களின் இச்சையை எவ்வாறு மேற்கொள்வது என்பதையும் கோபத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதையும் உபதேசிக்கப் போகிறீர்களா? மேற்கொள்வதைக் குறித்துத் தானே அவர்கள் கேட்க வேண்டும், ஏனென்றால் அதைத்தானே இயேசு உபதேசித்தார்? உங்களுடைய சொந்த வாழ்க்கையில் மேற்கொள்வதை நீங்கள் அனுபவிக்காவிட்டால், வெறுமனே (நடைமுறைப் படுத்தாத) கொள்கைகளை மட்டுமே உபதேசிப்பீர்கள்” என்று நான் கூறினேன்.

அநேகப் பிரசங்கியார்கள் மற்றும் போதகர்களின் சோகமான நிலையும் இதுதான். அதனால்தான் அநேக ஆண்டுகளாகப் பிரசங்கம் செய்து வரும் பிரபலமான பிரசங்கியாரோ அல்லது போதகரோ, திடீரென்று பல ஆண்டுகளாக விபச்சாரத்தில் வாழ்கிறேன் என்று ஒத்துக்கொள்வதை நீங்கள் அவ்வப்போது கேட்கிறீர்கள். இந்த மனிதனின் ஆவியில் உள்ள அசுத்தத்தை சபையில் உள்ளவர்களால் அறிய முடியாதிருப்பது எப்படி? ஏனென்றால், அவருடைய பிரசங்கத்தின் பேச்சுத்திறனாலும் அவருக்கு இருந்த அறிவினாலும் அவர்கள் ஈர்ப்படைந்திருந்தார்கள். “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்று இயேசு கூறினார்.

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்று இயேசு தம்முடைய மாபெரும் கட்டளையில் (Great Commission) கூறியபோது, ​​அவர் நம்மை மாய்மாலத்திலிருந்து விடுபடும்படி கூறினார். நாம் கைக்கொள்ளாததை ஒருபோதும் பேச வேண்டாம் என்றும், நாம் முதலாவதாகக் கைக்கொண்டதை மாத்திரமே மற்றவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ண வேண்டும் என்றும் அவர் கூறினார்.