WFTW Body: 

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." (நீதிமொழிகள் 3:5-6).

இந்த வசனம், இருதயத்தை வலியுறுத்துகிறது. நீதிமொழிகள் புத்தகத்தில் இந்த வலியுறுத்தல் அடிக்கடி வருவதைக் காண்பீர்கள். விசுவாசம் என்பது மனது சம்பத்தப்பட்ட விஷயம் அல்ல என்பதை இங்கே காண்கிறோம். சாலொமோன் பழைய ஏற்பாட்டிலேயே இதைப் புரிந்துகொண்டான் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. ஆனால் சில நேரங்களில் நாம் தவறாய்ப் புரிந்துகொள்ள முடியும். சில சத்தியங்களை நாம் மூளையறிவில் விளங்கிக்கொள்ளலாம். அதாவது, தேவன் அன்பான பிதா என்பதையோ, இயேசுவின் சீஷர்களை தேவன் இயேசுவை நேசிப்பதைப்போலவே நேசிக்கிறார் என்பதையோ நாம் நம் மனத்தைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். (ஆம், எல்லாரையும் அல்ல, எல்லா விசுவாசிகளையும் கூட அல்ல, எல்லாவற்றையும் விட்டுவிட்ட இயேசுவின் சீஷர்களை மட்டுமே அவ்விதம் நேசிக்கிறார்) இவற்றை நம் இருதயத்திலிருந்து விசுவாசிக்காதபடியினாலேயே சோதனையின் நேரத்தில் நாம் இன்னும் கவலைப்படுகிறோம். நம் மூளையறிவில் ஒன்றை நம்புவதற்கும் (பிசாசு விசுவாசிக்கும் விசுவாசமும் இந்த வகையைச் சார்ந்ததேயாகும்) நம் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருப்பதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதற்கு பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு நமக்குத் தேவை.

மூளையறிவில் ஒன்றை விசுவாசிக்க, நல்ல வேதபோதகர் அந்த விஷயத்தை நன்றாக விளக்கினால் போதும். அப்பொழுது நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். அதுவே விசுவாசம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சோதனையின் நேரத்தில், அது விசுவாசமே அல்ல என்று கண்டுபிடிக்கிறோம். இது எப்படியிருக்கிறதென்றால், நம்மிடம் பணம் இருக்கிறது என்று நினைக்கிறோம்; கடைக்குப் போகும்போது நம்மிடம் இருப்பது போலி நோட்டு என்று தெரிய வருகிறது. அது உண்மையான பணத்தின் புகைப்படம் மட்டுமே. உண்மையான பணம் அல்ல. அப்படித்தான் விசுவாசத்தைக் குறித்த காரியமும் இருக்கிறது. சோதனையின் நேரமே நம்முடைய விசுவாசம் இருதயத்திலிருந்து வரவில்லை, வெறும் தலையிலிருந்து மட்டுமே வந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. அதனால்தான் தேவன் நமக்கு வெளிப்பாடு தரும்படி நாம் அதிகமாய் ஜெபிக்கவேண்டும். அப்படிச் செய்யும்போது, நம்முடைய விசுவாசம் மனதில் மட்டும் தங்காமல், ஆழமாக இருதயத்தினுள் இறங்கும். அப்பொழுது சோதனையின் நேரத்தில், அந்த விசுவாசம் நம்மைப் பிடித்துக்கொள்ளும், நாம் அசையமாட்டோம். “உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு!”

பிறகு அவர் கூறுகிறார், "உன் சுயபுத்தியின்மேல் சாயாதே." நம்முடைய சுயபுத்தி என்பது நம் மனதிலுள்ள நம்முடைய பகுத்தறியும் ஆற்றல். உன் மனதை நம்பாதே என்று அவர் கூறுகிறார்! அதற்குப் பதிலாக, உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு. இங்கே மனதிற்கும் இருதயத்திற்கும் இடையே ஒரு வித்தியாசத்தை அவர் காட்டுகிறார். “உன் மனது நம்பகமற்றது. தேவன் அன்பான பிதா என்று நீ உண்மையிலேயே விசுவாசிக்கிறாய் என்று உன் மனம் சொல்கிறது, ஆனால் சோதனையின் நேரத்தில் நீ கவலைப்படுகிறாய். அது தேவன் அன்பான பிதா என்பதை உன் இருதயத்திலிருந்து விசுவாசிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது” என்று அவர் கூறுகிறார். ‘விசுவாசத்தின் பிரதான சத்துரு நம்முடைய சொந்த புத்திசாலித்தனமான பகுத்தாய்வே’ என்பதை நாம் சபையில் அடிக்கடி பேசியிருக்கிறோம். அதனால்தான் புத்திசாலிகளுக்கு விசுவாசத்திற்கு வருவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அது இயலாத காரியமல்ல, ஆனால் கடினம். ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த புத்திசாலித்தனத்தின்மேல் சாய்ந்துகொள்ளும் போக்கு உடையவர்களாக இருக்கிறார்கள். வேதாகமத்தை எவ்வளவு புரிந்துகொண்டிருந்தாலும், புத்திசாலிகள் கவலைப்படுகிறார்கள் என்பதைக் காண்கிறோம். பாவத்தின்மேல் ஜெயம் பெற அவர்களால் முடிவதில்லை; ஏனென்றால் அவர்களுக்கு விசுவாசம் இல்லை. அவர்கள் புத்திசாலிகள், தங்கள் சொந்த பகுத்தாய்வின்மேல் சாய்ந்துகொள்கிறார்கள்.

