பேதுரு ஒரு நல்ல இருதயத்தோடு தான் இயேசுவைச் சிலுவைக்குப் போகக்கூடாது என்று கூறினான். ஆனால் இயேசு உடனடியாக அந்த ஆலோசனையை சாத்தானின் சத்தம் என்று உணர்ந்து, பேதுருவை நோக்கி “அப்பாலே போ சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய்” (மத்தேயு 16:23) என்று கூறினார்.
தேவனுக்கு ஏற்றவைகளை (தேவனுக்கு விருப்பமானவைகளைச்) சிந்தித்தால் மாத்திரமே தேவ சத்தத்தையும் சாத்தானின் சத்தத்தையும் நம்முடைய இருதயங்களில் வேறுபடுத்த முடியும் என்பதை நாம் இங்குக் காண்கிறோம். நம்முடைய மனது நமக்கு விருப்பமானவைகளையே முதன்மையாகச் சிந்திக்குமானால் சாத்தானுடைய சத்தத்தைத் தேவனுடைய சத்தமென்று தவறுதலாக எண்ணிவிடுவோம். எனவே படிப்பு, வேலை, விளையாட்டு என்று நீங்கள் கையிட்டுச் செய்யும் எல்லாவற்றிலும் பரலோகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது நல்லது. சகலத்தையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்யுங்கள்.
கல்லூரியில் நன்றாகப் படியுங்கள், மைதானத்தில் நன்றாக விளையாடுங்கள், எப்பொழுதும் தேவனையே மகிமைப்படுத்துங்கள் - ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையே இழக்க வேண்டியதாயிருந்தாலும் தனது ஆழமான நம்பிக்கையைச் சமரசம் செய்யாத எரிக் லிடெல் (Eric Liddel) போல எப்பொழுதும் தேவனையே மகிமைப்படுத்துங்கள்!! ஒரு கிறிஸ்தவராக இருக்கிற உங்களுக்கு சில தராதரங்கள் இருப்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம். தேவன் அப்படிச் செய்யும்படி உங்களுக்கு உதவிச் செய்வாராக.
பள்ளியிலோ, கல்லூரியிலோ, வேலை ஸ்தலத்திலோ அல்லது வீட்டிலோ நீங்கள் சந்திக்கும் போராட்டங்களின் மத்தியிலே தேவனை கனம் பண்ண வேண்டும் என்ற தீவிர வாஞ்சையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்படியாவது சமரசம் செய்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கிற சத்துருவின் ஒவ்வொரு தாக்குதலையும் எதிர்கொண்டு அவைகளை மேற்கொள்ள கர்த்தர் கிருபையையும் பெலனையும் உங்களுக்குத் தருவார். சாத்தானுக்கு எதிராகக் கர்த்தர் எப்பொழுதும் உங்கள் பக்கமாகவே இருக்கிறார், மேலும் அந்த பொல்லாதவனை மேற்கொள்ள கர்த்தர் உங்களுக்குப் பெலனைக் கொடுத்து உதவுவார்.
இந்த பூமியிலுள்ள அநேக காரியங்கள் கவர்ச்சிகரமாக இருக்கத் தேவன் அனுமதித்திருக்கிறார். நாம் அவைகளால் சோதிக்கப்படும் போது இந்த பூமியிலுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் தேவனையே நேசிக்கிறோம் என்பதை நாம் நிரூபிப்பதற்காகவே அப்படிச் செய்திருக்கிறார். இவ்வாறு நாம் சாத்தானை வெட்கத்துக்கு உட்படுத்துகிறோம். எல்லா சிருஷ்டிப்பை பார்க்கிலும், சிருஷ்டிகரே மகா பெரியவராகவும் மிக அற்புதமானவராகவும் அதிக திருப்தியளிப்பவராகவும் இருக்கிறார். இது உண்மை என்பதனால் தான் இதை நம்புகிறோம். நம்முடைய இந்த விசுவாசம்தான் உலகத்தின் ஈர்ப்புகளை மேற்கொண்டு ஜெயிக்க வைக்கிறது. கண்மூடித்தனமாக இந்த விசுவாசத்தின்படி நாம் வாழும்போது, நம்முடைய உணர்ச்சிகள் ஏற்ற சமயத்தில் அதனோடு சேர்ந்து பின்தொடரும். உணர்ச்சிகளை முதலாவதாக நாம் தேடக்கூடாது.
சாத்தானுக்கு எதிராகப் போராடுவது நம்முடைய ஆவிக்கு நல்லது. அப்போதுதான் நாம் பலசாலியாய் மாற முடியும். கிறிஸ்துவுக்கு ஒரு நல்ல போர் சேவகனாய் இருங்கள். கர்த்தர் உங்களை சார்ந்திருக்கிறார். கர்த்தருடைய நாமம் ஒருபோதும் வெட்கப்படாதபடிக்கு - கர்த்தருடைய கொடி உயரப் பறந்து வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நாங்களும் உங்களை சார்ந்திருக்கிறோம்.
தங்கள் நாடு சுதந்திரமாகவும் விடுதலையாகவும் இருப்பதற்காக போர்வீரர்கள் தங்கள் நாட்டிற்காக அவ்வளவாய் தியாகம் செய்ய முடியும் என்றால், சாத்தான் வெட்கப்படவும் எல்லா வகையிலும் நம்முடைய வாழ்க்கையின் மூலம் கர்த்தர் கனம் பெறவும், நாம் எவ்வளவு அதிகமாய் எல்லாவற்றையும் (நம் ஜீவனையும் கூட) தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.