இதுவே வேதாகமப் பள்ளிகளும் வேதாகமக் கல்லூரிகளும் செய்யும் பெரிய தவறு. எதைச் செய்யவேண்டாம் என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறதோ, அதே காரியத்தைச் செய்யும்படி அவர்கள் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதாவது, வேதாகமத்தைப் புரிந்துகொள்ளவும் அதை வியாக்கியானம் செய்யவும் சுயபுத்தியின்மேல் சாய்ந்துகொள்ளும்படி கற்றுக்கொடுக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாட்டின்மேல் எந்த வலியுறுத்தலும் வைக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, வேதாகமப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்து வெளிவருகிறவர்கள் எங்கும் தேவனுடைய கிரியைக்கு மிகப்பெரிய தடைகளாக மாறிவிடுகிறார்கள். இந்தக் கோட்பாட்டை அவர்கள் மீறுவதால்தான் இப்படி ஆகிறது. வேதாகமப் பள்ளியில் படிப்பதன் மூலம் விசுவாசத்தைப் பெற முடியாது. விசுவாசம் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாட்டினால் வருகிறது. இது சபையிலும் பொருந்தும். உபதேசங்களை அறிவுப்பூர்வமாக மட்டுமே புரிந்துகொண்டு மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்க முயற்சிக்கக்கூடாது. அவை நம் இருதயங்களில் நம்மைப் பிடித்துக்கொள்ளவேண்டும். ‘உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு; உன் சுயபுத்தியின்மேல் சாயாதே.’

நீதிமொழிகள் 3:6 கூறுகிறது: “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்.” வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ‘உன் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் தேவனிடம் ஒப்புக்கொடு.’ உன் பண விஷயங்களை அவர் கட்டுப்படுத்தட்டும்; நீ என்ன வாசிக்கிறாய் என்பதை அவர் கட்டுப்படுத்தட்டும்; உன் நேரத்தை எப்படிச் செலவிடுகிறாய் என்பதை அவர் கட்டுப்படுத்தட்டும்; உன் குடும்ப வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அவர் கட்டுப்படுத்தட்டும்; உன் பிள்ளைகளுக்காக நீ வைத்திருக்கும் இலட்சியங்களை அவர் கட்டுப்படுத்தட்டும்; உன் தொழிலை அவர் கட்டுப்படுத்தட்டும்; ஒவ்வொரு பகுதியிலும் அவர் உன்னைக் கட்டுப்படுத்தட்டும். “உன் வழிகளிலெல்லாம்” என்று கூறுவதைக் கவனியுங்கள்! அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்; உன்னை நடத்துவார்; வழிகாட்டுவார். தங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வழிகாட்டுதலை விரும்பும் அநேகர், “கர்த்தாவே, இந்த விஷயத்தில் நீர் என்னை என்ன செய்யவேண்டும் என்று நினைத்தாலும் செய்யத் தயாராயிருக்கிறேன். என்னை வழிநடத்தும்” என்று கூறுகிறார்கள். அதற்கு கர்த்தர், “உன் வழிகளிலெல்லாம் நீ என்னை நினைத்துக்கொள்ளாதபடியால் என்னால் உன்னை வழிநடத்த முடியாது! இந்த ஒரு பகுதியில் மட்டும் என்னை நினைத்துக்கொள்ளாதே, எல்லாப் பகுதிகளிலும் நினைத்துக்கொள். உன் முழு வாழ்க்கையையும் என்னிடம் ஒப்புக்கொடுக்கத் தயாராயிருந்தால், நான் உன்னை வழிநடத்துவேன்” என்று கூறுகிறார்.

ஒரே ஒரு பகுதியில் மட்டும் வழிகாட்டுதல் வேண்டும் என்று விரும்பி, அந்த ஒரு பகுதியை மட்டுமே தேவனிடம் ஒப்புக்கொடுத்தால், வழிகாட்டுதல் கிடைக்கும் என்று எந்த வாக்குத்தத்தமும் இல்லை. ஆனால் உன் வழிகளிலெல்லாம் — உன் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் — அவரை நினைத்துக்கொண்டு, அவர் நம் பாதைகளை நடத்தட்டும் என்று விரும்பினால், அவர் உன்னை வழிநடத்துவார். வழிநடத்துவது மட்டுமல்ல, "உனக்காக வழியை சீர்படுத்துவார்" என்றும் கூறுகிறது. எத்தனையோ தடைகளால் அடைக்கப்பட்டிருக்கும் அந்த வழியை அவர் உனக்காக சீர்படுத்துவார். சகோதரனே, சகோதரியே, உன் வாழ்க்கையில் தடைகளும் உன் முன்னேற்றத்தைத் தடுக்கும் எல்லாவிதமான விஷயங்களும் இருப்பதை காண்கிறாயா? இந்த வார்த்தையை சிந்தி: உன் வழிகளிலெல்லாம் தேவனை நினைத்துக்கொண்டு, முழு இருதயத்தோடும் அவரில் நம்பிக்கையாயிருந்து, சுயபுத்தியின்மேல் சாயாதிருந்தால், அவர் உனக்காக வழியை சீர்படுத்துவார். நீயே அதை சீர்படுத்த முடியாது; நீண்ட நாட்களாக முயற்சித்தாய், ஆனால் பலனில்லை. அவர் உனக்காக வழியை சீர்படுத்துவார்! நாம் முன்னேறிக்கொண்டே போகும்போது அவர் நமக்காக வழியை சீர்படுத்துகிறார். அப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் வாழமுடியும் என்பதை சற்று எண்ணிப்பாருங்கள். அதுவே முழு இருதயத்தோடும் தேவன்மீது நம்பிக்கையாயிருந்து, சொந்த புத்திசாலித்தனத்தின்மேல் சாயாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனை நினைத்துக்கொள்கிற மனுஷனின் வாழ்க்கை.